நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 7
சனிக்கிழமை
ஸ்ரீ வைகுந்த ஏகாதசி
குறளமுதம்
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.. 16
**
ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை
கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்.. 7
**
ஆனைச் சாத்தன் எனும் வலியன் குருவிகளுடன் ஏனைய பறவைகளும் சேர்ந்து எழுப்புகின்ற கூச்சல்கள் உனக்குக் கேட்கவில்லையா.. பேய்ப் பெண்ணே!..
நறுங்கூந்தல் ஆய்ச்சியர் தயிர் கடைகின்ற ஓசையுடன் அவர்களது தாலியும் ஆபரணங்களும் எழுப்புகின்ற ஒலி கூட உனக்குக் கேட்க வில்லையா?..
எமக்குத் தலைவியானவளே!.. நாராயணா கேசவா என்று கண்ணனை நாங்கள் பாடிக் கொண்டிருக்க, நீ இன்னும் உறங்கிக் கிடக்கின்றனயே..
மின்னும் முகத்தினளே.. எழுந்து வந்து கதவைத் திறப்பாயாக!..
**
திருப்பாசுரம்
கங்கையிற் புனித மாய காவிரி நடுவு பாட்டு
பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழி லரங்கந் தன்னுள்
எங்கள்மால் இறைவ னீசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்
எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையே னேழை யேனே!.. 894
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**
சிவதரிசனம்
திருத்தாண்டகம்
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6/ 23/1
-: திருநாவுக்கரசர் :-
**
திருப்பள்ளியெழுச்சி
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 7
-: மாணிக்கவாசகர் :-
**
திருவெம்பாவை
திருப்பாடல்கள் 11 - 12
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்ப அரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.. 12
-: மாணிக்கவாசகர் :-
**
தொகுப்பிற்குத் துணை
நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***
படித்தேன், ரசித்தேன்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்..
அனைத்தும் அருமை. பாடல்களிய பாடி இறைவனை வேண்டி கொண்டேன், மார்கழி பதிவு அருமை.
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும்
நீக்குகருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ..