நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 29, 2016

இதயம் ஒரு கோயில்..

உள்ளம் பெருங்கோயில்!.. - என்றார், திருமூலர்..

அப்படியே அதை ஏற்றுக் கொண்டு -
வாழ்வில் நிரூபித்துக் காட்டிய பூசலார் போன்ற அடியார்கள்..

அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் -

ஏதோ தங்களால் இயன்ற அளவில்
மாட மாளிகையாக நிலை நிறுத்தியவர்கள்..

மாட மாளிகையாக இல்லாவிட்டாலும்
ஓலைக் குடிசையாக அமைத்துக் கொண்டவர்கள்..

அந்த வகையில் வாழ்ந்தவர்கள் ஒரு சிலர் எனில்,

ஒன்றுக்கும் உதவாத
படுகுழியாக ஆக்கி பாழாய்ப் போனவர்களும் பலர்..

இத்தனைக்கும் காரணம் - சிந்தனை..

அதனால் தான் - மனம் போல மாங்கல்யம்!.. - என்றனர் ஆன்றோர்..


சிந்தையும் செயலும் ஒன்றுபட்டு விட்டால்
நன்மையோ தீமையோ - விளைவுகள் நிச்சயம்..

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியார் ஆகப் பெறின்.. (0666)

- எனும் அமுத மொழி சிந்திக்கத் தக்கது...

வெற்றி பெறுவோம்!.. - என்ற உறுதி உள்ளத்தில் இருந்ததால் தானே -
பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கப் பதக்கத்தினை வென்றெடுத்தார்...

எண்ணங்கள் எல்லாம் கருக் கொள்வதும் உருக் கொள்வதும் மூளையில் தான்!.. -  என்றாலும் ,

நாமெல்லாரும் அன்றிலிருந்து இன்றுவரை - சுட்டிக் காட்டிச் சொல்வது -

இதயத்தைத் தான்!..


இதயத்தைத் தான் - உள்ளம் என்பதும் மனம் என்பதும் நெஞ்சம் என்பதும்!..

நெஞ்சைத் தொட்டுச் சொல்லு - என் ராசா
என்மேல் ஆசையில்லையா?..

- என்று இளகும் போதும்,

இதயம் போகுதே.. எனையே மறந்து!.. -  என்று உருகும் போதும்

அங்கே பெருஞ்சுமை ஏற்றப்படுகின்றது..

இதயம் இருக்கின்றதே.. தம்பி..
இதயம் இருக்கின்றதே!.. - என்று பாசத்தினால் பதறும் போதும்,

நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் -
நெஞ்சு பொறுக்குதில்லையே!.. - என்று கோபத்தில் குமுறும் போதும்

உணர்வுகளால் நைந்து போகின்றது...

தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்.. (0293)

நமது நன்மைக்கும் தீமைக்கும் நெஞ்சமே சாட்சி..
நம்மை வேறு யாரும் தண்டிக்க வேண்டியதில்லை..
நமது நெஞ்சமே தீயாகச் சுட்டு தண்டிக்கும்!..

- என்கின்றார் வள்ளுவப் பெருமான்..

ஒழுக்க கேடுகளில் புரண்டு கொண்டிருக்கையில்
மனமே தீயாகித் தண்டிக்கும் என்றால் -

நற்குணங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போது
மனமே தென்றலாகி வாழ்விக்கும்!..

இதுதான் சத்தியம்!..


இப்படியெல்லாம் நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து விட்டால் -
உலக மக்களின் உள்ளங்களில் எல்லாம் உள்ளவராகி விடலாம்..

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.. (0294)

- என்றும் வள்ளுவப் பெருந்தகை தீர்க்கமாக உரைக்கின்றார்..

நம்முடைய எண்ணமும் இயக்கமும் -
இதயத்துடன் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை...

ஆனால்,
அவற்றால் நன்மை வரும்போது மகிழ்ச்சியுடன் துடிப்பது இதயம்..
ஆற்றாத தீமை வரும்போது துன்பத்துடன் துவள்வதும் இதயம்..

ஒரு கட்டத்தில் - அதிர்ச்சியில் அடங்கிப் போவதும் இதயம் தான்!..

அத்தகைய இதயத்தைக் காப்பதும் கவனிப்பதும் நம் கையில் தான் உள்ளது..

எண்ணங்களால் இளைப்பாறுகின்றது இதயம்..
அதன் வண்ணங்களால் களிப்பாகின்றது இதயம்..

நல்ல உணர்வும் நல்ல உணவும் - இதயத்திற்கான கவசங்கள்...

இளமையிலிருந்தே -
எண்ணங்கள் எல்லாம்
நல்லனவாக ஆகியிருந்தால்
ஈராயிரம் ஆண்டுகளானாலும்
இதயம் இளைத்துப் போவதில்லை..
கலங்கிக் களைத்துப் போவதும் இல்லை!..

எண்ணங்கள் எல்லாம் நல்லனவாக ஆவதற்கு என்னங்க செய்றது?..

வாய்மை!.. வாய்மை ஒன்றே இதயத்தை வாழவைக்கும்...

புறந்தூய்மை நீரானமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்.. (0298)

வாய்மை ஒன்றினால் தான் உள்ளம் தூய்மையாகும்..

அப்படி உள்ளம் தூய்மையாகி விட்டால் -

தூய்மையான உள்ளத்தை உடையவன் எவனோ -
அவனே தவம் செய்வாரை விடவும் தானம் செய்வாரை விடவும் மேலானவன்!..

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.. (0295)

வாழ்வாங்கு வாழ்வதற்கு வாய்மையே வகை செய்யும்!..
- என்று வள்ளுவப் பெருந்தகை வகுத்துரைக்கின்றார்..

