நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஜூலை 02, 2019

அத்தி வரதன்


ஸ்ரீ அத்தி வரதப் பெருமாள் - ஓவியம் சிற்பி 
கரை ஏற்றும் பெருமாளை
கரை ஏற்றி வைத்தார்...
மறை போற்றும் நாயகனும்
குறை தீர்க்க வந்தான்...

கடைத்தேற்றும் பதங்காண
கதி காட்டும் கரங்காண
மடை கடந்த நதிபோல மனந்தான்...
மனம் கேட்பதுவும் நல்லதொரு வரந்தான்...


வெண்சங்கின் ஒலி கேட்டு
வேதனைகள் தீரட்டும்..
பொன்னாழி ஒளி கண்டு
காரிருளும் விலகட்டும்...

காரிருளைத் தீர்க்க வந்த
கதிர் முகத்தான் வாழ்க..
பேரருளைப் பொழிய வந்த
அருளாளன் வாழ்க...


நீரின்றித் தவிக்கின்ற தமிழகத்தைக் காப்பாய்..
நீயின்றித் துணையில்லை நிம்மதியைச் சேர்ப்பாய்..
நீ கொண்ட விழியாலே நீசர்களைப் பார்ப்பாய்..
நீ நின்று பகை வென்று பாவியரைத் தீர்ப்பாய்..



நாற்பத்து ஆண்டுகளாய் அத்தி வரதா
நன்னீரில் கிடந்தனையே அத்திவரதா
திசையெட்டும் கூடினதே அத்தி வரதா
திருவருளும் பொழிந்திடுவாய் அத்தி வரதா...

செடி கொடியும் வாடுதையா அத்தி வரதா..
மாடு கன்று உருகுதையா அத்தி வரதா..
ஓடு அகன்ற ஆமைபோல அத்தி வரதா
ஊர்முழுதும் ஆனதையா அத்திவரதா!...

நிலங் கொண்ட நீர் கெடுத்து அத்தி வரதா
நெஞ்சு இறுகி நின்றாரை அத்தி வரதா
பதராகச் சிதறடிப்பாய் அத்தி வரதா
பதங்கொண்டு மிதித்தழிப்பாய் அத்தி வரதா...


நீரானைக் கனலானை நெடிதாகி நின்றானை
நீருக்குள் நிலந்தழுவி நித்திலமாக் கிடந்தானை
ஓரானை குரல் கேட்டு உடனோடி வந்தானை
காரானை தனைவீழ்த்தி பகைதீர்த்து நின்றானை
அன்னவனை என்னவனை எனையாளும் மன்னவனை
நான் தேடிக் கைதொழவும் இயலாதோ இந்த
மனந்தன்னைத் தானறிந்து தண்ணருளும் தான்
பொழிந்து நல்லமுதாய் ஓர்வரமும் அருளாதோ...

அத்தி வரதன் அடிமலர்கள் போற்றி

ஓம் ஹரி ஓம் 
ஃஃஃ

14 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    படிக்கும்போது கவிவரிகள் உங்கள் படைப்பு என்று தெரிகிறது. சரிதானே? மிக நன்றாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      அத்திவரதரைப் பற்றி ஆளாளுக்கு ஒரு சேதி சொல்லும் ஊடகங்களைப் போல் அல்லாமல் நாமாக எழுதுவோமே.. என்று எழுதினேன்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மூன்றாவது முறை அத்திவரத தரிசனம். என்ன பாக்கியம்! வயதான உடன் வரும் ஞானம் தனக்கென வேண்டாமல் பிறருக்காக -நாட்டுக்காக வேண்டுவது போலும்.

    பதிலளிநீக்கு
  3. அத்தி வரதனுக்கும் அந்தப் பெரியவருக்கும் அன்பின் வணக்கங்கள்...

