நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
பங்குனி 11
ஞாயிற்றுக்கிழமை
சத்தியம் நீயே.. தர்மத் தாயே.. -
என்று வழிபடப்படுவது பசு..
பசுக்கள் காமதேனுவின் வம்சம் என்பர்..
அகத்திய மாமுனிவரைப் போலவே சைவ வைணவ மரபுகளில் பயின்று வருகின்றாள் காமதேனு..
ஆதனூர் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மூலஸ்தானத்தில் பெருமாளை வணங்கியபடி
காமதேனு காட்சியளிக்கின்றாள்..
காமதேனுவிற்கு நந்தினி, பட்டி - என, இரு மகள்கள்..
காமதேனு சிவ வழிபாடு செய்தது போலவே நந்தினியும் பட்டியும் சிவ வழிபாடு செய்திருக்கின்றனர்..
பசுக்களின் அருட் கொடையால் அவற்றை கோதனம் என்று சிறப்பிக்கின்றனர் சமய ஆச்சார்யர்கள்
கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசயமங்கையே.. 3/17/2
இந்தத் தலத்தில்
இருந்து திவ்ய தேசமாகிய திரு ஆதனூர் 3 கிமீ.. தொலைவில் உள்ளது..
கோதனத்தில் ஐந்தாடி (கடுவாய்க்கரைபுத்தூர்) 5/62/4 என்கின்றார் திருநாவுக்கரசர்..
கோதனங்களின் பால் கறந்தாட்டக் கோல வெண்மணற் சிவன் தன் மேற்சென்ற (திருப்புன்கூர்) 7/55/3 என்கின்றார் சுந்தரர்..
வசிஷ்ட மகரிஷியின் வழிபாட்டிற்கு நந்தினி உறுதுணையாக இருந்திருக்கின்றாள்..
வசிஷ்டர் வழிபட்ட தலங்கள் அனைத்திலுமே நந்தினியின் பங்களிப்பு உள்ளதென்பது தெளிவு..
வசிஷ்டர் வழிபட்ட தலங்கள் தஞ்சை நகரில் கரந்தை, தஞ்சைக்கு அருகில் தென்குடித்திட்டை..
பட்டியும் காமதேனுவும் வழிபட்ட தலங்களில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டீச்சரமும் கோவை பேரூர் பட்டீச்சரமும் முக்கியமானவை..
காமதேனு வம்சத்தைப் போலவே அதன் வழி வந்த பசுக்களும் சிவ வழிபாடு செய்த திருத்தலங்கள் பற்பல.
நான்கு திசைகளிலும் காமதேனு பசுக்கள் விளங்குகின்றன..
கிழக்கில் சௌபாரதி, தெற்கில் ஹம்சிகா, மேற்கில் சுபத்ரா மற்றும் வடக்கில் தேனு..
காமதேனுவிற்கு சுரபி என, இன்னொரு பெயர்..
காமதேனுவுடன் சுசீலை என்று ஒரு பசுவும் உண்டு..
ஸ்ரீ கிருஷ்ணர் சுரபி என்ற பசுவையும் மனோரதா என்ற கன்றையும் உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகின்றது..
ஸ்ரீ
பரமசிவன் திருமுடிக்கு அபிஷேகஞ் செய்ய யோக்கியமான பால் முதலான திரவியங்களைக் கொடுக்கின்றதே அன்றியும் திருவெண்ணீற்றின் காரணமான திரவியம் பிறப்பதற்கும் இடமாக இருக்கின்றதே அன்றியும் நான்கு வேதமும் கால்களாகவும் கருமமும் ஞானமும் கண்களாகவும் ஆகமங்களும் சாத்திரங்களும் கொம்புகளாகவும் தருமமே உடலாகவும், தவமே நடையாகவுங் கொண்டு பரமேசுவரனுக்கு வாகனமாக விளங்கிய தரும இடபத்துக்கு இனமாகவும் இருக்கின்றதே இப்படிப்பட்ட மேன்மையுள்ள பசுவை ஐயறிவுடைய மிருக வர்க்கத்துள் ஒன்றென்று சொல்லப்படுமோ?..