இப்படியாக இதயத்தைக் காப்பதற்கு முனையும் போது
நல்ல உணவுப் பழக்கமும் அவசியமாகின்றது...

மனிதன் எல்லாவற்றையும் அடக்கி விட்டதாக ஆர்ப்பரித்தாலும்
மரணம் எனும் பிடிக்குள் அடங்கிப் போகின்றான்...

இயல்பான மரணம் என்பது ஒழிந்து
எங்கு பார்த்தாலும் எதிர்பாராத மரணம் என்றாகி விட்டது..

அதற்கான முக்கிய காரணங்கள் பற்பல..
ஆயினும், அவற்றுள் ஒன்று - உணவுப் பழக்கம்!..


மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.. (0945)

ஒவ்வாத உணவுகளை ஒதுக்கி விட்டு ஒருவன் உண்பானேயானால்
அவனுக்கு நோயும் இல்லை.. நோயினால் துன்பமும் இல்லை!..

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே - அறிவுறுத்தப்பட்டு விட்டது..

உணவே மருந்து!.. - என்றனர் ஆன்றோர்..

நாம் தான் கேட்கவில்லை...
அதனால் தான் ஆங்காங்கே மருத்துவ மனைகள் பெருகித் திளைக்கின்றன..




நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்...

நாங்கள் இருக்கின்றோம்!.. - என்பன எல்லாம் வெற்று விளம்பரங்களே..

தாயினும் சாலப் பரிந்து!.. - என்று, இறைவனை மாணிக்கவாசகர் குறிக்கின்றார்...

இறையை ஏற்பதும் மறுப்பதும் அவரவருடைய விருப்பம்..

ஆனால், நம்மைப் பெற்றெடுத்துக் காத்த தாய்
தாய்க்குப் பின் நம்மைக் காக்கும் தாரம் - இவர்களை மறுக்கக் கூடுமோ!..

அன்பின் உறவுகள் பின்னிப் பிணைந்தது தான் - இல்லறம்..

அந்த இல்லறத்தில் -
வாய்மையும் தூய்மையும் 
நிறைந்து விட்டால் அதுவே நல்லறம்!..

நல்லறம் ஒன்றே 
எல்லாவற்றிலிருந்தும் நம்மைக் காக்கும்!..

இதயம் என்றும் கோயில் ஆகட்டும்..
இனிய வாய்மை அங்கே தெய்வமாகட்டும்!..

இனிய உறவுகள் இளமைக்கு நலம்!..
இனிய உணவுகள் இதயத்திற்கு நலம்!.. 

இனிமை சேர்ப்போம்..
இதயம் காப்போம்!..

வளமிகு பூமியில்
வாழ்வாங்கு வாழ்வோம்!..

வாழ்க நலம்!.. 
***

20 கருத்துகள்:

  1. அருமையான விரிவான விடயங்களுடன் தத்துவ முத்துக்கள் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  2. அருமை
    அருமை
    இதயம் கோயிலாகட்டும்
    வாய்மை தெய்வமாகட்டும்
    அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. நான் வணங்கும் தெய்வமும் இதுதான் நண்பரே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைத்து நாங்கள் புரிந்துகொள்ளும் வ்கையில் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. பதிவும் விளக்கமும் மிக அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அருமையாக முடித்திருக்கிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. படித்து முடித்த போது மனதிற்கு மிகவும் நிறைவாக இருந்தது!
    இளம் வயதில் எனக்கு ஒரு ஆசிரியர் ஆட்டோகிராப் நோட்டில் எழுதியது நினைவில் எழுகிறது!

    "மனம் அழகாய் இருந்தால் அங்கே உண்மையும் அழகாய் இருக்கும். உண்மை அழகாய் இருந்தால் அங்கிருந்து அழகான நல்லவை மட்டுமே உதிக்கும். உண்மையும் அழகும் நல்லவையும் சேரும்போது தான் அங்கே இறைவனும் வந்து சேருகிறான்!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..

      கருத்துரையாக - தங்கள் ஆசிரியர் அளித்த ஆட்டோகிராபினை நினைவு கூர்ந்து வழங்கியதற்கு மனமார்ந்த நன்றி..

      நீக்கு
  8. உலக இதய நாளில் பொருத்தமாய் ஒரு பதிவு! மாறுபாடு இல்லாத உண்டி இக்காலத்துக்கு மிகவும் தேவையான ஒரு குறள்! பர்கரையும் பீட்சாக்களையும் உண்டு முப்பது வயதுக்குள்ளேயே இதய நோயால் அவதிப்படும் இளைய சமுதாயத்தினர், நம் பாரம்பரிய உணவு முறையின் அவசியத்தை உணர்ந்தால் நல்லது. இடையில் சில மாதங்கள் இங்கிலாந்து சென்றிருந்ததால், உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கவில்லை. நேரம் வாய்க்கும்போது அவசியம் வாசிப்பேன். நல்லதொரு பதிவுக்கு நன்றி துரை சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தொடர்ந்த அலுவல்களின் ஊடாக நமது தளத்திற்கு வருகையளித்ததற்கு மகிழ்ச்சி..

      பாரம்பரிய உணவுப் பழக்கத்தை வலியுறுத்தி வழங்கியுள்ள கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  9. மிகச் சிறப்பான தகவல்களோடு நல்லதோர் பகிர்வு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. அருமையான பதிவு.
    ஆன்மீகமும், விஞ்ஞானமும் இணைந்த அழகான பதிவு.

    பதிலளிநீக்கு
  11. இதயம் ஒரு கோவில்...
    மிகச் சிறப்பான பகிர்வு ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..