நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், மார்ச் 13, 2024

தீர்த்தம் 2

  

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மாசி 30
புதன் கிழமை

2022

2022
திரு ஐயாற்றுக் காவிரியும் அருகில் குடமுருட்டியும் தை அமாவாசை அன்று பாலையாய் வறண்டு கிடக்க - 

தஞ்சை வெண்ணாற்றிலும் வெட்டாற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது..

பாலையாய் வறண்டு கிடந்த காவிரிக்குள் மதுப் புட்டிகள் ஏராளமாக கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது..

திரு ஐயாற்றுக் காவிரியின் தென்கரையில் குப்பை மேடுகள்... அவற்றின் கீழே  இருநூறு அடி நீளத்துக்குத் தேங்கிக் கிடந்தது தண்ணீர்... 

அதில் உருண்டு புரண்டு எழுந்து தான் ஆயிரக்கணக்கில் மக்கள் முன்னோர்க்கான தர்ப்பணம் கொடுத்தனர்.. அவர்களுள் அடியேனும் ஒருவன்..

இது சரியா தவறா?..
புண்ணியமா பாவமா?..
யாரைச் சேரும்??..
 
சரி... பதிவுக்கு வருவோம்..

தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெரிய கோயில் சிவகங்கைப் பூங்கா எனப்படும் (நந்தவன) குளத்தின் தெற்குப் புறம் தான் உள்ளது.. இது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாது..

இங்கே தீர்த்தமாடுதல் இயலாது.. 

2017
சிவகங்கைக் குளம் 2017
இரண்டாம் சரபோஜி மன்னர் - வெளிநாட்டில்  இருந்து வந்து தனக்கு வைத்தியம் செய்த மருத்துவருக்கு
இக்குளக்கரையில்
வழிபாட்டு இடம் அமைத்துக் கொள்ள  அனுமதி அளித்தார்.. அதன் பேரில் எழுந்த கட்டிடங்களால் இன்றைக்கு பெரியகோயில் தீர்த்தவாரி எனில் காவல் துறையில் முன் அனுமதி பெற வேண்டும்.. 

சில ஆண்டுகளுக்கு முன் நேரில் நான் கண்டிருக்கின்றேன்.. நூற்றுக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பிற்கு நிற்க - ஸ்ரீ சந்திரசேகரர் ஸ்ரீ நடராஜர் - என,  இருமுறை அஸ்திர தேவருக்கு நீராட்டு நடத்தப்பெறும்.. 

உற்சவத் திருமேனிகள் குளக்கரைக்கு வர இயலாது.. நாதஸ்வர சிவ கயிலாய வாத்தியங்கள் வெளியில் தான் இசைக்கப்பட வேண்டும் என்றெல்லாம் இருக்கின்றன..

இந்த வருடம் எப்படியோ தெரியவில்லை..
உடல்நிலை காரணமாக இரண்டு ஆண்டுகளாக கலந்து கொள்ள முடியவில்லை.. 

தஞ்சை ஸ்ரீ கொங்கணேஸ்வரர் கோயிலில் கமல தீர்த்தம்.. இது பின்னாளில் நாயக்க மன்னர் காலத்தில் கோவிந்த தீட்சிதர் திருப்பணி செய்தபின் ஐயன் குளம் என்றாகி விட்டது.. இப்போது  சீரமைப்புடன் சுற்றிலும் அடைக்கப்பட்டு விட்டது..

தஞ்சை மகா மயானத்தின் ஈசானிய திக்கில் உள்ள ஸ்ரீ அமிர்தவல்லி உடனாகிய ஸ்ரீ சிதானந்தேஸ்வர் கோயில் திருக்குளம் அமிர்த தீர்த்தம்.. அம்பிகைக்கு எதிரில் அமைந்திருக்கின்றது

இதன் இன்றைய நிலை சொல்லுதற்கு இல்லை.. தஞ்சை மாமணிக்கோயில் நீலமேகப்பெருமாளுக்கு இங்கு தான் தீர்த்தவாரி..

தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் வெண்ணாற்றின் வடகரையில் உள்ளது ஸ்ரீ சுகந்த குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தளிகேஸ்வரர் திருக்கோயில்..

தஞ்சையில்  எதிரே குளத்துடன் அமைந்திருக்கும் கோயில்களில் இது இரண்டாவது...

சிறிய குளம் தான்.. உள்ளே நடைமேடையுடன் சுற்றிலும் விளக்கு மாடங்கள் அமையப் பெற்றது.. 

பொருளாதாரப் பிரச்னையால் பல வருடங்கள் தொடர்கின்ற திருப்பணி.. பார்க்கலாம் இனிமேல் எப்படி  ஆகின்றது என்று..

தஞ்சை கரந்தை ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்  கோயில் திருக்குளத்திற்கு வடவாற்றில் இருந்து நீர் வருகின்ற வழியை சிவனடியார் திருக் கூட்டத்தினர் மீட்டெடுத்துக் கொடுத்தனர்.. இப்போது குளமும் குளக்கரையும் சீரமைப்பு பாதுகாப்பு என அடைக்கப்பட்டு விட்டது.. 

இக்குளத்தின் வடகரையில் உள்ள திருநீலகண்டர்
திரு மடத்திற்கு  தை மாத விசாக நாளில்  - ரிஷப வாகனத்தில் அம்பிகையுடன் ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர்  எழுந்தருளி திருநீலகண்ட குயவனார் தம்பதியர்க்கு முக்தியளிப்பார்..

தஞ்சை கரந்தையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் இக் குளமும்  அம்பிகைக்கு எதிரில்..

