நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 05, 2013

ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர்

விரைவாக நடந்து வந்த மார்க்கண்டேயர் - திருக்கடவூர் எனப்புகழ் பெற்றிருந்த தலத்தினை நெருங்குவதற்கும் சந்தியா வேளை கூடி வருவதற்கும் சரியாக இருந்தது. 

ஆசார அனுஷ்டானங்களை முடித்தார். சிவபூஜைக்கென கமண்டலத்தை எடுத்ததும் அதனுள்ளிருந்து கங்கை -  பிரவாகமாகப் பொங்கி - பெருகி வந்தாள்.  சந்தோஷமாக பூஜையை நிறைவு செய்த மார்க்கண்டேயர் தியானத்தில் ஆழ்ந்தார்.


திருக்கடவூரில் நிகழ்ந்த அற்புதங்கள் எல்லாம் அவருடைய மனவெளியில் காட்சிகளாக விரிந்தன. நிறைந்த மனத்தினராக, பூஜையினின்று எழுந்தார். தீர்த்தப் பிரசாதத்தினை அருந்தினார்.

வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் வெளிப்பட்டன. 

சில தினங்களாக தரிசித்த சிவ தலங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த வேளையில் - இமயத்தின் அடிவாரத்தில் தவம் செய்து கொண்டிருக்கும் தந்தை, மிருகண்டு முனிவர் -  தம் நினைவலைகளில் குறுக்கிடுவதை உணர்ந்தார். பளிச்சென எழுந்து அமர்ந்த மார்க்கண்டேயர்,

''..வணக்கம்!... தந்தையே!..'' - என்றார்.

''..நல்லாசிகள்.. மகனே!.. இறைவன் அமிர்தகடேஸ்வரராகவும் அம்பிகை அபிராமவல்லியாகவும் எழுந்தருளியுள்ள திருக்கடவூரில் இருக்கின்றாய்  - நீ,  இப்போது!..''

''..ஆம்!...ஐயனே!..''

''..இத்துடன் நீ நூற்றெட்டு சிவதலங்களில் வழிபட்டிருக்கின்றாய்!..''

''..அப்படி - கணக்கில் கொள்ளவில்லை!..''

''..ஆயினும் நீ கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றாய்!..''

''..யாருடைய கவனத்தில்?..''

''..காலனின் கவனத்தில்!..''

''.........  .........  .........'' மார்க்கண்டேயர் மெளனமாக இருந்தார்.

''..உன் தாய் உன் நினைவாகவே இருக்கின்றாள்!..''

''..அன்னையிடம் என் வணக்கத்தினைச் சொல்லுங்கள்!.. காலம் வகுத்த பாதையில் தான் உயிர்கள் அனைத்தும் பயணிக்க வேண்டும். நாரைக்கு ஒளித்த குளமும் நமனுக்கு மறைத்த உயிரும் உண்டா தந்தையே!..''

''..கலக்கமா... மார்க்கண்டேயா!..''

''..இல்லை!... எம்பெருமானின் திருநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தேன்!..''

''..மேற்கு நோக்கிய சிவசந்நிதி உனக்கு நன்மைகளை அருள்வதாக!. சிவ நாமம் உன்னைக் காக்கும்!.. நாளை - சூர்யோதயத்திற்குப் பின் எதுவும் நடக்கலாம்!..''

''..பெற்று வளர்த்துப் பேணிக் காத்த தாய் தந்தையர்க்கு என் பணிவான வணக்கங்கள்!..  நாம் மீண்டும் சந்திக்க - இறைவன் நல்லருள் புரிவானாக!..''

''..ஜயமுண்டு!.. பயமில்லை!.. சிவாய நம!..''

''..சிவாய நம!..''

மகனுடனான மானஸ உரையாடலை நிறைவு செய்து கொண்டார் முனிவர்.

மெல்ல - மார்க்கண்டேயர் நித்திரையில் ஆழ்ந்தார்.

மகப்பேறின்றி வருந்திய மிருகண்டு முனிவருக்கும் மருத்துவதிக்கும்  - ஈசன் அருளால் பிறந்தவர். பிறக்கும் போதே - பதினாறு வயதில் மரணம் என்ற நிர்ணயத்துடன் பிறந்தவர். வளர்கின்ற போதே சிவபூஜையில் நாட்டம் கொண்டு விளங்கியதால் சிவநேசச் செல்வனாக ஒளிர்ந்தார். 


அதனால் - காலனை எண்ணிக் கலங்காமல் வாழ்க்கையின் கடைசி விநாடி வரை சிவபூஜை நிகழ்த்த  விரும்பி, தீர்த்தயாத்திரை புறப்பட்ட - அவருடைய கமண்டலத்தில் - நினைக்கும் போது கங்கை நீர் பெருகும் எனில் அவர்தம் பெருமை தான் என்னே!...

