நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 16, 2013

சீர் தரும் ஆடி

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவைதான். எனினும் ஆடி மாதம் தனிச் சிறப்புடையது.


உத்ராயணப் புண்ய காலம் இனிதே நிறைவேறி  - தட்சிணாயனப் புண்ய காலம் தொடங்கும் நாள்  - ஆடி முதல் நாள். 

தை முதல் ஆனி வரை வடக்கிலிருந்து தெற்காக இருந்த சூரியனின் பயணம் - ஆடி முதல் மார்கழி வரை சூரியனின் பயணம் தெற்கிலிருந்து வடக்காக இருக்கும் என்பார்கள். 

சூரியன் எங்கே இடம் மாறுகின்றான்!... நீள் வட்டப்பாதையில் சுழலும் பூமியின் சுழற்சியல்லவோ மாறுபாடு அடைகின்றது!...

காலக் கணக்கில் தேவர்களுக்கு மாலை நேரம் தொடங்குவதாக ஐதீகம்.

இந்த ஆடி மாதத்தில் தான் எத்தனை எத்தனை சந்தோஷமான வைபவங்கள்!..

தனித்துவமாக  - நம் வீடு முதல் கோயில் வரை!.. 


புதிதாக இல்லறம் ஏற்ற தம்பதியருக்கு - கொஞ்சம் கொண்டாட்டமும், நிறைய திண்டாட்டமும் ஆன மாதம் அல்லவா - ஆடி!...

மருமகனுக்கும் மகளுக்கும் அன்பின் அடையாளமாக சீர் வழங்கி சிறப்பு செய்யப்படுவதும்,  குலமகளின் மங்கலத் தாலியினைப் பெருக்கி -   குடும்ப வழக்கத்தின்படி மேலும் சில மங்கலச் சின்னங்களைச் சேர்த்து தம்பதிகளை வாழ்த்துவதும்  - ஆடியில் தானே!.. 

வளமையாக பொங்கிப் பெருகி வரும் நதி தீரங்களில் - ஆடிப்பெருக்கு என-  மங்கலச் சடங்குகளை நிகழ்த்தி - குதுகலிப்பதும் ஆடியில் தானே!...

அதெல்லாம் சரிதான்!.... 

மனம் நிறைந்த மகிழ்ச்சியில் - குலக்கொழுந்து தழைத்து ஜனிக்க - கொடும் வெயிற்காலமான சித்திரை உகந்தது அல்ல - என்று ஆனந்த வானில் பறந்து திளைக்கும் அன்றில் பறவைகளை -  ஆதுரத்துடன் அவர்களின் நலன் கருதி - பிரித்து வைப்பதும் ஆடியில் தானே!...


சுமங்கலிகள் ஆடி செவ்வாய்க் கிழமைகளில் - கெளரி நோன்பு நோற்பதன் மூலம் மங்கலங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். 

ஆடி வெள்ளி மட்டும் குறைந்ததா - என்ன!..

அம்பிகையை  - அதிலும் குறிப்பாக -  ஊர்காக்கும் நாயகியாம் மாரியம்மனைக் குறித்து ஏற்கும் விரதங்களும் செய்யப்படும் பூஜைகளும் முழுமையாக நம்மை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தக்கூடியவை அல்லவா!..


பசுமையான வேப்பிலையும் பொன்னிறமான எலுமிச்சையும்  - கண்கண்ட சாட்சியாக மாரியம்மனை நம் வீட்டிற்குள் அழைத்து வரக்கூடியவை. 

குடும்பத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  - கன்னியாக அல்லது சுமங்கலியாக இறைவனடி சேர்ந்தாரை - தெய்வமாகப் பாவித்து  புடவை எடுத்து வைத்து மங்கல அணிமணிகளுடன் பொங்கல் நிவேதனம் செய்து வணங்குவது ஆடி வெள்ளிக் கிழமைகளில் தான்!..

தவிர - வீட்டு சாமி கும்பிடுவது என்று வேட்டி துண்டுடன் நிறைந்த அன்னம் பாலித்து வணங்குவதும் ஆடி வெள்ளிக் கிழமைகளில் தான்!..

சிலர் அசைவ உணவு படைப்பதும் வழிபடுவர். 

ஆடிஅமாவாசை அன்று முன்னோர்களுக்கு பிதுர் காரியங்களை நிறைவேற்ற  ராமேஸ்வரம், வேதாரண்யம், உவரி - ஆகிய கடற்கரைத் தலங்களும், 

திருவையாறு  - காவிரி, பாபநாசம் - தாமிரபரணி முதலான நதிக்கரைத் தலங்களும்,  

கும்பகோணம் (மகாமகக்குளம்),  திருவாஞ்சியம் (குப்தகங்கை) முதலான தீர்த்தக்கரை தலங்களும்  சிறப்பானவை - என்பது ஆன்றோர் வாக்கு.

