நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 17, 2015

ஆனந்த நந்தி

அப்பனை நந்தியை ஆராஅமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை 
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள் பெறலாமே!..

எல்லா உயிர்களுக்கும் தந்தையாகவும் நந்தி எனும் திருப்பெயரினை உடையவனாகவும் திகட்டாத அமுதம் எனத் தித்திப்பவனாகவும் ஈடு இணையற்ற வள்ளலாகவும் ஊழிக் காலத்தில் உலகிற்கு முதல்வனாகவும் திகழ்கின்ற பெருமானை எந்த ஒரு வழியிலாவது துதித்துக் கொண்டிருங்கள். 

அப்படித் துதித்தால் - 

அந்த வழிக்குத் தக்கவாறு சிவபெருமானது தண்ணருளைப் பெறலாம் என்பது திருமூலர் அருளும் திருவாக்கு.


சைவ சமயத்தில் - பெருமானின் வாகனமாகவும் உபதேசம் பெற்ற முதற்குரு ஆகவும் விளங்குபவர் நந்தியம்பெருமான்.

அதிகார நந்தி என திருக்கயிலாய மலையில் விளங்குபவர்.

ஈசனின் சந்நிதியிலும் அம்பிகையின் சந்நிதியிலும் அவர் தமக்கு வாகனமாக எந்நேரமும் ஆயத்தம் எனும் பாவனையில் சந்நிதியை நோக்கியவாறு காத்திருப்பார்.

இவரது அன்பினுக்கும் ஆற்றலுக்குமாகத் தான் - தனது திருப்பெயர்களுள் ஒன்றான நந்தி எனும் பெயரினைச் சூட்டி மகிழ்ந்தான் ஈசன் - என ஆன்றோர் கூறுவர்.

அத்தகைய நந்தியம்பெருமான் திருக்கோயில்கள் தோறும் பல்வேறு வித திருக்கோலங்களில் வீற்றிருப்பார்.

திருவைகாவூரில் யமதர்மராஜனை விரட்டுவதற்காக திரும்பியிருக்கும் நந்தி
பட்டீஸ்வரத்தில் திருஞானசம்பந்தர் தரிசனம் காணவேண்டி விலகியிருப்பார்.

திருப்புன்கூரில் திருநாளைப் போவார் எனப்பட்ட ஸ்ரீ நந்தனார் சிவதரிசனம் காண்பதற்காக சந்நிதியை விட்டு விலகியிருப்பார்.

தர்மத்தை நிலைநாட்டுதற்காக திருநள்ளாற்றில் சந்நிதியை விட்டு சற்றே விலகியிருப்பார்.


ஆலயங்கள் தோறும் அநேக தத்துவங்களுடன் விளங்கும் நந்தி - மதுரையில் சற்று பள்ளமான இடத்தில் வீற்றிருப்பார்.

திருஆரூரில் சந்நிதி முன் நின்று கொண்டிருப்பார்.

திருவிடைமருதூர்
திருவிடைமருதூரிலும் திருநெல்வேலியிலும் பெரிய சுதை சிற்பம்.

திருச்சியில் மலையடிவாரத்தில் தனி சந்நிதியில்.

வேந்தன் பட்டியில் நெய்நந்தீஸ்வரர் என திருவடிவம்.

இப்படி எத்தனையோ கூறலாம். ஆயினும் இன்றைய பதிவில்

நேற்று தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில் நடைபெற்ற தை மாதத்தின் மகர சங்கராந்தி திருப்பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் வைபவங்களைக் காணலாம்.

வருடந்தோறும் சிறப்பாக நிகழ்வுறும் மகர சங்கராந்திப் பெரு விழாவில் -

தை முதல் நாளன்று மாலையில் ஸ்ரீ பெருவுடையாருக்கும் பெரிய நாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் மகர சங்கராந்தி வழிபாடு நடந்தது.

நந்தியம்பெருமானுக்கும் பல்வேறு திரவியப் பொருட்களால் மகா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தை இரண்டாம் நாள் காலை 8.30 மணி முதல் மகாநந்திக்கு காய்கறிகளால் அலங்காரம் தொடங்கியது

ஆயிரம் கிலோ காய்கறிகள், ஆயிரம் கிலோ பழங்கள், ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள்,  ஆயிரம் கிலோ பூக்கள் - ஆகியவற்றால் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்தனர்.










நிறைவாக ஷோடச உபசாரத்துடன் மஹா தீப ஆராதனை நிகழ்ந்தது.

அத்துடன் - மாட்டுப் பொங்கலின் சிறப்பாக - 108 பசுக்களுக்கும் கன்றுகளுக்கும்
சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோ பூஜையும் நடந்தது.

வைபவங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சிவதரிசனம் செய்து இன்புற்றனர்.

நிகழ்வுகளை வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்தனர்.

சங்கராந்திப் பெருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்னதானமும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவின் நிகழ்வுகளை அழகிய படங்களாக வழங்கிய 
திருவையாறு சிவசேவா சங்கத்தினருக்கு மனமார்ந்த நன்றி..

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மை பூண்டு
நங்குரு மரபிற்கெல்லாம் முதற்குரு நாதன் ஆகிப்
பங்கயத் துளவம் நாறும் வேத்திரப் படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம் போற்றி!..
சிவஞான சுவாமிகள் - காஞ்சிப் புராணம். 

சிவாய திருச்சிற்றம்பலம். 
* * *

16 கருத்துகள்:

  1. தஞ்சை பெரிய கோவில் நந்தி அலங்காரம் வழிபாடு
    கண்டு மிகவும் களித்தேன்.

    நன்றி.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      வணக்கம்.
      இனிய வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி..
      தங்கள் அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. இவ்வளவு புகைப்படங்களையும் எப்படி சேர்த்தீர்கள். மிகவும் அருமையாக இருக்கிறது. நேரில் சென்றவர்கள்கூட இந்த அளவுபார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். அரிய பணி செய்யும் தங்களுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      இனிய கருத்துரைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி..

      நீக்கு
  3. புகைப்படங்களின் அணிவகுப்பு சிறப்பு நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. தஞ்சையில் மாட்டுப்பொங்கல் அன்று நடைபெறும் விழா படங்கள் மிக அழகு.
    கண்டு தரிசித்தவர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் நலம் கிடைக்கட்டும். நாட்டில் வளம் சேர்ந்து மக்கள் நலமாகா வாழ அருள்புரிவார் நந்தியம் பெருமான்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வேண்டுதல் பலிக்கட்டும். எங்கும் இன்பமே நிறையட்டும்..

      இனிய வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. புகைப் படங்களைத் தொகுக்கவே பெரும் நேரம் செலவிட்டுள்ளீர்கள் ஐயா
    தங்களின் அயரா உழைப்பு போற்றுதலுக்கு உரியது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      நல்லதொரு தகவலைச் சொல்லுவதும் அறம் என்கிறார்கள்..
      அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  7. புகைப்படங்கள் அருமை
    காய்கறி நந்தி கம்பீரம்...!!!
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. '_எப்படி பாடினரோ அடியார் -அப்படி பாட நான் ஆசை கொண்டேன் சிவமே' என்ற பாடல் நினைவுக்கு வருகிறது. அறிந்த ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் உலகிற்கு வெளியிடும் சுறுசுறுப்பை எனக்கும் கற்றுத்தர மாட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. எல்லாம் தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிகளினால் தான்!.. அன்பின் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..