- என்று வள்ளலார் பெருமான் போற்றுகின்றார்..
காமதேனுவும்
பசுக்களும் அறத்திற்கும் மனித தர்மத்திற்கும் ஆதாரமானவை..
இவற்றைக் கொண்டே தேவ, பித்ரு, பிரம்ம (ரிஷி), மனுஷ்ய, பூத யக்ஞங்கள் நிகழ்கின்றன..
தேவ யக்ஞம்:
வேதங்கள் ஓதி வேள்வி வளர்த்து இறைவனையும் தேவர்களையும் மகிழ்விப்பது..
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது..
பிரம்ம/ ரிஷி யக்ஞம் :
மகான்களின் ஞான நூல்களைக் கேட்டல், படித்தல், சிந்தித்தல்.. அவற்றின் வழி நடத்தல்..
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. 391
பித்ரு யக்ஞம்:
நமது மூதாதையர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பது..
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43
மனுஷ்ய யக்ஞம்:
விருந்தோம்புவது,
எளியோர்க்கு உதவுவது..
வீட்டிற்கு வருபவர்களுக்கு இடம் அளித்தல் அமுது படைத்தல்..
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். 84
வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங் குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221
பூத யக்ஞம்:
நம்முடன் வாழ்கின்ற (பசு, காகம், மீன், மரம் போன்ற) உயிரினங்களுக்கு உணவு அளித்தல்..
மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப தன்னுயி ரஞ்சும் வினை. 244
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322
இப்படியான
அறங்கள் நிகழ்வதற்கு பூசனைகள் நடைபெற வேண்டும்.. ஆனால்,
வானம் வற்றாமல் வழங்குவதற்கு தானம் தவம் ஆகிய இரண்டும் நம்மிடையே தங்கியிருக்க வேண்டும் என்கின்றார்.. (குறள் 19)
அதற்கு எந்த விதத்திலும் அறம் வழுவாதிருத்தல் வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.. (குறள் 32)
இன்றைய சூழலில்
இதுவே நமது குறிக்கோளாக இருக்கட்டும்..
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
சிறப்பான பதிவு. சில தகவல்கள் புதிதாக தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
காமதேனு, பணுக்கள் சம்பந்தப்பட்ட பதிவு சிறப்பு. ஆண்டளக்கும் ஐயன் கோவில் கருவறை படம் எப்படிக் கிடைத்தது?
பதிலளிநீக்குஅன்பின் நெல்லை
நீக்குதங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
ஆண்டளக்கும் ஐயனின் படம் இணையத்தில் இருந்து பெறப்பட்டது..
நன்றி..
ஓம் நமசிவாய
பதிலளிநீக்குவாழ்க வையகம்
வாழ்க வையகம்..
நீக்குமகிழ்ச்சி.. நன்றி ஜி..
காமதேனு மகள்கள் நந்தினி,பட்டி, பற்றி இப்பொழுதுதான் அறிந்து கொண்டோம்.
பதிலளிநீக்குசிறுவயதில் கோவில்களுக்கு சென்றால் இறை வழிபாட்டுக்குப் பின் வாகன சாலைக்கு அழைத்துச் சென்று இக் கோவிலில் காமதேனு வாகனம் இருக்கிறதா? எனப் பார்த்து வணங்கும் பழக்கத்தை எனது பெற்றோர்கள் அறிமுகப் படுத்தியதை இப்போது எனது மனம் நினைவு கொள்கிறது.
நல்லதோர் பகிர்வு.
/// வாகன சாலைக்கு அழைத்துச் சென்று இக் கோவிலில் காமதேனு வாகனம் இருக்கிறதா? எனப் பார்த்து வணங்கும் பழக்கத்தை எனது பெற்றோர்கள் அறிமுகப் படுத்தியதை///
நீக்குவணக்கத்துக்கு உரிய வர்கள்..
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி மாதேவி..
அருமையான பதிவு. அனைத்து செய்திகளும் அருமை.
பதிலளிநீக்குகாமதேனு மற்றும் தெய்வ பசுக்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் நன்று.
பதிலளிநீக்கு