நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், அக்டோபர் 14, 2025

சந்தனம்

         

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி
செவ்வாய்க்கிழமை

 எங்கள் பிளாக் தளத்தில் 
முன்பு எழுதிய கதைகளுள் ன்று இன்றைய பதிவில்..

சின்னச் சின்ன பிழை 
திருத்தங்களுடன்!..

சந்தனம்..
***********

விடியற்காலை.. 
சுப முகூர்த்தம்.. 

ஹோமப்  புகையின் ஊடாக பசுவும் கன்றும் மங்கலகரமாக புது வீட்டுக்குள் வந்தன.. வந்த நேரத்துக்கு ஒன்றுக்கு இரண்டாகச் செய்ததும் எல்லாருக்கும் மகிழ்ச்சி.. 

" வீட்டுக்குள்ள பசு சாணி போடறது நல்ல சகுனமாச்சே!.. "

சந்தன பாண்டியன்.. சின்ன வயது தான்.. ஆனால் எல்லாருக்கும் அண்ணாச்சி..

அண்ணாச்சி அவரது மனைவி ரெண்டு பிள்ளைகள் - கழுத்தில் மாலைகளுடன் ஹோம குண்டத்தின் முன்பாக விழுந்து வணங்கினார்கள்..

பெரியவர்கள் அட்சதை தூவினார்கள்.. பெண்கள் குலவையிட்டனர்..

பக்கத்தில் ஆறேழு வருடங்களாக சும்மா கிடந்த மனை.. திடுதிப்பென்று முகூர்த்தம்.. மஞ்சள் குங்குமத்துடன் அஸ்திவாரக் கல்.. விறுவிறு.. என்று வேலைகள் நடந்தன.. இன்றைக்கு மாவிலைத் தோரணங்களுடன்  வண்ண வண்ண விளக்கொளியில் குளித்துக் கொண்டிருந்தது வீடு..

சந்தன பாண்டியன் அண்ணாச்சிக்கு  மார்க்கெட்டில் பெரிய மளிகை.. நாணயம் நம்பிக்கைக்கு பெயர் பெற்ற கடைகளில் அண்ணாச்சியின் மளிகையும் ஒன்று.. கடும் உழைப்பாளி.. நேர்மையான மனுஷன்..  வாடிக்கையாளர்கள் எல்லாருக்குமே அழைப்பிதழ்..
குடும்பத்தினருடன் வாசலில் நின்று கொண்டு அன்பான  வரவேற்பு.. நெல்லை மண்ணின் வாசம்..

சொந்தமும் நட்பும் விடியற் காலையில் இருந்தே குழுமியிருக்க - வண்ணத் துணிப் பந்தலின் கீழ் விருந்து உபசாரம்..

பழைமை பாரம்பர்யம், கலை கலாச்சாரம் - என்று, சத்தம் போட்டுக் கொண்டிருந்தாலும் ஆணோ பெண்ணோ வீட்டுக்கு ஒரே ஒரு பிள்ளை என்றாகிப் போன கால சூழ்நிலையில் முகம் பார்த்து உபசரிப்பதற்கான உறவு முறை என்ற வட்டம் இல்லாமல் போனதே அதற்கு எந்த ஒரு விடையும் இல்லைம ..

மிச்சம் மீதி இருந்ததையும்  சூறைத் தேங்காய் போல சிதற அடித்தாயிற்று..

இது போக வேறொரு பிரச்னை..
முன்பெல்லாம் தெருக்களில் அக்கம் பக்கத்து வீடுகளிலும் சரி.. உறவுமுறை வீடுகளிலும் சரி.. விசேஷங்கள் என்றால் -
எல்லாரும் எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக் கொண்டு எந்த பேதமும் இன்றி செய்வார்கள்.. இப்போது அப்படி இல்லை..

" என் மகளை வாசல்ல நிக்க வச்சி சந்தனம் கொடுக்க சொன்னீங்களாமே?.. "

" எம் பிள்ளையக் கூப்பிட்டு தண்ணீர் கொடுக்கச் சொன்னீர்களாமே.. அவன் கிரேடு என்னான்னு தெரியுமா?.. "

இப்படி வித விதமான வில்லங்கங்கள் வீட்டுக்குள் புகுந்து புயலைக் கிளப்பும் போது நல்ல மனங்கள் தளர்ந்தே விடுகின்றன..

இதையெல்லாம் பார்த்துப் பார்த்து அலுத்துப் போனவர்களுள் அண்ணாச்சி சந்தன பாண்டியனும் ஒருவர்..

பந்தல், சமையல்,  பரிமாறுதல்  என்று எல்லாவற்றையும் ஏஜென்சியிடம் கொடுத்து விட்டார்..

அவர்கள் அது அதற்கும் அதற்கேற்ற கட்டணம்  வைத்திருக்கின்றார்கள்.. கொடுத்து விட்டால் போதும்.. எல்லாம் கச்சிதமாக முடிந்து விடுகின்றன.. 

