நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 30, 2014

படிக்காசு வைத்த பரமன்

சைவம் வளர்த்த சான்றோர்களாகிய திருநாவுக்கரசு ஸ்வாமிகளும் திருஞானசம்பந்தப் பெருமானும் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் மாணிக்க வாசகப் பெருமானும் ஊர் ஊராகச் சென்று,


திருப்பதிகங்களைப் பாடி - எல்லாம் வல்ல இறைவனைத் துதிக்கும் போது - பல்வேறு தகவல்களைக் குறித்தே பாடி மகிழ்கின்றனர்.

பற்பல புராண வரலாற்றுச் செய்திகள் அவர்களது திருப்பதிகங்களில் விரவிக் கிடக்கின்றன.

திருக்கோயிலின் அமைப்பு,  மக்களின் வாழ்வு, ஊரின் தன்மை, ஆறு குளம் வயல் வரப்பு, விலங்குகள் பறவைகள் -  என, அரிய தகவல்கள் பலவற்றையும் பதிவு செய்திருக்கின்றனர்.

அவர்கள் காலத்தில் அல்லது அதற்கு முன்னால் வாழ்ந்த பெருமக்களைப் பற்றியும் திருப்பதிகங்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அந்த வகையில் -

திருஞானசம்பந்தர் , திருநாவுக்கரசு ஸ்வாமிகள், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ஆகிய மூவரும் குறிப்பிடும் திருத்தொண்டர் ஒருவரைப் பற்றிய பதிவு!..

மாறாத அன்பினுக்காக - இவருக்கு , பரமன் படிக்காசு அருளினன்  எனில் - அவருடைய பெருமைதான் என்னே!.

தன் பசிக்காக வைத்திருந்த உலர்ந்த நெல்லிக் கனியினை - தானமாக அளித்த தன்மைக்காகவே - அன்று ஏழைக்குடிலில் - கனக மழை பெய்தது. 

தனக்கென வாழாத் தகைமையாளர்களால் தான் - இந்தத் தரணி இன்னும் சீருடன் விளங்குகின்றது என்பர் - சான்றோர்.

இதுவே - அக்ஷய திரிதியை நாளின்  - அடி நாதம்!..

இத்தன்மையுடன் கூடிய ஒரு வரலாறு சோழ நாட்டில் நிகழ்ந்துள்ளது!..

* * *

அழகாபுத்தூர். 

கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் உள்ள திருத்தலம். 

தேவாரம் பயின்ற கால கட்டத்தில் அரிசிற்கரைபுத்தூர் என்பது இவ்வூரின் பெயர். 

அழகாபுத்தூரின் கண் அமைந்துள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கும் -
இறைவனின் திருப்பெயர் - படிக்காசு வைத்த பரமன், சொர்ணபுரீஸ்வரர்.
இறைவியின் திருப்பெயர் - சௌந்தரநாயகி.


தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் - அமிர்த புஷ்கரணி, அரசலாறு.

மேற்கு நோக்கிய திருக்கோயில்.

ஏறத்தாழ ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் - இத்திருக்கோயிலில் நாளும்  இறைப் பணிகளைச் செய்து வந்தவர் - ஆதிசைவர் குலத்தில் தோன்றிய புகழ்த் துணையார் என்பவர். 

புகழ்த் துணையார் - ஒருங்கிய மனத்துடன் சிவாகம நெறியில் நின்று வழிபாடுகளை நிகழ்த்தி வரும் காலத்தில் - பெரும் பஞ்சம் வந்துற்றது. 

படிக்காசு வைத்த பரமன்
வளமும் வாழ்வும் குன்றிப் போயின. மக்கள் தங்கள் தேவைகளைத் தேடி வேறிடங்களுக்குக் குடி பெயர்ந்தனர். 

உண்ணும் உணவும் குடிக்கும் நீரும் அரிய பொருள்களாயின. 

அந்த நிலையிலும் மனம் தளராத புகழ்த் துணையார் - ''..எம் இறைவனை நான் விடுவேன் அல்லேன்!..'' -  என்ற மன உறுதி மிக்கவராகி - 

எங்கெங்கோ அலைந்து திரிந்து - ஆழக் கிணறுகளைத் தேடி பிரயத்தனத்துடன் நீர் சேகரித்தும், மலர்களையும் தழைகளையும் பறித்து மாலை தொடுத்தும்  இறைபணியை ஆற்றுவார் ஆயினார். 

ஆனால், அவர் தனக்கு உண்ணக் கிடைக்காததைப் பற்றிக் கருதவில்லை. 

ஒருநாள்  - 

தேடிக் கொணர்ந்த சிறிதளவு நீரினால் சிவலிங்கத் திருமேனியை அபிஷேகம் செய்யும் போது - கொடும் பசியினால் வருந்தித் துவண்டு, நிலை தளர்ந்து  நீர் நிறைந்த திருமஞ்சனக் குடத்தைத் தாங்க மாட்டாமல், 

சிவலிங்கத்தின் மீதே நழுவ விட்டவராக - மயங்கி சிவலிங்கத்தின் மீதே சரிந்து விழுந்து விடுகின்றார். 

அவரது தூய அன்பினைக் கண்ட எம்பெருமான்,

''..அன்பனே!.. உன் வாட்டம் தீர்வதற்கென்று பஞ்சம் தீரும் வரை - நாம் நாள்தோறும் இங்கு உனக்கு  ஒரு காசு வைப்போம்!..'' - என்று அருளினார். 

மயக்கத்திலிருந்து மீண்ட புகழ்த்துணையார் - தமது மயக்கத்தில் நிகழ்ந்தவற்றை சிந்தித்து உணர்ந்து தெளிந்தபோது சிவ பீடத்தில் ஒரு பொற்காசு இருக்கக் கண்டு மகிழ்வெய்தினார். 

அந்தப் பொற்காசினைக்  கொண்டு -  சகல உயிர்களின் பசிப்பிணியும் நீங்கும் படிக்கு  அன்னம் பாலித்து அரும் தொண்டாற்றினார். 

புகழ்த்துணையார் மனைவியுடன்
அதன்பின்,  கோள்கள் நிலை மாறி  - மாரி பொழிந்து ஊர் வளம் பெற்றபோதும் தமது அறப்பணிகளில் இருந்து வழுவாதவராக - அனைவருடைய  அல்லலும் நீங்கும்படிக்கு அறம் பல ஆற்றினார். 

நிறைவாழ்வு வாழ்ந்த புகழ்த்துணையார் - ஆவணி மாதத்தின் ஆயில்யத்தன்று சிவகணங்கள் எதிர்வந்து அழைக்க - சிவகதியினை அடைந்தார். 

புகழ்த்துணையாரின் அரும்செயலைத் திருஞானசம்பந்தப்பெருமான் - 

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழனாகச் செய்தான்ஊர்
அலந்த அடியான் அற்றைக்கு அன்றோர் காசுஎய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே!.  (2/73) 

- என்று திருப்பதிகத்தில் புகழ்ந்துரைத்துப் பாடி மகிழ்கின்றார். 

அவ்வாறே - திருநாவுக்கரசு சுவாமிகளும்,

அரிசி லின்கரை மேலணி யார்தரு
புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப்
பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாம்
துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே!..(5/61)


- என்று புகழ்த்துணையார் பெற்ற அரும்பேற்றினை மறைபொருளாகக் குறிப்பிட்டு மகிழ்கின்றார். 

பின்னாளில் - 
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்!..

- என்று திருத் தொண்டத் தொகையில் பாடி மகிழும் சுந்தரமூர்த்தி சுவாமிகள், 

அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்
அரிசிற்புனல் கொண்டுவந் தாட்டுகின்றான்
மிகத்தளர் வெய்திக் குடத்தையும்நும்
முடிமேல்விழுத் திட்டு நடுங்குதலும்
வகுத்தவ னுக்குநித் தற்படியும்
வரும்என்றொரு காசினை நின்றநன்றிப்
புகழ்த்துணை கைப்புகச் செய்துகந்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே!. (7/9)

- என்று, அழகாபுத்தூர் திருப்பதிகத்தில் - புகழ்த்துணை நாயனாரின் அருஞ்செயலை விரிவாகவே எடுத்துரைக்கின்றார்.
 
தீராத கஷ்டத்தில் இருப்பவர்கள் - படிக்காசு வைத்த பரமனின்  சந்நிதியில் இரண்டு காசுகளை வைத்து வேண்டிக்கொள்கின்றனர். அவற்றில் ஒன்றை மட்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர்.

இதனால், குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து ஐஸ்வர்யம் பெருகியதற்கு ஆயிரம் ஆயிரமாகச் சாட்சிகள்.


இத்திருத்தலத்தில் தான் - எம்பெருமான் முருகவேள் திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி - எழிலார் கோலங்கொண்டு  திகழ்கின்றனன்.

திருக்கோயிலின் மண்டபத்தில்  - புகழ்த்துணை நாயனார், தன் மனைவியுடன் விளங்குகின்றார். கோச்செங்கட்சோழரால் எழுப்பப் பெற்ற திருக்கோயில்.

தான் நலிவுற்றாலும் பிறர் வாழ வேண்டும் என்று விரும்பிய அருளாளர்கள் பலர் வாழ்ந்ததற்கான சாட்சிகள் - காட்சிகளாகக் காணக் கிடைக்கின்றன.

கண் கொண்டு அவற்றைக் காணுவோம்.
கருத்தினில் வைத்து நலம் பேணுவோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்!..

14 கருத்துகள்:

  1. தான் நலிவுற்றாலும் பிறர் வாழவேண்டும் என்று விரும்பும் அருளாளர்களால்தான் உலகம் இன்றும் இயங்கிக் கொண்டே இருக்கிறது
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  2. புகழ்த் துணையார் புராணம்! பாடல்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  3. சிறப்பான தகவல்கள்..... படிக்காசு - புதிய விஷயம்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி துரை செல்வராஜூ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி..

      நீக்கு
  4. தமிழில் இறை இலக்கியங்கள் ஏராளம்பொருள் உணர்ந்து படிப்பது சிரமமாயிருக்கிறது உங்கள் பதிவுகள் பல விஷயங்களைச் சொல்லிப்போகிறது.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா..

      நீக்கு
  5. படிகாசு வைத்த பரமன் கதை படிக்க பரவசமாகுது நெஞ்சம்.
    நன்றி சார் அருமையான புராணம் சொல்லியதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  6. சிறப்பான... சில அறியாத... தகவல்கள் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      போலீஸ் தொப்பியோடு (Facebook) எங்கே போய் இருந்தீர்கள்!...
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி..

      நீக்கு
  7. படிக்காசு தந்த பரமனின் மகிமை அறிந்து மிக்க மகிழ்ச்சி யடைந்தேன்.இது புதியது எனக்கு.அருமையான பதிவு. மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் மகிழ்ச்சியே - எனது மகிழ்ச்சி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..