நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், பிப்ரவரி 14, 2019

வாழ்க வளமுடன்..

திருமருகல்.

சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் உள்ள திருவூர்..

சீரும் சிறப்பும் மிக்க அவ்வூரில் பெரும் சிவாலயம் ஒன்று இருந்தது..


இறைவன் - ஸ்ரீ ரத்னேஸ்வரர்
அம்பிகை - வண்டுவார்குழலி
தல விருட்சம் - கல்வாழை
தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம்..

வங்கக் கடல் துறை நோக்கிச் செல்லும் சாலை திருமருகல் வழியே சென்றதனால் - திருக்கோயிலின் அருகே வழிச்செல்வோர் தங்குவதற்கு மடமும் அன்ன சத்திரமும் இருந்தன.

அறமும் மறமும் தழைத்திருந்தது - திருமருகலில்!..

அவனுக்கும் இவளுக்கும் ஒருவருக்கொருவர் திருமணம் செய்து கொள்ளும் உறவு முறை!.. -  என்று இருந்தாலும், 

திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்காமல் இருந்த பண்பாடு தமிழகத்தில் கொடி கட்டிப் பறந்த பொற்காலம்!.. 

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டாதிருந்து தான் - 
திருமாங்கல்ய தாரணம் எனும் மங்கலப் பேற்றினை எய்தவேண்டும்.

அப்படியின்றி - மணம் செய்து கொள்ளும் முன்னரே - மனம் தடுமாறி ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் தீண்டுவது - பெருங்குற்றம் - மகாபாவம் என்பதை அந்த காலத்தின் இளையோர் அறிந்திருந்தனர்..

இப்படியெல்லாம் கட்டுப்பாடும் எல்லாவற்றுக்கும் மேலாக சுய ஒழுக்கமும் மேவியிருந்த காலகட்டம் அது!..

மது உண்டு மயங்கிய வண்டுகளைக் கண்டிருந்தனரே - அன்றி.,
மது உண்டு கிறங்கிய மண்டுகளைக் கண்டதில்லை யாரும்!..

தென்னையும் பனையும் கனத்த குலைகளினால் தவித்திருந்தன!..

இப்படி - மண்ணும் மக்களும் பசுமையுற்றிருந்த நாட்கள் - ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முன்!.. 

திருமருகலின் அருகில் பெருங்கிராமம். 
அங்கே பெரும் செல்வந்தன் ஒருவன். 
அவனுக்குப் பல ஊர்களிலும் வணிக நிலையங்கள் இருந்தன.

நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய -  துறைமுகங்களின் வழியாக பல நாடுகளுக்கும்,

வயதாகி இறந்த யானைகளின் தந்தம், 
இயற்கையாக உதிர்ந்த மயில் தோகை,
இயற்கை எருவில் விளைந்த
உயர்ரகச் செந்நெல்,கார் அரிசி, மாப்பிள்ளைச் சம்பா,
தென்பாண்டிச் சீமையின் வெண்முத்து, 
அரசு அனுமதியுடன் பெறப்பட்ட சந்தனம் மற்றும் செம்மரக் கட்டைகள், 
விவசாயிகளிடம் நல்ல விலை கொடுத்து பெறப்பட்ட ஏலக்காய், கிராம்பு 

- என, பலவிதமான பொருட்களை ஏற்றுமதி செய்தான். 

அவ்வண்ணமே பலநாடுகளில் இருந்தும் நல்ல பொருட்களை அரசு அனுமதி பெற்று முறையான சுங்கத் தீர்வைகளைச் செலுத்தி இறக்குமதி செய்தும் பெரும் வணிகம் செய்து வந்தான்..

அதேசமயம் - 

உண்பவர் உயிருக்கு உலைவைக்கும் நச்சுப்பொருட்களால் செய்யப்பட்ட  உணவு வகைகளை மலிந்த விலைக்கு இறக்குமதி செய்ததில்லை.. 

முச்சந்தியில் ஆடல் பாடல் கும்மாளங்களுடன் விளம்பரம் செய்ததில்லை... மாயாஜால வார்த்தைகளால் அப்பாவி மக்களை ஏமாற்றியதும் இல்லை..

கண்டதையும் மக்கள் தலையில் கட்டி - அதன் மூலம் பணப்பெட்டியை நிரப்பிக் கொள்ளும் மாபாதகத்தை ஒருநாளும் செய்ததே இல்லை..

