நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 05, 2015

மார்கழிக் கோலம் 21

குறளமுதம்  

கற்றதனால் ஆயபயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்.(002)

இறைவனுடைய திருவடிகளை வணங்கி வழிபடாதவருடைய 
கல்வியினால் ஆகின்ற பயன் என்ன?..

* * *

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி
ஸ்ரீ ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை 21



ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!..

ஓம் ஹரி ஓம்  
* * *

ஆலய தரிசனம்
தில்லை - திருச்சித்ரகூடம்


மூலவர் - கோவிந்தராஜப் பெருமாள்
உற்சவர் - தேவாதிதேவன், சித்ரகூடத்துள்ளான்
தாயார் - புண்டரீகவல்லி
தீர்த்தம் - கமல புஷ்கரணி
தலவிருட்சம் - தில்லை

ப்ரத்யட்சம்
பதஞ்சலி, வியாக்ரபாதர், தில்லை மூவாயிரவர்  

தில்லைவனமாகிய தில்லைத் திருச்சிற்றம்பலம் திருக்கோயிலின் உள்ளே விளங்கும் திவ்யதேசம் - திருச்சித்ரகூடம்.

புத்திர பாக்யம் இன்றித் தவித்தான் கவேர மன்னன். அவனது பூர்வ ஜன்ம புண்ணியத்தால் - ஒரு பொற்றாமரைப் பூவில் மகளாகத் தோன்றினாள் காவிரி.

மகளை சீராட்டி வளர்த்த மன்னன் - அவளுக்கேற்ற நல்லதொரு மணாளனைத் தேடினான்.

அதை அறிந்த காவிரி - தந்தையையும் தாயையும் பணிந்து வணங்கினாள். தான் யாரென்ற உண்மையைச் சொன்னாள்.

தெய்வப் பிறவியான - அவள் கவேர மன்னனின் அன்பினுக்காக மகள் என வந்ததைக் கூறினாள். 

தவித்து நின்ற தாய் தந்தையரிடம் - தில்லை வனத்தில் ஸ்ரீஹரிபரந்தாமனைக் குறித்துத் தவம் செய்யுமாறு சொல்லி விட்டு - இயற்கையான நீர்வண்ணம் கொண்டு நிலங்களில் கலந்தாள்..  

மகளின் சொல்படி கவேர மன்னனும் அவனது மனைவியும் தில்லை வனத்தில் கடுந்தவம் செய்தனர். 

அவர்களுடைய பக்திக்கு இரங்கிய ஸ்ரீஹரிபரந்தாமன் - 
ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளாகத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு மோட்சப் பிரசாதம் நல்கினான் - என்பது ஐதீகம்.


ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சாத்வீக விமானத்தின் கீழ் - போக சயனத்தில் - கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.

உற்சவ மூர்த்தி - ஸ்ரீதேவி பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலம்.


தாயார் புண்டரீகவல்லி அமர்ந்த கோலத்தில் தனி சந்நிதியில் திகழ்கின்றாள்.


சித்ரகூடம் எனப்படும் இத்திருக்கோயில் - தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் - 
ஸ்ரீநடராஜர் சந்நிதிக்கு அருகிலேயே திகழ்கின்றது.

கொடிமரத்துடன் கூடிய திருக்கோயில்.

கோவிந்தராஜப் பெருமாளின் சந்நிதி மண்டபத்தில் நின்று வடக்காக நோக்கினால் - நடராஜப் பெருமானையும் ஏககாலத்தில் தரிசிக்கலாம்.

சித்திரையில் பத்து நாட்கள் வசந்த உற்சவம் வெகுசிறப்பாக நிகழ்கின்றது.
திருமங்கை ஆழ்வாரும் குலசேகராழ்வாரும் திருச்சித்ர கூடத்தினை மங்களாசாசனம் செய்துள்ளனர்.

குலசேகர ஆழ்வார் - ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளை ஸ்ரீராமனாகப் பாவித்துத் திருப்பாசுரங்கள் (741/751)அருளியுள்ளார்.

