நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், டிசம்பர் 15, 2014

ஸ்ரீபொது ஆவுடையார்

பிரம்மாண்டமான சிவலிங்கத் திருமேனியைத் தன்னகத்தே கொண்டதும் பலநூறு ஆண்டுகளைக் கண்டதுமான - 

ஸ்ரீராஜராஜேஸ்வரம் எனும் பெரிய கோயில் விளங்குவது தஞ்சை மாநகரில்!.. 

இத்திருக்கோயிலால் தஞ்சைக்குப் பெருமை!.. தமிழகத்திற்குப்பெருமை!.. 

ஏன்!.. பாரத நாட்டிற்கே பெருமை!..

ஆனால் - 

சிவலிங்க ஸ்தாபனமே இல்லாமல் ஒரு திருக்கோயில் புகழ் பெற்று விளங்குகின்றது - இதே தஞ்சை மாவட்டத்தில்!..

நெடிதுயர்ந்த - தக்ஷிணமேரு எனும் மூலஸ்தான ஸ்ரீவிமானத்துடன் கோபுரம் கொடிமரம் என்ற எல்லா அங்கங்களும்  கொண்டு விளங்குவது அருள்மிகு பெருஉடையார் திருக்கோயில்

ஆனால், இவை எதுவும் இல்லாமல் - திருக்கோயிலாகத் திகழ்வது  - விரிந்து படர்ந்து நிழல் கொண்டு விளங்கும் - ஆல மரம்!.. 

பொதுஆவுடையார் சந்நிதி
இந்த ஆலமரம் தான் திருக்கோயில்!.. 

இதன் பெயர் - அருள்மிகு பொதுஆவுடையார் திருக்கோயில். 

பொதுவாக அனைத்துக் கோயில்களிலும் அதிகாலையில் இருந்து இரவு வரை பூஜைகள் நடைபெறுவது நாமறிந்த ஒன்று.

ஆனால் - வாரத்தில் ஒருநாள் அதுவும் ஒரே ஒருமுறை நள்ளிரவுப் பொழுதில் பூஜை நடைபெறும் கோயில் - நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்!..

இத்திருக்கோயில் விளங்குமிடம் - தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை நகரில் இருந்து பத்து கி.மீ தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டை எனும் கிராமத்தில்!..

ஸ்வாமி சந்நிதிக்கு எதிரே - நந்தி மட்டுமே!.. 

அம்பாள் சந்நிதி, முருகன் சந்நிதி, சண்டிகேசர் சந்நிதி - என்று எதுவுமே இங்கு கிடையாது. 

வீரஹத்தி விநாயகர் சந்நிதி மட்டும் - அதுவும் கோயிலுக்கு வெளியே!..

ஆலமரத்திற்கு ஏதும் கேடு நேராதபடி சுற்றுச் சுவர் மட்டுமே உண்டு!..

ஸ்வாமி ஏகாந்த மூர்த்தி. வன்மீகம் எனப்படும் புற்று வடிவமா?. 

இல்லை!. 

சிலாரூபமா?. 

இல்லை!. 

பஞ்சலோகத் திருமேனியா?. 

இல்லை!.  

பின்னே.. என்னதான் ஐயா அங்கே இருப்பது!?..

ஸ்வாமி - சுயம்பு திருமேனி!. ஒரு உயிர்த் திரளின் உள்ளிருந்து முளைத்தவர். 

விரிந்து படர்ந்து விளங்கும் ஆலமரத்தின் கிழக்கு பாகத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு   முளைத்தெழுந்து  விளங்குகின்றது -  அடிவேர்!.. 

அதுவே சிவலிங்கம்!..

இயற்கையாக மூண்டெழுந்ததால் ஆவுடை எல்லாம் கிடையாது. 

ஆனாலும் திருப்பெயர்  - பொது ஆவுடையார்!.. 

இந்தத் திருமேனிக்கு திருவாசி சாத்தி திருநீற்றுப் பட்டம் சூட்டி,

வாரம் ஒருமுறை - ஒரே முறை -  திங்கட்கிழமை மட்டும் இரவு பன்னிரண்டு மணி அளவில் வழிபாடுகள் செய்யப்படும். 