    பதிலளிநீக்கு
  4. அருமையான தரிசனம். அத்திவரதன் காணொளி, சிற்பி அவர்களின் ஓவியம் அழகு.
    உங்கள் கவிதை அருமை.
    மூன்று முறை தரிசனம் செய்தவர் பாக்கியவான் தான்.
    உலக நன்மைக்காக வேண்டி கொண்டு இருக்கிறார். நாடு நலம் பெற வேண்டும் நல்லோர் பிரார்த்தனைகள் நலம் பயக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மூன்றாவது முறையாக காணும் பெரியவரின் நாட்டுப்பற்றுக்கு எமது இராயல் சல்யூட்

    பதிலளிநீக்கு
  6. அத்திவாரதனை தரிசிக்கும் வாய்ப்பு நமக்கில்லை என்றாலும் அந்த பெரியவரின் மூன்றாம் தரிசனம் மூலமாக நாம் தரிசித்ததாக உணர்வோம்.
    கவிதை வரிகள் அருமை அய்யா...
    நிறைய எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  7. நிறைய காணொளிகளும் (தொலைக்காட்சியில் எடுத்தது இல்லை) படங்களும் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன. என்னவோ உங்களிடம் ஷேர் பண்ணாமல் விட்டுவிட்டேன்.

    உங்கள் வரிகள் அருமை

    பதிலளிநீக்கு
  8. அருமையான படைப்பு! அத்திவரதரைக் குறித்த அரிய தகவல்களை உங்கள் தமிழ் மூலம் அறிய நேர்ந்தது மகிழ்ச்சி. நேற்றுக்காலை அத்திவரதரைத் தரிசனம் செய்ய முடியலை! ஆனால் அதன் பின்னர் தொலைக்காட்சிகள் தயவில் அத்திவரதரை நேற்றும், இன்றும் கண்ணாரக் கண்டேன். நமக்கு அவ்வளவு தான் கொடுப்பினை. இந்தக் கூட்டத்தில் இன்று சிலருக்கு மயக்கமே வந்துவிட்டதாம்! தொலைக்காட்சியில் சொன்னார்கள். அத்திவரதர் தான் காப்பாற்ற வேண்டும் அனைவரையும்.

    பதிலளிநீக்கு
  9. மூன்றாம் முறையாகப் பார்க்கும் பெரியவர் பிரார்த்தனையைப் போல் பூமியெங்கும் மழை பொழிந்து மண் குளிர்ந்து அனைவர் நெஞ்சமும் குளிரப் பிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வரதர் தரிசனம் உங்களின் பா மாலையுடன் மிக அருமை ..

    கடந்த ஒரு வாரமாக இவரின் படங்கள் சுற்றி சுற்றி வருகின்றன ...நேரில் செல்லுவோமா தெரிய வில்லை ...

    அப்பா , அம்மா, அண்ணா அனைவரும் செல்லும் ஆவலில் உள்ளனர் ..அவர்கள் தரிசித்தால் நாங்களும் தரிசித்தது போல் தான் ..

    பதிலளிநீக்கு
  11. அன்பு துரை காட்டிய அத்திவரதன் இன்னும் அருமை.
    ஆமாம் எல்லோரும் எழுதிவிட்டார்கள்.
    ஆனால் துரையின் எழுத்தில் வெள்ளத்தை அணைபோட்ட
    சயன வரதி அருள் மழை
    கவிதையாகப் பொழிகிறது.
    தமிழ் வளம் ,பக்திவளம், மனவளம் எல்லாம்
    அடங்கிய தமிழ்ப் படைப்பு நாட்டில் மழை பொழிய வைக்கட்டும்.

    வரதனின் அபய ஹஸ்தம் அனைவரின் துன்பம் போக்கி வரத ஹஸ்தம்
    நீ நிலைகள் நிரம்ப நாடு செழிக்க அருள் செய்யட்டும்.
    செய்வான் அத்திவரதன்.
    அதுவும் நல்ல மனங்கள் வேண்டும் போது
    நடக்காத காரியம் என்று ஒன்று உண்டோ.
    அன்பு துரை வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. அத்தி வரதருக்கு அழகான பாமாலை சார்த்தி வழிபட்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்தும், வணக்கமும். கடைசி பாடலில் பாசுரத்தின்,குறிப்பாக திருமங்கையாழ்வார் பாசுரத்தின் பாதிப்பு தெரிகிறது.

    மூன்றாம் முறை தரிசனம் செய்யும் பெரியவரையும் வணங்கிகே கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..