நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 24, 2023

சோலைக் கரும்பு 2

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
சித்திரை 11
 திங்கட்கிழமை

திருப்பதிகப் பாடல்கள்
நன்றி: பன்னிரு திருமுறை

கரும்பைப் பற்றிய பதிவுகள் தொடரும் நிலையில் வழக்கம் போல தேவாரத்தில் கரும்பு பேசப்படும் அழகினைக் காண்போம்..

இந்தப் பதிவில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் அருளிச் செய்த திருப்பாடல்கள் சிலவற்றை சிந்திப்போம்..

கானூர் முளைத்த கரும்பினை.. என்று ஈசனைப் போற்றுகின்ற அப்பர் ஸ்வாமிகள் -

கரும்பின் இன்மொழிக் காரிகை.. என்றும்

இன்சொற் கரும்பனையாள்.. என்றும்

கரும்பமரும் மொழி மடவாள்.. என்றும் அம்பிகையை புகழ்ந்தேத்துகின்றார்..


திரு ஊர்த்தொகை

ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
4/15/2


திரு இடைமருதூர்

கனியி னுங்கட்டி பட்ட கரும்பினும்
பனி மலர்க்குழற் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந் தார்க்கு இடை மருதனே.
 (5/14/10)


திரு ஐயாறு

விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.. 5/28/7

திருவீழிமிழலை

திருவீழிமிழலை

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும்
வேலையின் அமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே ( 4/64/2)

திருவீழிமிழலை

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழிய்யார்
பெரும்பற்றப் புலியூர் மூலட்டா னத்தார்
இரும்புதலார் இரும்பூளை யுள்ளார் ஏரார்
இன்னம்பரார் ஈங்கோய் மலையார் இன்சொற்
கரும்பனையாள் உமையோடுங் கருகாவூரார்
கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த
வீழிமிழலையே மேவினாரே.. 6/51/6


திருவீழிமிழலை

ஆலைப் படுகரும்பின் சாறு போல
அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத் தான்காண்
சீல முடையடியார் சிந்தை யான்காண்
திரிபுரமூன் றெரிபடுத்த சிலையி னான்காண்
பாலினொடு தயிர்நறுநெய் யாடி னான்காண்
பண்டரங்க வேடன்காண் பலிதேர் வான்காண்
வேலை விடமுண்ட மிடற்றி னான்காண்
விண்ணிழி தண்வீழி மிழலை யானே.. 6/52/2


திருபுள்ளிருக்கு வேளூர்
(வைத்தீஸ்வரன் கோயில்)

பத்திமையாற் பணிந்தடியேன் றன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித் தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத் துள்ளே யூறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே..6/54/3


பெரும்பற்றப்புலியூர்
(சிதம்பரம்)

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோ டாறங்க மாயி னானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.. 6/1/6

திருநாகேஸ்வரம்

திருநாகேச்சரம்
(திருநாகேஸ்வரம்)

அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை
வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்
துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்
சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்
கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை
இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்
தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. (6/66/9)


திருக்கயிலை

மாலை எழுந்த மதியே போற்றி
மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி
மேலாடு திங்கள் முடியாய் போற்றி
ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி
அடியார்கட் காரமுத மானாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி..6/56/3


திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***