நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 03, 2014

ஆலய தரிசனம் - 4

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து மதியம் ஒரு மணியளவில் புறப்பட்ட நாங்கள் இருபது நிமிட நேரத்தில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தை அடைந்து விட்டோம்.

மதிய உணவு - பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த நடுத்தரமான உணவகத்தில்!..

இன்றும் - நிறைந்த தரம்.. அன்பான உபசரிப்பு!.. 

அங்கிருந்து சற்று தூரத்தில் இருந்த புதிய பேருந்து நிலையத்தைச் சென்றடைவதற்குள் தடதட  - என பெரும் மழை.

ஒரு கடையின் வாசலில் ஒதுங்கிக் கொண்டோம்.
எங்கள் நினைவெல்லாம் அபிராமவல்லியின் சந்நிதியில் இருந்தது.


மேகம் சற்று கண்ணயர்ந்த நேரம். மறுமழை வருவதற்குள் - ஓட்டமும் நடையுமாக சென்றபோது எங்களுக்காகவே காத்திருந்தது போல திருக்கடவூர் செல்லும் பேருந்து.

மயிலாடுதுறையிலிருந்து பொறையார் செல்லும் பேருந்து அது!..

வழியில் - தருமபுரம், செம்பொன்னார்கோயில், ஆக்கூர் - என தேவாரப் பதிகம் பெற்ற திருத்தலங்கள்.

அடுத்த முப்பது நிமிடங்களில் - திருக்கடவூர்!..

முன்பெல்லாம் நெடுஞ்சாலையில் - சந்நிதி தெரு முனையிலேயே பேருந்துகள் நின்று சென்றன. ஆனால் இப்போது போக்குவரத்தைக் காரணம் காட்டி பேருந்து நிறுத்தம் இடம் மாற்றப்பட்டது.

ஆனாலும், நெரிசல் தீரவில்லை. அலறியடித்துக் கொண்டு பாய்கின்றன வாகனங்கள்..


சாலையில் சற்று தூரம் நடந்து - கிழக்கே திரும்பினால் சந்நிதி தெருவின் கடைசியில் அலங்கார வளைவு. 

அதன் பின்னே கம்பீரமாக உயர்ந்தெழுந்த ராஜ கோபுரம்!..

சந்நிதித் தெருவின் முனையில் பழைமையான காளியம்மன் திருக்கோயில்.

கோயிலுக்குத் திருப்பணி செய்து தரையில் வழுவழுப்பான கற்களைப் பதித்து சிறப்பாக குடமுழுக்கு செய்திருக்கின்றனர். சந்நிதி பூட்டப்பட்டிருந்தது. கம்பிக் கதவுகளின் ஊடாக அம்பாளைக் கண்ணாரக் கண்டு வணங்கினோம்.

சந்நிதித் தெருவில் நடக்கும் போது மீண்டும் மழை.

சந்நிதித் தெருவில் - திருக்கோயிலை நோக்கியவாறு இருக்கும் பிள்ளையார் கோயிலில் - ஒதுங்கிக் கொண்டு நேரத்தை ஓட்டினோம்.

ஒருவழியாக மழை நின்றதும் திருக்கோயிலின் முன் மண்டபத்தைச் சென்று சேர்ந்தாகி விட்டது.

திருக்கடவூரும் மேற்கு நோக்கிய திருக்கோயிலே!..

தலைவாசல் திறந்தே இருந்தது.

சந்நிதி நடை மாலை நான்கு மணிக்குத் தான் திறக்கப்படும் என்றார்கள் - அங்கே காத்துக் கிடந்தவர்கள்..

ராஜகோபுரத்தின் அருகே - தெற்குப் புறமாக இருந்த கழிவறை பூட்டப்பட்டுக் கிடந்தது.

எப்போது திறப்பார்கள்?.. - என்று கேட்டேன்.