யாராவது நாக்குக்கு அடிமையாகி - சீனத்திலிருந்தும் யவனத்திலிருந்தும் உணவுப் பண்டங்களை வரவழைத்துத் தரும்படியாகச் சொன்னால் - 

இங்கே விளையுது - கம்பு, கேழ்வரகு, தினை, சோளம், சாமை - அப்படின்னு. அதை வாங்கித் தின்னு நல்லபடியா உடம்பைப் பாத்துக்குங்க!..
அதை விட்டுட்டு.. சீன - யவன சங்கதி எல்லாம் உங்களுக்கெதுக்கு!.. அவன் பாம்பு திங்கின்றான்!.. பல்லி திங்கின்றான்!..

நமக்குக் காளை சாமி சந்நிதியில!...
அவனுக்குக் காளை சமையல் பாத்திரத்தில... 
நாக்குக்கு அடிமையாகி விட்டால்
எதிர்காலத்தில் நாயைக் கூட கொண்டு வருவான்...
அதெல்லாம் உங்களுக்குத் தேவையா!?..

- என்று, இதமாகப் பேசி அனுப்பிவிடுவான்..

அந்த அளவுக்கு நல்ல குணம் படைத்தவன்.. 

ஆனாலும், அந்தஸ்து கௌரவம் - என்பன அவனை ஆட்டிப் படைத்தன.. 

குடும்ப நலத் திட்டங்கள் ஏதும் இல்லாத அந்த காலத்தில் வணிகன் ஏழு பெண் மக்களுக்குத் தந்தையாக இருந்தான்..

இத்தகைய செல்வந்தன் - தன்னுடைய பெண் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன் சகோதரியின் மகனுக்கு மணமுடித்துக் கொடுப்பதாக வாக்களித்து இருந்தான். 

அது பல ஆண்டுகளுக்கு முன்!.. அப்போது வணிகன் - சாதாரணன்!..

இப்போதோ - அவன் வீட்டின் காவல் நாய்க்குக் கூட தங்கச் சங்கிலி!.. 

பட்டு, பொன், வைரம் - என சர்வாலங்காரத்துடன் திகழ்ந்த தன் மகள்களுள் எவரையும் - இன்னும் ஏழையாகவே இருக்கும் தன் சகோதரி மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க அவனுக்கு விருப்பமே இல்லை!..

அதனால், ஒவ்வொரு பெண்ணாக - பொன் பொருளின் வளமை கருதி - பிறருக்கு திருமணம் செய்து வைத்தான். 

வளமை குன்றியதால், இளமை நலம் இருந்தும் உறவினனான மருமகனை மனதிலிருந்தும் உறவு முறையிலிருந்தும் ஒதுக்கி வைத்தான்.

வாக்குத் தவறிய - தகப்பனின் மனப்போக்கினை உணர்ந்தாள் - ஒரு மகள். 

தன் தகப்பன் முன்னரே வாக்கு கொடுத்திருந்தபடிக்கு -  
...மனம் நிறைந்த மாமன் இனியவன்.. இனி அவனே எனக்கு மணாளன்!
- என, மனதில் கொண்டு, பெற்றோர் அறியாதபடி அவனுடன் வீட்டை  விட்டு வெளியேறினாள். 

ஒருவருக்கொருவர் துணையென - நெடுவழிச் செல்லும்போது மாலை மயங்கி இரவாயிற்று. 

திருமருகல் திருக்கோயிலின் அன்ன சத்திரத்தில் இரவு சாப்பாடு. 

பொழுது எப்படி விடியுமோ!.. - என்ற கவலை.. எனினும் வயிறார சாப்பிட்டனர்.

அருகே இருந்த தங்கும் மனையில் இருவரும் தங்கினர்...

தர்ப்பைப் புல் ஒன்றினை நடுவில் அரணாக வைத்து விட்டு இருவரும் ஒருபுறமாகத் துயின்றனர்.

நடந்து வந்த களைப்பில் ஆழ்ந்து தூங்கிய - அந்த இளையோர் நெஞ்சில்...
என்னென்ன கனவுகளோ!.. - யாரறியக்கூடும்!...   

பொழுது புலரும் நேரம்.

சட்டெனத் துடித்து எழுந்தான் அந்த இளைஞன்.. உடன் வந்த காதலாளும் பதறி எழுந்தாள்..

அவனது கால் புறத்தில் - நாகம் ஒன்று படமெடுத்து நின்றிருந்தது - அவனைத் தன் கொடும் பற்களால் தீண்டி விட்டு...