மனமருவு வைதேகி பிரியலுற்றுத் 
தளர்வெய்திச் சடாயுவை குந்தத்தேற்றி
வனமருவு கவியரசன் காதல்கொண்டு வாலியைக் 
கொன்று இலங்கை நகரரக்கர் கோமான்
சினமடங்க மாருதியால் சுடுவித்தானைத் 
தில்லைநகர்த் திருச் சித்ரகூடந் தன்னுள்
இனிதமர்ந்த அம்மானை இராமன்
தன்னை ஏத்துவார் இணையே ஏத்தினேனே!..
குலசேகர ஆழ்வார் அருளிய திருப்பாசுரம் (746)

கருமுகில் போல்வதோர் மேனி கையன ஆழியும் சங்கும்
பெருவிறல் வானவர்சூழ ஏழுலகும் தொழுதேத்த  
ஒருமக ளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத்
திருமக ளோடும் வருவான் சித்திர கூடத்துள்ளானே!..
திருமங்கை ஆழ்வார் அருளிய திருப்பாசுரம் (1176)  
* * *

சிவ தரிசனம்

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
திருவெம்பாவை
திருப்பாடல் 20



போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றி எல்லாஉயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால்நான் முகனுங் காணாத புண்டரிகம்
போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம்மார்கழி நீராடேலோர் எம்பாவாய்!..  

இத்திருப்பாடலுடன் திருவெம்பாவை நிறைவு.
* * *

திருக்கோயில் 
தில்லை - திருச்சிற்றம்பலம்

இறைவன் - திருமூலட்டானேஸ்வரர், நடராஜர்
அம்பிகை - சிவகாமசுந்தரி
தீர்த்தம் - சிவகங்கை மற்றும் பல
தலவிருட்சம் - தில்லை

தலப்பெருமை

பூலோக கயிலாயம்.
எண்ணிறந்த பெருமைகளை உடைய திருத்தலம்.
சைவத்தில் கோயில் என்றால் - தில்லைத் திருச்சிற்றம்பலம்.

இன்று திருவாதிரை. தில்லையில் ஆருத்ரா தரிசனம்.
   
சமயக்குரவர்களான நால்வரும் போற்றித் துதித்த திருத்தலம்.

ஆதியில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்ததால் - தில்லை வனம்.

உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களின் கலைகளும் - அர்த்த ஜாம பூஜைக்குப் பின் இங்கே திருமூலஸ்தான லிங்கத்தில் ஐக்கியமாவதாக ஐதீகம்.


பஞ்ச பூதத் திருத்தலங்களுள் ஆகாயத் தலம்.

பஞ்சசபைகளுள் - கனகசபை. பொற்சபை, சித்சபை - என்றும் வழங்குவர்.

சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராஜசபை எனும் ஐந்து சபைகள் இத்திருக்கோயிலுள் விளங்குகின்றன.

அம்பிகை சிவகாமசுந்தரியைப் பற்றிப் பேசுவதற்கு வார்த்தைகள் ஏது!..

ஐயனைத் தரிசிக்க வைத்து புண்ணிய பலனை அருள்பவள் அவளே!..

திருக்கோயிலைச் சுற்றிலும் - 
மகா சாஸ்தா, ஜகன் மோகன சாஸ்தா, பால சாஸ்தா, கிராத சாஸ்தா, 
தர்ம சாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா 
- என சாஸ்தாவின் எட்டு அம்சங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் - அருளிய திருப்பதிகங்கள் - இங்கே தான் - திருக்கோயிலின் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன.

கீர்த்தித் திருஅகவல், போற்றித் திருஅகவல், திருபொற்சுண்ணம், திருச்சாழல், திருக்கோத்தும்பி, திருப்பொன்னூசல், குயில்பத்து - முதலான பனுவல்களை தில்லையில் தான் மாணிக்கவாசகர் இயற்றினார்.

ஆனியில் திருமஞ்சனம். ஆனி உத்திரத்தை அனுசரித்து பத்து நாள் திருவிழா.

மார்கழித் திருவாதிரையும் பத்து நாள் திருவிழா.

