நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், அக்டோபர் 25, 2018

அன்னாபிஷேகம்

நேற்று ஐப்பசி நிறைநிலா..
சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நிகழ்த்தப்படும் நாள்...

அன்னம்!...

அது தான் மனிதனின் எண்ணம்...

சாப்பிடும் உணவுக்குத் தகுந்த மாதிரியே
ஒரு மனிதனுடைய எண்ணங்கள் மலர்கின்றன...

அதனால் தான் சோறு ஆக்கும்போது
நல்ல எண்ணங்களுடன் சமைக்கச் சொன்னார்கள்...

அப்படி ஆக்கப்பட்ட உணவையும்
நல்ல எண்ணங்களுடன் பரிமாறச் சொன்னார்கள்...

இது நிதர்சனமான உண்மை...

குருஷேத்ர போர்க்களம்...

சிகண்டியின் பாணங்களாலும்
அர்ச்சுனனின் கணைகளாலும் தாக்கப்பட்ட
பிதாமகர் களத்தில் வீழ்ந்து கிடக்கின்றார்...

அவரது உடலை ஊடுருவிச் சென்ற கணைகள் பல நூறு..

அம்புப் படுக்கையில் கிடக்கின்றார்.. 
தலை மட்டும் தாழ்ந்து தொங்குகின்றது..

தலைக்கு அணை கேட்கிறார்..

அன்னத்தின் தூவிகளால் ஆன,
தலையணையைத் தூக்கிக் கொண்டு வருகின்றார்கள் - துரியோதனாதிகள்....

அடப் போங்கடா!.. - என்று சொல்லும்போது
அர்ச்சுனன் அம்பினால் தலைக்கு முட்டு கொடுக்கின்றான்...

தாகத்தினால் தவிக்கின்றார் பீஷ்மர்..

வழக்கம் போல அறிவிலிகள் கூஜாவைத் தூக்கிக் கொண்டு வர -
அர்ச்சுனனோ - பாதாள கங்கையை ஓரம்பினால் வரவழைக்கின்றான்...

சிம்மம் வீழ்ந்ததைக் கேட்டு உறவு முறைகள் எல்லாம்
கதறி அழுது கொண்டு போர்க்களத்திற்கு வருகின்றன...

அவர்களுள் பாஞ்சாலியும் ஒருத்தி!...

திரௌபதியைக் கண்டதும் ஆதுரத்துடன் அருகில் அழைக்கிறார்...

கண்ணீர் மல்க நெருங்கி பீஷ்மரின் அருகில் அமர்கின்றாள்..

அம்மா... அன்றைக்கு அந்தப் பாவிகள் செய்தது அநீதி!.. - என்கிறார்...

அந்த சோகத்திலும் சிரிக்கிறாள் அன்னை பாஞ்சாலி..

எல்லோரும் கோபாவேசமாகிறார்கள் -
மறுபடியும் இவள் சிரிக்கிறாளே!... - என்று..

மகளே.. நீ ஏன் சிரிக்கின்றாய்.. - என, எனக்குத் தெரியும்...
அன்றைக்கு சபையில் எதிர்த்து ஒரு குரல் கொடுக்காதவன்
இன்றைக்கு நியாயம் பேசுகின்றானே!... என்று தானே...

தாயே!... அன்றைக்கு நான் உண்டு கொண்டிருந்தது துரியனின் சோறு..
அதனால் என் சிந்தை செயலிழந்து போயிருந்தது...
அன்றைக்கு எதும் பேசமுடியவில்லை தான்..

அவனிட்ட சோற்றைத் தின்றதனால் வளர்ந்த நிணமும் குருதியும்
இன்றைக்கு அர்ச்சுனனின் கணைகளால் வழிந்தோடி விட்டன...

 உன்னுடைய வீர புருஷனால் நான் தாகம் தணிந்தேன்!...
அதுவும் நீதி நேர்மையறிந்த காண்டீபனின் கணையினால்!..
ஊற்றெடுத்த பவித்ர கங்கை என் பாவங்களைத் தீர்த்தாள்!..

கங்கை மறுபடியும் என்னைப் பெற்றெடுத்தாள்...
இன்று மீண்டும் நான் புதிதாய்ப் பிறந்தேன்...
நீதியையும் நியாயத்தையும் இனிமேல் தான் பேச முடியும்!..

இதைக் கேட்ட திரௌபதி
ஓ!.. - என்று அலறியவாறு பீஷ்மரின் திருவடிகளில்
முகம் புதைத்துக் கொண்டாள்...

இதற்கப்புறம் தான் பீஷ்மர்
எல்லாவித நீதி நெறிமுறைகளையும் புகல்கின்றார்..
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் மொழிகின்றார்..

மகாபாரதத்தில் கர்ணனும் சல்லியனும் சோற்றால் வீழ்ந்தவர்களே!..

பஞ்ச பூத சேர்க்கையினால் மண்ணிலிருந்து
பயிர்களும் உயிர்களும் தோன்றுகின்றன...

