நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 22, 2016

ஊர் விழிக்கும் நேரம் 1

விழிக்கும் நேரம் நெருங்கி விட்டது..

ஆனாலும் -

ஊர் இன்னும் உறங்கிக் கிடக்கின்றது...

வயல் வரப்பு.. தோட்டம் துரவு என்றிருந்தால் - 
இந்நேரத்திற்குத் தூக்கம் தானாகத் தொலைந்திருக்கும்..

அதெல்லாவற்றையும் தான் விற்றுப் போட்டு பணத்தை எண்ணியாயிற்றே!..

கறவை மாடுகள் வாசலில் கட்டிக் கிடந்தால் - 
கன்றுகள் கட்டுத் தறியில் முறுக்கிக் கொண்டு முனகும் சத்தத்தில் - 
அவற்றை அவிழ்த்து விட்டு பால் கறப்பதற்கு எழுந்தே ஆக வேண்டும்...

அது எதற்கு இடைஞ்சல் என்று
மாடுகளையும் கன்றுகளையும் கொலைக் களத்திற்கு அனுப்பியாகி விட்டது

நாலைந்து கோழிகள் இருந்தாலாவது - 
தலைமைப் பண்பில் பொழுது தவறாமல் - கொக்கரக்கோ!.. 
- என்று சேவல் கூவித் தூக்கத்திலிருந்து எழுப்பியிருக்கும்...

இதென்ன வீணான குடைச்சல்!.. - என்று கோழிக்கூட்டையும் ஒழித்தாகி விட்டது..

ஊர்க்காடு எங்கும் மரம் மட்டைகள் இருந்தாலாவது - அவற்றில் கூடு கட்டி வாழ்ந்திருக்கும் நாலாவிதப் பறவைகளும் இனிமையுடன் கூச்சலிட
இளங்காலைப் பொழுதில் தூக்கம் கலைந்து போயிருக்கும்...

இது எதற்கு இரைச்சல்!.. - என்று மரங்களையும் வெட்டிச் சாய்த்தாயிற்று..

இப்படி இவையெல்லாம் இல்லாமல் போனதால்
விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கமும் அற்றுப் போனது..

மக்களின் உடம்பு வியாதிகளின் கூடாரம் என்றானது தான் மிச்சம்...

இந்நிலையில் - தூக்கம் கலையாத தெருவின் ஊடாக
ஊர்காக்கும் நாய்களும் - உறக்கத்தின் பிடியில்!..


கிழக்கு இன்னும் முழுதாக வெளுக்கவில்லை..

பிரம்ம முகூர்த்தத்திற்கு முந்தைய பொழுது..

அப்படியெனில் நாலரை மணிக்கும் முன்பாக!..

தேய்பிறையின் ஐந்தாம் நாள்..

மஞ்சள் நிலவின் மங்கலான ஒளியில்
நீண்ட நெடுங்கரை முழுதும் அமைதி தவழ்ந்திருக்க
ஆற்று நீர் மட்டும் சலசலத்துக் கொண்டிருந்தது...

இன்னும் சற்று தூரம் தான்..
சுருக்காக நாலடி எடுத்து வைத்தால் - படித்துறை..

படித்துறையும் படித்துறைப் பிள்ளையாரும் -
பிள்ளையாருக்கு விரித்த பெருங்குடையாய் அரசும் அதன் கீழ் வேம்பும்..


 ம்.. எத்தனை எத்தனை வருடப் பழக்கம் இவற்றோடு!..

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் - வெள்ளம் வந்ததே..
இந்தப் படித்துறையை அடியோடு புரட்டிக் கொண்டு போகிற மாதிரி..

அதுதான் கண் கண்ட கடைசி வெள்ளப்பெருக்கு!..

அதற்குப் பிறகு, சென்ற வருடம் - சென்னையில் கனமழை..

நீரோடும் வழிகளை அடைத்து விட்டவர்கள் எல்லாம் -
கழிவு நீரில் சிக்கிக் கண்ணீர் வடித்தனர்.. கதறித் துடித்தனர்..

அப்படி ஒரு மோசமான சூழ்நிலை ஆயிற்று..

அப்போது கூட இங்கு பெரும் பிரச்னை இல்லை...

ஆற்றில் முழங்காலுக்கு மேலாகத் தண்ணீர் ஓடவில்லை..