அதெல்லாம் இப்ப தெறக்கறது இல்லீங்க. புதுசா கொத்து வேலை செஞ்சாங்க.. பூட்டிப் போட்டுட்டு போய்ட்டாங்க.. எப்போ தெறப்பாங்களோ தெரியாது!..

- என்றார் அங்கிருந்த பெரியவர்.

காலணிகளை அங்கிருந்த கடையின் ஓரமாகப் போட்டு விட்டு - கல் தரையில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரில் கால்களை அலசிக் கொண்டோம்.

ராஜகோபுரத்தின் கீழ் திருக்கோயிலின் காவல் நாயகமாக ஸ்ரீ முனீஸ்வரன்.

மயிலாடுதுறை ராஜ கோபுரத்தில் - ஸ்ரீதங்க முனீஸ்வரன்.
வைத்தீஸ்வரன் கோயிலின் எதிர்புறம் - ஸ்ரீயோக முனீஸ்வரன்.
இங்கே, திருக்கடவூரிலும் -  ராஜகோபுர முனீஸ்வரன்!..

ராஜகோபுரத்தின் கோஷ்டத்தில் சூலம் நடப்பட்டிருக்கின்றது. முனீஸ்வரனின் முகம் மட்டும் தெரியும்படியாக  சுதை சிற்பம்.

முனீஸ்வரனை மனமார வணங்கி - மாடத்திலிருந்த திருநீறை எடுத்துக் கொண்டோம்.

அப்படியே உள் நடந்தால் - பெரிய மண்டபம். அங்கே ஸ்வாமிக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்து வரும் பெரிய செப்புத் தவலைகளுடன் மாட்டு வண்டி.

மண்டபத்தின் வடக்குப் புறமாக கோசாலை!.. அதை அனுசரித்து மண்டபத்தில் அகத்திக் கீரை விற்றூக் கொண்டிருந்தனர். சில கட்டுகளை வாங்கிச் சென்று கோசாலையின் பசுக்களுக்குக் கொடுத்தோம். 

அங்கே சுவரை ஒட்டியபடி தண்ணீர்க் குழாய்கள்.. 
திருப்தியுடன் கால் கைகளைக் கழுவிக் கொண்டோம்.

பெரிய பெரிய கீற்றுக் கொட்டகைகளில் பசுமாடுகளும் கன்றுகளும் காளைகளும்!.  தொழுவம் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. 

மாடு கன்றுகளைப் பார்த்தவுடன் - முப்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டிலிருந்த பசுக்களின் நினைவு நெஞ்சில் புரண்டது.

தொழுவத்தைப் படம் எடுக்க ஆசை. மழைத் தூறல் விழுந்து கொண்டே இருந்தது.

ஆசை தீர மாட்டுத் தொழுவத்தில் தவழ்ந்த காற்றை சுவாசித்துக் கொண்டேன்.

மணி நான்கு. ஹரஹர எனும் முழக்கத்துடன் கதவுகள் திறக்கப்பட்டன.

தாயைத் தேடிய கன்றாக - மனம் முந்திக் கொண்டு ஓடியது.

பலிபீடம். கொடிமரம். கடந்தவாறு - திருக்கோயிலில் உள்ளே நுழைந்தோம்.

நீயே சரண் என அடைக்கலம்  மார்க்கண்டேயன் சரண் புகுந்த தலம்.
மார்க்கண்டேயனின் தூய அன்பினுக்காக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம்.

தன் செயலில் முனைப்பாக இருப்பதாக ஆணவத்துடன் - கண்மூடித்தனமாக செயல்பட்ட யம தர்மராஜன் - ஈசனால் தண்டிக்கப்பட்டு வீழ்ந்த தலம்.

முப்பத்துமுக்கோடித் தேவர்களும் தொழுது வணங்கி நின்ற திருத்தலம்.
அகஸ்தியர், புலஸ்தியர், வாசுகி  முதலியோர் வழிபட்ட தலம் இது.

அறுபத்து மூவருள் விளங்கும் சிவநேசச் செல்வர்களான  காரி நாயனாரும் குங்கிலியக் கலய நாயனாரும் வாழ்ந்த தலம் இது.