பன்னீர் தெளித்து சந்தனமும் ரோஜாப்பூவும் கொடுப்பதற்கு
அளவெடுத்துச் செய்த மாதிரி
ஆறு பெண் பிள்ளைகள்..
கிருஷ்ணனோடு ஆடும் கோகுலத்துக் கிளிகளைப் போல் அழகு.. பளபளப்பான பாவாடையும் தாவணியும் அழகின் அழகு ..

லட்சணமான பசங்கள் பத்து பேர்... இலையிடவும் தண்ணீர் வைக்கவும் பரிமாறவுமாக..
எல்லாரும் வட நாட்டில் இருந்து வேலை தேடி வந்தவர்கள்..

பந்தி உபசரிப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென பரபரப்பு..

இரண்டாவது பந்தியில் அசோகா வைத்துக் கொண்டிருந்தவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்து விட்டான்..

" ஆம்புலன்ஸ்.. ஆம்புலன்ஸ்.. "

எல்லாரும் சத்தம் போட்டார்கள் மயங்கி விழுந்தவனைத் தூக்கிக் கொண்டு சிலர் வாசலுக்கு ஓடினார்கள்..

" எங்கேடா... அந்த ஏஜெண்டு?.. "

" அவந்தான் அப்பவே ஓடிட்டானே!.. "

விருந்துக்கு வந்திருந்தவர் அனைவரையும் பயம் பிடித்துக் கொண்டது.. நானும் எழுந்து ஓடினேன்...

என்ன மொழி?.. ஹிந்தி எனப் புரிந்தாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது..  

" நல்ல நேரத்தில் இது என்ன.. " - என்று எல்லாரிடத்தும் கலக்கம்.. பந்தியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் குழப்பம்... அவர்களை ஆசுவாசப் படுத்தியபடி பரிமாறத் தொடங்கினேன்...

சிறிது நேரத்தில் - " பையன் நல்லா இருக்கின்றான்... பயப்படுறதுக்கு ஒன்னும் இல்லை!.. "
என்றபடி,  பந்தலுக்குள் வந்த அண்ணாச்சி என்னை நெருங்கி - " கொஞ்சம் வாங்களேன் சாமிநாதன்.." - என்றார்..

அவருடன் சென்றபோது அங்கே மருள மருள விழித்துக் கொண்டிருந்தாள் - வரவேற்பு மேஜையில் ரோஜாப்பூ கொடுத்த பெண்..
 
" சாமிநாதன்.. உங்களுக்குத் தான் இந்தி தெரியுமே.. என்ன.. ன்னு கேளுங்க!.. "

வளைகுடா நாட்டில் கற்றுக் கொண்ட பேச்சு வழக்கு பெரும் துணையாக இருந்தது..

விழிகளால் " என்ன?.. " - என்றேன்..

" ஜீ!.. ஆஜ் உஸ்கீ பெஹன் கே ஷாதி.. சிஸ்டர் கலியாணம்.. இஸ்லியே.. "

அண்ணாச்சியிடம் விவரித்தேன்..

அவரது முகம் மாறியது.. என்னை இழுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு ஓடினார்..

அங்கே கட்டிலில் சோர்வாக படுத்திருந்தான் அந்தப் பையன்.. அவனுக்குத் துணையாக இன்னொருவன்..

" விவரம் கேளுங்க சாமிநாதன்!.. "
கேட்டேன்... சொன்னான்..

" பெயர் ராம் சரண்..  கூட ஒரு தங்கை.. அப்பா இல்லாமல் வளர்ந்த பிள்ளைகள்.. அம்மாவுக்கு கிருஷ்ண மந்திர் கோசாலையில் சாணம் அள்ளுகிற வேலை.. மூன்று வேளையும் சாப்பாடு.. சம்பளமாக சொற்ப தொகை.. இத்துடன் கோசாலைக்கு வருபவர்கள் கொடுக்கும் தானம்... இவ்வளவு தான்.. இங்கே வந்த பிறகுதான் வீட்டு விளக்கு ஓரளவு நன்றாக எரிகின்றதாம்.. இப்போ கூட தங்கச்சிக்கு கன்யா தானம் கிருஷ்ணன் கோயில் நிர்வாகம் தான் செய்யுதாம்...
கொசுறாக வேறொன்றும் வேண்டுகோள்.. "

" வேலை நேரத்துல மயக்கம் போட்டு விழுந்ததுக்காக சம்பளத்தைக் குறைச்சிடாதீங்க.. மகராஜ்!.. "

அண்ணாச்சியின் கண்கள் கலங்கி விட்டன..

