நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 18, 2021

கங்கா வருக..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புனிதம் மிகுந்த
துலா மாதம்..

சூரியோதயத்திற்கு
சற்று முன்பாக
வடதிசையின் கங்கையானவள்
தென்னகத்தைத்
 தேடி வந்து
காவிரியுடன்
கலப்பதாக ஐதீகம்..

ஒரு சமயம் கங்காதேவி
தன்னைத் தானே
வியந்து கொண்டாள்..


""சர்வேஸ்வரனின்
திருமுடியில் இருக்கின்றோம்..
நம்மை விட உயர்ந்தவர் யார்!.."

இந்நினைப்பினால்
அவளுக்கு
விளைந்தது கேடு..

துலா மாதத்தின் முப்பது நாட்களும்
தமிழ் நிலத்தில
அம்பிகை மயிலாக
வழிபாடு செய்து நின்ற
மயிலாடுதுறையின்
காவிரியில் மூழ்கி அங்கே
சிவ வழிபாடு செய்து
பாவம் நீங்கப் பெறுமாறு
பணிக்கப்பட்டாள்..

அதன்படி
நாளும் காவிரியில்
கலந்து மூழ்கி
அஞ்சொல் அம்பிகையையும்
மயூரநாதரையும்
வணங்கி - முப்பதாம் நாள்
அம்மையப்பனின்
தரிசனம் பெற்று
சாபம் நீங்கினாள்..

இதன்படி
துலா மாதமாகிய
ஐப்பசி முழுவதும்
காவிரியுடன் கங்கா தேவி
கலந்திருக்கின்றாள்..

இம்மாதத்தில்
காவிரியில் நீராடி
சிவ வழிபாடு செய்வோர்
கங்கையில் நீராடிய
புண்ணியத்தை எய்துவர் என்பது ஆன்றோர் வாக்கு..

"ஆயிர மா முகத்தினொடு
வானில் தோன்றும்
கங்கை நங்கை "
- என்று குறிக்கின்றார் அப்பர் பெருமான்...

நமது தமிழ் நிலத்திற்கு
வருகின்ற கங்காதேவியை
வரவேற்போம் - வாருங்கள்!.
-:-

கங்கையில் சூர்யோதயம்

பனிமலை படரும் பைங்கொடி வருக..
பரமன் திருமுடி திகழ்வோய் வருக..
பழவினை தீர்க்கும் திருவே வருக..
பதமலர் பணிந்தேன் பகீரதி வருக..1

ஆயிர மாமுக அன்னாய் வருக..
தாயினும் இனித்திடுந் தமிழாய் வருக..
பாயிரப் புலவோர் பரவிட வருக..
ஆயிரம் பேர் திகழ்  அழகே வருக..2

வெள்ளிய பனிமுகப் புன்னகை தவழ 
முன்னெடுத் தோங்கும் கங்கா வருக..
துள்ளிடு மீனொடு மின்திகழ் காவிரி
தன்னொடு கலந்திட கங்கா வருக..3

தழைத்திடு காவிரிக் கரை தனில் வருக..
உழைத்திடு உழவர் உளத்தினில் வருக..
பிழைத்திடும் ஆருயிர் செழித்திட வருக..
இழைத்திடு அன்பின் அமுதாய் வருக..4


தென்றலில் திகழும் தென்கரை வருக..
இன்புறு எழிலாய் வடகரை வருக..
நன்மையும் நலமும் மலிந்திட வருக..
பொன்மயி லாடு துறைதனில் வருக..5


பொன்தரு பொன்னியும் காத்திருக் கின்றாள்..
பூவிழி மலர்ந்து பார்த்தி ருக்கின்றாள்..
நன்மனை வாழ நலந்தர வருக
காவிரி களித்திட கங்கா வருக..6

கோமுகி - கங்கோத்ரி

குலமகள் அரைத்த மஞ்சளில் குளிக்க
கோமுகி விளைத்த குலக்கொடி வருக..
காவிரி விளைத்த நறுமலர் களிக்க
கங்கோத்ரியின் கன்னிகை வருக..7


அங்கயல் மீனாள் குங்குமம் தரிக்க
மங்கல மாமுக கங்கா வருக..
பைந்தமிழ் வண்ணப் பட்டும் உடுத்த
பண்பின் பகீரதி பரிவுடன் வருக..8

மலருடன் தீபம் ஏந்தியே நின்றோம்
மங்கல முகத்தினில் மகிழ்வுடன் வருக..
நீருடன் நீரும் நெகிழ்வுறும் வகையில்
ஊருடன் ஊரும் உறவினில் வாழ்க..9


பரணியும் வைகையும் தோழியர் ஆக
தரணியில் நன்மை நல்கிட வருக..
சரண்நீ என்னும் அடியவர் வாழ்வில்
அரணென அறந்தனைக் காத்திட வருக..10

ஊர் கொண்ட உலகம் உருப்பட வேண்டி
பேர் கொண்ட கங்கா சீர் கொண்டு வருக..
தேர் கொண்ட மன்னர் திசை கொண்ட மண்ணில்
நீர் என்ற மங்கலம் நிறை கொண்டு வருக. 11

நீருடன் பிறந்து நீரினில் கரையும்
நிலையில் சிவகதி தந்திட வருக
சீருடன் வாழ்ந்து சிறப்பினில் தோயும்
கலையில் தவகதி பொங்கிட வருக..12


அஞ்சொல் அம்பிகை அவளுடன் ஐயன்
ஆனந்தங் காண கங்கா வருக..
பசுமையின் வண்ணன் பரிமள ரங்கன்
பதமலர் போற்ற பகீரதி வருக..13

