நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 21, 2014

பாவேந்தர் பாரதிதாசன்

குருநாதர் மீது கொண்ட பாசத்தினால் - சுப்பு ரத்தினம் எனும் தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்ட தகைமையாளர். 

அப்படி- பெயரை மாற்றிக் கொண்டபோது, ஆர்ப்பரித்து எழுந்தன - எதிர்ப்புகள்.


''..சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பாரதி என்பதால் அவருடைய பெயரை வைத்துக் கொண்டேன். எவர் எதிர்த்தாலும் கவலை இல்லை!..'' - என்று அஞ்சாமல் முழங்கியவர்  புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். 

புதுவையில் மகாகவி பாரதியார் தங்கியிருந்த போது, நண்பர்களுடன் அவரை - அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றவர். 

அப்படி ஒரு சமயத்தில்  - பாரதியாரின் விருப்பப்படி  - அவரது முன்னிலையில் பாடிய பாட்டு தான் - இது!.. 

எங்கெங்கு காணினும் சக்தியடா தம்பி 
ஏழுகடல் அவள் வண்ணமடா - அங்குத் 
தங்கும் வெளியினிற் கோடியண்டம்  - அந்தத் 
தாயின் கைப்பந்தென ஓடுமடா!.. 

கங்குலில் ஏழு முகிலினமும் வந்து 
கர்ஜனை செய்வதை கண்டதுண்டோ - அந்த
மங்கை நகைத்த ஒலி எனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!.. 

காளை ஒருவன் கவிச்சுவையைக் கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கே நடம் புரிவாள் - அவன் 
தொல்லறிவாளர் திறம் பெறுவான்!..

வாளைச் சுழற்றும் விசையினினிலே இந்த 
வையம் முழுவதும் துண்டு செய்வேன் - என
நீள இடையின்றி நீ நினைத்தால் - அன்னை
நேர்ப்படுவாள் உந்தன் தோளினிலே!..

பாவேந்தரின் இந்தப் பாடல் - பின்னாளில் நம்ம வீட்டு தெய்வம் எனும் திரைப் படத்தில் இடம் பெற்றது.
இசையமைப்பு -திரு. குன்னக்குடி வைத்யநாதன்.
பாடியவர்- திரு. T.M. சௌந்தரராஜன் - குழுவினர்.


அ - அணில் என்று பயிற்றுவித்த  அன்றைய தமிழ் நடையினை மாற்றி,
அ - அம்மா என - மழலைகளுக்குத் தமிழமுதினை ஊட்டியவர் - பாவேந்தர்!.. 

புரட்சிக் கவிஞரின் பாடல்கள் திரைப்படங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றுள் சில!..

பாடல்களைக் கேட்டு மகிழ்வதற்கு Mp3   இணைக்கத் தெரியவில்லை. எனவே திரைப்படத்தின் பெயரில் காணொளி சுட்டியினை இணைத்துள்ளேன்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? - எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா?.. நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? - கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா?..

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க - எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க - நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? - கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா?..

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி ல்லாத போது - யாம்
அறிகி ல்லாத போது - தமிழ்
இறைவ னாரின்திருக் குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? - கண்ணே
இயம்பிக் காட்டமாட் டாயா?.. 
 

திரைப்படம் -  ஓர் இரவு. 
இசையமைப்பு - திரு. M.M.தண்டபாணி தேசிகர் - சுதர்சனம்.
பாடியோர்- திருமதி.M.S. ராஜேஸ்வரி, திரு.J. வர்மா.
கீழுள்ள இணைப்புகளில் இனிமையான இந்தப் பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
நித்யஸ்ரீ மகாதேவன்.
சுதா ரகுநாதன்


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !
தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !
 

தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !
தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !


தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் !
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !
 

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!..


திரைப்படம் -  பஞ்சவர்ணக்கிளி 
இசையமைப்பு - திரு. M.S. விஸ்வநாதன்.
பாடியவர்- திருமதி.P.சுசிலா.

* * *

சங்கே முழங்கு!.. சங்கே முழங்கு!..

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!

பொங்கும் தமிழர்க்கின்னல் விளைத்தால்

சங்காரம் நிஜமெனச் சங்கே முழங்கு! 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் 
விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த 

தமிழுடன் பிறந்தோம் நாங்கள் - ஆண்மைச்
சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு 

ஞாபகம்செய் - முழங்கு சங்கே!
  
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் 

தோளெங்கள் வெற்றித் தோள்கள்..
கங்கையைப்போல் காவிரிபோல் கருத்துக்கள் 

ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரம்செய்கின்ற

தமிழ் எங்கள் மூச்சாம்!..

திரைப்படம் -  கலங்கரை விளக்கம்.
இசையமைப்பு - திரு. M.S. விஸ்வநாதன் -ராமமூர்த்தி.
பாடியோர் - திரு. சீர்காழி S. கோவிந்தராஜன், திருமதி. P.சுசிலா - குழுவினர்.

சங்கே முழங்கு!..  - எனும் இந்தப் பாடல் வீரம் செறிந்தது!.. 