இந்தப் பசங்களுக்கும் பொண்ணுகளுக்கும் சுப முகூர்த்த மாதங்கள் தான் கொண்டாட்டம்.. மற்ற மாதங்கள் பிரச்னையானவை..
ஊருக்குப் பணம் அனுப்பணும்.. சமைக்கணும்.. சாப்பிடணும்.. மற்ற தேவைகளும் இருக்கு.. இச்சமயங்களில் துப்புரவு வேலைகள் தான் கைக்கு வரும்..

" இப்போ ஊருக்குப் போய் தங்கச்சியப் பார்க்கிறானா?.. கேளுங்க!.. "

கேட்டேன்...

" ராம்.. ராம்!.." - என்றபடி, அண்ணாச்சியையும் என்னையும் தொட்டுத் தொட்டு கும்பிட்டான்.. விஷயத்தைப் புரிந்து கொண்ட மற்றவனும் கையெடுத்துக் கும்பிட்டான்..

" ஜீ.. ஜீ!.."  - என்றான்..

" இது மளிகைக் கடை வேலைடா.. கஷ்டமா இருக்கும்!.. "

" செய்றேங்க மகராஜ்.. இன்னிக்கே வந்து சேர்ந்துக்கறேன்!.. "

அண்ணாச்சி உருகி விட்டார்..
கஷ்டங்களை அனுபவித்தவர் அல்லவா!..

ராம் சரணுக்கு ரயிலில் டிக்கெட் போடும்படி அண்ணாச்சியின் செல்போனில் இருந்து செய்தி பறந்தது..

" ராம் சரணுக்கு வேற என்ன தெரியும்?.. "

" கம்ப்யூட்டர்.. ல கணக்கு வழக்கு எழுதத் தெரியும்.. "

" ஊருக்குப் போய்ட்டு வந்து என்னைப் பார்!.. "

ராம் சரண் - எனது கைகளைப் பற்றிக் கொண்டு காதருகில் பேசினான்..

" என்னவாம்?.. " 
- அண்ணாச்சியின் கேள்வி..
அவரிடம் தயங்கியபடி சொன்னேன்...

" ரோஜாப்பூ கொடுத்தாளே அந்த சிவத்த பொண்ணு... அவ மேல இவனுக்கு ஒரு இதுவாம்... அவளுக்கும் மகராஜ் இரக்கம் காட்டுங்க!... ன்னு சொல்றான்!.. "

அண்ணாச்சி பலமாகச் சிரித்தார்.. 

அன்பும் இரக்கமும் சந்தனமாகக் கமழ்ந்தன..
***

வாழ்க வையகம்
**

10 கருத்துகள்:

  1. மனிதம் நிறைந்த மனிதர்கள். 'வடக்கன்'களின் மறுபக்கம். இனிமையான, நெகிழ்வான கதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. கதை படித்ததும் மனம் நெகிழ்ந்து.

    ஊரைவிட்டு ஊர் வேலை தேடி அலைந்துவரும் மனிதர்கள்.

    தமிழ்நாட்டுக்கு வடக்குமா நிலமனிதர்கள். எமது தலைநகருக்கு மலை நாட்டு மக்கள் என்ற நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகையும்
      அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றியம்மா..

      நீக்கு
  3. கதை நெகிழ்ச்சியான கதை. வடக்கென்றாலும் தெற்கென்றாலும் நல்ல மனிதர்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வடக்கென்றாலும் தெற்கென்றாலும் நல்ல மனிதர்கள்
      நல்ல மனிதர்கள் தான்

      தங்கள் வருகையும்
      அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி சகோ

      நீக்கு
  4. வடக்கிலிருந்து வேலைக்கு வருபவர்களின் பலரது நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்கள், பீகார், உபி போன்றவற்றைச்சேர்ந்தவர்களின் நிலை மிகவும் பரிதாபம்

    கூடவே அண்டை நாடு நேபாலில் இருந்து இங்கு வந்து வேலை செய்த குடும்பங்களில் ஒரு சிலர் நேபாலுக்குச் சென்றிருக்கிறார்கள் சமீபத்திய அங்கு கலவரத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இன்னும் இங்கு வரவில்லை.

    அவர்களின் நிலையைக் கேட்டால் பரிதாபமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நியதிகளை நம்மால் மாற்ற இயலாது...

      தங்கள் வருகைக்கும்
      அன்பின் கருத்திற்கும்
      நன்றி சகோ

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. நல்ல கதை. தன்னிடம் வேலை செய்யும் வேலையாட்களுக்கு பரிந்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற நல்ல மனது வேண்டும். அந்த நல்ல மனதை சந்தண பாண்டியன் பெற்றுள்ளார். அதனால்தான். அவர் பெயரோடு சந்தணமும் இணைந்து மணம் வீசுகிறது. கதையை படித்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் வீட்டு விஷேசத்தில் கேட்டரிங் வேலை செய்ய வந்தவன் அவரிடம் வேலை கேட்கின்றான்.

      அவரது மனநிலை என்ன என்பது கதை

      தங்கள் வருகைக்கும்
      அன்பின் கருத்திற்கும்
      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..