காவிரி!..
தென்னக மக்களின் வாழ்வுடனும் வளத்துடனும் இணைந்த ஒரு இன்சொல்!.
''நடந்தாய் வாழி காவேரி!..'' - என்று வாழ்த்துகின்றார் இளங்கோவடிகள்.
''வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி!..'' - என்று பரவுகின்றார் - கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
''கங்கையிற் புனிதமாய காவிரி!.''. - என்று புகழ்கின்றார் தொண்டரடிப் பொடியாழ்வார்.
இத்தகைய காவிரியுடன் கலந்து இன்புற - கங்கையே வந்து விட்டாள் - எனில் காவிரியின் பெருமை தான் என்னே!..
ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி தான் - கங்கை!..
விசேஷமாக -
துலா மாதம் எனும் ஐப்பசி முழுதும் தன்னை ஆராதிக்கும் அன்பர்களின் மாசுகளை அகற்றி - மங்கலங்களைப் பெருக்குகின்றாள்.
நடந்த வழியெல்லாம் நலம் விளைத்து - நற்றமிழ் நிலத்தை அலங்கரித்த- காவிரி, அடர்ந்த மலைத் தொடரில் அவதரித்தவள்.
இன்றைய கர்நாடக மாநிலத்தின் - குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் 4,400 அடி உயரத்திலுள்ள 31 ஆயிரம் சதுரமைல் பரப்பளவுடைய அடர்ந்த காட்டுக்குள் - பாக மண்டலா எனும் பகுதியில் உள்ள ஒரு குண்டம் தான் காவிரியாளின் அவதார ஸ்தலம்!..
அந்த புனித இடமே தலைக் காவிரி எனப்படுகின்றது.
காவிரி உற்பத்தியாகும் தலைக் காவிரியில் வருடந்தோறும் துலா சங்க்ரமண வேளையில் தீர்த்தோற்பவா எனும் தீர்த்த உற்சவம் நிகழ்கின்றது.
இந்த ஆண்டு, அக்டோபர் 17 - வியாழக்கிழமை அன்று பகல் 12.01 மணியளவில் தீர்த்த உற்சவம் நிகழ்ந்துள்ளது.
அப்படி என்ன அங்கே விசேஷம் என்கின்றீர்களா!..
வியாழன் (17/10) அன்று பகல் 12.01 மணியளவில்,
துலா சங்க்ரமண புண்ய காலத்தில் - தீர்த்த குண்டத்தில் -
காவிரி பொங்கி எழுந்து அருகிலுள்ள தொட்டியில் கலந்திருக்கின்றாள்.
தீர்த்த குண்டத்தில் காவிரி பொங்கும் வேளையில் சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்ந்துள்ளன.
வருடந்தோறும் - ஏறத்தாழ அக்டோபர் மத்தியில் காவிரியின் புண்ணிய தரிசனம் தலைக்காவிரியில் நிகழ்கின்றது. இதை நாம் துலா மாதத்தின் தொடக்கமாகவும் கொள்ளலாம்.
இந்த வைபவத்தினைக் காண கர்நாடகம் மட்டுமின்றி - தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளத்தில் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டிருக்கின்றனர்.
காவிரி அன்னையைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்து வழிபடும் பக்தர்கள் - அங்கிருந்து தீர்த்தத்தை எடுத்துச் சென்று இல்லத்திலும் தொழுவத்திலும் விளை நிலங்களிலும் தெளிக்கின்றனர்.
மூன்றாண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டுதான் பகலில் புண்ணிய வேளை கூடி வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவில் கலந்து கொண்ட -
பக்தர்கள் தங்களின் விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை தானம் வழங்கி நேர்த்திக் கடனை செலுத்தியிருக்கின்றனர்.
காவிரியின் அவதார ஸ்தலத்தைத் தரிசித்ததைப்போல -
கங்கையின் அவதார ஸ்தலத்தைச் சென்று தரிசிப்பது மிகவும் கடினம்.
மாமன்னன் பகீரதனின் மாபெரும் தவத்தின் பலனாக விண்ணிலிருந்து பூமிக்கு வந்தவள் - பாகீரதி.
அப்படி வந்தபோதும், ''..என்ன செய்கிறேன் பார்!..'' - என செருக்குடன் பாய்ந்ததனால் - சிவபெருமானின் ஜடாமகுடத்தில் சிக்கிச் சிறைப்பட்டாள். அதனாலேயே பரமேஸ்வரனுக்கு கங்காதரன் எனும் திருப்பெயர் ஏற்பட்டது.
