நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

புரட்டாசி தரிசனம் 5

ஏழுமலைகள்..

சேஷாத்ரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, வ்ருஷபாத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி - என்பன அவை..

இவற்றுள், அஞ்சனாத்ரி எனும் திருமலையில் தான் -
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்தது...


ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருப்பெயர்களுள் சிறப்பானது -
அஞ்சனையின் நேயன் எனும் பொருள்படும் ஆஞ்சநேயன் என்பது தான்..

ஏனெனில், ஆஞ்சநேயரின் தாய் - அஞ்சனை..

அன்னை அஞ்சனையின் அன்பினில் கட்டுண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

வைணவத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுபவர்களுள் - இருவர்..

அவர்கள் -

பெரிய திருவடி - ஸ்ரீ கருடன்..
சிறிய திருவடி - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

திவ்ய தேசங்களின் சிறப்பான வைபவங்கள்
ஆஞ்சநேய உற்சவத்துடன் நிறைவு பெறும்...

அதிலும் ஸ்ரீராமாயணப் பிரவசனம் நிகழும் இடங்களில்
ஸ்ரீ ஆஞ்சநேயர் ப்ரசன்னமாகி இருப்பார் என்பது ஐதீகம்...

ஸ்ரீ ராம - எனும் மந்திர உபாசனை -
ஆஞ்சநேயரை மகிழ்விக்கும் என்பர் ஆன்றோர்..

ஸ்ரீராமகாதையில் சொல்லின் செல்வர் எனப் புகழப்படுபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்...

மகாபாரதத்திலும் பேசப்படுபவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

திரௌபதி விரும்பிக் கேட்ட சௌகந்தி மலரை இமயமலைச் சாரலில் இருந்து பறித்து வருவதற்காக பீமன் பயணிக்கும் போது

அவனுடன் தர்க்கம் செய்து அவன் பலத்தை அவனுக்கு உணர்த்தியதுடன் -
தன்னையும் காட்டுவித்து தடுத்தாட்கொண்டவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

அருச்சுனனின் தேர்க்கொடியில் திகழ்ந்தவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

குருஷேத்திரத்தின் போர் முகத்தில் உற்றார் உறவினைக் கண்டு தளர்வுற்று மயங்கிச் சாய்ந்த அருச்சுனனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் -

ஸ்ரீ ஹரிபரந்தாமன் கீதோபதேசம் செய்தபோது -
அதனை உடனிருந்து கேட்ட பெருமைக்குரியவர் - ஸ்ரீ ஆஞ்சநேயர்..

பாரதம் எங்கும் ஆஞ்சநேயருக்கு ஆயிரக்கணக்கான கோயில்கள்...

அதிலும் குறிப்பாக - சிவாலயங்களில் விளங்கும் ஆஞ்சநேயர் சந்நிதிகள் நூற்றுக் கணக்கில்..

ஸ்ரீ ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட திருத்தலங்களும் பற்பல..

குறிப்பாக -  

தஞ்சை மாவட்டத்தில் முத்துப்பேட்டைக்கு அருகில் கோயிலூர் எனப்படும் திரு உசாத்தானம்..

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவன்
பேருடைச் சுக்ரீவன் அனுமன் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத்தானமே.. (3/33)

- என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு..

தவிரவும், மயிலாடுதுறைக்கு அருகில் திருக்குரக்குக்கா (திருக்குரக்காவல்) மற்றும் வைத்தீஸ்வரன்கோயில்..

கும்பகோணத்திற்கு அருகில் தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)..

சென்னையில் திருவலிதாயம் (பாடி) மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய திருத்தலங்கள் குறிப்பிடத்தக்கவை..

ஸ்ரீ ராமேஸ்வரம்
தஞ்சை பாபநாசத்திலுள்ள நூற்றெட்டு சிவாலயத்தில்
மூலஸ்தானத்தின் தென்புறமாக நூற்றெட்டு லிங்கங்களுள் ஒன்றான
ஸ்ரீ அனும லிங்கம் தனிக்கோயிலில் திகழ்கின்றது..

தஞ்சை நகருக்குள் மட்டும் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன..

ஸ்ரீ மூலை ஹனுமான் - தஞ்சை
அவற்றுள் தலையாயது - தனிக்கோயிலாக கொடிமரத்துடன் விளங்கும் மூலை அனுமார் திருக்கோயில்..

சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலில் பேருருவாக விளங்கும்
ஸ்ரீ ஆஞ்சநேயர் பிரசித்தி பெற்றவர்..

