நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மார்ச் 03, 2019

திருவைகாவூர்

இரவு நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் வயிற்றுப் பாட்டுக்கு ஏதும் கிடைக்கவில்லை. பசி காதுகளை அடைக்கின்றது. குயிலியும் பசியோடு காத்திருப்பாள்!. என்ன செய்யலாம்?.. இன்னும் சிறிது நேரம் முயற்சிப்போம்!.. அதன் பிறகு சாமி விட்ட வழி!..

- என்று சிந்தித்தபடியே விழிகளைக் கூர்மையாக்கினான் அவன்.

அவன் பிறந்து தவழ்ந்து நடந்து ஓடி விளையாடியதெல்லாம் இந்த காட்டில் தான்.. இந்தக் காடு தான் அவனுடைய வீடு.. நாடு எல்லாம்!..

காட்டுக்கு வெளியில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதே அவனுக்குத் தெரியாது.

அவனுக்குத் தேவை - அன்றைய பொழுதுக்கு ஏதாவது சிறு பிராணிகள்!..


அவன் - வேடன். பெயர் கடுக்கன்!..

அவன் பிறந்து பல வருடம் வரைக்கும் அவனுக்குப் பெயரே வைக்க வில்லை.

காட்டுக்குள் ஓடித் திரிந்த விடலைப் பருவத்தில், ஒரு நாள் -
ராத்திரியில் நடந்த குருதி பூசையில் இறைச்சியைக் கடித்திருக்கின்றான்.

அதிலிருந்து கடுக் என்று பெரும் சத்தம் வரவே - கடுக்கன் எனப்பட்டான்.

பொழுது விடிந்ததும் - குயிலியோடு கல்யாணமும் நடந்து விட்டது..

என்ன இது என்று பார்த்தால் - குயிலியின் அப்பா தான் இவனுடைய பலத்தை பரிட்சை செய்து பார்த்தாராம்!..  

உணவுக்கு மட்டுமே வேட்டையாடும் பழக்கமுடையவன் - கடுக்கன்.

தனக்கும் தன் மனையாள் குயிலிக்கும் அன்றைய பொழுதுக்கு என்ன தேவையோ - அதை மட்டும் கொடுத்தால் போதும்!..

- என்று குடிலை விட்டுக் கிளம்பும் முன் சூரியன் உதிக்கும் பக்கமாக நின்று கேட்டுக் கொள்வான்..

அது - அவனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது.

நம்ம தாத்தாவோட தாத்தாவோட தாத்தா ஒருத்தரு - 
சதைக் கறியா எலும்புக் கறியா..ன்னு தின்னு பார்த்துட்டு
சாமிக்குக் கொடுத்து இருக்குறாரு!..
அவரு கறிய மட்டுமா கொடுத்தாரு?..
சாமி கண்ணுல இருந்து ரத்தம் வந்ததும்
தன்னோட கண்ணையே பிடுங்கிக் கொடுத்து இருக்குறாரு!..
அதனால தான் அவருக்கு கண்ணப்பருன்னு பேரு ஆகியிருக்கு!..
அப்பேர்ப்பட்ட வம்சத்தில வந்தவன்டா நீ!..

நாலு பேரு நல்லாருக்கணும்....ன்னு பாடுபடு....

உன்னையே கேட்டா கூட கொடுத்துடு!..


இதுவும் கடுக்கனுடைய அப்பா சொல்லிக் கொடுத்தது தான்!..

தானும் உண்டு தன்னைச் சேர்ந்தவர்களையும் உண்ணச் செய்து -
அதன் பிறகு, தான் உண்டு - துணை உண்டு - தூக்கம் உண்டு என்று இருப்பவன்.. 

அதற்குத் தான் வந்தது இன்று சோதனை.. காலையில் இருந்து - தோளில் தொங்கிய தூளியின் அம்புக்கு வேலையே இல்லை... திடீரென சலசலப்பு...

மானோ!.. - என்று ஆசையுடன் - அம்பு தொடுக்க முயன்றவன் மருண்டான்.