திருக்கயிலாய தரிசனம் வேண்டிச் சென்ற அப்பர் பெருமானுக்கு - திருக் கயிலாய தரிசனம் கிடைத்தது - திருவையாற்றில்!.. அந்த புண்ணிய வைபவம் நிகழ்ந்தது  - ஆடி அமாவாசை தினத்தில்!... 

அன்றைய நாளில் திருஐயாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் திருக்கயிலாய தரிசனம் சிறப்பான விழாவாக நடைபெறுகின்றது.

ஆடி வெள்ளிக் கிழமைகளில் ஆலயங்களில் நிகழ்த்தப்படும் குத்து விளக்கு பூஜைகள் சிறப்பானவை. 

ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகக் கொண்டாடப்பட்டாலும்  - அந்த சிவகாமி பெற்றெடுத்த செல்வனுக்கு சீரும் சிறப்புமாக கார்த்திகை கொண்டாடப்படுவது ஆடியில் தான்!..

காவிரி நதியைப் பெண்ணாக  - தாயாகப் பாவித்து வணங்கிப் போற்றும் ஆடிப் பெருக்கு எனும் மங்கல விழா தொன்று தொட்டு நிகழ்த்தப்படும் விழாவாகும்.

ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளன்று - 


சிறுமிகளும் கன்னியரும் சுமங்கலியரும் காவிரி நதிக்கரையில் கூடி -  தலை வாழையிலையில் - காதோலை கருகமணி, வளையல்கள், தாம்பூலம், எலுமிச்சங்கனி, விளாம்பழம், நாவற்பழம், வாழைப்பழம், பூச்சரம் இவற்றுடன் காப்பரிசியும் படைத்து தீபம் ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூரங்காட்டி வணங்கி - மஞ்சள் தடவிய  நூலினை பழுத்த  சுமங்கலிகளின் கையால் வாங்கி கழுத்தில் அணிந்து கொண்டு காவிரியில் பூச்சரங்களுடன் தீபங்களை மிதக்க விடுவது - பரவசமான மங்கல நிகழ்ச்சியாகும்.

ஆடிப்பதினெட்டு அன்று - ஸ்ரீரங்கத்தில் காவிரிக்கரையின் அம்மா மண்டப படித்துறையில் - நம்பெருமாள் எழுந்தருளி - யானையின் மீது  சீர்வரிசை    கொணர்ந்து  - கங்கையினும் புனிதமான காவிரிக்கு சகல மரியாதையுடன் சமர்ப்பிக்கின்றார். 

எல்லாம் வல்ல பரம்பொருள் - தவமிருக்கும் அன்னை கோமதிக்கு - சங்கர நாராயண திருக்கோலத்தைக் காட்டியருளியதும்  - ஆடி மாதத்தில் தான்!...

வேணுவனமாகிய நெல்லையில் - அன்னை காந்திமதி  - சீர்மிகு வளைகாப்பு கொள்வதும் ஆடியில் தான்!... 

வெண்சங்கே!... மருப்பொசித்த மாதவன் தன் - வாய் இதழின் வாசம்  - கற்பூரம் என மணக்குமோ!.. கமலப்பூ என மணக்குமோ!..   

காதலாகிக் கசிந்துருகி  -  கண்ணன் என் காதலன் எனத் தமிழை ஆண்டருளிய  - ஆண்டாள் - சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - கோதை நாச்சியாரின் திரு அவதாரம் நிகழ்ந்ததும் ஆடியில் தான்!.. 


ஆண்டாள் - அருந்தமிழை ஆண்டாள்!. அரங்கனையும் ஆண்டாள்!..

ஆடிப்பூரம்  - ஆண்டாளின் அவதாரத்தினால் பெருமை கொண்டது. 

''..மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!..'' - என்று முத்திரை பதிப்பவர் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை. 

பெண்மை சிறப்பிக்கப்படும் மாதம் - ஆடி மாதம்!...

குடும்பம் ஒரு கோயிலாகும் மாதம்  - ஆடி மாதம்!..


எங்கெங்கு காணினும் சக்தியடா!. 
என்று பாவேந்தர்  சிறப்பித்த பெண்மையை - 
சீர் தந்து போற்றும் மாதம் - ஆடி மாதம்!...

நம் இல்லங்களில் நம்முடன் வளைய வரும் 
மங்கலச் செல்வங்களாகிய - 

தாய் - சகோதரி - மனைவி - மகள் - அடுத்த வீட்டுப் பெண்கள் - 
என - எல்லாரையும் சிறப்பிக்கும் மாதம் - ஆடி மாதம்!...

பெண் இல்லையானால் உலகம் எப்படியிருந்திருக்கும்?...

உலகம் என்ன - இந்தப் பிரபஞ்சமே இருந்திருக்காது!...

பெண்ணிற் பெருந்தக்க யாவுள!...

4 கருத்துகள்:

  1. ஆடி மாதத்தின் நல்லதொரு தொகுப்பு சிறப்பு... முடிவில் மிகவும் சிறப்பு... வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு. தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!...

      நீக்கு
  2. ஆடியின் அற்புதத்தை, மகத்துவத்தை அறிந்தேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்!.. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..