பின்னும் பகீரதன் பணிந்து வேண்டிக்கொண்டதன் பேரில் - அவன் மீது கருணை கொண்டு மிகச் சொற்ப அளவாகவே கங்கையைத் தன் திருமுடியிலிருந்து விடுத்தார் எம்பெருமான். அப்படி அவள் வெளிப்பட்ட தலமே கங்கோத்ரி எனும் பனிச்சிகரம்.
இது கங்கோத்ரியில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள கோமுகம் வழியாகப் பிரவாகிக்கும் பாகீரதி தேவப்பிரயாகையில் தான் கங்கை என வணங்கி வரவேற்கப்படுகின்றாள்.
கங்கை உற்பத்தியாகும் கோமுகம் |
உத்ரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் பாகீரதி நதிக் கரையில் கடல் மட்டத்திலிருந்து 3140 மீட்டர் உயரத்தில் உள்ளது கங்கோத்ரி நகர். பாகீரதி (கங்கை) உற்பத்தியாகும் கோமுகம் 4255 மீட்டர் உயரத்தில் உள்ளது.
கங்கோத்ரி நகருக்கு அப்பால் ஒற்றையடிப் பாதை கூடக் கிடையாது. அந்தப் பள்ளத்தாக்கை சூழ்ந்திருக்கும் மலைச் சரிவுகளின் உயரம் ஆறாயிரம் அடிகளுக்கும் மேல். எனினும்- இறைவன் துணை கொண்டு தக்க குருநாதர் வழித்துணையுடன் கோமுகத்திற்குச் செல்ல முடியும் என்கின்றனர்.
பனி படர்ந்த கங்கோத்ரி |
நிலைமை இப்படியிருக்க - எல்லாருக்கும் இயலுமா - கங்கோத்ரி பயணம்!..
எனவேதான், இறைவன் - பெருங்கருணையுடன்- கங்கையே சென்று காவிரியுடன் கலக்கட்டும்!.. மக்கள் அனைவரும் மங்கல நீராடிக் களிக்கட்டும்!.. என ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான்!..
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்!..
மங்கல நீராட முன் வினை தீர்க்கும்!..
- என்றார் - நம்முடன் வாழ்ந்த கவிஞர் வாலி.
புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.
வள்ளுவப்பெருமான் குறிப்பிடும் - வாய்மை - நம்மிடம் வசமாகி விட்டால் அகம் தூய்மையாகி, தேகம் அருட்ஜோதியாக ஒளிரும். பிறர் நம்மைக் கண்ட பொழுதிலேயே - இவர் வாய்மையைக் கைக் கொண்டவர் எனக் கண்டு கொள்வர்.
வாய்மை வசப்படுவது - தானத்தினாலும் தவத்தினாலும்!..
தானமும் தவமும் - வசப்படுவது இறை வழிபாட்டினால்!..
காவிரியில் நீராடி கரையேறுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
பதிவும் படங்களும் அருமை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் அன்பின் பாராட்டுரைக்கும் மிக்க மகிழ்ச்சி!.
நீக்குசிறப்பான தகவல்கள் + படங்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்.. தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!.
நீக்குகாவிரியும், கங்கையும் உற்பத்தியாகும் இடங்கள் பற்றிய பதிவு அருமையாக இருகிறது.
பதிலளிநீக்குஅன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!.
நீக்குஅழகிய படங்களுடன் சிறப்பான பகிர்வு...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா.
அன்பின் குமார்.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!.
நீக்குபதிவும் படங்களும் அருமை ஐயா. எப்படி உங்களால் முடிகிறது. வெறொரு நாட்டில் இருந்து கொண்டு எப்படி செய்தியினைச் சேகரிக்கிறீர்கள் ஐயா. வியப்பாக இருக்கின்றது. எப்பொழுது தஞ்சை வருகிறீர்கள்
பதிலளிநீக்குஅன்புடையீர்.. தங்களின் வருகைக்கும் அன்பின் பாராட்டுரைக்கும் மிக்க மகிழ்ச்சி!.. உங்களை எல்லாம் காண வேண்டும் என ஆவல் மேலிடுகின்றது. விரைவில்.. மிக விரைவில்!..
நீக்குஇறைவன் - பெருங்கருணையுடன்- கங்கையே சென்று காவிரியுடன் கலக்கட்டும்!.. மக்கள் அனைவரும் மங்கல நீராடிக் களிக்கட்டும்!.. என ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான்!..
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அன்புடையீர்!.. தங்களின் வருகையும் பாராட்டுரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..
நீக்கு