வாயைப் பிளந்து கொண்டு வரிப்புலி ஒன்று!.. எதிரில். 

சற்றே தயங்கினான் கடுக்கன்.

வரிப்புலியின் வாய் கிழித்து அதன் பற்களைப் பிடுங்கும் தீரன் தான் அவன்...

ஆனாலும் இப்போது மிகவும் தளர்ந்திருந்தான்..
பொழுதும் சாய்ந்து இருள் சூழந்து கொண்டிருக்கிறது.. 

அதனுடன் போராட சக்தியும் இல்லை. சாத்தியமும் இல்லை.. எனவே,
மின்னலெனப் பாய்ந்து அருகிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டான்.

ஆனாலும், அந்தப் புலியும் அவனைப் போலவே பசித்திருந்தது.


எப்படியும் நீ கீழே வருவாய் தானே!..
- என்று ஓர் ஓரமாக புலியும் படுத்துக் கொண்டது.

இதை எதிர்பார்க்காத கடுக்கன் வெலவெலத்துப் போனான்...
எப்படித் திரும்பிச் செல்வது?..

இந்தப் புலிக்கும் பசி அதிகமானது...
மேலேயே பார்த்துக் கொண்டிருக்கிறது!..


முற்றாக இருட்டி விட்டது...
இனிமேல் புலி போய் விட்டாலும் வீட்டுக்குப் போவதென்பது இயலாது.

சிறு பொழுதில் தன் வாழ்வு ஒளிமயமாக ஆகப்போவதை அறியாத அவன் -
விடியும் வரை மரக்கிளை தான் மாளிகை என முடிவு செய்து கொண்டான்.

வசதியாக சாய்ந்து கொண்டான். உறக்கம் வராதிருக்க வேண்டி, கைகளுக்கு எட்டிய இலைகளைப் பறித்து கீழே போட்டான். 

தண்ணீர் தாகம் அவனுக்கு... இருட்டுக்குள் எங்கே செல்வது?.. இருப்பினும் கீழே பார்த்தால் இரண்டு ஒளிப் புள்ளிகளாய் புலியின் கண்கள்!..

வந்த வேகத்தில் போனது தாகம்!..

மேலே நோக்கினான்.

நட்சத்திர மண்டலம் நகர்ந்து இருந்தது.. விரல் கொண்டு கணக்கிட்டான்..

மூன்றாவது ஜாமம் ஆகியிருந்தது.

இலைகளைப் பறித்துக் கீழே போடுவதை மட்டும் அவன் நிறுத்தவே இல்லை.

ஆயிற்று இன்னும் கொஞ்சநேரம் தான்...
தொல்லைகள்  எல்லாம் தீர்ந்து விடும் என எண்ணிக் கொண்டான்!..

அதோ விடியலின் கீற்றாக - கீழ் வானில் செவ்வண்ணக் கோலங்கள்...

மெல்லியதாக ஒளி பரவத் தொடங்கிய வேளை..

கீழே புலியைக் காணவில்லை. மிக்க மகிழ்ச்சி..

மரத்திலிருந்து இறங்கினான்... எதிரில் - 

கன்னங்கரேல் என்று எருமைக்கடா மீது - யார் அது?.. பார்த்ததேயில்லை!..

பாவம்!..

அவன் விதி அந்த நொடியில் முடிந்து விட்டது - கடுக்கனுக்குத் தெரியாது.

அதே நொடியில் - கடுக்கனைத் தேடிக் கொண்டு குயிலி ஓடி வந்தாள்..

மச்சான்.. என்னை விட்டுட்டு எங்கே போயிருந்தே?.. 

நான் எங்கேயும் போகலை.. குயிலி!.. இங்கே தான் இருக்கேன்!..

விசும்பலுடன் ஓடி வந்த குயிலி - கடுக்கனை இறுகக் கட்டிக் கொண்டாள்..

இவங்கள்ளாம் யாரு மச்சான்!..

எனக்குந் தெரியல புள்ளே!..
எங்க அப்பாரு அடிக்கடி சொல்லுவாரே - அந்த சாமிகளா இருக்குமோ!..