அதுவும் -

தில்லைச் சிற்றம்பலத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்து நடைஅடைத்த பிறகே!.


ஏனெனில், சிதம்பரத்தில் நடை அடைத்த பிறகு  - சிவபெருமான் அங்கிருந்து புறப்பட்டு, இங்கே எழுந்தருளி - முனிவர் இருவருக்கிடையே இருந்த பிரச்னையை தீர்த்து மத்யஸ்தம் செய்து வைத்ததாக ஐதீகம். 

அதனால் - ஸ்வாமிக்கு மத்தியஸ்தபுரீஸ்வரர் எனவும் திருப்பெயர்.

இந்த கிராமத்திற்கு பொய்கை நல்லூர் எனவும் ஒரு பெயர் உண்டு. ஆனால் - அது வழக்கத்தில் இல்லை.

பாட்டுவனாச்சி எனும் ஆற்றின் கீழ்கரையில் உள்ளது இந்த பிரம்மாண்டமான ஆலமரம். அதுவும் விசேஷமான வெள்ளால மரம். 

மரம், கிளை, இலை - என முழுதும் சற்று வெண்மை படர்ந்து காணப்படும். 

எம்பெருமான் இயற்கையோடு இயைந்திருக்கின்றனன் - இங்கே!.. 

உயர்ந்தெழுந்த ராஜகோபுரங்கள் இல்லை.. 
விஸ்தாரமான மண்டபங்கள் இல்லை.. 
மூலைக்கு மூலை சந்நிதிகள் இல்லை..
சிறப்பு தரிசனம்.. தர்ம தரிசனம்.. - என்ற பாகுபாடுகள் இல்லை!.. 
அதற்குப் பரிகாரம் இதற்கு பரிகாரம் - என போலிச் சடங்குகளும் இல்லை!. 

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே பூஜை!

அதுவும் - ஒரே முறை -  திங்கட்கிழமை மட்டும். 

இரவு 10.30 மணியளவில் நடைதிறக்கப்பட்டு சுயம்புவாக விளங்கும் ஸ்வாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.  


நள்ளிரவு 12 மணி அளவில் திரை விலக்கப்பட்டு - பேரிகை எனும் முரசு, சேகண்டி, மத்தளங்கள் இவற்றுடன் சங்கு முழங்க மகாதீப ஆராதனை நிகழ்கின்றது. 

ஸ்வாமிக்கு தீப ஆராதனை நிறைவு பெற்றதும் பிரசாத விநியோகம். 

நள்ளிரவில் ஸ்வாமிக்கான அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு, பக்தர்களுக்கு அபிஷேக சந்தனத்துடன் திருநீறு மற்றும் தாம்பூலம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. 

திருக்கோயில் சார்பில் சித்ரான்னங்கள் வழங்கப்படுகின்றது. நேர்ந்து கொண்ட பக்தர்களும் அன்னதானம் செய்கின்றனர்.

அதன்பின் - தனிப்பட்ட அர்ச்சனைகள். அவ்வளவு தான் - அடுத்த சில மணித் துளிகளுக்குள் சந்நிதிக் கதவுகள் தாழிடப்படும்.

இனி அடுத்த திங்கட்கிழமை - இதே வழக்கப்படி பூஜைகள்!.. 

இப்படி நிகழ்வது இன்று நேற்றல்ல!.. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எவ்வித மாற்றமும் இல்லாமல் நடைபெறுகின்றது.

ஏன் இப்படி!.. என்ன கூறுகின்றது ஸ்தல புராணம்!?..

துறவியர் இருவர். ஆனாலும் இருவரும் இரு துருவங்கள்!..

ஒருவர் - வானுகோபர். இவர் இல்லறத்தில் இருந்து சிவநெறியில் ஒழுகியவர் 

மற்றவர் - மகாகோபர். இவர் துறவறத்தில் இருந்து சிவநெறியில் நின்றவர்

இருவரும் - தத்தமது நெறியே சிறந்தது என சாதித்தனர். 

