நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 17, 2014

திருமலை


 
திருத்தலம் : திருவேங்கடம்
ஸ்வாமி : ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள்
தாயார் : பத்மாவதி (அலர்மேல் மங்கை)
உற்சவ மூர்த்தி : ஸ்ரீநிவாசன்
தீர்த்தம் : ஸ்வாமி புஷ்கரணி

மூர்த்தி தலம் தீர்த்தம் எனும்
மூன்றனாலும் சிறப்புற்று விளங்கும் திருப்பதி.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்விக்கப்பட்ட திருத்தலங்களுள்
எழுபத்தைந்தாவதாகக் குறிக்கப்படும் திவ்ய தேசம்.

திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழி
முதற்பத்து - ஒன்பதாம் திருமொழி.


தாயேதந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் உன்னைக் காண்பதோர் ஆசையினால்
வேயேய் பூம்பொழில் சூழ்விரையார் திருவேங்கடவா
நாயேன் வந்தடைந்தேன் நல்கி ஆளென்னைக் கொண்டருளே!.. (1028)


மானேய்கண் மடவார் மயக்கில்பட்டு மாநிலத்து
நானேநானாவித நரகம் புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ்திருவேங்கட மாமலைஎன்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றில்லாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாமலை வேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


குலந்தான் எத்தனையும் பிறந்தே இறந்தெய்த்து ஒழிந்தேன்
நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம் செய்துமிலேன்
நிலம்தோய் நீள்முகில்சேர் நெறியார்த் திருவேங்கடவா
அலந்தேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


எப்பாவம் பலவும் இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்
துப்பா நின்னடியே தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்
செப்பார்த் திண்வரை சூழ்திருவேங்கட மாமலைஎன்
அப்பா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


மண்ணாய் நீரெரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணார் ஆக்கை தன்னுள் புலம்பித்தளர்ந்து எய்த்தொழிந்தேன்
விண்ணார்நீள் சிகர விரையார் திருவேங்கடவா
அண்ணா வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


தெரியேன் பாலகனாய்ப் பலதீமைகள் செய்துமிட்டேன்
பெரியேனாயின பின்பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர்பூம் பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா
அரிய வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..
 

நோற்றேன் பல்பிறவி உன்னைக்காண்பதோர் ஆசையினால்
ஏற்றேன் இப்பிறப்பே இடருற்றனன் எம்பெருமான்
கோல்தேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலை சூழ்வேங்கடவா
ஆற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..
 

பற்றேல்ஒன்றுமி லேன்பாவமே செய்து பாவியானேன்
மற்றேல்ஒன்ற றியேன் மாயனே எங்கள் மாதவா
கல்தேன் பாய்ந்தொழுகும் கமலச்சுனை வேங்கடவா
அற்றேன் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே!..


கண்ணாய் ஏழுலகுக்கு உயிராய வெங்கார் வண்ணனை 
விண்ணோர் தாம்பரவும் பொழில் வேங்கடவேதியனை
திண்ணார் மாடங்கள் சூழ் திருமங்கையர்க்கோன் கலியன்
பண்ணார் பாடல் பத்தும் பயில்வார்க்கு இல்லைபாவங்களே!.. (1037)

நன்றி!..
திராவிட வேதம் எனும்
நாலாயிரத் திவ்யப்ரபந்த அமுதத்தினை 
வலைத் தளத்தில் வைத்த
புண்ணியர்களுக்கு மனமார்ந்த நன்றி!..

புரட்டாசி எனும் புண்ணிய மாதத்தின் முதல் நாள் இன்று!..

ஸ்ரீவேங்கடேச சரணம் சரணம் ப்ரபத்யே..
* * *

16 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா!

    வினைதீர வேண்டுவோம் வேங்கடன் காக்க!
    இணைத்தே இருகரமு மே!

    தகுந்த நேரத்தில் நல்லதொரு பதிவு இங்கு தந்தீர்கள்!
    மிக்க மகிழ்ச்சி!

    நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பல முறைகள் திருமலைக்குச் சென்று வந்த நினைவுகள் அலை மோதுகின்றன. ஒரே ஒரு முறை புஷ்கரணியில் குளித்தோம் அந்தப் புகைப்படத்தினை மீண்டும் பார்க்கும் எண்ணம் இப்பதிவு ஏற்படுத்துகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. புரட்டாசி என்றால் திருமலையான் நினைவுதான் எல்லோருக்கும்.
    ஏழுமலையான் திருவடி சரணம் சரணம்.
    வேங்கடவன் தரிசனம் செய்ய அழகிய படங்கள் திவ்யப்ரபந்த , பாடல்கள் அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      தங்கள் வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. நாலாயிரத் திவ்யப்ரபந்த அமுதத்தினை
    நலமாக அள்ளிப்பருக அளித்தமைக்கு
    நன்றிகள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. படங்கள் ஒவ்வொன்றும் அழகு.....

    பல வருடங்கள் ஆகிவிட்டன திருமலை சென்று....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நல்லதொரு பதிவு தந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. புரட்டாசி மாதம்...
    மிகவும் சிறப்பானதொரு பகிர்வு...
    அழகிய படங்கள்...
    அருமை... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      நன்றி..

      நீக்கு
  8. திருமலைக்குச் சென்று வந்த நினைவுகள்
    மனதில் வட்டமிடுகின்றன ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..