வீறிட்டு அலறினாள் - மங்கை நல்லாள்..

நாகம் தீண்டியதால் -  விஷம் தலைக்கேறிக் கொண்டிருந்த வேளையிலும் - தன்னுடன் வந்த காதலிக்கு - ஏதும் துன்பம் நேரக்கூடாது!.. என, பரிதவித்தான் அந்த இளைஞன்... 

அவனது கண்களில் நீர் வழிந்த வேளையில் வாயிலும் நுரை வழிந்தது..

அடுத்த சில நொடிகளில் -
இறைவா!.. - என்ற வார்த்தையுடன் அவனை விட்டு உயிர் பிரிந்தது.

என்ன செய்வாள் - அந்தப் பேதை!.. 

நீயே என் துணை.. - என, உன்னை அழைத்து வந்து - காலனுக்கு கையளித்து விட்டேனே!.. நீயன்றி இனி எனக்கு வாழ்வு தான் ஏது!.. இனியும் இந்தக் கொடுமையைத் தாங்குவேனோ!..

- எனப் பதறினாள்.. துடித்தாள்... கதறினாள்.. கண்ணீர் வடித்தாள்..

ஒருவரை ஒருவர் மனதில் கொண்டோம். வழித்துணையாய் நடந்து வந்தோம். நாங்கள் செய்த பாவந்தான் என்ன!.. ஏதிலியாக ஆனதுவும் முறையோ!..

முன்அறியாத ஊரில், அரவந்தீண்டி மாண்டு கிடக்கும் அன்பனை -ஆரத்தழுவி

அன்பே!.. - என்று அழுவதற்குக்கூட - உரிமை அற்றவளாக 

- திருக்கோயிலினுள் வீற்றிருக்கும் இறைவனை நோக்கி முறையிட்டுப் புலம்பினாள்...

அத்தான்,... அத்தான்..
என் அத்தான்.. என்னகத்தான்..
இனி எனக்காகத்தான்.. - என்று நான் இறுமாந்து திளைப்பதற்குள்
மண்ணகந்தான் போதுமென விண்ணகத்தான் ஆயினையே!...

இந்த அபலையின் கதறல்  அவள் செய்திருந்த நல்வினையின் பயனாக -  
அதே இரவில் திருத்தல தரிசனத்திற்காக - திருமருகலுக்கு வந்து, 

அருகிலேயே, வேறொரு திருமடத்தில் அடியார்களுடன் எழுந்தருளியிருந்த அந்த ஞானச்செல்வனின் திருச்செவிகளை எட்டியது.


அந்த ஞானச்செல்வன் - திருஞானசம்பந்தப் பெருமான்!..  

இவளது அழுகை ஒலியால் திருமடம் விழித்துக் கொண்டது...

அவளது ஆற்றாமையும் கதறலும் காதுகளில் விழ - ஞானசம்பந்தப் பெருமான் இரக்கங்கொண்டார். 

உடனிருந்த அடியார்கள் ஓடோடிச் சென்றனர். .. வெளியே - நடந்ததை அறிந்து வந்து பெருமானின் திருமுன்பாகக் கூறினர்.

உடனே - தாம் தங்கியிருந்த திருமடத்தினின்று வெளியே வந்தருளினார் ஞானசம்பந்தப் பெருமான். 

ஆற்றாது அழுது கொண்டிருந்த மங்கை நல்லாளின் கண்ணீரைக் கண்டு பெருமான் கழிவிரக்கம் கொண்டார்... 

அதற்குள் ஊர் மக்களும் விஷம் தீண்டிய விஷயம் அறிந்து திரளாகக் கூடிவிட்டனர்...


அஞ்சேல்!.. - என, அபயம் அளித்த பெருமான் - 
திருக்கோயிலைத் திறக்குமாறு அங்கிருந்தோரைப் பணித்தார்...

அந்த அளவில் திருக்கோயிலின் திருக்கதவங்கள் திறக்கப்பட்டன. 


இறைவனின் திருமுன்னிலையில் - மாண்டு கிடந்த  இளைஞனின் உடல் கிடத்தப் பெற்றது.. 

ஒரு கணம் பெருங்கருணையுடன் உற்று நோக்கினார்.. 


ஞானசம்பந்த மூர்த்தியின் திருக்கரங்களில் இருந்த பொற்றாளங்களில் இருந்து நாதமும் பெருமானிடமிருந்து கீதமும் பிறந்தன...

