நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஏப்ரல் 04, 2019

ஏழூர் தரிசனம் 8

காவிரி ஆற்றில் சிவதரிசனம் செய்தபின்
திருப்பழனம் திருக்கோயிலை நோக்கிப் புறப்பட்டோம்...

திருநெய்த்தானத்தை அடுத்த ஊர் திருஐயாறு.. அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் திருப்பழனம்...

திரு ஐயாற்றிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திங்களூருக்கு முன்பாக திருப்பழனம்...

சாலையின் அருகிலேயே திருக்கோயில்...

சப்தஸ்தானத்தில் இரண்டாவது தலம்...
சந்திரன் வழிபட்ட தலங்களுள் ஒன்று..


கோபுர சுதை சிற்பத்தில்
திருநாவுக்கரசர்
திருப்பழனத்தின் சிறப்புகளுள் ஒன்று அப்பூதியடிகளின் தண்ணீர்ப் பந்தல்..

அந்தக் காலத்தில் - பாழாய்ப் போன அரசியல் வியாதிகள் இல்லாததால்
காவிரியாள் வருடம் முழுதும் கரை புரண்டு ஓடியிருப்பாளே!..

அப்படியே இயற்கையின் இடர் ஏற்பட்டு
வான் பொய்த்திருப்பினும் - தான் பொய்யாது
ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டியிருப்பாளே!...

அத்தகைய காவிரியின் கரை தானே பெருவழிச் சாலை...

நீரோடும் வழியை ஒட்டி தண்ணீர்ப் பந்தல் எதற்கு?...

அது வெறும் தண்ணீர் வழங்கும் பந்தலாக மட்டும் இருக்கவில்லை!...

திங்களூரைச் சேர்ந்த அப்பூதியடிகள் - தான் பெற்ற நலங்களை
தான் தனது குருவாக ஏற்றுக் கொண்ட திருநாவுக்கரசர் பெயரால் -
ஏழை எளியோருடன் பகிர்ந்து கொள்ளும் பந்தலாகவும் இருந்திருக்கிறது...

தண்ணீர்ப் பந்தல் வைத்ததோடு மட்டுமல்லாமல்
சாலைகளும் சோலைகளும் கல்விச்சாலைகளும்
அன்னதான சத்திரங்களும் - என, முடிவிலா அறங்களைப் புரிந்தார்...

அத்தனையும் திருநாவுக்கரசர் பெயரிலேயே!...

அவரது இல்லத்துக்கும் திருநாவுக்கரசு..
அவரது மகன்களுக்கும் திருநாவுக்கரசு.. - என்றால்,
யார் தான் வியப்படைய மாட்டார்கள்?...

திருப்பழனத்தில் இதனைக் கண்ணுற்ற திருநாவுக்கரசர்
இப்படிச் செய்பவர் யார்!.. - என்று வியப்புடன் வினவ,
தண்ணீர்ப் பந்தலின் பணியாட்கள் அளித்த தகவலின்படி
அப்பூதியடிகளைத் தேடிச் செல்ல -

அங்கே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினான் இறைவன்...

திருப்பூந்துருத்தியைப் போலவே - இவ்வூரிலும் சில காலம் தங்கியிருந்து மக்கள் தொண்டாற்றியிருக்கின்றார் - அப்பர் பெருமான்...

அஞ்சிப் போய்க் கலி மெலிய அழலோம்பும் அப்பூதி!...

கலிபுருஷன் அஞ்சி நடுங்கி தலைமறைவாகக் காரணம் -
அப்பூதியடிகள் நல்லறங்களுடன் யாகவேள்விகளை நிகழ்த்துவதுதான்!..

- என்று, தமது திருப்பதிகத்தில் அப்பூதியடிகளைச் சிறப்பிக்கின்றார் அப்பர் பெருமான்...

அத்தகைய பழம்பெருமையுடையது - திருப்பழனம்...




திருக்கோயில் அளவில் பெரியதாக இருந்தாலும்
மற்ற கோயில்களைப் போலவே பராமரிப்பு இன்றி இருக்கின்றது...

கோயிலில் இருந்து பல்லக்குகள் புறப்பட்டு விட்டதால்
கூட்டம் அதிகமில்லாமல் இருந்தது...