கண்களை மூடிய வண்ணம்  பாடலைக்கேட்கும் போதெல்லாம் தோள்கள் விம்மிப் புடைக்கும்!.. 

இதற்கு இணையாக வேறு ஒரு பாடலைக் குறிக்க முடியவில்லை!..

அன்புச் சகோதரர் திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்கள், புரட்சிக் கவிஞரின் அருமைப் புதல்வர் திரு. மன்னர் மன்னன் அவர்களைச் சந்தித்து மகிழ்ந்த தருணத்தை தனக்கே உரிய பாணியில் பதிவு செய்துள்ளார்.

இதோ,  இணைப்பு - பாரதிதாசனைச் சந்தித்தோம்.



கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
 

பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
 

நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்
 

இனியன என்பேன்!.. எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!..




அலையெறிந்து ஆர்ப்பரித்த அந்தத் 
தமிழ்க் கடல் ஓய்ந்த நாள் இன்று!..


தமிழ் எங்கள் இளமைக்குப் பால்!..  
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்!.. 
தாய் எனவும் தந்தை எனவும் தமிழைக் காட்டிய கவிவேந்தரின் நினைவுகள் என்றும் நெஞ்சை விட்டு நீங்குவதேயில்லை!..

20 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமையான பாடல்கள்...

    எனது அடுத்த பகிர்வு mp3 இணைப்பது பற்றித் தான்... விரைவில் வெளியிடுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      ஆவலுடன் தங்களது பதிவினை எதிர்பார்க்கின்றேன்..
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. பாரதி தாசன் அவர்கள் நினைவு தினம் இன்று.
    அதைப் போற்றும் வகையில் எனது வலை நண்பர்
    திரு துரை செல்வராஜ் அவர்களுக்கு எழுதிய என் மடல்
    இங்கே
    www.vazhvuneri.blogspot.com
    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களின் தளத்திற்கு வருகை தந்து எனது கருத்தினைப் பதிவு செய்துள்ளேன்.
      தங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  3. பாரதிதாசன் நினைவு தினம் நினைவூட்டியதற்கு நன்றி. பாரதிதாசன் பாடல்களில் துன்பம் நேர்கையில் என்னும் பாட்டு பிடிக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      துன்பம் நேர்கையில் எனும் பாடலைக் கேட்கும் போதே விவரிக்க இயலாத அமைதியில் மனம் லயிக்கின்றது.

      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  4. //தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்// எத்துணைக் காதல் தமிழ் மேல்! பாவேந்தரின் பாடல்கள் அருமை..பகிர்விற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுக்கு நல்வரவு!..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி!..

      நீக்கு
  5. குருநாதர் மீது கொண்ட பாசத்தினால் - சுப்பு ரத்தினம் எனும் தன் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக் கொண்ட தகைமையாளர் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி!..

      நீக்கு
  6. பாரதிதாசனைப் பற்றி இவ்வளவு செய்திகளைத் தாங்கள் தந்துள்ள விதம் மிகவும் அருமை. வாய்ப்பிருப்பின் இதனை ஒரு நூலாக வெளியிட முயற்சிக்கலாமே. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      பாவேந்தரின் அருமையும் பெருமையும் கடல் எனப் பெரிது.
      அதன் அருகிருந்து ரசிக்கும் சிறு மழலை நான்.
      காலமும் நேரமும் தங்களைப் போன்ற -
      நல்லோர்களின் வாழ்த்துகளுடன் கூடி வரட்டும்.
      தங்களது அன்பினுக்கு மிக்க நன்றி..

      நீக்கு
  7. பாவேந்தரின் பாடல்கள் அத்துணையும் அருமை...எங்கோ வெகு சிலரே தமிழின் மீது இப்படி ஒரு உண்மையான உணர்வுடன் கவிதைகளை புனைகிறார்கள்...அருமையான பதிவு....மிக்க நன்றி துறை சார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட் ராமன்..
      தங்களது அன்பான வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  8. பாவேந்தரின் நினைவு நாளில் இனிமையானதோர் பதிவு. பாராட்டுகள் துரை செல்வராஜூ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  9. சாதாரணமானவர்களை விட உயர்வானவர்களை 'துரை' என்பார்கள். பாரதிதாசனை அற்புதமாக நினைவூட்டி, பதிவர்களிலும் நீங்கள் ஒரு 'துரை ' என்று நிரூபித்து விட்டீர்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் அன்புக்குத் தலை வணங்குகின்றேன்..
      எளியேனின் சிந்தனையில் உள்ளதைத் தான் பதிவில் வைத்தேன். பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை என்கின்றது உள்மனம்.
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  10. பாரதிதாசன் நினைவுநாளில் ஓர் அருமையான பதிவு ஐயா
    நெஞ்சை விட்டு எந்நாளும் நீங்கா பாடல்களை அருமையாய்
    தந்துள்ளீர்கள்.
    எனது பதிவினையும், குறிப்பிட்டமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் தான் - காத்துக் கிடந்தேன்.. மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..