கூவின பூங்குயில். கூவின குருகுகள்!.. ஒளி கசிய மின்னிய தாரகைகள் ஒளியிழந்து மறைந்தன. நித்திரை கலைந்து எழுந்த மார்க்கண்டேயர் சிவ நாமத்தில் திளைத்தபடி அனுஷ்டானங்களை முடித்து விட்டு வந்து  - 

விடியற் காலை வெளிச்சத்தில் நன்றாக உற்று நோக்கினார் - அமிர்த லிங்கத்தின் சிரசில் -  ஜாதி மல்லிகைப்பூ!..

பனியில் நனைந்திருந்த பூவினைக் கண்களில் ஒற்றிக் கொண்டார். 

சிவசிந்தனையுடன் பூஜைக்காக கமண்டலத்தைக் கையில் எடுத்தார். வழக்கம் போல் அதில் கங்கை பெருகினாள். அப்போது தான் கண்டார். கங்கை நீரில் ஜாதி மல்லிகைப் பூங்கொத்து மிதந்து வருவதை!... 

தமக்காக மலர் கொண்டு வந்த கங்கைக்கு மகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.  


எப்போதும் போல சிரத்தையுடன் சிவபூஜையினை நிகழ்த்தினார். ஆரத்தி செய்தார். வலஞ்செய்து வாழ்த்தினார்.  உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொண்டார். ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி  - எழுந்தார்.

பிஞ்சிலம் எனப்படும் ஜாதி மல்லிகைப் பூக்களை இறைவன் மீது உதிர்த்தார். இலையும் தளிருமாக சிறு கொப்பு அவருடைய கையில் இருந்தது. அதை வாஞ்சையுடன் நோக்கிய மார்க்கண்டேயர் - தென்புறமாக ,  மண்ணில் ஊன்றி வைத்தார். கைகளால் நீர் வார்த்தார். தழைத்து வாழ்வாயாக - என்று வாழ்த்தினார். நடப்பட்ட கொப்பு இப்படியும் அப்படியுமாக காற்றில் அசைந்தது.

மீண்டும் சந்நிதிக்கு வந்தார். சிவ தியானத்தில் அமர்ந்தார்.

திடீரென பெருஞ்சத்தம்!... அனல் காற்று!... விழித்து நோக்கினார்.

சற்று தூரத்தில் தர்மராஜனாகிய யமன். யமனின் கையில் பாசக் கயிறு சுழன்று கொண்டிருந்தது. அவனை சுற்றி காலதூதர்கள் தம்முடைய இயலாமையைச்  சொல்லிக் கொண்டிருந்தனர்..

''..பிரபு!.. மார்க்கண்டனுடைய தவவலிமை அக்னியாக சுட்டது!. எங்களால் நெருங்கக்கூட முடியவில்லை!..''

ஈசன் அருளிய - பதினாறு ஆண்டுகளின் இறுதி விநாடிகள்!.. அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது!.. 

சுழன்று கொண்டிருந்த பாசக் கயிறு - காற்றில் தாவி - மார்க்கண்டேயனின் கழுத்தை நோக்கி வருவதற்கும் மார்க்கண்டேயன் -


''..இறைவா!...'' - என்றபடி அமிர்தலிங்கத்தைக் கட்டித் தழுவிக் கொள்வதற்கும் சரியாக இருந்தது!..

தன் கடமையினைச் சரியாகச் செய்வதாக நினைத்துக் கொண்ட யமன்  - பாசக் கயிற்றினைச் சுண்டி இழுத்தான்!... அது அமிர்தலிங்கத்தையும் சேர்த்துப் பற்றியிருப்பதை உணராமல்!... அப்போது தான் அது நிகழ்ந்தது!..

அண்ட பகிரண்டமும் சேர்ந்து நடுங்கிக் குலைந்து அவன் தலையில் விழுந்த மாதிரி இருந்தது. ''..என்ன!.. ஏது!..'' என்று யோசிப்பதற்குள் எருமையின் மீதிருந்து கீழே விழுந்தான்.  

(Thanks to Animation Images - Markandeya story  - Telugu)

நான்முகன் படைப்பில்  - ஈ , எறும்பு என எண்ணாயிரங்கோடி யோனி பேதம் உடைய  - அத்தனை உயிர்களின் ஆயுளையும் முடித்துக் கணக்கினைத் தீர்க்கும் யமனின் கணக்கு தீர்ந்து விட்டது.

தன்னுடல் கீழே கிடப்பதையும் தான் ஆவியாக  - தனித்திருப்பதையும் கண்டான்!.. திடுக்கிட்டான்!.. எதிரே எம்பெருமான் - சம்ஹாரமூர்த்தியாக உக்ரத்துடன் எழுந்தருளியிருப்பதைக் கண்டான்!.. 