ஆனால் - இந்த வருடம் புரட்டாசி முடிந்து ஐப்பசியும் பிறந்து விட்டது..
ஆற்றின் நாலாம் படி கூட இன்னும் நனையவில்லை..
வளை நண்டு மாதிரி ஆகிப் போனது வாழ்க்கை..

யாரது பேசிக்கிட்டுப் போறது?..

கையில் லாந்தர் விளக்குடன் எதிரில் வந்தார் அந்தப் பெரியவர்..

நாந்தானுங்க!..

சரி..சரி.. தனியாப் பேசிக்கிட்டுப் போறியே..ன்னு கேட்டேன்!..

கரக்..கரக்.. என்று சிரித்தபடி - பெரியவரும்
அவருடன் அந்த விளக்கொளியும் கனத்த இருளுக்குள் கரைந்து போயினர்...

தனியா பேசிக்கிட்டுப் போறேனா!?.. இது வேறு சங்கடமா?..
அந்த நிலைக்கா ஆளாகி விட்டேன் நான்?..

என்னையே நான் கேட்டுக் கொண்டேன்..
மறுபடியும் தன்னந்தனியாக!..

அப்படி என்ன அவசரம் உனக்கு?..

நல்ல சமயத்தில் மனசாட்சி தான் துணைக்கு வந்தது..

இனிமேல் தனியாக பேசிக்கொண்டு போகின்றேன் என்று யாரும் சொல்ல முடியாது!..

ஐப்பசி பிறந்து ஆறு நாளாகியும் அதைப் பற்றிப் பேசவேயில்லை!...

எதைப் பற்றி?..

நீ கொஞ்சம் தொந்தரவு செய்யாமல் இருக்கின்றாயா!.. இதோ படித்துறையை நெருங்கியாயிற்று.. ஆள் அரவமற்று இருந்தால் தான் நல்லது!..

உனக்குப் பைத்தியம் பிடித்து விடக்கூடாதே.. என்றுதான் நானும் துணைக்கு வந்தேன்.. இனி உன்பாடு.. அவர்கள் பாடு!.. நான் வருகின்றேன்!..

ஏய்.. ஏய்.. மனசாட்சி!..

ஆளைக் காணோம்.. போய் விட்டான்... போகட்டும்..


இவர்தான் படித்துறைப் பிள்ளையார்!...

என்ன பேரு அவருக்கு!?..

படித்துறைப் பிள்ளையார்..

அதுசரி.. பிள்ளையாருக்கு..ன்னு பேர் ஒன்னும் இல்லையா!..

அதான் படித்துறைப் பிள்ளையார்..ன்னு வெச்சிருக்கே.. அதுக்கு மேல என்ன?..

மின்மினிப் பூச்சி போல மினுக்கிக் கொண்டிருந்த விளக்கொளியில் பிள்ளையாரின் முகம் தெளிவாகத் தெரிந்தது..

அதிலும், அந்த நெற்றிப் பட்டை பளிச்சென்று மின்னியது..

இருக்காதா.. பின்னே!.. போன மாதம் தானே புதிதாக செய்து வைத்தது..

அப்படியானால் - அந்தப் பழைய நெற்றிப் பட்டை..

அதை யாரோ கிளப்பிக் கொண்டு போய் விட்டான்..
அதனால் தான் இப்போ புதியது!..

அடக் கஷ்ட காலமே.. பிள்ளையாருக்கே பெருஞ்சோதனையா!..

என்ன செய்றது?.. தெய்வம் மனுசன் கூட வாழ வந்தால் இதுக்கெல்லாம் ஆளாகித் தான் தீரணுமாம்!..

ஆகா.. தத்துவம்!..

யாரென்று திரும்பிப் பார்த்தால் - மறுபடியும் மனசாட்சி!..

பிள்ளையார் கோயிலைச் சுற்றி வரலாம் என்றால் அதற்கு இயலாதபடிக்கு குப்பைகளைக் குவித்து வைத்திருந்தனர் தெருவாசிகள்..

சட்டி பானை ஓடுகள்.. கண்ணாடி பாட்டில்கள்.. பிளாஸ்டிக் கழிவுகள்.. பிய்ந்து போன செருப்புகள்..  கிழிந்து போன ஆடைகள்.. கந்தலான பழந்துணிகள்..

இதெல்லாம் போதாதென்று பிள்ளையாருக்கு போட்டுக் கழற்றிய மாலைகள் பூச்சரங்கள்.. தொன்னைகள்.. சருகுகள்.. வாழையிலைகள்.. தேங்காய் மட்டைகள்..