பயிர்களும் உயிர்களும் வாழ்க்கைச் சக்கரத்தில்
மனிதனுக்கு உணவாகின்றன...

உணவாகும் பயிர்களுள் உயர்வானது - மிக உயர்வானது - நெல்!..

அதிலிருந்து தோன்றும்
அரிசி, சோறு - இவையெல்லாம் சிவலிங்க வடிவம்...

அதனால் தான் அரிசியும் சோறும்
கருவான சமயத்திலிருந்து -
கட்டையில் கிடத்தப்படும் வரை
உடன் வருகின்றன...

அதற்கப்புறம் எஞ்சிய சாம்பல் நீரில் கரைந்த பின்னும்
ஆத்ம சாந்திக்கு என்று நீரில் கரைபட்டு
நம்மைக் கரையேற்றுவது சோறு!...

இதனால் தான் -
நல்ல எண்ணங்களுடன் சமைக்க வேண்டும்..
நல்ல எண்ணங்களுடன் பரிமாற வேண்டும்..
நல்ல எண்ணங்களுடன் சாப்பிட வேண்டும்!..
என்றெல்லாம் வகுத்து வைத்தனர் ஆன்றோர்...

ஆனால், பாருங்கள்.. 
இன்றைய நாளில் -
பிரியாணி எனும் ஒருவகைச் சோற்றுக்காக
பெற்றெடுத்த பிள்ளைகளைக் கொன்றொழித்த
பாவத்தையும் கேட்கும் நிலைக்கானது - நாடு...

ஒரு ஆணிடம் நல்ல உயிர் அணுக்கள் விளைவதற்கும்
ஒரு பெண்ணிடம் நல்ல கருவாய் அவை வளர்வதற்கும்
அடிப்படையானது நல்ல உணவு...

உணவினால் மனிதனுக்கு காமம் விளைகின்றது...
உணவினால் மனிதனுக்கு மோகம் விளைகின்றது...

உணவினால் மனிதனுக்கு கோபம் விளைகின்றது...
உணவினால் மனிதனுக்கு கொடூரம் விளைகின்றது...

இப்படியான உணவு தான் மனிதனுக்கு
அன்பையும் அறிவையும் அருளையும் கொடுக்கின்றது.. 

அன்பையும் அறிவையும் அருளையும் கொடுக்கின்ற
நல்ல உணவில் தலையானது - சோறு..

அந்த சோறு தான் சிவம் என்று மனதில் கொண்டு
மங்கலங்கள் அனைத்தையும் பெறுவோம்...

இனி நேற்றைய அன்னாபிஷேக திருக்காட்சிகள்...

தஞ்சாவூர் கோயில்களின் திருக்காட்சிகளைவழங்கியவர்
நண்பர் திருமிகு. ஞானசேகரன்.,

மற்றைய படங்கள்
பாரெங்கும் படர்ந்திருக்கும் சிவனடியர் திருக்கூட்டத்தினர்...

அவர் தமக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கமும்!...

ஸ்ரீபெருவுடையார் - தஞ்சை 
தஞ்சை ஸ்ரீ பிரஹதீஸ்வரருக்கு 
ஆயிரம் கிலோ அரிசி கொண்டு
அன்னாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீகொங்கணேஸ்வரர் - தஞ்சை..
ஸ்ரீவிஸ்வநாதர் - தஞ்சை..
ஸ்ரீசங்கரநாராயணர் - தஞ்சை.. 
ஸ்ரீ பூமாலை வைத்யநாதர் - தஞ்சை.. 
அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை
என்னம் பாலிக்கு மாறுகண்டு இன்புற
இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.. (5/1)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ பெருவுடையார் - கங்கைகொண்டசோழபுரம்.. 
கங்கைகொண்ட சோழபுரத்தில் 
5625 கிலோ அரிசி கொண்டு 
அன்னாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது..

ஸ்ரீ மாகாளநாதர் - அம்பர் மாகாளம்.. 
ஸ்ரீ அக்னீஸ்வரர் - கஞ்சனூர்.. 
ஸ்ரீ குந்தளேஸ்வரர் - திரு குரக்குக்கா..
ஸ்ரீ கயிலாயநாதர் - திங்களூர்.. 
ஸ்ரீ கோடிகா குழகர் - திருக்கோடிகா.. 
வண்டாடு பூங்குழாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருஆரூர்த் திருமூலட் டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையும் குழகன் தானே.. (6/81)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

12 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    உணவு குறித்த உயர்ந்த விடயங்களை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. என் அம்மாவெல்லாம் சமைக்கையில் லலிதாம்பாள் சோபனமும், அன்னபூர்ணாஷ்டகமும் சொல்லிய வண்ணம் சமைப்பார்கள். அது இல்லைனாலும் குறைந்த பக்ஷம் நல்ல எண்ணங்களோடு சமைக்கணும்னு தான் என்னோட எண்ணமும். கூடியவரை கடைப்பிடிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... உணவைச் செய்பவர்களது எண்ணங்களும் அந்த உணவில் பிரதிபலிக்கிறது என்று நான் படித்திருக்கிறேன். அதனால்தான் எங்கள் வழக்கம் (நான், என் தலைமுறை கடைபிடிக்காத வழக்கம்) பிறர் வீட்டில் உண்ணாமை. (நான் வளர்ந்த வீட்டில் இறைவனுக்குப் படைத்தது மட்டும்தான் எங்களுக்கு உண்ணக் கொடுப்பார்கள்). நானும் எப்போதும் சமைக்கும்போது, பெரும்பாலும் சஹஸ்ரநாம் சொல்லிக்கொண்டுதான் சமைப்பேன்.

