நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 11, 2014

மகாகவி பாரதி

 பாட்டுக்கொரு புலவன்


ஆடுவோமே பள்ளு பாடுவோமே 
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் - என்று!.. 
விடுதலைக்கு முன்பாகவே பாடி மகிழ்ந்த தீர்க்கதரிசி.

தந்தையார் - சின்னசாமி ஐயர். தாயார் - லக்ஷ்மி அம்மாள்.
அவர் தமக்குத் தமிழ் தலைமகனாகத் தோன்றிய நாள்
11 டிசம்பர் 1882


 பிறந்து வளர்ந்ததனால் பெருமை கொண்ட தலம்
எட்டயபுரம்.

பெற்றோர் சூட்டிய பெயர் - சுப்ரமணியன்.
அன்புடன் அழைத்தது - சுப்பையா என்று!..

 ஐந்து வயதில் தாயின் மரணம்.
பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த சுப்பையாவுக்கு
நெல்லை ஹிந்து கல்லூரியில் தொடக்கக் கல்வி.

சிறு பிராயத்திலேயே சங்கீதம் பயின்ற சுப்பையா
செந்தமிழில் கவி பாடிய போது வயது 11.

அவரது திறமையை வியந்து எட்டையபுரம் அரசர் வழங்கிய பட்டம்
பாரதி!..


14 வயதில் செல்லம்மாளுடன் திருமணம்.
16 வயதில் தந்தையின் மரணம்.

1902ல் காசியில் அத்தை வீட்டில் தங்கி 
ஹிந்து சர்வகலாசாலையில் 
ஹிந்தி சமஸ்கிருதம் பயின்று பட்டம் பெற்றார்.

1903ல் அவரது எழுத்துக்கள் அச்சிடப்பட்டு வெளியாகின.
அப்போது அவருக்கு வயது 21.

1904ல்  தமிழாசிரியராகப் பணி புரிந்த பெருமையை உடையது
மதுரை சேதுபதி பள்ளி!..

1905 முதற்கொண்டு தீவிர அரசியல்.
கப்பலோட்டிய தமிழன் திரு.வ.உ.சிதம்பரனார்,
திரு. சுப்ரமணிய சிவா 
ஆகியோருடன் நெருங்கிய நட்பு.

1907 ல் இந்தியா எனும் வார இதழைத் தன் பொறுப்பில் நடத்தினார்.
பால கங்காதர திலகரின் சுதந்திரப் போராட்டம்
அவரது கவனத்தைக் கவர்ந்தது.

எனவே - வார இதழில் சுதந்திர வேட்கையுடன்
கூடிய வீரமிகு கட்டுரைகள்  வெளியாகின.
  
 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்களுக்கும்
தீரர் சுப்ரமணிய சிவா அவர்களும் வழங்கப்பட்ட கொடுந்தீர்ப்பினைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரைகளில் கனல் பறந்தது.

வெள்ளையனின் விழிகள் பாரதியின் பக்கம் திரும்பின.

மகாகவியின் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தியா வார இதழ் சென்னை மாகாணத்தில்
தடை செய்யப்பட்டது.

வெள்ளையனின் அரசு வேட்டையாடத் துடித்தபோது
பிரஞ்சுக்காரன் கையிலிருந்த புதுவை அடைக்கலம் தந்தது.

1908 முதல் 1918 வரை புதுவை மண்ணில் வாசம். 
அங்கே தான் மகாகவி பகவத்கீதைக்கு உரை எழுதினார். 
கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் 
போன்றவையுடன் எழுச்சிமிகு தேசியப் பாடல்கள் பிறந்தன.


புதுவையில் இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழையும் போது
பிரிட்டிஷ் அரசு சிறைப் பிடிக்க - 
ஒரு மாதகாலம் சிறைவாசம்.

1919ல்  சென்னையில், மூதறிஞர் ராஜாஜி அவர்களின் இல்லத்தில்
பாரதியார் - காந்திஜி சந்திப்பு நிகழ்ந்தது.

அன்றைய தினம் கடற்கரையில் தான் நடத்த இருக்கும்
கூட்டத்துக்கு காந்திஜியை அழைத்தார் பாரதி.

காந்திஜியோ - தனக்கு வேறு ஒரு கூட்டம் இருப்பதால்
 மற்றொரு நாளில் வருவதாகக் கூறினார்.

அதற்கு இசையாத மகாகவி அன்றைய தினம்
சென்னை கடற்கரையில் பாடியது தான் - காந்தி பஞ்சகம்.
வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க, வாழ்க!..
நன்றி -  விக்கிபீடியா
1920ல்  உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தது
சென்னை சுதேசமித்திரன் நாளிதழில்.

இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரெஞ்ச் - ஆகிய மொழிகளில்
தேர்ச்சி பெற்று விளங்கியதால் தான்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் 
இனிதாவ தெங்கும் காணோம்!..
என்று ஆனந்தம் கொண்டாடினார்

புதுக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர்.
முதன்முறையாக நாளிதழில் கேலிச் சித்திரம்
வரைந்த பெருமையையும் உடையவர்.


1921 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள் -
திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயிலின்
யானைக்கு வழக்கம் போல் பழம் கொடுத்தார்.
மனக்குழப்பத்தில் மதர்த்திருந்த யானை அவரை இழுத்து இடறியது.

