தட்சிணாயணத்தின் நான்காவது மாதம். கால கதியில் - ஏழாவது மாதம்.
இந்த மாதத்தில் இரவும் பகலும் சமாக இருக்கும் . எனவேதான் துலா மாதம் எனப்பட்டது. நிறைந்த விசேஷ தினங்களால் சிறப்புடையது ஐப்பசி மாதம்!..
''..வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத காவிரி!..'' என - பட்டினப்பாலையில் புகழ்ந்து மகிழ்கின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
இத்தனை சிறப்புடைய காவிரி மகத்தான பெருமை கொள்ளும் மாதம் துலா மாதம் எனும் ஐப்பசி மாதம்.
இத்தனை சிறப்புடைய காவிரி மகத்தான பெருமை கொள்ளும் மாதம் துலா மாதம் எனும் ஐப்பசி மாதம்.
சோழவள நாட்டில் மூர்த்தி - தலம் - தீர்த்தம் - எனும் மூன்றினாலும் மகத்துவம் பெற்று விளங்கும் எத்தனையோ திருத்தலங்களுள் ஒன்று தான் - காவிரிக்குத் தென் கரையில் திகழும் மயிலாடுதுறை.
திருஞான சம்பந்த ஸ்வாமிகளும் மற்றும் அப்பர் பெருமானும் திருப்பாடல்களால் போற்றி வணங்கிய உன்னத திருத்தலம்.
அம்பிகை மயில் வடிவாகி இறைவனைப் பூஜித்த திருத்தலங்கள் இரண்டு. ஒன்று தொண்டை நன்நாட்டின் மயிலாப்பூர். மற்றொன்று சோழவள நாட்டின் மயிலாடுதுறை.
ஒருமுறை கங்கைக்கு சற்று - செருக்கு ஏற்பட்டு விடுகின்றது. தன்னால் தான் அனைவருடைய பாவங்களும் தீர்கின்றன. அதனால் தான் - ஈசனின் சிரசில் விளங்குவது என்றெல்லாம் பல எண்ணங்கள் அவள் மனதில் அலை பாய்ந்தன.
அப்படிப் பாய்ந்ததனால் - அவளுடைய புண்ணியக் கணக்குகளும் தேய்ந்தன. திடுக்கிட்ட கங்கை அதிர்ந்தாள். காரணம் - அவளுடைய மேனி மாசடைந்து இருந்தது - மனதைப் போல!. முன்னைப் பொலிவு எள் முனை அளவு கூட இல்லை. கலங்கினாள். வருந்தினாள்!..
ஈசனின் திருவடிகளை வணங்கி நின்றாள். அவள் நிலை கண்டு மனம் இரங்கிய பெருமான் - அம்பாள் தவமிருந்த மயிலாடுதுறையைக் குறிப்பிட்டு, அங்கே - ''..காவிரியில் துலா மாதம் முழுதும் நீராடி சிவபூஜை செய்து வழிபட்டால், எண்ணத்தால் விளைந்த பாவம் அகலும்!..'' என வரம் அளித்தார்.
இறைவனிடம் அனுமதி பெற்றுக் கொண்ட கங்கை அதே போல காவிரியில் நீராடி மயூர நாதரைப் பணிந்து வணங்கினாள். இதைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் அவ்வாறே செய்து தாமும் தத்தமது வினையினின்று நீங்கப் பெற்றனர்.
காவிரியில் கங்கை நீராடிய வேளை அதிகாலை சூர்யோதயத்தில். இதன் பொருட்டே - கங்கை நீராடிய முப்பது நாட்களும் இங்கே துலா ஸ்நானம் என்று சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.
''இந்த முப்பது நாளும் காவிரி வேறல்ல!.. கங்கை வேறல்ல!..'' - என்று காவிரியின் பெருமையை துலா புராணம் - புகழ்வதாக குறிப்பிடுகின்றனர்.
ஐப்பசி மாத அமாவாசையும் மயிலாடுதுறை துலா கட்டத்தில் சிறப்பாக அனுசரிக்கப்படுகின்றது.
ஸ்ரீரங்கத்திலும் துலா ஸ்நானம் நிகழ்கின்றது. ஸ்ரீரங்க நாதனுக்கு வழக்கமாக வடக்கில் கொள்ளிடத்தில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் எடுப்பர்.