இல்லறமே சிறந்தது என இவர் முழங்க, துறவறமே சிறந்தது என அவர் முழங்க - பிரச்னை திருக்கயிலை மாமலைக்கே சென்றது.

இருவரது வாதங்களையும் கேட்டருளிய எம்பெருமான் - 

தில்லைக்குத் தென் திசையில் - உறங்காப்புளியும் உறங்கும்புளியும் ஒருசேர தழைத்திருக்கும் பொய்கைநல்லூர் எனும் திருத்தலத்தில் தாமரைக் குளத்தின் கரையில் காத்திருப்பீர்களாக!.. - என கூறியருளினார்.  

அதன்படி வானுகோபரும் மகாகோபரும் பொய்கை நல்லூருக்கு வந்தனர்.

உறங்காப் புளியின் கீழ் வானுகோபரும் உறங்கும் புளியின் கீழ்  மகாகோபரும் ஈசனின் வரவினை எண்ணித் தவமிருந்தனர்.

ஒருநாள் சோமவாரம் எனும் திங்கட்கிழமை.

திருச்சிற்றம்பலம் எனும் தில்லையில் அர்த்தஜாம பூஜைகள் நிறைவு பெற்ற சிறு பொழுதில் - இந்த பிரச்னைக்குத் தீர்ப்பு வழங்குவதற்காக,

சனகாதி முனிவர்களுக்காக - கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய இறைவன் - 

வியாக்ரபாதர் பதஞ்சலி - இவர்களுக்காக அம்பலத்தில் ஆடிய இறைவன் - 

இந்த மகாமுனிவர்களுக்காக - வெள்ளால மரத்தின் கீழ் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினன்.


நள்ளிரவு நேரத்தில் எழுந்தருளிய ஈசனைக் கண்டு மகிழ்ந்தனர் - இருவரும்.

நள்ளிருளில் நடுவர் மன்றமாக சபை கூடியது. 
சபாநாயகனிடம் முறையிட்டனர். வழக்கிட்டனர். 

இருவரும் மாறி மாறி தமது நியாயங்களை முன்வைத்து வாதிட்டனர்.

உலகின் முதல் வழக்காடு மன்றம் இதுவே!. 

பொழுது புலர்வதாக கீழ் வானம் மெல்லச் சிவந்தது.
தீர்ப்பு கூற வேண்டிய நேரமும் நெருங்கியது..

இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதரவுபட்டவை!.
அறம் தவறாத இரு நிலையும் சிறப்புடையதே!.


தானும் இயங்கி தழைத்திருக்கும் உலகத்தையும் இயக்குவது இல்லறம்!.. 
சிவநெறியில் விளங்கி உலகுக்கு தன்னை அர்ப்பணிப்பது துறவறம்!.. 

உள்ளத்தில் தூய்மையும் வாய்மையும் சகல உயிர்களிடத்திலும் பாசமும் நேசமும் இயற்கையிடம் அன்பும் ஆதரவும் கொண்டு வாழும் எவர்க்கும் இல்லறம் துறவறம் ஆகிய இரண்டும் நல்லறமே!..

அன்பும் அறமும் நிறைந்திருப்பின் அங்கே அருள் பரிபூரணமாக நிலவும்!..

- என, வழக்காடு மன்றத்தினை நிறைவுசெய்து தீர்ப்பு வழங்கினான் இறைவன்.

வானுகோபருக்கும் மகாகோபருக்கும் பரம திருப்தி..

வள்ளல் பெருமானை வாழ்த்தி வலம் செய்து வணங்கினர்.

அவர்களுக்குத் திருநடனம் காட்டியருளினான் எம்பெருமான்!..

இங்கேயே எழுந்தருளி - பரிபாலிக்கும்படி வேண்டிக் கொண்டனர்.

ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நள்ளிரவுப் பொழுதில் இங்கே எழுந்தருளி வழிபாடுகளை ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தான் ஈசன்!..

