நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 23, 2022

வாத்தலையம்மன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
திருவையாறு கும்பகோணம் சாலையில் 11 கி.மீ. தொலைவிலுள்ள ஆடுதுறை ஸ்ரீ குலை வணங்கு நாதர் கோயிலுக்கும் கூடலூர் ஸ்ரீ ஜகத்ரக்ஷகப் பெருமாள் கோயிலுக்கும் நடுவில் அமைந்துள்ள கோயில்..

ஸ்ரீ ஜகத்ரக்ஷகப் பெருமாள் கோயிலின் கும்பாபிஷேகத்தன்று இக்கோயிலுக்கும் சென்றிருந்தேன்..


தஞ்சை மாவட்டத்தில் காவிரி முதலான ஆறுகளில் இருந்து உள்ளூர் பாசனத்திற்கு என்று பிரியும் கால்வாய்களின் தலைப்பில் காவல் நாயகமாக அம்மன், முனீஸ்வரன், வீரன் ஆகியோர் கோயில் கொள்வதுண்டு..

கால்வாய் தலைப்பு என்பதே வாய்த்தலை - வாத்தலை என, மருவி நிற்கின்றது..


ங்கே 
வாத்தலை அம்மன் எனும் பெயர்.. வாத்தலை நாச்சியார் என்றும் வழங்குவதுண்டு..

தொன்மையான திருமேனி.. லிங்க வடிவ கல்லில் புடைப்புச் சிற்பமாக விளங்குகின்றாள் அம்மன்.. 





சந்நிதியின் இருபுறமும் ஸ்ரீ கணபதியும் கந்தனும்..
கீழ்புறத்தில் ஸ்ரீ மதுரை வீரன்.. மேல்புறத்தில் ஸ்ரீ காமாக்ஷி அம்மன்..



வாத்தலை அம்மனின் கோயிலுக்குப் பின்புறம் காவிரி.. எதிரே பரந்து விரிந்த வயல்வெளி..


காவிரியில் தண்ணீர் வந்து விட்டது.. கழனிகள் காத்திருக்கின்றன..

ஒவ்வொரு நாற்றும் அதன் கதிரும் வாத்தலை அம்மனுக்கே அர்ப்பணம்.. 


இக்கழனியைக் கண்களைப் போல காப்பவளும் அவளே..

களத்தில் கதிர்களைக்கட்டு கட்டாகச்
சேர்ப்பவளும் அவளே..

வாத்தலையாள் வரவேணும்
வாரி எல்லாம் தரவேணும்
பூத்தலையாள் புதுநிலவாய்
பொன்னியுடன் வரவேணும்..

காவிரியாள் கருணையிலே
கழனியதில் நிறை வேணும்
முகத்தலையும் குறைநீக்கி
குளுமைதனைத் தரவேணும்..

காற்றலையும் திசையெல்லாம்
கை கூப்பித் தொழவேணும்
சேற்றினிலே நாற்றுகளில்
செழுங்கதிராய் வரவேணும்..

நோய்களையும் வினைகளையும்
நெருங்காமல் விரட்டி விட்டு
நோய் களையும் தாயே நீ
வளர்கலையாய் வரவேணும்..

களைகளையும் கழித்து விட்டு 
கதிர்முகமாய் வரவேணும்
கதிரவனும் கை கொடுத்து
கதிர் உழக்காய் தரவேணும்

சோறதனில் சுகம் அதுவாய்
நின் அருளே வரவேணும்..
பாரதனில் பசி தீர்க்கும்
பணி அதையே தரவேணும்!..
*
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி
ஓம்
***

12 கருத்துகள்:

  1. படங்களும் விவரங்களும் சிறப்பு. அதனினும் சிறப்பு நீண்ட நாட்களுக்குப் பின் இடம்பெற்றிருக்கும் உங்கள் கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  2. பெயர் காரணம், தகவல்கள், படங்கள் என அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி தனபாலன்...

      நீக்கு
  3. வாத்தலை அம்மன் வயல் காவல் தெய்வமாக வீற்றிருக்கிறாள் .இதுபோல இங்கும் எமது இடத்திலிருந்து நான்கு மைல்கள் தள்ளி அம்மன் சுற்றிவர வயல்களுக்கு நடுவே அமர்ந்து காவல் புரிந்து அருள் செய்கிறாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கும் மேலதிக செய்திக்கும் நன்றி..

      நீக்கு
  4. வாத்தலை அம்மன் வயல்களை மட்டும் அல்ல, நம் அனைவரையுமே காத்து அருள்கிறாள். இந்தக் கவிதை மறுபடியும் ஶ்ரீமான் கொத்தமங்கலம் சுப்புவின் பாடல்களை நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இதற்கு முன்பும் இவ்வாறு சொல்லி இருக்கின்றீர்கள்..
      கருத்துரைக்கு நன்றியக்கா..

      நீக்கு
  5. வாத்தலை அம்மன் அனைவரையும் காத்தருள வேண்டும்.
    அம்மன் பெயர் காரணம் அருமை.
    வயல்கள் செழித்தால்தானே அனைவரும் நலம்பெற முடியும்.
    அம்மன் கழனிகளை காக்க வேண்டும்.
    கவிதை அருமை.
    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..