தான் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பிணைத்திருப்பதைக் கண்டு அஞ்சி நடுங்கிய யமன்  - ''..ஆஹா!.. மோசம் போனேனே!.. பெருமானே!.. என்னை மன்னியுங்கள்!..'' - என்று அலறியபடி ஐயனின் அடித்தாமரைகளில் வீழ்ந்தான்.

அதற்குள் - தேவாதி தேவர்களும் மகரிஷிகளும் மஹாவிஷ்ணுவும் நான்முகப் பிரம்மனும் அங்கே கூடி காலசம்ஹார மூர்த்தியைச் சாந்தப்படுத்திக் கொண்டிருந்தனர். 

''..காலன் மாண்டு விழுந்த ஒரு நொடியில் விளைந்த பாரத்தினை என்னால் சுமக்க முடியவில்லையே!...'' - என பூமாதேவி கண்ணீருடன் கலங்கி நின்றாள்.

அப்போது மின்னல் கொடியெனத் தோன்றிய அம்பிகை - பாலாம்பிகையாக ஐயனின் இடப்புறம் எழுந்தருளினள்.
ஸ்ரீ காலசம்ஹார மூர்த்தி - பாலாம்பிகை
அன்னை புன்னகைத்தாள். ஐயனும் புன்னகைத்தார்.

தன்னுயிர் மீண்டும் உடலில் பிரவேசிப்பதை உணர்ந்த யமன் - துள்ளி எழுந்து பெருமானின் திருவடித் தாமரைகளைப் பற்றிக் கொண்டான். 

அழுதான். தொழுதான். துதித்தான். துவண்டான்.

''..மார்க்கண்டேயனே!. இன்று போல் என்றும் பதினாறாக - சிரஞ்சீவியாக நீடூழி வாழ்வாயாக!..''

''..எல்லாம் நின்பெருங்கருணை.. எம்பெருமானே!..'' - மார்க்கண்டேயர் பணிந்து வணங்கி வலஞ்செய்து  போற்றினார்.

''...யமதர்ம ராஜனே!.. சிவராஜதானியின் பிரதிநிதி அல்லவா நீ!.. உனக்கு நிதானம் வேண்டாமா!..''

''..ஐயனே!.. தாங்கள் இட்ட பணியேற்று வாழும் ஏழையேனாகிய நான் எடுத்த காரியத்தில் இடறி விழுந்தேன்!..  பிழை ஏதும் நேரக்கூடாது என எண்ணி பிழை புரிந்து விட்டேன்!.. கடையனாகிய யான் தங்கள் கருணையினால் மீண்டும் பிழைத்தேன்!.. என் பிழை பொறுத்த புண்ணியனே!.. நின் பதம் போற்றி!.. போற்றி!..''

''..யமனே!.. இனி இத்தலத்திற்கு வந்து எம்மை அடிபணியும் எவருக்கும் நீ மரணபயம் கொடுக்கலாகாது!..''  - அன்னை திருவாய் மலர்ந்தாள்!.

''..உத்தரவு தாயே!. எல்லாம் உன் தயவு!. ஐயனின் திருமேனியில் இடங் கொண்ட - அன்னை நீயல்லவோ என்னை உதைத்து அருளினாய்!.. ஈசர் பாகத்து நேரிழையே!.. உன் திருவடியல்லவோ எனக்கு தீட்சை கொடுத்தது!.. இனி உன் திருப்பெயரை நினைப்பவர்கள் பக்கம்  - திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்!..'' - பணிவுடன் கை கட்டி வாய் மூடியபடி - மொழிந்தான் யமன்.

கூடியிருந்தோர் அனைவரும் சிரித்தனர். யமனும் அதில் சேர்ந்து கொண்டான்.

திருக்கடவூர் வீரட்டம்
அன்னையையும் ஐயனையும் வலஞ்செய்து வணங்கினான்.

''காலசம்ஹார மூர்த்தியாக தாம் இத்தலத்தில் இருந்தருளி - அனைவருக்கும் அடைக்கலம் தந்தருளவேண்டும் பெருமானே!...'' - நான்முகன் வேண்டிக் கொண்டார்.

தென்திசை  நோக்கிய காலசம்ஹார மூர்த்தியின் திருக்கோலத்தினைத் தரிசித்தபடியே  யமனும்   -  ஐயனின் எதிரில் அமர்ந்தான்.

அன்னை புன்னகைத்தாள். ஐயனும் புன்னகைத்தார்.
யமபயம் நீங்கிய உயிர்க்குலமும் புன்னகைத்தது.

4 கருத்துகள்:

  1. தளத்தின் அருமை பெருமை, பகிர்வின் மூலம் சிறப்பை அறிந்தேன் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. படிக்கப் படிக்கப் பரவசம் அய்யா. நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அன்பான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா!...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..