அதுமுதற்கொண்டு காலகாலங்களைக் கடந்ததாக - எவ்வித மாற்றமும் இன்றி இத்திருத்தலத்தில் சோம வார நள்ளிரவு வழிபாடு நடந்து வருகின்றது.

ஆயினும், பகலில் ஒரு பொழுதாவது தரிசிக்க உத்தரவு தர வேண்டும்!.. - என நல்லோர்கள் விரும்பினர். 

அதன்படி, 

வானவர்க்குப் பகல் பொழுதாகிய உத்தராயண புண்யகாலத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நேரத்திலிருந்து சூர்ய அஸ்தமனம் வரை நடை திறக்கப் பட்டிருக்கும். 

சந்நிதியில் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்.

தை முதல் நாள்.  மகர சங்கராந்தி எனும் தைப்பொங்கல் நன்னாள். 

காலையிலிருந்தே மக்கள் கோலாகலமாக - மாடு கன்றுகளுடன் கூடி திருக் கோயில் முன்பாக பொங்கல் வைத்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வர். 

அந்த மகிழ்ச்சிக்கும் கோலாகலத்திற்கும் ஒரே காரணம் - 

பொதுவுடையாரின் பேரருள்!..

தை முதல் நாள் திங்கட்கிழமையாக இருப்பின் சூரிய அஸ்தமன நேரத்தில் நடை அடைக்கப்பட்டு பின் நள்ளிரவில் புராதன வழக்கப்படி பூஜைகள் நிகழும்.
தை முதல் நாளைத் தவிர வருடத்தின் மற்ற நாட்கள் எல்லாம் சந்நிதி பூட்டிக் கிடந்தாலும் - வருடாந்திரத்தில் தமது இல்லங்களில் நடக்கும் மங்கல வைபவங்களுக்கு முதல் அழைப்பு - 

பொதுவுடையாருக்குத்தான்!.. 

முனிவர்கள் இருவருக்கும் மத்யஸ்தம் செய்து வைத்ததால் மத்யபுரீஸ்வர எனவும் திருப்பெயர். தேவர்க்கும் முனிவருக்கும் மக்களுக்கும் -  வாயில்லாப் பிராணிகளுக்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றார் - பொதுவுடையார். 

ஆடுமாடு கோழிகளுக்கு வியாதி என்றால் - மக்கள் முதலில் நாடுவது பொதுவுடையாரின் அருளையே!.. 

பொதுவுடையாரே.. பாதுகாப்பு!.. என்று சொல்லி விட்டு திருநீற்றைப் பூசினால் 

அதற்குப் பிறகு மருந்தோ சிகிச்சையோ - 
அந்த ஜீவராசிகளுக்குத் தேவைப்படுவதே இல்லை. 

இதற்கு சாட்சிகள் உண்டா?.. 

உண்டு!.. 

கார்த்திகைச் சோமவாரங்களின் போது ஆயிரமாயிரமாக மக்கள் திரண்டு வந்து காணிக்கையாக அளிக்கும் கால்நடைகள் கோழிகள் சேவல்கள் - இவைகளே கண்கண்ட சாட்சி!..

இவற்றினூடே - எங்கள் குடும்பமும் சாட்சி!..

எங்கள் வீட்டிலிருந்த பசுக்களுக்கு பெருமானே - பாதுகாப்பு!..

கால்நடைகள் மட்டுமா?.. 

திருக்கோயிலின் சுற்றுப்புற கிராமங்களில் - நெல், கடலை, பயறு, உளுந்து, மரவள்ளி, கரும்பு, மஞ்சள், இஞ்சி, புளி, தேங்காய், இளநீர், பனம்பழம், மாங்காய், மாம்பழம், பலாப்பழம், வாழைத்தார் - என விளைகின்ற தன தான்யங்கள் அனைத்திலும் இயன்ற அளவு பொதுவுடையாருக்கே முதல் காணிக்கை!..