சடையா எனுமால் சரண்நீ எனுமால்
விடையா எனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே!.. (2/18)

- எனத் தொடங்கி திருப்பதிகம் பாடியருளினார். 

திருக்கடைக்காப்பு அருளுவதற்குள்
மாண்டு கிடந்தவன் மீண்டு எழுந்தான்...

உயிர்த்தெழுந்த அன்பனைக் கண்டு அகமும் முகமும் மலர்ந்தாள் - மங்கை.

பேருவகைப் பெருக்கினால் சம்பந்தப்பெருமானின் திருவடிகளில் விழுந்து வணங்கினாள்...

ஆற்றாது அழுத கண்ணீர் ஆனந்தக் கண்ணீரானது!..

பொழுது புலர்ந்து கொண்டிருந்த வேளையில்- 
பெருவணிகன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான்...

தன் பிழை தனை உணர்ந்த வணிகன்
தன்னைப் பொறுத்தருளுமாறு - தலை வணங்கி நின்றான்..

அனைவருக்கும் நல்லுரை வழங்கி வாழ்த்திய - ஞானசம்பந்த மூர்த்தி, 
அடுத்து வந்த நல்ல வேளைதனில் நங்கைக்கும் நம்பிக்கும் இறைவன் சந்நிதியில்  திருமணம் செய்வித்து அருளினார்... 


நிலை தவறாதது அன்பு.. அதிலும்
நெறி தவறாதது காதல்...

அத்தகைய காதலை சான்றோரும் ஆன்றோரும் அங்கீகரித்தே வந்துள்ளனர்..
அதற்கு இறைநெறியும் துணையாகவே இருந்திருக்கின்றது..

நெறி தவறாத அன்பினைத்
தெய்வம் நிறைவேற்றித் தரும்!.. 

- என்பதே திருமருகலின் தல வரலாறு நமக்கு உணர்த்தும் திருக்குறிப்பு..

அப்பர் பெருமானும் திருப்பதிகம் செய்தருளிய இத் திருத்தலம் நாகப்பட்டினத்துக்கு அருகில் நன்னிலம் நாகூர் வழித்தடத்தில் உள்ளது...


பெருகலாம் தவம் பேதைமை தீரலாம்
திருகலாகிய சிந்தை திருத்தலாம்
பருகலாம் பர மாயதோர் ஆனந்தம்
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே.. (5.88)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

21 கருத்துகள்:

  1. குட்மார்னிங். வண்டுகளும், மண்டுகளும்... சூப்பர்!

    பதிலளிநீக்கு
  2. அந்நாட்களில் கோவிலுக்குள் உடலம் அனுமதிக்கப்பட்டது! இந்நாட்களில் தெருவில் இருந்தாலே கதவம் சாத்தி விடுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீவாஞ்சியத்தில் நடை அடைக்கப்படுவதில்லை என்கிறார்கள்...

      நீக்கு
  3. படித்த சம்பவத்தை அழகுற உங்கள் நடையில் வடித்திருக்கிறீர்கள். ரசித்தேன் மிக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. திருமருகல் பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாகச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. இது பற்றிப் படிச்சிருந்தாலும் திருமருகல் இன்னமும் போகலை! ஆனால் இதே போன்ற சம்பவங்கள் மதுரையிலும் சோழ நாட்டுச் சிவத்தலங்களிலேயே இன்னொரு ஊரிலும் (பெயர் மறந்துட்டேன்) நடந்துள்ளது. அருமையாக எழுதி இருக்கீங்க! இப்போத் தான் ஏன் திருமருகல் கூட்டிப் போகலை எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். அது என்னமோ கடற்கரை ஓரச் சிற்றூர்கள், கோயில்கள் என இன்னும் போகலை. அப்படி நான் பார்க்க ஆசைப்படுவனவற்றில் கோடிக்கரைக் குழகரும், திருமறைக்காடும் காவிரிப்பூம்பட்டினமும். எப்போக் கிடைக்குமோ தெரியலை.