பசுபதீஸ்வர ஸ்வாமியை வணங்கியவராக திருநாவுக்கரசர் 
திருநாவுக்கரசர்
பராந்தக சோழருடைய திருப்பணி என்கின்றார்கள்...

ஆனாலும்,
இதில் கவனம் கொள்ளாதவர்களாக இருக்கின்றார்கள்...

ஊரில் குடியிருப்பவர்களால் பெரிதாக என்ன செய்து முடியும்!...


திருவிழா என்று பெரிய பந்தலும் பக்தர்களுக்கு ஓரளவுக்கு வசதியும் செய்திருக்கின்றார்கள்..

கோடைக் காலம் என்பதால் சூடு தெரியாமல் இருப்பதற்காக
கோயில் முழுதும் வைக்கோல் பரப்பி வைத்திருக்கின்றார்கள்...

காலுக்கு இதமாக இருக்கிறது..
அந்த வகையில் மக்கள் பாராட்டுக்குரியவர்களே....




பின்னமடைந்த நந்தியுடன்
சிவலிங்கம் (பிரகாரத்தில்)
 
பழமையான திருக்கோயில்...

திருவையாற்றைப் போலவே -
இங்கும் அம்பிகை கிழக்கு முகமாக விளங்குகின்றாள்...

சப்த ஸ்தானத்தை முன்னிட்டு எல்லா சந்நிதிகளிலும் சிறப்பான அலங்காரங்கள் செய்திருந்தனர்...

அம்பிகையின் திருக்கோயில் 
ஆனாலும் திருக்கோயில் பராமரிப்பு இன்றி இருப்பதைக் காணும்போது
மனம் கலங்குகின்றது...


திருப்பழனம் அமர்ந்த ஐயன் ஸ்ரீ ஆபத்சகாயரும்
அம்பிகை பிரஹன் நாயகியும் தான் திருவுளம் கொள்ளவேண்டும்...


ஆலின்கீழ் அறங்களெல்லாம் அன்றவர்க்கு அருளிச் செய்து
நூலின்கீழ் அவர்கட்கெல்லாம் நுண்பொருளாகி நின்று
காலின்கீழ்க் காலன்தன்னைக் கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யும் ஆனார் பழனத்தென் பரமனாரே...(4/36)
-: திருநாவுக்கரசர் :-


ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

7 கருத்துகள்:

  1. சிறப்பான கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    பராமரிப்பு இன்றி இருக்கும் பழைய கால கோவில்கள் பார்க்கும்போது நெஞ்சில் வலி.

    பதிலளிநீக்கு
  2. குட்மார்னிங்.

    படங்களும் தகவல்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  3. தகவல்கள் நன்று படங்களில் பிள்ளையார் படம் சிறப்பு ஜி

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான தகவல்களுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. பல கோயில்களும் சோழநாட்டில் பராமரிப்பு இல்லாமலே காணப்படுகின்றன. அதிரடி, தீர்க்கதரிசி, தோசைவாலி கூட என்னைப் பழைமையான கோயில்களுக்கே அதிகம் செல்லுவதாகக் கூறி இருந்தார். தேடித் தேடிப் போய்ச் சொன்னாலும் முன்னேற்றம் என்பது இருக்காது! செவிடன் காதில் ஊதிய சங்காகப் போயிடும். திருப்பழனம் போயிருக்கோம், அப்பூதி அடிகள் தயவால்! அவர் திருப்பணி செய்த கோயில் அதுவும் பல்லவர் காலத்துக் கோயிலாக இருக்கும் என்று நினைத்தே போயிட்டு வந்தோம்.

    பதிலளிநீக்கு
  6. திருப்பழனம் தரிசனம் செய்து மகிழ்ந்தேன். படங்கள் எல்லாம் தெளிவாக அழகாய் இருக்கிறது.
    சந்தனக்காப்பு பிள்ளையார் மிக அழகு.

    பதிலளிநீக்கு
  7. திருப்பழன தரிசனம் பெற்றோம்.

    படங்கள் சிறப்பு.

    பிள்ளையார் மிக அழகாக இருக்கிறார்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..