யமன் பாசக் கயிற்றினை மின்னலென வீசுவதற்குள்  - அதை விட வேகமாக சுழித்து வந்த சூறாவளியில் செயலற்று சுருண்டு விழுந்தான்.

எருமை மாடு எந்தப் பக்கம் ஓடிப் போனதோ தெரியவில்லை.

கண் கொண்டு நோக்க - எதிரில் - காணற்கரிய காட்சி!..

பேரொளிப் பிழம்பாக ஸ்ரீபரமேஸ்வரனும் பரமேஸ்வரியும்!..

அருகில் கைகட்டிச் சேவகமாக நந்தியம்பெருமான்.

பெருமானே!.. என்னை மறுபடியும் மன்னித்து விடுங்கள்!..
இரவெல்லாம் உண்ணாமல் விழித்திருந்து இலைகளைப் பறித்துக் கீழே போட்ட வேடனின் செயல் - யாவருக்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை - ன்றபடிக்கு, சிவபூஜையாகி விட்ட பெருமையை அறியாத அந்தகனாகி விட்டேன்!.. பிழை பொறுத்தருள வேண்டும் ஸ்வாமி!..

- எனக் கதறி கண்ணீர் வடித்தான் யம தர்மராஜன்.

மனங்கனிந்த  பரமேஸ்வரன் - வழக்கம் போலவே யமனின் மீது இரக்கங் கொண்டு,  நந்தியம்பெருமானை நோக்கினார் .

உத்தரவு!..

-  தனது மூச்சுக் காற்றால் கட்டப்பட்டு செயலற்றுக் கிடந்த யமனை விடுவித்தார் நந்தியம்பெருமான்...

யமதர்மராஜனின் கண் முன்பாகவே -
கடுக்கனும் குயிலியும் - ஜோதியாக சிவகதி அடைந்தனர். 

ஈசன் திருவாய் மலர்ந்தருளினார்

நந்தி!.. இனி இந்தத் திருத்தலத்தில் எம்மை அடைந்தவர் எவர்க்கும் யம பயம் இல்லை. நீ கிழக்கு நோக்கி இருந்து கால பாசத்திலிருந்து ஆன்மாக்களைக் காப்பாற்றுவாயாக!...

தங்கள் சித்தம் - என் பாக்கியம்!.. - நந்தியம் பெருமான் தலை வணங்கினார்.

யமனும்  திருத்தலத்தின் எதிரே தீர்த்தத்தினை உண்டாக்கி - அதில் நீராடி, 
தனது பிழைதனைப் பொறுத்த இறைவனைப் பணிந்து வணங்கினான்.

இறைவன் ஆலமர் செல்வனாக திருக்கரத்தினில் பிரம்புடன் அமர்ந்தார்.

பிரம்பு - அது அடியவர்களுக்கு அல்ல!..
தகாததைச் செய்யுங் கொடியவர்களுக்கு!..


அதிசயம் கேட்டு வந்த மஹாவிஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத வகையில் சன்னதியின் இருபுறமும் எழுந்தருளினர். 

யமனுக்கே வேலையில்லாத் திருத்தலத்தில் நமக்கென்ன வேலை... - என்று நவக்கிரகங்களும் வெகு தொலைவுக்கு ஓடிப் போயினர்.

எல்லாம் அறிந்த மார்க்கண்டேயருக்காக ஈசன் எழுந்த தலம் 
திருக்கடவூர். 

ஏதும் அறியாத வேடனுக்காக ஈசன் எழுந்த தலம் 
திருவைகாவூர்.  


இறைவன் - ஸ்ரீவில்வவனேஸ்வரர்  
அம்பிகை - சர்வஜன ரட்சகி - வளைக்கைநாயகி
தீர்த்தம் - யம தீர்த்தம்
தலவிருட்சம் - வில்வம்.
  

அம்பிகை கிழக்கு முகமாக ஐயனின் இடப்புறம் திகழ்கின்றாள்.