    பதிலளிநீக்கு
  6. //திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஏறெடுத்தும் பார்க்காத// - இது எனக்கு சந்தேகமா இருக்கு. ஆனால் கல்கி அவர்கள், சிவகாமியின் செல்வனில் ஒரு காட்சியை மிக அழகாகச் சொல்லியிருப்பார். ஒரு பெண்ணைக் கடந்து அரசன் செல்கிறான். யார் என்ற சந்தேகத்தில் திரும்ப அவன் பார்ப்பதில்லை (அதாவது பெண் எதேச்சயாக கண்ணில் பட்டால் பார்ப்பது தவறில்லை. ஆனால் திரும்ப ஆர்வத்தில் பார்ப்பது தவறு என்ற பண்பாடு)

    பதிலளிநீக்கு
  7. //தீண்டாதிருந்துதான் திருமாங்கல்யம் என்னும் பேற்றை/ - காலையில் எனக்கு சந்தேகம் வரவைத்துவிட்டீர்கள். மாமனாரிடம் செக் செய்தேன். தாலிக்கு அப்புறம்தான் பெண்ணின் கையைப் பிடித்து மாப்பிள்ளையிடம் ஒப்படைப்பது நடக்குமா என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணின் கையைப் பிள்ளை பிடிப்பதே பாணி கிரஹணம் எனப்படும். இதற்குத் தான் முக்கியத்துவமே தவிர்த்துத் தாலி கட்டுவதற்கு இல்லை. தாலி கட்டிய பின்னர் தான் பாணி கிரஹணமே நடக்கும் எனச் சிலப் பெரியோர்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். இப்போல்லாம் ஊஞ்சல் முடிந்து மணமேடைக்கு வரும்போதே பெண்ணின் கையைப் பிடித்துக் கொடுத்து விடுகின்றனர்.

      நீக்கு
    2. கீசா மேடம்... இதை ஒட்டி என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை பிறகு ஒரு முறை சொல்கிறேன். பாணி கிரஹணத்துக்குப் பிறகுதான் கணவன் ஆகிறான். அதுவரை நோ டச்சிங்க் பிஸினெஸ் என்று என் காலத்தில் இருந்தது. ஹா ஹா.

      நீக்கு
  8. இறைவன் முன்னிலையில் இது நடந்திருக்குமா, அதாவது சன்னிதியில்?

    இராமானுசரின் உடலம் திருக்கோவில் சுற்றுக்குள்ளேயே வந்தது என்பதும் கவனிக்கத்தக்கது.

    சமீபத்தில் சக்கரபாணி கோவிலில் தரிசனம் கிடைக்காதோ என்று பதட்டப்படும்படி, கிட்டத்தட்ட காலையிலிருந்து அன்று முழுவதும் நடை சாத்தியிருந்தது (கோவில் வீதியில் ஒருவர் மறைந்ததன் காரணமாக). மாலை 7 மணிவரை எடுக்காததால், அன்று முழுவதும் தரிசனம் கிட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  9. அருமையான திருத்தலம் திருமகல் பற்றிய வர்ணனை மற்றும் கதை அருமை. இப்போதுதான் அறிகிறேன் இந்தக் கதை.

    எனக்கு கடற்கரை, அருவி, ஆறு, காடு என்று அதன் அருகில் அருகில் என்றால் தொட்டடுத்து இருக்கும் இடங்கள், கோயில்கள் ரொம்பப் பிடிக்கும். கண்ணீற்கும் மனதிற்கும் இனிய இயற்கையோடு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. திருமணம் விரைவில் நடைபெற வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களை
    சடையா எனுமால் என்ற பதிகத்தை தினம் படிக்க சொல்வார்கள்.
    அருமையாக இன்று பதிவு செய்து விட்டீர்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. அடுத்தமுறை திருமருகல் செல்லும் போது, செல்கிறேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  12. அந்தக்காலத்தை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீங்க, இனி கனவில்கூட அக்காலத்தைக் காண முடியாது, வாழ்க்கை எங்கேயோ போய் விட்டது, எல்லாமே ரேக் இட் ஈசி ஆகி விட்டது.

    பதிலளிநீக்கு
  13. திருமகல்பற்றி அறிந்து கொண்டேன். கதையும் உங்கள் தமிழில் அருமை. ரசித்தேன் பதிவை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  14. துரை அண்ணா என்னாச்சு. டேஷ் போர்டில் உங்கள் பதிவு இருப்பதைப் பார்த்து வ்ந்தால் இங்கு இல்லை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக.. அது இணையம் ஆனந்தக் கூத்தாடியதால் வந்த வினை....

      நீக்கு
  15. நல்ல கருத்துக்களை சொல்லும் பகிர்வு. இப்பொழுது நடப்பது பார்க்கும் போது வேதனை தான் மிஞ்சுகிறது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..