காவிரி அதனுடன் கலந்திடும் கங்கை
கலந்திடும் நலந்தனில் தமிழகம் வாழ்க
கருணையின் கரங்கள் வளந்தனைப் பொழிந்திட
காலம் முழுதும்  களிப்புடன் வாழ்க..14

கங்கையும் வாழ்க காவிரி வாழ்க..
கலந்திடும் அன்பினில் பாரதம் வாழ்க..
காவிரி போற்றி கங்கையும் போற்றி..
காலங்கள் தோறும் கை தொழும் போற்றி..15
-:- 
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
-:- -:- -:-

17 கருத்துகள்:

  1. உங்கள் கவிதை அழகு.  நீண்ட பாவாக படித்திருக்கிறீர்கள்.  கங்கை தென்னகம் வரும் கதை படித்திருக்கிறேன்.  சில சமயங்களில் அப்படி சாபம் பெற்றாலாவது ஆண்டவனைத் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்று தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு..

      கங்கா தேவியின் வருகையால்
      அனைவரது இல்லங்களிலும் நன்மைகள் வளரட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான, அழகான கவிதை. கங்கைக்கு நல்லதொரு வரவேற்பு. இங்கே ஶ்ரீரங்கத்தில் நேற்றிலிருந்தே நம்பெருமாளுக்குத் துலாக்காவிரி ஸ்நானம் ஆரம்பிச்சாச்சு. ஆண்டாள் நேற்றிலிருந்து வரத் தொடங்கியாச்சு. கீழே போய்ப் பார்க்க என்னால் முடியவில்லை. ஒரு நாளாவது போகணும்னு ஆவல் மட்டும் இருக்கு. குடியிருப்பு நண்பர் ஒருவர் தான் எடுத்த வீடியோவை எங்கள் குடியிருப்பின் வாட்சப் குழுமத்தில் போட்டிருக்கார். அதை எ.பி. குழுமத்தில் பகிர்ந்திருக்கேன். நானும் அதைத் தான் தரிசனம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைகு மகிழ்ச்சி..

      கங்கா தேவியின் வருகையால்
      அனைவரது இல்லங்களிலும் நன்மைகள் செழிக்கட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கங்கையின் வருகை குறித்த தங்களது அழகான கவிதை அருமையாக உள்ளது. படங்கள் அனைத்தும் மிக அழகாக இருக்கின்றன. துலா காவிரி ஸ்நானம் சிறப்பு பற்றி கொஞ்சம் அறிவேன். இன்று விளக்கமாக அறிய தந்து கங்கா அன்னையை துதிக்கும் பாமாலையையும் படைத்து, துலா காவிரியை சிறப்பித்திருப்பது கண்டு மகிழ்வடைந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.🙏.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      கங்கா தேவியின் வருகையால்
      அனைவரது இல்லங்களிலும் நன்மைகள் வளரட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
    வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களது வருகைக்கு மகிழ்ச்சி..

      கங்கா தேவியின் வருகையால்
      அனைவரது இல்லங்களிலும் நன்மைகள் வளரட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. துலா மாதம் முழுவதும் துலா கட்டத்தில் மக்கள் நீராடியபடி இருப்பார்கள். மாயவரம் நினைவுகள் வருகின்றது. இந்த மாதம் முழுவதும் எல்லோர் வீடுகளிலும் உறவுகள், நட்புகளின் வரவு மகிழ்ச்சி அளிக்கும்.
    உங்கள் கவிதை மிக அருமை.

    கங்கா தேவியின் வருகை அனைவருக்கும் நலம் தரட்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      காவிரியை தேடி வந்த கங்கா தேவி மக்கள் அனைவருக்கும் நன்மைகளைத் தரட்டும்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      வாழ்க வையகம்..
      வாழ்க வளமுடன்..

      நீக்கு

  6. ஐப்பசி முதல் தேதி திருப்பராய்த்துறையிலும், இரண்டாவது ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலும், கடைசி தேதி மயிலாடுதுறை நந்திக் கட்டத்திலும் நீராடுவார்கள் சிலர். மாதம் முழுவதும் அதிகாலை துலா கட்டத்தில் நீராடி இறைவனை வணங்குவார்கள்.

    மாயவரத்தில் ஐப்பசி மாதம் "முழுக்கு கடைகள் " வந்து எல்லா பொருட்களும் வாங்க வசதியாக இருக்கும். கார்த்திகை தீபம் வரை கடைகள் போடுவார்கள் பல ஊர்களிலிருந்து வந்து.

    எல்லா கோயில்களிலும் கூட்டம் இருக்கும்.

    திருவெண்காட்டிலும் ஐப்பசி முழுவதும் அதிகாலை முக்குளத்திலும் நீராடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  7. மேலதிகச் செய்திகள் அனைத்தும் அருமை.. இதில் முதன்மையாக மயிலாடுதுறை தலத்தை மட்டுமே நான் சொல்லியிருக்கின்றேன்..

    தங்கள் அன்பிற்கு மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  8. தென்னகத்திற்கு வந்து காவிரியுடன் கலக்கும் கங்கையை வரவேற்று எழுதிய பா மிக மிக அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      கங்கையின் அருளால் எங்கும் நலம் பெருகட்டும்..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  9. துலா மாதத்தின் சிறப்பும், காவிரியுடன் கலந்த கங்கையின் தகவலும் சிறப்பாக கவி வழி சொல்லி இருக்கும் தங்களுக்கு வாழ்த்துகள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..