நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 15, 2016

கர்ம வீரர்

1903 - ஜூலை மாதம் பதினைந்தாம் நாள்..
தென்னகத்தின் விருதுபட்டியில் விடியல் தோன்றிய நாள்..

குமாரசாமி நாடார் - சிவகாமியம்மையார் பெற்றெடுத்த குணக்குன்று..

ஏழை மக்களின் நலனுக்காகவே இறைவன் அளித்த வரப்பிரசாதம்..

இருண்டு கிடந்த இந்திய தேசத்திற்குள் தோன்றிய ஒளிநிலவு..
தேசத்தின் நலனுக்காகவே ஒளிர்ந்த சுடர் விளக்கு..

நாற்பதாண்டு கால அரசியல் வாழ்க்கையில்
ஏறத்தாழ ஒன்பது வருடங்களை சிறைக் கூட்டுக்குள் கழித்த - மாணிக்கம்..


1964 மே 27-ல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருஜி இயற்கை எய்தினார்..
சோகக் கடலில் ஆழ்ந்தது தேசம்..

அதை விடப் பெரும் சோகமாக -
இனி யார் இந்த நாட்டுக்கு?.. - என திகைத்து நின்றது.

அப்போது லால்பகதூர் சாஸ்திரி அவர்களைத் தனது ராஜதந்திரத்தால் பிரதமர் ஆக்கி வைத்தவர் பெருந்தலைவர்...
இந்தியா இனி அவ்வளவு தான்!.. -  என, மனப்பால் குடித்துக் கொண்டிருந்த பிற நாடுகள் திகைப்புடன் வாயடைத்து நின்றன...

விதி வசமாக பத்தொன்பதே மாதங்களில் -
லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் அகால மரணமடைந்த வேளையில் - காமராஜர் அவர்களையே நாடி வந்தது பிரதமர் நாற்காலி..

அதை கண்ணியமாக மறுத்து ஒதுக்கியவர் காமராஜர் அவர்கள்..

தேசம் கலங்கி நின்ற வேளையில் -
இரண்டாவது முறையாகவும் தனது சாதுர்யத்தினால் -
புதிய பிரதமராக இந்திரா பிரியதர்ஷினி அவர்களை
அடையாளங்காட்டியவர் பெருந்தலைவர்.

இந்தியா மட்டுமல்ல உலகமே அப்போது அவரை வியந்து பார்த்தது.



முதல் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் காமராஜர்.
பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கோப்புகளை பார்க்க அமர்கிறார்.
அவருக்கு முன்னால் இரண்டு வரிசைகளாக - கோப்புகள்..

இது என்ன இரண்டு வரிசை?.. - என, காமராஜர் கேட்கின்றார்..

முதல் வரிசையிலே உள்ளவை முக்கியமானவை. அடுத்து உள்ளவை முக்கியமில்லாதவை.. - என்கிறார் அவரது உதவியாளர்..

எனக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாததும் உண்டா..ங்கிறேன்!?..  இங்கே வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானவைதான். நான் தான் உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். இது தான் முக்கியம்!..

- என்று தீர்க்கமாக சொல்கின்றார் - படிக்காத மேதையான முதல்வர்..

தாய் சிவகாமி அம்மையாருடன் காமராஜர்
கிட்டங்கியில கேப்பை தான் போடுறாங்க.. நல்ல அரிசி வாங்கிக் கொடு ராசா!..
தாய் ஆசையுடன் கேட்டார்..

அதற்கு நாட்டின் முதல்வராக இருந்த மகன் சொன்ன பதில் -

ஊருக்கு ஒன்னு..  உனக்கு ஒன்னா?.. இதையே நீயும் ஆக்கித் தின்னு!..

தாய், விதவை தங்கை நாகம்மாள். மற்றும் அவருடைய பிள்ளைகள் என்று எல்லாரும் இருந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் அனுப்பி வைத்த தொகை -  

ரூபாய் நூற்றிருபது மட்டுமே!.. 


ஏழைப்பங்காளனின் எளிய உணவு
இனமொழி எல்லைகளை கடந்து அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்தவர்...

கல்வியும் உழைப்புமே வறுமையைப் போக்கும் என்றுரைத்தவர்..

தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்களுக்கும் எடுத்துக்காட்டு - பெருந்தலைவர் காமராஜர்.

1967 - பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன..

அப்போதைய ஆளுங்கட்சி தோற்றது கூட பெரிய விஷயமில்லை..

பொய் பிரச்சாரங்களால் தலைவர் தோற்று விட்டாரே!..

விம்மி வெடித்து அதிர்ந்தன - நெஞ்சங்கள்..

ஒருவாறாக மனம் தேறியிருந்தனர் முக்கிய பிரமுகர்களும் கட்சியினரும்..
நீங்கள் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் செய்தீர்கள் என்பதைப் பிரசாரத்தில் விவரமாகச் சொல்லவே இல்லை. நீங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம்!..

- என்றார்கள் நேரில் சந்தித்த வேளையில்..

அதற்கு காமராஜர் சொன்ன பதில்,

அட போங்கையா!.. பெத்த தாய்க்கு சேலை வாங்கிக் குடுக்கிற மகன், எங்கம்மாவுக்கு சேலை வாங்கிக் குடுத்தேன், எங்கம்மாவுக்குச் சேலை வாங்கிக் குடுத்தேன்னு தம்பட்டம் அடிக்கலாமான்னேன்! நம்ம கடமையைத் தானேய்யா  செஞ்சோம்? அதில பீத்திக்கிறதுக்கு என்ன இருக்குன்னேன்?..


அறம் சார்ந்த ஆட்சியை அரசியலை நடத்திய மாமனிதர் - பெருந்தலைவர்.. 

அனைவரையும் படிக்க வைத்தார்..
படித்தவர்களுக்கு வாழ்வும் கொடுத்தார்..

அவரால் முன்னுக்கு வந்தவர்கள் லட்சோபலட்சம் பேர்..
அவர்களுள் எளியேனும் ஒருவன்..

எங்கள் ஐயாவின் பிறந்த நாளாகிய இன்று
அவருடைய திருவடிகளை நினைத்து
வணங்கி எழுகின்றேன்..

இது கூட எங்கள் ஐயாவுக்குப் பிடிக்காது தான்..
ஆனாலும், என் பிறவி கடைத்தேற வேண்டுமே!..

பெருந்தலைவரின் புகழ் 
என்றென்றும் வாழ்க!.. 
* * *

12 கருத்துகள்:

  1. கரமவீரரைப்பற்றிய அழகிய விளக்கம் அருமை ஜி
    மீண்டும் இப்படியொரு பிறவி மனிதன் பிறப்பாரா என்பது ஐயமே...
    பள்ளியில் இவரால் போடப்பட்ட கோதுமை களியின் சுவை இன்னும் நினைவில் நிற்கின்றது....

    பொருத்தமான புகைப்படங்கள் நன்று ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நானும் அப்படி பள்ளியில் சாப்பிட்டவன் தான்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பெருந்தலைவர் காமராஜர் பெருமை போற்றும் தேசபக்தியாளரின் பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. கர்ம வீரருக்கு நிகர் கர்ம வீரர்தான் ஐயா. அரிய புகைப்படங்களுடன் அருமையான செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      நிகரில்லா மக்கள் தலைவர் அவர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. கர்ம வீரரைப் பற்றி மிகவும அருமையான பகிர்வு ஐயா...
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அருமையான பகிர்வு.

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. மிக மிக அருமையான பகிர்வு ஐயா. நம்ம கடமையைத்தானே செஞ்சோம் அதுல பீத்திகிறதுக்கு என்ன இருக்குன்னேன் // இதுதான் நம் கர்மவீரர் தலைவர் காமராசர். ஹும் இப்போதும் இருக்கிறார்களே நம் தலைவர்கள் பட்டி தொட்டிகளில் கூட தங்கள் பெயரைப் பதித்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டு...என்ன அருமையான வார்த்தைகள் கர்மவீரரின் புகழ் ஓங்குக....மனம் விம்முகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      அப்படிப்பட்ட உத்தமரால் ஆளப்பட்ட இந்நாட்டின் இன்றைய நிலைமை!?.. நினைக்கவே மனம் தடுமாறுகின்றது..

      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..