அப்பர் ஸ்வாமிகளையும் ஞான சம்பந்தப் பெருமானையும்  தமது திருமடத்திற்கு எழுந்தருளச் செய்து அவர்களுக்கு  அமுதளித்து மகிழ்ந்த  பெருமை உடையவர் குங்கிலியக் கலய நாயனார்.

அப்பர் ஸ்வாமிகளும் ஞான சம்பந்தப் பெருமானும் - திருப்பதிகம் பாடிப் பரவிய திருத்தலம்.

அருணகிரியார் தரிசித்து திருப்புகழ் பாடிய திருத்தலம்.

சந்நிதி திரையிடப்பட்டிருக்கின்றது. திரு விளக்குகள் ஏற்றப்படுகின்றன.

சற்றே வலப்புறமாக கள்ள வாரணப்பெருமான்.

நஞ்சு வெளிப்பட்ட பின்  - மீண்டும் கடலைக் கடைந்த தேவர்களுக்கு பல்வகையான பொருட்களுடன் அமுத கலசம் வெளிப்பட்டது. அதை இந்திரன் எடுத்துக் கொண்டபோது - அவன் கையிலிருந்து மறைந்தது.

படாதபாடு பட்டு அடைந்த கலசம் பறிபோனதே!.. -  என இந்திரன் பதறினான் கதறினான்.

நான்முகன் சொன்னார் - 

முழுமுதற்பொருளான கணபதியை மறந்தாய். நஞ்சினை அருந்தி நம்மைக் காத்த ஈசனையும் மறந்தாய்!. ஆதியும் அந்தமுமான அற்புதத்தை நினையாமல் நடுவில் கிடந்து தடுமாறுகின்றாய்.. தடம் மாறுகின்றாய்!..

கண்ணீர் வடித்த இந்திரனின் முன் விநாயகப் பெருமான் தோன்றி, தான் ஒளித்து வைத்த - அமிர்த கலசம் - கடம் - இருக்கும் இடத்தைக் காட்டினார்.

திருமூலஸ்தானம்
கலசத்தை ஒளித்து வைத்து விளையாடியதால் - இவருக்கு கள்ள விநாயகர் என்று திருப்பெயர். கள்ள வாரணன் அமுத கலசத்துடன் திகழ்கின்றார்.

அந்த - அமிர்த கடமே - சிவலிங்கமாகப் பொலிந்தது.

அதனாலேயே, அமிர்தகடேஸ்வரர், அமிர்தலிங்கம்,  அமுதலிங்கம், அமுதீசர் - எனும் திருப்பெயர்கள்.

அமிர்த லிங்கத்தின் மீது தன்னுடைய பொன்னாபரணங்களைப் பூட்டி அழகு பார்த்தார் - ஸ்ரீ மஹாவிஷ்ணு!..

அந்த ஸ்வர்ண ஸ்பரிசத்தில் இருந்து வெளிப்பட்டாள் - அம்பிகை!..

அவள் - அபிராமவல்லி!..

அதோ - திரை விலக்கப்பட்டது. தீப ஆராதனையில் ஈசனின் திருக்காட்சி..

கண் நிறைந்த தரிசனத்தால் - விழிகள் நனைகின்றன.

ஈசனின் அன்பு  - திருநீறாக நம் கையினில்!..

மூலஸ்தானத்தில் தீப ஆராதனைக்குப் பின் - சிவாச்சார்யார் வரும் சந்நிதி -

காலனை உதைத்து - காலனுக்கும் காலனான கால சம்ஹாரனின் சந்நிதி!..

ம்ருத்யுஞ்சய மந்த்ர ஸ்லோகத்துடன் தீப ஆராதனை.
அத்துடன் திருத்தல வரலாற்றையும்  கூறினார் குருக்கள்..

பாலாம்பிகையும் காலசம்ஹார மூர்த்தியும் மனமெங்கும் நிறைகின்றனர்.