உடனிருந்த நண்பர் குவளைக் கண்ணன் காப்பாற்றினார்.

உள்ளமும் உடலும் ஒருசேர அதிர்ந்து உள்காயம் ஆனது.
அத்துடன்  - வயிற்றுக் கோளாறும் சேர்ந்து கொண்டது.

தனது முப்பத்தொன்பதாம் வயதில்
இறைவனடியில் ஐக்கியமானார்.

தமிழ்த்தாய் கண்ணீர் சிந்திய நாள் - 11 செப்டம்பர் 1921.

    
பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா!..
என்று பெண்மையைப் போற்றிப் பாடிய பெருங்கவிஞர்.
தன்னுடனேயே பயணித்த வறுமையை 
ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
 
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய மகாகவி
காக்கை குருவி எங்கள் ஜாதி!..
- என சிற்றுயிர்களுடன் கூடி வாழ்ந்தார்.

விலங்குகளையும் காக்கை குருவிகளையும் நேசித்து மகிழ்ந்தவர்.
வறுமையில் வாடிய காலத்தில் - கடன் வாங்கி வைத்திருந்த அரிசியை வாஞ்சையுடன் குருவிகளுக்கு வாரி இறைத்த வள்ளல்!..
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் 
மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்!.. 
- என  தேசியப் பயிர் வளர்த்தவர்.


பாட்டுக்கொரு புலவன் பாரதி என்னும் புகழுடன்

ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில் 
அந்நியர் வந்து புகல் என்ன நீதி? -ஒரு
தாயின் வயிற்றில் பிறந்தோர் தம்முள் 
சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ!..

- என்று காஷ்மீரம் தொட்டு கன்யாகுமரி வரை 
மக்களை ஒன்றிணைத்த தேசப்பற்றினால்
நாட்டுக்கொரு புலவன் பாரதி என விளங்குகின்றார்.


என்றும் நிலைத்திருக்கும்
எங்கள் பாரதியின் புகழ்!..
* * *

18 கருத்துகள்:

  1. நாடறிந்த புகழ் பாரதிக்குக் கிடைக்கவில்லை. தமிழ் நாட்டிலேயே பள்ளிகளில் அவர் பற்றிய செய்திகள் அவர் பாடிய பாட்டுகள் இடம் பெறவில்லையாமே. இதே பாரதி அயல் நாட்டில் பிறந்திருந்தால் நோபல்பரிசே வாங்கிக் கொடுத்திருப்பார்கள். தமிழனாய் அவர் பிறந்தது நம் அதிர்ஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது உண்மையே.. கடும் தடைகளைக் கடந்து தான் மகாகவி - காந்திஜியைக் கண்டு பேசினார் என எங்கள் ஆசிரியர் கூறுவார்!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  2. பாரதியின் இந்தநாளில் நினைவு கூர்ந்து இட்டபதிவு நன்று நண்பரே.... தமிழ் இருக்கும்வரை பார''தீ'' என்ற சொல் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது உண்மையே.. என்றென்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  3. பாரதியின் புகழ் பாடிய தாங்களின் பதிவு அருமை !என்றும் நம் மனதில் வாழ்வார் பாரதி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  4. பெண்மையை முண்டாசுக் கவிஞனை விடவும் வேறு யாரும் போர்ரியிருக்கவில்லை என்றே தோன்றும். அவர் கவிதைகள் அத்தனியும் போற்றப்பட வேண்டியது ...இல்லையில்லை...துதிக்கப்பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் கூறுவது உண்மை.. பெண்மையைப் போற்றியதில் அவருக்கு நிகர் அவரே!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  5. பாரதி பற்றிய அருமையான பதிவு ஐயா
    பாரதி என்றும் வாழ்வார்
    பாரதி போற்றுவோம் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      என்றென்றும் - பாரதி நிலைத்திருப்பார்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  6. அருமையான பகிர்வு ஐயா...
    பாரதியை நினைவில் கொள்வோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      மறக்க இயலுமா - மகாகவியை!..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி!..

      நீக்கு
  7. வணக்கம்
    ஐயா

    பாரதி பற்றி எழுதிய பதிவு மிகஅருமையாக உள்ளது.... பாரதி இல்லா விட்டாலும் பாரதியின் தடயங்கள் வாழ்த்துகொண்டுதான்இருக்கிறது...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ரூபன்..
      மகாகவி பாரதியின் நினைவுகள் என்றும் நம்முடன் வாழ்பவை!..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  8. மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்குக் கிடைத்த பெருமை, இவருக்கு இந்தியா முழுவதும் கிடைக்க வில்லை என்பது தான் எனது எண்ணமும்....

    முண்டாசுக் கவிஞர் மறைந்தாலும், அவரது கவிதைகள் மறையப் போவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் எண்ணம் அனைவருடைய மனதிலும் இருக்கின்றது.
      மகாகவி சாகாவரம் பெற்றவர். அவரது நினைவுகள் என்றும் பசுமையாக இருக்கும்.
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி. நன்றி.

      நீக்கு
  9. விருது ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் துரை சார்.
    இணைப்பு இதோ http://rajalakshmiparamasivam.blogspot.com/2014/09/blog-post_13.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி..
      வாழ்க நலம்!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..