      இதுக்கெல்லாம் (அதாவது எண்ணம் உணவில் செல்லும் என்பதற்கு) என்ன ஆதாரம் என்று கேட்டால், என்னிடம் பதில் கிடையாது. ஹாஹா.

      நீக்கு
  3. நேற்றுத் தொலைக்காட்சிகளில் அன்னாபிஷேகம் காண முடியலை! மாற்றி மாற்றி யாரோ வந்து கொண்டிருந்தனர். நீங்கள் இங்கே அருமையாக் காட்டி இருக்கீங்க. நண்பர் ஞானசேகரனுக்கும் , உங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அன்னம் சாத்விக உணவு ஆனால் அன்னம் உண்ணாதவர்கள் எல்லாம்நல்ல எண்ணம் உடையவராயிருக்க முடியாதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிஎம்பி சார்... உங்கள் புரிதல் தவறு.

      காரம், ஆழ்ந்த சுவை (அதீத புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு.....) நமக்கு சத்வ குணத்தைக் கொடுக்காது. புளிப்பில்லாத தயிர், அன்னம், நெய் போன்றவை சத்வ குணத்தைக் கொடுக்கும். அதனால்தான் பொதுவாக துறவிகளுக்கு நாம் 'ருசி' என்று சொல்லுகின்ற சுவைகளுடைய உணவு வகைகளைக் கொடுப்பதில்லை.

      உங்கள் கேள்வியில் தவறு இருக்கிறது. ஸாத்வீக உணவை மட்டும் உண்டால் நம் எண்ணங்களும் சாத்வீகமாகத்தான் இருக்கும். ஆனால் நாம் 'அன்னம்/சாதம்' மட்டும் புசிப்பதில்லையே. பூண்டுக் குழம்பு, உருளை வெங்காயக் கறி, காரசாரமான துவையல் என்று கலந்துகட்டி அடிக்கிறோமே.

      இது ஒரு புறம்.

      மற்றது இயல்பான குணம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடும். அதனைத் தூண்டிப் ப்ரகாசிக்கவோ அல்லது கெடுக்கவோ செய்வது உணவுதான். அதனால்தான் குருகுலம் என்று ஒன்று இருந்தபோது அங்கு சாதாரண சாத்வீக உணவு வழங்கப்பட்டது. துறவறம் மேற்கொள்பவர்களுக்கும் அதுவே விதிக்கப்பட்டது.

      நீக்கு
  5. அருமையான தரிசனம்.
    அனைத்து கோவில்கள் அன்னாபிஷேக காட்சிகளும் ஒரே இடத்தில் இருந்து கண்டு களிக்க பதிவு செய்த்து சிறப்பு.

    பதிலளிநீக்கு
  6. எப்படி கோர்வையா பதிவைக் கொண்டு போய், அன்னாபிஷேகத்துக்கு வந்திருக்கீங்க. மிக அருமை துரை செல்வராஜு சார்..

    சோறு என்பது சிவம், அதாவது இறைவன் என்ற பொருளில் எழுதியிருக்கீங்க. அப்படி எடுத்துக்கொள்ளலாம். அன்னம் என்பது ப்ராணன் என்று உபநிஷத் சொல்கிறது. நிற்க,

    'அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்' - இது வெறும் உணவைச் சொல்வது அல்ல. அன்னம் என்பது, பேரின்பம், அதாவது வீடு பேறு. சோறு, அன்னம் இவற்றிர்க்கு பேரின்பம் என்பது பொருள். அந்தப் பேரின்பத்தை நல்குபவன் தில்லை நடராஜன். அவன் பொன்னுலக வாழ்வைத் தருவான் என்பது இப்பாடல் கூறும் கருத்து.

    பதிலளிநீக்கு
  7. அன்னாபிஷேகம் இதுவரை நான் கண்டதில்லை.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அழகு.. அன்னாபிசேக மகிமை சொன்ன விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. படங்கள் ரொம்ப அழகு. அன்னாபிஷேஷம் கண்டதில்லை.

    துளசி

    அண்ணா நானும் சமைக்கும் போது இறை பாடல்கள் பாடிக் கொண்டே சமைப்பது உண்டு. ஆனால் சத்தமாகப் பாட முடியாமல் போனால் மெதுவாகவேனும்...

    படங்கள் அழகாக இருக்கு..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..