கோபத்துடன் , வலக்காலை ஊன்றி இடக்காலை உயர்த்தி யமனை எட்டி உதைத்த நிலையில் - கோபம் அடங்காதவராக திருவடியில் வீழ்ந்து கிடக்கும் யம தர்மராஜனின் மீது சூலத்தைப் பாய்ச்சியவாறு தெற்கு முகமாக திகழ்கின்றார்.

மந்தகாசப் புன்னகையுடன் விளங்கும் காலசம்ஹார மூர்த்தியின் இடது திருவடியை ஆதிசேஷன் தாங்குகின்றான்.

ஸ்வாமியின் அருகில் இளவஞ்சிக் கொடியாய் பாலாம்பிகை!..
புவனம் முழுவதையும் பூத்தவள். புவனத்தை பூத்த வண்ணம் காப்பவள்.

இரண்டு திருக்கரங்களுடன் - சின்னஞ்சிறு கிளியாய் பொலியும் அம்பிகைக்கு
சரஸ்வதியும் லக்ஷ்மியும் தோழிகளாய் சேவை செய்கின்றனர்.

ஈசனின் பிரயோக சூலத்திற்குக் கீழே வீழ்ந்து கிடக்கும் யமதர்மனை ஒரு பூதம் கயிற்றால் கட்டி இழுக்கின்றது

தன் உயிர் காத்த காலசம்ஹார மூர்த்தியை வணங்கியபடி மார்க்கண்டேயர்.

சாதாரணமாக காலசம்ஹாரமூர்த்தியைத் தரிசிக்கும்போது, யமனைப்  பார்க்க முடியாது. தீப ஆராதனை செய்தபின், பீடத்தின் மீதிருக்கும் கவசத்தைத் திறந்து காட்டும்போது தான் யம தர்மராஜனைப் பார்க்க முடியும்.

திருக்கரத்தில் சூலத்துடன் யமனை வீழ்த்திய சம்ஹார மூர்த்தியாகவும் தேவர்களுடைய வேண்டுகோளின்படி யமனை உயிர்ப்பித்து அனுக்ரஹ மூர்த்தியாகவும் - ஸ்வாமி விளங்குகின்றார்.

காலசம்ஹார மூர்த்தியின் தரிசனத்திற்குப் பின் திருச்சுற்றில் -

கிழக்கு நோக்கியவராக ஸ்ரீ முருகப் பெருமான்.  வள்ளி தேவயானையுடன் விளங்குகின்றார்.  தமிழ்க் குமரனின் தாள் மலர்களில்  தலை வைத்து வணங்குகின்றோம்.

அடுத்து நடன சபை.  அன்னை சிவகாமியுடன் ஆனந்தக் கூத்தன்.

திருக்கோஷ்டத்தில் துர்க்காம்பிகை. சண்டேசர் சந்நிதி.

ஈசான்ய மூலையில் அருள் தரும் வைரவமூர்த்தி விளங்குகின்றார்.

மேற்குத் திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவர். தெற்கில் சனகாதி முனிவர் சூழ ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி.

மார்க்கண்டேயரின் அபிஷேகத்துக்காக பெருகிய கங்கை நீருடன் கலந்து வந்த பிஞ்சிலம் எனும் ஜாதி மல்லி திருச்சுற்றில் இருக்கின்றது. இதுவே தல விருட்சம். தீர்த்தம் - அமிர்த தீர்த்தம்.

இத்திருக்கோயிலில் நவக்கிரக மண்டலம்  கிடையாது. மற்ற தேவர்கள் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று சனைச்சரனையாவது பிடித்து வைத்திருப்பார்கள்.. 

ஆனால் - இங்கே சனைச்சரனுக்கும் வேலை கிடையாது.

திருக்கடவூரில் அறுபதாம் கல்யாணம் செய்து கொள்பவர்கள்  தங்களது ஜன்ம நட்சத்திரத்தன்று திருமணம் செய்து கொள்வது மரபு. 