தான்யங்களை விடுங்கள்.  கூந்தல் எனப்படும் தென்னங்குருத்தினைச் சீவி அந்த ஈர்க்குகளை ஒருகைப்பிடியாகக் கட்டி அர்ப்பணிக்கின்றனர். 

திருக்கோயிலைச்சுற்றிலும் இரண்டு கி.மீ அளவுக்கு வீடுகளே கிடையாது. 

கோட்டகம் எனப்படும் நீர்ப்பிடிப்பான வயல்வெளிதான்.

பாட்டுவநாச்சி ஆற்றின் மேல்கரையில் மங்களாம்பிகை உடனாகிய நாகநாதர் திருக்கோயில். 

இத்திருக்கோயிலில் கோவிந்தராஜப்பெருமாள் உடனுறைகின்றார்.

நாகநாதர் திருக்கோயிலுக்கு அருகில் தாமரைக் குளம். 

இதன் கரையில் - ஸ்ரீபத்ரகாளியம்மன், ஸ்ரீபாலடி காத்தவராய ஸ்வாமி, ஸ்ரீசப்த முனீஸ்வரர் - எழுந்தருளியுள்ளனர். 

எதிரில் துடிப்பான காவல் தெய்வம் - தூண்டி ஐயா!..

உச்சிப் பொழுதிலும் அந்தி வேளையிலும் இந்தப் பகுதியில் ஆண்கள் துணை இன்றி பெண்கள் நடமாடுவது இல்லை. 

பட்டுக்கோட்டையிலிருந்து தாமரங்கோட்டை வழியாக முத்துப்பேட்டை செல்லும் நகரப் பேருந்துகளில் பரக்கலக்கோட்டைக்குச் செல்லலாம். 

பொதுவுடையார் கோயில் என்று சொல்லி - பாட்டுவநாச்சி ஆற்றின் கரையில் இறங்கிக் கொள்ளலாம்.

சாலையிலிருந்து தெற்காகப் பார்த்தால் பரந்து விரிந்த ஆலமரம் கண்ணுக்கும் புலப்படும். ஆற்றங்கரையில் ஒரு கி. மீ. தூரம் நடந்தால் ஆலமரத்தின் கீழ் கோயிலையும் காணலாம்.

கிழக்கு நோக்கிய சந்நிதி. வடபுறம் வீரஹத்தி விநாயகர். 

கமல புஷ்கரணியின் கரையில் மேற்கு முகமாக விளங்குகின்றார். 

இந்தப் பகுதியில் துஷ்டத்தனம் செய்து கொண்டிருந்த பிரம்ம ராட்சஷனின் வீரத்தை பங்கப்படுத்தி விரட்டியதால் இந்தத் திருப்பெயர். வீரசக்தி விநாயகர் என்றும் கூறுகின்றனர்.

அருகில் - பெத்த பெருமாள் சந்நிதி. 

திருக்குளக்கரையில் உறங்காப்புளியும் உறங்கும் புளியும் இருக்கின்றன. புளிய மரத்தின் இலைகள் இரவில் மூடிக் கொள்ளும் சலனம் உடையவை. ஆனால் உறங்காப் புளியின் இலைகள் இரவில் மூடிக் கொள்வதில்லை. 

சர்வாலங்காரத்துடன் நீல நிறம் கொண்டு வானுகோபரும், 
ஜடாமுடி ருத்ராட்சத்துடன் சிவப்பு நிறம் கொண்டு மகாகோபரும் - 
- சிலாரூபமாக புளிய மரங்களின் கீழ் வீற்றிருக்கின்றனர்.

விரிந்து பரந்திருக்கும் வெள்ளால மரம். 

இறைவனும் அதுவே!..
இத்தலத்தில் தல விருட்சமும் அதுவே!..

பலகாலம் பனியிலும் வெயிலிலும் திகழ்ந்த மூலஸ்தானம் - 1988/89 ஆண்டளவில் பஞ்சலோக தகடுகளால் ஸ்ரீ விமானம் போல மூடப்பட்டு கலசம் நிறுவப்பட்டது.