ஒரு லாரிக்கு இருக்கும்.. வந்து அள்ளிக்கிட்டுப் போங்க!.. - ன்னு கரடியாக் கத்தினாலும் முனிசிபாலிட்டியில இருந்து ஒரு குஞ்சு குளுவான் எட்டிப் பார்க்கிறதில்லை..

சரி.. நாமளாக அள்ளிப் போடுவோம்.. ந்னு ரெண்டு பசங்களைப் பிடித்து ஆளுக்கு நூறு ரூபாய் கொடுத்து -

அள்ளிப் போடுங்கடா!.. ந்னு சொன்னால் -

அவனுங்க அந்தக் குப்பையெல்லாம் உருட்டித் திரட்டி அள்ளி -
அப்படியே ஆத்துக்குள்ள கொட்டிட்டானுங்க!..

அடேய்!.. என்னடா இந்த மாதிரி செஞ்சிட்டீங்க?..

குப்பையெல்லாம் ஆத்துக்குள்ளே போடாம வேறெங்க போடறது?..

- அப்படி..ன்னு எதிர்க் கேள்வி கேட்கிறானுங்க!...

டேய்.. நீங்க அள்ளிப் போட்டீங்களே.. குப்பை.. அதில கண்ணாடித் துண்டு தேங்காய் ஓடு எல்லாம் கிடந்ததே... யாரு கால்..லயும் குத்தி புண்ணாகி விடாதா?.. அந்தப் பாவம் நமக்கு வேணுமா?..


அதெல்லாம் பார்த்தால் முடியாது வாத்தியாரே!.. வடவாண்ட கரையில தான் அத்தனை பேரும் அசிங்கம் பண்ணி வெக்கிறான்.. தென்னாண்ட கரையில தான் கறிக்கடைக் கழிவை கொட்டி வெக்கிறான்.. ஓட்டைப் பாலத்துக்குக் கீழே  என்னைக்காவது பார்த்திருக்கீங்களா.. ஒரு நாய்ப் பண்ணையே இருக்கு..

அதுக்காக நாமளும் அந்த மாதிரி செய்யணுமா?.. தண்ணீர் தாய்க்கு சமம் இல்லையா?.. இதுக்குத் தான் நாலெழுத்து படிக்கணும்..ங்கிறது!..


நாலெழுத்து படிச்சிட்டா... வெளங்கிடுமா?.. படிச்சதுக்கு அப்புறம் முட்டாளா ஆகிறதுக்கு இப்படியே இருந்திடலாம் வாத்தியாரே!... அன்னைக்கு நீங்க தானே புலம்பிக்கிட்டு இருந்தீங்க.. ரசாயனக் கழிவை எல்லாம் ஆத்துக்குள்ள தொறந்து விடுறானுங்கன்னு!.. அவனுங்க எல்லாம் யாரு..ன்னு நெனவுக்கு வருதா?.. படிச்சவனுங்க தானே!..

அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை ஏண்டா.. வாத்தியார்.. வாத்தியார்..ன்னு சொல்றீங்க?.. நான் என்ன வாத்தியார் வேலையா பார்க்கிறேன்!?..

கேக்கிறதுக்கு நல்லதா நாலு நல்ல வார்த்தை சொல்றீங்கள்..ல!.. அப்ப நீங்க வாத்தியார் தான்!..



இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சலில்லை.. மறுபடியும் அந்தக் கண்ணாடியை எல்லாம் பொறுக்கி மேலே போடுங்கடா.. டேய்!...

அது செய்யணும்..ன்னா மேல கொஞ்சம் போட்டுக் கொடுங்க... வாத்தியாரே!..

சரிடா.. தர்றேன்.. சொன்னதை உருப்படியா செய்யுங்க!..

அவ்வளவு தான்.. மீண்டும் சட்டை பானை ஓடுகள்.. கண்ணாடிச் சில்லுகள் எல்லாவற்றையும் பொறுக்கி மறுபடியும் பிள்ளையாருக்குப் பக்கத்திலேயே போட்டு விட்டுப் போய்விட்டார்கள்...

பிள்ளையாரும் மௌனமாகச் சிரித்துக் கொண்டார்...

அன்றைக்கு நடந்ததை எல்லாம் மீண்டும்
நினைத்துப் பார்த்ததில் எனக்கும் சிரிப்பு வந்து விட்டது..

