நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 04, 2017

மார்கழிப் பூக்கள் 20

தமிழமுதம்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து..(126)
***

சமணத் துறவியர் அருளிய
நாலடியார்

(பொறையுடைமை -74)

அறிவது அறிந்தடங்கி அஞ்சுவது அஞ்சி
உறுவது உலகு உவப்பச் செய்து பெறுவதனால்
இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும்
துன்புற்று வாழ்தல் அரிது.  
***

அருளமுதம்

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
திருப்பாடல் - 20


முப்பத்து மூவர் அமரர்க்கும் முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!.. 
***

ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிய
திருப்பாசுரம்

ஸ்ரீ கிருஷ்ணன் - உடுப்பி
வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே ஆனாய்ச்சி
வெண்ணெய் விழுங்க நிறையுமே முன்னொருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு//(2173)

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
சப்த விடங்கத் திருத்தலங்கள்

இரண்டாவது திருத்தலம்
ஸ்வாதிஷ்டானம்

திருக்காறாயில்

ஸ்ரீ நடராஜர் திருக்காறாயில்
இறைவன் - ஸ்ரீ கண்ணாயிர நாதர்
அம்பிகை - ஸ்ரீ கயிலாய நாயகி
தீர்த்தம் - சேஷ தீர்த்தம், இந்திர தீர்த்தம்
தல விருட்சம் - பலா

ஆதி விடங்கர்- குக்குட நடனம்
கோழி ஆடுவது போன்ற நடனம்..

ஒரு காலத்தில் காறை எனும் 
மரங்களால் சூழப்பட்டிருந்த தலம்..

பிரம்மன் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து
தன் பிழையைத் தீர்த்துக் கொண்ட தலம்..

இத்திருத்தலத்தில் வழிபாடு செய்வோர்க்கு
கண் தொடர்பான குறைபாடுகள்
நீங்குவதாக நம்பிக்கை.. 

சேஷ தீர்த்தம் என்னும் கிணற்று நீரினால்
பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு 
அபிஷேகம் செய்யப்படுகின்றது..
இந்த அபிஷேக நீர் மருத்துவ குணங்கள் உடையது
என்பது சிறப்பு..

புரட்டாசி மாதத்தின் பௌர்ணமி நாளன்று 
தேவேந்திரன் ஆதிவிடங்கப் பெருமானை
வழிபட்டதாக ஐதீகம்..
  எனவே அந்நாள் சிறப்பாக
கொண்டாடப்படுகின்றது..


இவ்வூரின் வழியே
வணிகன் ஒருவன் ஜாதிக்காய் மூட்டைகளை
வண்டியில் ஏற்றிச் சென்றான்..

அவனிடம் குறும்பு செய்ய எண்ணிய விநாயகர்
வண்டியில் என்ன இருக்கின்றது?.. - என்றார்..
வணிகனோ கடுக்காய்
என்று பொய்யுரைத்தான்..

அவற்றை சந்தைப்படுத்தும் போது
கடுக்காய்களாக மாறியிருந்தன..

அதிர்ச்சியுற்ற வணிகன்
இத்திருக்கோயிலுக்கு ஓடிவந்து
மன்னிப்பு கேட்டுக் கொள்ள
மீண்டும் அவை ஜாதிக்காய்கள் ஆகின..

அதனால் பிள்ளையாருக்குக்
கடுக்காய்ப் பிள்ளையார் என்று பெயர்..

இந்தத் திருத்தலத்தினை
திருஞானசம்பந்தர் பாடிப்பரவியுள்ளார்..

குக்குட நடனத் திருக்காட்சியினை
இந்தக் காணொளியில் தரிசிக்கலாம்


இன்றைய நாளில்
திருக்காரவாசல் என்று வழங்கப்படும் இத்தலம் 
திருஆரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு 
செல்லும் வழித்தடத்தில்
12. கி.மீ தொலைவிலுள்ளது

ஸ்ரீ திருஞானசம்பந்தப் பெருமான்
அருளிய திருக்கடைக்காப்பு..

தாயானே தந்தையும் ஆகிய தன்மைகள்
ஆயானே ஆயநல் அன்பர்க்கு அணியானே
சேயானே சீர்திகழும் திருக் காறாயில்
மேயானே என்பவர் மேல்வினை மேவாவே!..(2/15) 
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிய
திருவெம்பாவை
(05 - 06)

ஸ்ரீ அக்னீஸ்வரர் - கற்பகாம்பிகை
கஞ்சனூர் 
மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்!..

மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!..
***

தேவி தரிசனம்
ஸ்ரீ தக்ஷிணேஸ்வரி - கல்கத்தா


ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகு எங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா இப்பொருள் அறிவார்
அன்றாலிலை மேல்துயின்ற பெம்மானும் என்ஐயனுமே..(054)
- அபிராமிபட்டர் -

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

7 கருத்துகள்:

  1. பதிவு மூலமாக உங்களுடன் மார்கழி உலா வந்தேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  2. கடுக்காய் பிள்ளையார் கதை அருமை இதுவரை அறியாதது!!!! விவரங்கள் அனைத்தும் அருமை...தொடர்ந்து வாசித்து வருகின்றோம் ஐயா!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..