அந்த வைபவத்தினை நடத்திவைத்தவர்கள் - 

அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகளும்
செம்மொழி அரசு தவத்திரு குன்றக்குடி அடிகளாரும்!..

இன்னும் என் கண்களுக்குள் இருக்கின்றது - அந்த மங்கள வைபவம்!..


சைவ சமய சாத்திரங்களின்படி - கோயில் என்பது தில்லையம்பதி!..

தில்லையம்பதியில் - அர்த்தஜாம பூஜைகளுக்குப் பின் - உலகின் அனைத்து சிவாலயங்களிலும் உள்ள கலைகள் யாவும் ஒருங்கே வந்து கூடுவதாக ஐதீகம்.

ஆயிரமாயிரம் சிவலிங்கத் திருமேனிகளின் கலைகள் யாவும் ஒன்றிணைந்து பொலிய -  தில்லையில் திகழும் எம்பெருமான் - அந்த பூரண கலைகளுடன், 

அங்கிருந்து புறப்பட்டு பொய்கைநல்லூர் ஆகிய பரக்கலக்கோட்டை எனும் புண்ணிய பதியில் எழுந்தருளி ஆனந்த நடமாடுகின்றான். 

எனில், கண் கொண்ட அனைவரும் அதைக் கண்டு மகிழ வேண்டாமா!..


சீரும் சிறப்பும் உடையது பொதுவுடையார் திருக்கோயில். 

பகல் பொழுதுகளில் ஆங்காங்கே - ஆடுமாடுகள் மேய்ந்து திரிகின்றன. 
இரவாகி விட்டால் ஆள் நடமாட்டமில்லாத வனாந்திரம். 

ஆனாலும் - திங்கட்கிழமைகளில் மக்கள் ஆரவாரமாக கூடுகின்றனர்.

கார்த்திகை சோமவாரங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். 

கடும் மழையை எதிர்நோக்கி பிரம்மாண்டமான பந்தல் அமைத்துள்ளனர். எனினும்- மழை பெய்தாலும் மக்கள் கூட்டம் கலைந்து போவதில்லை. 

தை மாதத்தின் முதல் நாளில் பொதுஆவுடையாரின் தரிசனத்திற்காக நீண்ட நெடுந்தூரம் பொறுமையுடன் வரிசையில் காத்திருக்கின்றனர்.


இங்கே திருநீற்றுக்கு அடுத்ததாக ஆலமரத்தில் இருந்து உதிரும் இலையே பிரசாதமாகக் கருதப்படுகின்றது.

இந்த இலையைக் கொண்டு சென்று வீட்டில் வைத்தால் ஐஸ்வர்யம் பெருகும் என்பதும் தொழுவத்தில் கட்டினால் மாடுகன்றுகள் நலமுடன் இருக்கும் என்பதும் விளைநிலங்களில் இட்டால் விவசாயம் செழிக்கும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கை.


சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் திங்கட்கிழமைகளில் வர இயலாதவர்கள் கோயில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும் மாலை நேரங்களில் கோயிலுக்கு வந்து ஸ்வாமி சந்நிதி கதவின் அருகில் விளக்கேற்றி வைத்து வணங்குகின்றனர். 

சந்நிதிக் கதவிற்கும் நந்தியம்பெருமானுக்கும் மாலைகள் அணிவித்து விட்டு பிரகாரம் சுற்றி வந்து ஆலமரத்தைத் தரிசனம் செய்து விட்டு மனநிறைவுடன் செல்கின்றனர்.

இப்படி - நள்ளிரவுப் பொழுதிலும் மழையிலும் வெயிலிலும் ஐயனின் தரிசனம் வேண்டிக் காத்துக் கிடக்கும் பக்தர்களின் அன்பினை எப்படிக் கூறுவது!..

பொதுவுடையாரின் பேரருளுக்கு எளியேனும் ஒரு சாட்சி!..

பத்தாண்டு காலம் ஐயனின் திருக்கோயிலுக்கு அருகில் தாமரங்கோட்டையில் தாய் தந்தை சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்தவன்!..