அவ்வாறே - நாமக்கல் மலையில் சிறப்புடன் திகழ்கின்றார்...

ஸ்ரீ அனுமன் - நாமக்கல்
திருமலை
ஸ்ரீரங்கம்
ஸ்ரீ ஆராவமுதன் - குடந்தை
ஸ்ரீராஜகோபாலன் - மன்னார்குடி
ஸ்ரீராமன் - வடுவூர்
ஆஞ்சநேயரின் பெருமையை முழுதுமாகச் சொல்வது என்பது எளிதல்ல...

புரட்டாசி மாதத்தில் -

திருவேங்கடம், கள்ளழகர் கோயில், ஒப்பிலியப்பன் கோயில், திருஅரங்கம் -
என, தரிசனம்..

புரட்டாசியின் நிறைவு நாளாகிய இன்று
சிறிய திருவடியாகிய ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் தரிசனம்..

கஞ்சனூர்.

இறைவன் - ஸ்ரீ அக்னீஸ்வர ஸ்வாமி 
அம்பிகை - ஸ்ரீ கற்பகாம்பிகை
தல விருட்சம் - பலாச மரம் (புரசு)
தீர்த்தம் - அக்னி தீர்த்தம்

அக்னி வழிபட்டு உய்வடைந்த திருத்தலம்..
.
அப்பர் பெருமான் தரிசித்து இன்புற்ற திருத்தலம்..

குடந்தையிலிருந்து 18 கி.மீ தொலைவு..
சூரியனார் கோயிலிலிருந்து 3 கி.மீ.. தொலைவு..

இன்றைய பதிவில் -

கஞ்சனூர் சிவாலயத்தில் குடிகொண்டுள்ள
ஸ்ரீ ஆஞ்சநேய மூர்த்திக்குபுரட்டாசி கடைசி சனிக்கிழமையை
முன்னிட்டு யாகசாலை வேள்வியுடன் நிகழ்ந்த அபிஷேக தரிசனம்..

சந்தனக்காப்பு அலங்காரமும் ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடந்துள்ளன..

நிகழ்வின் படங்களை வழங்கியவர் திரு கணேசன் குருக்கள்..
அவர் தமக்கு மனமார்ந்த நன்றி...









ஊஞ்சல் வைபவம்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கணடு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்..

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்


ஸ்ரீ ஆஞ்சநேயர் திருவடிகள் போற்றி...  
* * *

12 கருத்துகள்:

  1. அன்பின்ஜி புரட்டாசி தரிசனம் அழகிய புகைப்படங்களுடன் அருமை வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. வாழ்த்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. ஆஞ்சநேயரைப் பற்றி அரிய செய்திகள் அறிந்தேன். தஞ்சாவூரில் நாயக்கர் காலம் (4), மராட்டியர் காலம் (13), பிற்காலம் (3) என்ற நிலையில் 20க்கு மேற்பட்ட ஆஞ்சநேயர் கோயில்கள் உள்ளன என்பதை அண்மையில் தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் என்ற நூலில் படித்தேன். (ஆதாரம் : தஞ்சாவூர் அனுமார் கோயில்கள், ஆவணம் கோபாலன், வாயுசுதா வெளியீடு, புதுதில்லி 110 092)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நான் உத்தேசமாகத் தான் கணக்கிட்டு பதிவில் எழுதினேன்.. தஞ்சையில் இருந்திருந்தால் அனைத்தையும் நேரடியாகவே பதிவு செய்திட இயலும்..

      ஆனால், தஞ்சை அனுமார் கோயில்களைப் பற்றிய புத்தகத்தை அறிமுகம் செய்து கூடுதல் தகவல்களை வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
    2. வாயுசுதா வெளியீடு - வெளியிடும் திரு கோபாலகிருஷ்ணன் அவர்கள் தீவர ஆஞ்சநேய பக்தர். அவரது கோவில்கள் பற்றிய சிந்தனையிலேயே இருப்பவர். அவருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.....

      நீக்கு
    3. அன்பின் வெங்கட்..

      மேலதிகத் தகவல்களுடன் தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கர்நாடகத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு பிரசித்தம் பெங்களூரில் சிறப்பு வாய்ந்த அனுமன் கோவில்கள் நிறையவே உண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கூடுதல் செய்தியும் கண்டு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. அழகான படங்கள்... ஆஞ்சனேயனுக்குஅபிஷேகமும் பார்த்தாச்சு ஐயா....
    அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சிறப்பான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..