ஆனால் ஐப்பசியில் மட்டும் காவிரியில் இருந்து தங்கக் குடங்களில் திருமஞ்சன நீர் எடுக்கப்படும். யானை மீது வேத கோஷங்கள் முழங்க திருக்கோயிலுக்குச் செல்லும். ஐப்பசி முழுவதும் ஸ்ரீரங்கனுக்கு தங்கக்குடை, தங்க சாமரம் என சேவைகள் நிகழும்.
ஐப்பசியில் தான் - அம்பிகை சிவபெருமானைக் குறித்து தவம் இருந்து ஈசனின் திருமேனியில் சரிபாதி இடம் பெற்றாள் எனவும் கூறுவர்.
ஐப்பசி அமாவாசையை அனுசரித்து மாங்கல்ய பலம் அளிக்கும் கேதார கெளரி விரதம் மிக முக்கியமானது. திருப்பாற்கடலில் தோன்றிய ஸ்ரீமஹாலக்ஷ்மி மஹாவிஷ்ணுவிற்கு மாலை சூட்டியதும் ஐப்பசியில் தான்.
நரகாசுரன் வீழ்ந்த நாளே - கோலாகலமான தீபாவளி!..
இந்த நாளில் தான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடிந்து சீதையுடனும் இளைய பெருமாளுடனும் ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பினார் என்பர்.
வடபாரதத்தில் - தீபாவளி அன்றிலிருந்து லக்ஷ்மி பூஜையுடன் புது கணக்கு தொடங்குவர். தீபாவளி அன்று லக்ஷ்மி பூஜை செய்வதனால் - சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூரில் கந்தன் பகை வென்ற நாள் - ஐப்பசி அமாவாசையை அடுத்து வளர் பிறை சஷ்டி - மகத்தான கந்த சஷ்டியாகும்.
ஐப்பசி பெளர்ணமியில் சகல சிவாலயங்களிலும் மகத்தான அன்னாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நிகழும்.
ஐப்பசி திருவோணத்தில் - பொய்கை ஆழ்வாரும், அவிட்டத்தில் பூதத்தாழ்வாரும் சதயத்தில் பேயாழ்வாரும் அவதரித்தார்கள்.
தஞ்சையில் மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா - ஐப்பசி சதயத்தன்று சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகின்றது.
நிறைந்த மங்கலங்களுடன் ஐப்பசி மாதம் எதிர் வருகின்றது.
அருளும் பொருளும் தரும் வைபவங்களை அனுசரித்து -
நாமும் மகிழ்வோம்!.
பிறரையும் மகிழ்விப்போம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..
விளக்கம் மிகவும் அருமை... சிறப்பான திருத்தலம் பற்றிய தகவலுக்கு நன்றி...
பதிலளிநீக்கு// நாமும் மகிழ்வோம். பிறரையும் மகிழ்விப்போம்... //
வாழ்த்துக்கள் ஐயா...
அன்பின்.. தனபாலன்.. தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஐப்பசி மாத பெருமையை அழகாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்.... தங்களது வருகைக்கும் அழகான கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஐப்பசியின் பெருமையினை அழகுற பகிர்ந்த விதம் அருமை
பதிலளிநீக்குஅன்புடையீர்.... தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குபடங்களும் பகிர்வும் அருமை. மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
பதிலளிநீக்குஅன்புடையீர்.... தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஅழகிய படங்களுடன் அருமையான விளக்கம்...
பதிலளிநீக்குஆன்மீகம் கமழும் பகிர்வில் ஜொலிக்கிறீர்கள் ஐயா...
அன்பின் குமார்.. தங்களது வருகைக்கும் அழகிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குஅளவிடற்கரிய ஐப்பசியின் பெருமை! அற்புதமாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்றது.
பதிலளிநீக்குபதிவின் சிறப்பில் உங்கள் பணியின் ஆழம் தெரிகிறதையா!
மிகவும் அனுபவித்துப் படித்தேன்!
அங்கே வந்து இவ்வகையான பெருமைகளையும்
எமது சமய அனுஷ்டாங்களையும் எப்போ
பின்பற்றப் போகிறோமென ஆதங்கம் மிகுகின்றது...
மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் ஐயா!
அன்பின் சகோதரி!.. சமய அனுஷ்டானங்களைப் பின்பற்றி வாழவேண்டும் எனும் தங்களின் ஆர்வமே - தங்களின் மேலான எண்ணத்திற்கு துணையிருக்கும்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..
நீக்குகங்கையை விட அதிக பெருமையை உடைய
பதிலளிநீக்குகாவிரியின் பெருமையை சிறப்பான பதிவாக்கியமைக்குப் பாராட்டுகள்..!
அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..
பதிலளிநீக்கு