அப்போதெல்லாம் - வாரந்தோறும் நண்பர்களுடன் பொடி நடையாகச் சென்று நள்ளிரவு நேரத்தில் சிவ தரிசனம் செய்வது வழக்கம். 

ஒருமுறை - கார்த்திகை சோமவார திருவிழா முடிந்ததும் உண்டியல் பெட்டிகளைப் பிரித்து,  காணிக்கையாக வந்த காசு பணத்தை வகைப்படுத்திக் கொடுக்கும் பணியினை தன்னார்வ தொண்டர்களுடன் செய்திருக்கின்றேன்.. 

பல ஆண்டுகளுக்குப் பின் - சமீபத்தில் மனைவி மக்களுடன் - பொங்கலன்று ஸ்வாமி தரிசனம் செய்து மகிழ்ந்தேன்!..


இன்று கார்த்திகை கடைசி சோம வாரம்!..

பொதுவுடையாரின் சந்நிதி இன்று மட்டும் ஒருநாள் சூர்யோதயம் வரைக்கும் திறந்திருக்கும்.

என் மனம் மட்டும் பரக்கலக்கோட்டை ஸ்ரீபொதுவுடையார் சந்நிதியில் திருக் கோயில் வளாகத்தில் சுற்றித் திரிகின்றது.

வானளாவிய ராஜகோபுரம் கொடிமரம் இல்லை!..
வனப்பு மிகும் சித்திரங்களும் சிற்பங்களும் இல்லை!..

பரிவார மூர்த்திகள் என யாரும் இல்லை!..
பரிகார சந்நிதிகள் என ஏதும் இல்லை!..

தேவாரம் கூறும் திருப்பதிகத் தலமாகவும் இல்லைதான்!..
மக்கள் திருப்தியுறும் பரிகாரத் தலமாகவும் இல்லை தான்!..

தைப்பொங்கல் மட்டும் பகல் பொழுதில் தரிசனம்.
வருடம் முழுதும் சோமவார நள்ளிரவு தரிசனம். 
கார்த்திகை சோம வாரங்களில் பெருவாரியாக மக்கள் கூடுகின்றனர்.  

இதைத்தவிர வேறெந்த வைபவங்களும் திருவிழாக்களும் இங்கே கிடையாது.

மற்ற சிவாலயங்களை போல இங்கு -  சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம் என எந்த விசேஷங்களும் கிடையாது. 

நந்தியம்பெருமான் இருந்தாலும் பிரதோஷ வழிபாடு இல்லை.

ஆனாலும், இறைவனின் மேல் வாஞ்சையுடன் மக்கள் கூடுகின்றனர்.

எம்பெருமானின் இன்னருள் மக்களை ஈர்க்கின்றது!.. 
அது - அனைவரையும் நல்வழியில் சேர்க்கின்றது!..

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!.. -  என்பார், மாணிக்கவாசகர்.
அந்த ஈசன் இங்கே ஏக உருவில் வீற்றிருக்கின்றான்!..
மூர்த்தி தலம் தீர்த்தம் என சீரும் சிறப்பும் வாய்ந்த ஸ்ரீபொதுஆவுடையார்
திருக்கோயிலைத் தரிசித்து வாழ்வில் வளங்கள் பல பெறுவோமாக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்!..
* * *

8 கருத்துகள்:

  1. எம்பெருமான் இயற்கையோடு இயைந்திருக்கின்றனன் - இங்கே/

    வியத்தகு ஆலயம்.பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் இரவில்
    பரக்கலக் கோட்டைக் கோயிலுக்கு சென்று வந்த
    நினைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  3. ஐயா அறியாத கோவில் மற்றும் தகவல்கள் கேட்டு பரவசம் அடைந்தேன். உங்கள் புண்ணியத்தால் நாங்களும் ஐயனை நினைத்து வழிபடுகிறோம். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. பல தகவல்கள் அறியாதவை ஐயா... நன்றி... சிறப்பான பகிர்வு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் இனிய வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..