உஷ்!.. - சிரிக்கக் கூடாது.. தவிர எந்த சத்தமும் கேட்கக்கூடாது..

எதை நாடி வந்தோமோ - அது நிகழ இருக்கும் நேரம்..

பிள்ளையாரப்பா!.. கருணை காட்டணும்.. நல்லபடியா காட்சி கிடைக்கணும்!..

மனதார வேண்டிக் கொண்டு - படித்துறையில் ஒரு ஓரமாக அமர்ந்தாயிற்று..

நொடிகள் நிமிடங்களாகிக் கொண்டிருக்க - ஆற்று நீருக்குள்..

அதோ.. ஒளிப்புள்ளி..  அதோ.. அதோ.. இன்னும் ஒன்று!..

இப்படியும் அப்படியுமாக ஓடிக் கொண்டிருந்தன..

ஒன்றையொன்று துரத்தி விளையாடுவது போல!..


சலசல.. என ஓடிக் கொண்டிருந்த ஆற்று நீர்ப் பரப்பு எங்கெங்கும் ஒளிக்கோலங்கள்..

மனம் பரவசமானது!.. கண்களில் ஆனந்தம் எட்டிப் பார்த்தது!..

சடார்.. - என, ஒளிப்புள்ளிகள் இரண்டும் நீருக்குள்ளிருந்து வெளிப்பட்டன..

அவ்வளவுதான்!..

யார் இந்த நரன்!.. 

- என்ற வார்த்தைகள் ஒலிக்கக் கேட்டேன்..

வியப்பும் பதற்றமும் மேலிட மயங்கி விழுந்தேன்..

மனசாட்சி: 
இன்னும் எவ்வளவோ இருக்கு.. 
அதுக்குள்ள மயங்கி விழுந்திட்டீங்களா.. வாத்தியாரே!..

அட.. மனசாட்சி.. 
உனக்கும் நான் வாத்தியார் தானா!?.. 
* * *

14 கருத்துகள்:

  1. வணக்கம் ஜி சமூக அவலங்களை மனசாட்சியின் புபலம்பல் வழியாக அவ்வப்பொழுது சுடும் வார்த்தைகள் மூலம் அழகாக எடுத்து வைத்தீர்கள்.

    கூடவே நகைச்சுவை கலந்த நடை அருமை வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஊருக்கு ஊர் இப்படிதானே இருக்கின்றது.. யாரும் திருந்துவதாக இல்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சமூக அவலங்களை சுடும் வார்த்தைகள் மிகச் சிறப்பாக உங்கள் எழுத்தாக்கத்தில் கொடுத்தீர்கள் ஐயா...
    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..

      மக்களின் மனோநிலைக்கு சுட்டாலும் தெரியாது.. பட்டாலும் புரியாது..

      தங்களின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அருமை ஐயா
    சமூக சீர்கேடுகளை அழகாக் சுட்டியுள்ளீர்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      வரும் தலைமுறை வாழவேண்டும்.. சமூக சீர்கேடுகள் மறைய வேண்டும்..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. நாம் புலம்புவதைத் தவிர வேறு வழியில்லை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நமக்கென்று ஒரு தளம் இருப்பதால் மனம் விட்டு வருந்த முடிகின்றது..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பலரும் மனசுக்குள் புலம்புவதை நீங்கள் பதிவு மூலம் செய்து விட்டீர்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..

      என்றாவது ஒரு நாளைக்கு சீராகி விடும் என்ற நம்பிக்கை தான்..

      தங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பழைய காலத்தை கண் முன் கொண்டு வந்தீர்கள்.
    பதிவு அருமை.
    மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். இப்போது ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டுக் கொண்டு இருக்கிறது. மழை நீரை சேகரிப்போம். நல்லதே நினைப்போம். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      ஏரி குளங்கள் தூர் வாரப்பட்டு நல்ல நிலையில் காக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..

      இயன்றவரை மழை நீரை சேகரிப்போம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. நீர்நிலைகளை அசுத்தப்படுவது கண்டு வேதனை தான் ஏற்படுகின்றது. நம் மக்களுக்குச் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு சிறிதும் இல்லையே! நல்ல கருத்துக்களை மனசாட்சி துணை கொண்டு சுவாரசியமாகச் சொல்லிச் செல்கிறீர்கள். தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      மக்களுக்கு சுற்றுச் சூழல் விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..