அம்மையப்பனைத் தரிசிக்க வரும் அன்பர்களை வரவேற்பார் போல  - நந்தியம்பெருமான் கிழக்கு முகமாக வீற்றிருக்கின்றார்.

கோபுர வாசல், சந்நிதி வாசல் - எங்குமே துவார பாலகர்கள் கிடையாது.

சந்நிதி வாசலின் இருமருங்கும் பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் திகழ்கின்றனர்
    
யம தீர்த்தம் திருக்கோயிலின் எதிரில் உள்ளது.
தல விருட்சம் தக்ஷிணாமூர்த்தி ஸ்வாமிக்கு எதிரில் உள்ளது.
இதனடியில் சப்த கன்னியர் எழுந்தருளியுள்ளனர்.


திருச்சுற்றில் ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் விளங்கும் ஸ்ரீ ஷண்முகநாதனின் திருக்கோலம் அற்புதமானது.

திருமுருகனைத் தாங்கியிருக்கும் மயில் வடக்கு முகமாக விளங்குகின்றது.

இத்திருக்கோயிலில் நவக்கிரங்கள் கிடையாது.

இத்தலத்தில் அகத்திய மகரிஷி - ஈசனின் திருமணக் காட்சியை தரிசித்தார். 

அருணகிரிநாதர் வழிபட்ட திருத்தலங்களுள் திருவைகாவூரும் ஒன்று.  

திருஞானசம்பந்தப்பெருமானின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

திருக்காளத்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், இராமேஸ்வரம் - போல மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படும் தலம் திருவைகாவூர்.

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகளுடன் திருவிழா .



விடியற்காலையில் கோபுரத்தின் கீழ் வேடனையும் அவனது மனைவியையும் நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவபெருமானுக்கும்,

அதன்பின் சிவகதி அடைந்த வேடுவ தம்பதியருக்கும் தீபாராதனை நிகழும்.

மதியம் உச்சிப் பொழுதில் அம்மையப்பனுடன் பிரம்மனும் மஹாவிஷ்ணுவும் பஞ்சமூர்த்திகளாக எழுந்தருள - யம தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழும்.

இரவில் ஸ்வாமியும் அம்பிகையும் ஓலைச் சப்பரத்தில் திருவீதி உலா.


திருவைகாவூர் எனும் இத்திருத்தலம் - சுவாமிமலைக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது.  கும்பகோணத்திலிருந்து நகர பேருந்துகள் அதிகம்.

பாபநாசத்திலிருந்து திருவைகாவூருக்கு சிற்றுந்துகள் (Mini Bus) செல்கின்றன.

சிவராத்திரியன்று விடிய விடிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன் - சிவராத்திரி முழுப் பொழுதும் இத்திருக்கோயிலில் குடும்பத்துடன் இருந்து தரிசனம் செய்துள்ளேன்.

கொல்வாரேனுங் குணம் பல நன்மைகள்
இல்லாரேனும் இயம்புவர் ஆயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமசிவாயவே!.. (3/49)

- என்று ஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவாக்கிற்கு இணங்க - வேடன் முக்தி எய்திய திருத்தலம் திருவைகாவூர்..

நஞ்சமுது செய்தமணி கண்டன்நமை ஆளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடை யிடைப்புனல் கரந்தசிவ லோகன்அமர் கின்றஇடமாம்
அஞ்சுடரொ டாறுபதம் ஏழின்இசை எண்ணரிய வண்ணமுளதாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே!.. (3/71)  
-: திருஞானசம்பந்தர் :-

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான பதிவு
மகா சிவராத்திரிக்கு என மீண்டும்!...

நமசிவாய வாழ்க!.. நாதன் தாள் வாழ்க!..
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

23 கருத்துகள்:

  1. அரிய தல வலாறு அறிந்தேன் ஜி
    தொடக்கத்தில் கண்ணப்ப நாயனாரைப் பற்றியதோ என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங். கடுக் என் சத்தம் வந்ததால் கடுக்கன் ஆனான். அவள் குயில்போன்ற குரலையுடையவளாய் இருந்திருக்க வேண்டும். அதுதான் குயிலி என்று பெயர் சூட்டி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      தாங்கள் சொல்வதே தான்.. அதே தான்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

      நீக்கு
  3. திருவைகாவூர் சென்றதில்லை. அருமையான விவரங்கள், அழகான படங்கள். சிவராத்திரி சிறப்புப் பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...