இந்த பத்து நாட்களும் மாணிக்க வாசகர் - நடராஜர் சந்நிதிக்கு எழுந்தருள - திருவெம்பாவை பாடி தீபாராதனை நிகழும்.


திருஞானசம்பந்தர் தில்லையை மிதிக்க அஞ்சியவராக - திருவேட்களத்தில் தங்கியிருந்தார்.

திருநாவுக்கரசர் - தில்லைத் திருவீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.

நடராஜர் என உருவமாகவும் ஆகாயம் என அருவமாகவும் ஸ்படிக லிங்கம் என அருவுருவமாகவும் விளங்குகின்றனன்.

இதற்கு மேல் ஒன்றும் இல்லை!.. - என்பதே சிதம்பர ரகசியம்.

கடந்த 27/12 அன்று திருவாதிரைத் திருவிழா கொடியேற்றம் நிகழ்ந்தது.
நாளும் அம்மையப்பன் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வந்தனர்.

நேற்று சிறப்பாகத் தேரோட்டம் நடைபெற்றது.

இன்று மகாபிஷேகம். ஆருத்ரா தரிசனம். அதிகாலை சூர்யோதத்திற்கு முன்னதாக - ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நிகழும். 

பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது. 

அதனைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்த பின்னர் பிற்பகல் இரண்டு மணிக்குள்ளாக - ஸ்ரீநடராஜப்பெருமானும் சிவகாமசுந்தரியும் ஆனந்த நடனமாடி ஆருத்ரா தரிசனம் அருள்வர். 

அதனைத் தொடர்ந்து சித்சபைக்கு எழுந்தருள்வர்.


தில்லையுள் கூத்தனே!.. தென்பாண்டி நாட்டானே!.. அல்லல் அறுப்பானே!..- என்று மாணிக்க வாசகர் போற்றுகின்றார்.

அல்லல் அறுபடவேண்டும். ஆனந்தம் பெருகிட வேண்டும்.
ஐயன் அருள் எங்கும் தழைத்திட வேண்டும்.

அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
நின்றார ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றை
பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ!..
மாணிக்கவாசகர்.

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண்ணோட்டம்
எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந்தீர்க்கும்
பித்தாடி புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானைப் பெற்றாமன்றே!.. 
சுந்தர மூர்த்தி சுவாமிகள். (7/90) 

செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கி
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வர் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே!..
திருஞானசம்பந்தர். (1/80) 

அரியானை அந்தணர்தம் சிந்தையானை 
அருமறையின் அகத்தானை அணுவை யார்க்குந் 
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக் 
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே!..
அப்பர் ஸ்வாமிகள். (6/1)

மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோமுக்கு அருள் புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த வித்தர்க்குப் பல்லாண்டு கூறுதுமே!..
சேந்தனார் (ஒன்பதாம் திருமுறை)

திருச்சிற்றம்பலம்
* * *


எனது மருமகனும் மகளுமாகிய
சிரஞ்சீவி சிவபாலன் - ஸ்ரீமதி நந்தினி
தம்பதியர்க்கு
நேற்று (4/12) ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00 மணியளவில்
பூர்வ ஜன்ம புண்ணியத்தால்
பெண் குழந்தை சுப ஜனனம்.
தாயும் சேயும் நலம்.

மங்கலம் சுப மங்கலம்.
* * *

8 கருத்துகள்:

  1. இரு ஆலயங்களின் சிறப்பை அறிந்தேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. குறளமுதம் படங்களுடன் அருமை நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  3. ஆலயங்களின் சிறப்பு வியக்க வைக்கின்றது
    தங்களின் உழைப்பு மலைக்க வைக்கின்றது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் உழைப்பும் மிக்க கடினம்.
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. ஆலயங்களின் சிறப்பை உணர முடிந்தது...
    நேற்றுப் பிறந்த குட்டிம்மாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..
      எங்கள் வீட்டு செல்லத்திற்கு வாழ்த்துரைத்த தங்கள் அன்புக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..