நாள்தோறும் மணிவிழா, சஷ்டியப்த பூர்த்தி,  சதாபிஷேகம் என நிகழ்கின்றன. இதற்காக திருச்சுற்றின் கிழக்கிலும் தெற்கிலும் நிறைய அலங்கார மேடைகள்.

தெற்குத் திருச்சுற்றில் - காலசம்ஹாரமூர்த்தி சந்நிதிக்கு நேர் எதிரே  கைகூப்பி வணங்கிய கோலத்தில் யமதர்மராஜன். அருகில் எருமையும் நிற்கிறது.

மூலஸ்தானத்தை வலம் வந்து - மீண்டும் அமிர்தலிங்கத்தை வணங்கினோம்.

சந்நிதிக்கு வெளியே தென்புறம் - கிழக்கு நோக்கியதாக காமகோட்டம். 
அன்னை அபிராமவல்லியின்  திருச்சந்நிதி.


இந்த சந்நிதி தானே - அன்று சுப்ரமண்ய குருக்கள் அம்பிகைக்கு சேவை செய்திருந்த சந்நிதி!..

ஆம்!.. அன்பனின் வாக்கு மெய்ப்பட்ட சந்நிதி - இந்த சந்நிதி தான்!..

தை அமாவாசையன்று மன்னன் சரபோஜி வந்து நின்றதும்  - இங்கேதான்!..

திதி என்ன என்று கேட்ட மன்னனுக்கு - பௌர்ணமி என்று சொல்லப்பட்டதும் - இங்கேதான்!..

மாலையில் நிலவு உதிக்கவில்லை எனில் - உமது உயிர் உடலில் இருக்காது! - என, ஆணை பிறந்ததும்  - இங்கேதான்!..

நீயே எல்லாமும்!..  - என நினைந்து கிடந்த சுப்ரமண்ய குருக்களின் வாக்கினை மெய்ப்பித்து  - உயிரைக் காத்தருளிய அபிராமி வீற்றிருப்பதும் - இங்கேதான்!..

வாங்கிச் சென்றிருந்த மலர்ச்சரத்தை குருக்களின் கரத்தினில் கொடுத்தோம்.

அதை அம்பிகைக்கு அழகுற அணிவித்து தீப தரிசனம் செய்வித்தார்.

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே!..

அதற்கு மேல் அவளிடத்தில் யாதொன்றும் கேட்கவில்லை.
அன்னை அவள் அறிவாள் அனைத்தையும்!.. 

அன்னையின் மூலஸ்தானத்தின் பின்புறம் அபிராம பட்டரின் திருமேனி விளங்குகின்றது.

சந்நிதியை வலம்வந்து கொடிமரத்தின் அருகில் தண்டனிட்டு வணங்கினோம்.

இத்திருக்கோயில் பின்புறம் சற்று தூரத்தில் தனது ஆபரணங்களை ஐயனுக்கு அணிவித்த அமிர்த நாராயணப் பெருமாள் திருக்கோயில் கொண்டுள்ளார்.

கால வெள்ளத்தில் நிலை குலைந்து விட்டது பெருமாள் கோயில். அந்தக் கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மேலும் திருக்கோயிலின் எதிரே ஒரு கி.மீ. தொலைவில் திருக்கடவூர் மயானம் எனும் திருத்தலம் உள்ளது. இந்தத் திருத்தலத்தில் இருந்து  தான் நாள் தோறும் திருமஞ்சனத்திற்கு நீர் கொண்டு வரப்படுகின்றது. 

இதுவும் தேவாரப் பதிகம் பெற்ற திருத்தலம்.

இந்த இரு கோயில்களுக்கும் சென்று வர ஆவல். 
ஆனால், வானில் மழைக்கால மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. 

அந்தத் திருமூர்த்திகளை மானசீகமாக வணங்கிக் கொண்டோம்.

அமிர்தலிங்கத்தினின்று  வெளிப்பட்டவள் அபிராமவல்லி!.. 
சிவசக்தி ஐக்ய ஸ்வரூபினி அபிராமவல்லி!..

தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமையாள் அவள்!..

குழையைத் தழுவிய கொன்றையந் தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்பு வில்லும்
விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே!..

- என்றார் அபிராமி பட்டர்.

குளிர்ந்த கொன்றை மலர்களால் ஆன மாலை - 
ஈசனின் தோள்களிலே கிடந்தது.

அந்த நறுங்கொன்றை மாலை - இப்போது அபிராமவல்லியின் 
திருச்செவிகளில் இலங்கும் கனங்குழைகளைத் தழுவியபடி!..
நறுமணம் கமழும் அந்த கொன்றை மாலை தவழ்ந்திருக்கும்
திருத்தன பாரங்களை  உடையவள் அபிராமவல்லி!..

அன்னவளின் மூங்கில் போன்ற திருநெடுந்தோள்களும்
திருக்கரத்திலுள்ள கரும்பு வில்லும் பஞ்ச பாணங்களும்
வினை மாற்றும் வெண்நகையும் மான்விழி போன்ற விழிகளும்
என்நெஞ்சில் எப்போதும் நிறைந்திருக்கின்றனவே!.. 

ஐயனிடமும் அம்பிகையிடமும் விடைபெற்றுக் கொண்டோம்.

காலையில் மயிலாடுதுறை. நடுப்பகலில் வைத்தீஸ்வரன் கோயில். 
மாலையில் திருக்கடவூர் - என திருத்தலங்களைத் தரிசனம் செய்து விட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு வந்த போது மாலை - 6.30.

ரயில்வே ஜங்ஷனுக்கு சற்று முன்பாக - ஒரு தேநீர் கடை .
எப்போதும் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்.

அங்கே வடையும் டீயும் களைத்த வயிற்றுக்கு அருமையாக இருந்தன.

மயிலாடுதுறையிலிருந்து - தஞ்சாவூர் பாசஞ்சர் புறப்பட்ட போது இரவு - 7.45.

கும்பகோணம் ரயில் நிலையம்
 வீட்டை அடைந்த போது - இரவு மணி பத்து!..

எளிமையாக சிற்றுண்டியை முடித்து விட்டு படுக்கையில் தலை சாய்த்த போது -

நாளைக்கு எந்தக் கோயிலுக்கு!.. - மனைவியிடமிருந்து கேள்வி.

அதுவும் உந்தன் விருப்பன்றே!.. - என்றேன் நான்.

ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * *

14 கருத்துகள்:

  1. திருக்கடவூர் பல முறை சென்றுள்ளேன். தற்போது பதிவைப் படித்ததும் தங்கள் மூலமாக மற்றொரு முறை கோயிலுக்குச் சென்று வந்ததுபோல இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் - மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருக்கடவூர் இதுவரை சென்றதில்லை வந்ததுபோன்ற உணர்வு தந்தமைக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. திருக்கடவூர் கோவிலை நாங்களும் உங்களுடன் வலம் வந்தது போன்றதொரு மகிழ்ச்சி... அப்படியே ஒவ்வொன்றையும் சொல்லி... அழகான தொகுப்புக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  4. திருக்கடவூர் சிறப்புகள் அனைத்தும் அருமை... உங்கள் பதிவால் பலவற்றை அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. கடந்த செப்டெம்பர் மாதத்தில் தரிசனம் செய்திருந்தோம். உங்கள்பதிவு நினைவுகளை மீண்டும் மீட்டெடுத்தது.. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் இனிய வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  6. அருமையான அனுபவம்...... திருக்கடவூர் சென்று வர வேண்டும் எனத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
      வாய்ப்பு அமையும் போது அவசியம் திருக்கடவூர் சென்று தரிசனம் செய்யுங்கள்..இனிய கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  7. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

    http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_7.html?

    பதிலளிநீக்கு
  8. அன்புடையீர்..
    வலைச்சர அறிமுகம் குறித்து தகவல் அளித்து வாழ்த்துரைத்த தங்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..