      அவசியம் சென்று வருக..
      ஊருக்கு அந்தப் புறமாக கொள்ளிடம் ஆறு.. மிக அழகான சூழல்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

      நீக்கு
  4. கும்பகோணம் பலமுறை சென்றும் திருவைகாவூர் போனதில்லை. வளைக்கை நாயகி என்னும் அருமையான பெயர் கொண்ட அம்பிகையைத் தரிசிக்க வேண்டும். தலவரலாறும் அருமை. கோயில் பற்றிய விபரங்களும் அருமை. நல்லதொரு பதிவு. சிவராத்திரியின் மகிமை குறித்துச் சொல்லும் அருமையான பதிவும் கூட.

    பதிலளிநீக்கு
  5. வேடன் கடுக்கனுக்குக் கிடைத்த பாக்கியம் தான் என்ன. பச்சிலையை வர்ஷித்து சிவ கதி அடைந்தானே.

    அருமையான பதிகங்கள், படங்கள் கொண்ட பதிவு. இறைவனின் கருணைக்கு ஏது
    அளவு. அம்மைக்கு எத்தனை அழகான பெயர்.
    அதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ.
    சிவராத்திரியன்று கட்டாயம் இந்த ஸ்தல புராணத்தை நினைத்துக் கொள்கிறேன்
    அன்பு துரை செல்வராஜு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்புடையீர்..தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

      நீக்கு
  7. அறிந்த கதை என்றாலும் உங்கள் நடையில் அருமையாக இருந்தது துரை ண்ணா.

    திருவைகாவூர் சென்றதில்லை. சர்வஜனரட்சகி - வளைக்கை நாயகி!! ஆஹா பெயரே இனிக்குது.

    நல்ல விவரணங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

      நீக்கு
  8. திருவைகாவூர் பற்றிய தகவல்கள் அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி.

      நீக்கு
  9. அருமையான பதிவு.
    திருவைகாவூர் தரிசனம் கிடைத்தது பெருமகிழ்ச்சி.
    சிவராத்திரி மிகவும் சிறப்பாக நடைபெறும் கோவில்.சர்வஜனரட்சகி,ஸ்ரீ வில்வவனேஸ்வர் எல்லோருக்கும் நலங்களை வழங்க பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவ்வண்ணமே வேண்டிக் கொள்கின்றேன்..
      தங்களன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி..

      நீக்கு
  10. அழகான படங்கள் மூலம் தரிசனம் நன்றி.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி...நன்றி.

      நீக்கு
  11. இதுவரை கேள்விப்பட்டிராத நினைவில் இல்லாத தலம். குறித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெ.த....

      வாய்ப்புக் கிடைக்கும் போது அவசியம் தரிசனம் செய்யவும்..
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...நன்றி.

      நீக்கு
  12. திருவைகாவூர். அருமையான கோயில். பல முறை சென்றுள்ளேன். ஒரு முறை சென்றபோது புகைப்படங்கள் எடுத்து தமிழ் விக்கிபீடியாவில் திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் இணைத்தேன். அதிலுள்ள புகைப்படங்கள் அனைத்தும் நான் இணைத்தவையே. அனைத்து நந்திகளும் எதிர் திசையில் நம்மைப் பார்த்து உள்ள ஒரே தலம் என்ற சிறப்பினைக் கொண்டது.

    பதிலளிநீக்கு
  13. இதுவரை கேள்விப்பட்டிராத ஒரு தலம். உங்கள் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

    எல்லாம் வல்ல சிவபெருமானின் அருள் அனைவருக்கும் கிடைத்திட எனது பிரார்த்தனைகளும்...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..