இந்தக் குளத்தை ஆக்ரமிப்புகளில் இருந்து மீட்டு
இருபுறங்கள் மட்டும் அடைக்கப்பட்டு இருக்கின்றது.. மறுபுறங்களில் என்ன என்று நேரில் பார்த்தால் தான் விளங்கும்..

தஞ்சை வெண்ணாற்றின் வடகரையில் இரண்டு பக்கமும் படித்துறைகள்.. பராமரிக்கப்படாததால் பாழாகி விட்டன..

அப்பகுதியினர் அவர்கள் பங்கிற்கு குப்பைக் கழிவுகளைக் கொட்டி படித்துறைகளை சீரழித்து விட்டனர்..

தஞ்சை புன்னை நல்லூர் மாரியம்மன் திருக்கோயில்  திருக்குளம்.. பொதுவாய் இருந்த குளம்.. மூன்று புறங்களும் அடைக்கப்பட்டு ஒருபுறத்தில் மட்டும் வழித்தடம்.. ஆனாலும் பாசி பிடித்துக் கிடைக்கின்றது..



மக்கள் காலகாலமாகக் குளித்துக் கொண்டு இருந்த குளத்தின் படித்துறைகளில் - முறையான கவனிப்பு குறைந்ததால்  பாசி பிடித்து விட்டது.. தண்ணீர் வருவதற்கும் வடிவதற்குமான வழிகள் இப்போது இல்லை என்று பேசிக் கொள்கின்றார்கள்..

தற்போது கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.. பார்க்கலாம் என்ன ஆகின்றது என்று..


மக்கள் நீராடி பாவங்களைக் கழிப்பதற்கென்றே திருக்குடந்தையில் மகாமக, பொற்றாமரைத் திருக்குளங்கள்..


வயதானவர்கள் உடல் நடுக்கமுற்றவர்கள் இறங்கி நீராடுவது சிரமம்.. 

(கிழடுகளுக்கு இங்கே என்ன வேலை ?.. என்கின்றீர்களா.. அதுவும் சரி தான்..)

மயிலாடுதுறையில் ரிஷப தீர்த்த திருக்குளம்.. சுற்றிலும் அடைக்கப்பட்டிருக்கும்..



வைத்தீஸ்வரன் கோயிலில் சித்தாமிர்தத் திருக்குளம்.. இங்கே மக்கள் நீராடலாம்.. எனினும் இப்போது திருப்பணிக்குப் பின் ஏகப்பட்ட கெடுபிடிகள்.. அவசியம் வேண்டும்..


சம்பந்தருக்கு அம்பிகை ஞானப் பால் ஊட்டியது சீர்காழி பிரம்ம தீர்த்தக் கரையில் தானே!..

திரு விண்ணகர் ஆகிய ஒப்பிலியப்பன் கோயில் அகோராத்ர தீர்த்தத்தில் எப்போதும் நீராடலாம்...

திருக்கோயில்களின் குளங்களில்  பெரும்பாலான மக்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவில்லை.. அடைத்து வைப்பது நல்லது தான்.. 

அதே சமயம் அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு கோயில் குளத்தில் நீராட முடியவில்லை என்ற குறை ..

திரு ஐயாற்று காவிரியில் - சோசியர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு நடக்கிற மக்கள் விட்டுச் சென்ற துணிகளை முட்டாக குவித்துப் போட்டு அதில் தீயிட்டுக் கொண்டிருந்தனர்..

நீரும் ஆறும் புனிதமானவை..
அவற்றைப் பாதுகாப்பதே புண்ணியம்..

இறைவனே இயற்கை
இயற்கையே இறைவன்..
 
கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடினாலும் அரனுக்கு அன்பில்லையேல்
ஓடு நீரினை ஓட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே.. 5/99/9
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

9 கருத்துகள்:

  1. நல்லதொரு கணக்கெடுப்பு. எல்லா ஊர்களிலும் ஒவ்வொரு இடங்களிலும் இவற்றைப் பராமரிப்பதில் ஒரு அலட்சியம் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ இந்த அளவில் பேசிக் கொண்டு இருக்க வேண்டியது தான்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ...

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. நல்ல தொகுப்பாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை பகிர்ந்திருப்பதற்கு மிக்க நன்றி. நானும் படித்து தெரிந்து கொண்டேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு


  3. திருக்குளம் விவரங்கள் நன்றாக சொன்னீர்கள்.

    திருக்குளம் சீர் அமைக்கப்பட்டாலும் தண்ணீர் வரும் வழிகள் அடைபட்டு இருக்கிறது சில இடங்களில்.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல வருடங்களாக
      பராமரிப்பு இல்லை..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ...

      நீக்கு
  4. திருக்குள விவரங்கள் அறிந்தேன். தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஓ! இப்படி ஒரு திருக்குளம் இருக்கிறது இல்லையா. தகவல்கள் எல்லாம் அருமை. இப்படியான கோவில் குளங்கள் பராமரிக்கப்பட்டு அதனை அடைய வேண்டிய நீர் வரும் பகுதிகளும் பராமரிக்கப்பட்டால் எவ்வளவு நல்லது. தண்ணீர்ப்பஞ்சம் என்பதே இருக்காதே. எல்லா தீர்த்தங்கள் பற்றியும் அறிய முடிந்தது.

    பொதுவாகக் கேரளத்தில் கோயில் குளங்களில் யாரும் குளிக்க அனுமதி இல்லை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல தகவல்கள்.

    தீர்த்தக் குளங்கள் மக்களின் அறிவின்மையால் பாழாகிப் போய்விட்டன. அதனால் பல இடங்களிலும் பாதுகாக்க அடைப்பு போட வேண்டி வந்துள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..