- : பதிவு எண் 901 :-
***
நேற்றைக்கு முன்தினம் - ஏப்ரல் 22 அன்று உலக முழுதும் -உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் உலக நாள் அனுசரிக்கப்பட்டது...
இந்த நாளை அன்றோடு மறந்து விடுவதா!..
வாழும் நாட்களெல்லாம் சிந்தையில் கொண்டு செயல்பட்டு நிற்பதா?..
அது அவரவர்க்கான சூழ்நிலைதனைப் பொறுத்தது...
ஆனாலும் -
நமது பாரதத்தில் - அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில்,
சைவ நெறியில்
மூவர் பாடியருளியவை என்ற சிறப்புக்குரிய திருத்தலங்கள் 275..
இத்திருத்தலங்கள் அனைத்திலும் -
தல விருட்சங்கள் பெருமையுடன் விளங்குகின்றன..
275 திருத்தலங்களிலும் தலவிருட்சங்களாகத் திகழ்பவை அறுபத்தேழு வகையான தாவரங்கள்..
எளிமையான புற்கள், குறுஞ்செடிகள், நறுமணம் கமழும் பூங்கொடிகள், வேர் முதல் தளிர் வரை மக்களுக்காகும் மரங்கள் ஆகியன தல விருட்சங்களாக விளங்குகின்றன..
இவற்றுள் விஷத் தன்மையுடன் கூடிய மருத்துவ குணமுடைய செடிகளும் உள்ளடக்கம்...
இவ்வளவையும் ஏன் வகுத்து வைத்தார்கள் - சான்றோர்கள்?..
மண்ணுக்கும் மக்களுக்கும் ஆகட்டும்!.. - என்பதால்..
ஒன்றை விட்டு ஒன்று இல்லை!.. - என்பதால்..
நமது வழிபாடு அறுவகைச் சமயம் என்று பேசப்படும் புகழுடையது..
காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம், வைணவம், சைவம் - என்பன..
கணபதியை முழுமுதற்பொருளாகக் கொண்டது - காணாபத்யம்..
குமரனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - கௌமாரம்..
சூரியனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சௌரம்..
சக்தியை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சாக்தம்..
வைகுந்தவாசனை முழுமுதற்பொருளாகக் கொண்டது - வைணவம்..
சிவபெருமானை முழுமுதற்பொருளாகக் கொண்டது - சைவம்..
இந்த ஆறு சமயத்திற்கும் முறையே -
அருகம்புல், கடம்பு, எருக்கு, வேம்பு, துளசி, வில்வம் - எனும் இயற்கைச் செல்வங்கள் உரித்தானவை...
இவை அனைத்துமே மக்களுக்கானவை.. மகத்தானவை..
இந்த தல விருட்சங்கள் வெறும் காட்சிப் பொருள்கள் அல்ல!..
அந்த தலத்திற்கும் அதனை அண்டி நிற்கும் மக்களுக்கும் நன்மை வழங்கக் கூடியவை..
இவற்றைப் பேணிக் காக்கும் பொறுப்பு மக்களுடையது..
ஆனாலும்
அந்த அறத்திலிருந்து மக்கள் விலகி நின்றனர்..
யாதும் அறியாதவராகி மயங்கி நின்றனர்..
இடையில் கொஞ்சம் தடுமாறி விட்டோம்...
மீண்டும் முனைப்புடன் உழைத்தால் பூமிக்கு அணிகலன்களான
இயற்கைச் செல்வங்களை மீட்டெடுத்து விடலாம்...
மரங்களைக் காக்க வேண்டும் என்ற ஆர்வம் பீறிட்டு எழுகின்றது...
நம்மிடம் இல்லாத இயற்கைச் செல்வங்களா!..
நலம் விளைவதற்கு நறுமணம் மட்டும் போதும்!.. - என்பது எத்தனை சிறப்பு!..
மல்லிகை!..
இதற்குத் தான் எத்தனை பெருமை..
இல்லறம் நல்லறமாவதற்கு இதுவே காரணம்!..
தளர்ச்சியும் அயர்ச்சியும் மல்லிகையின் நறுமணத்தால் நீங்குவது நிதர்சனம்..
தமிழ்கூறும் நிலத்தைக் கட்டியாண்ட மூவேந்தர்களும்
தமக்கென ஒரு மலரைக் கொண்டிருந்தனர் என்பது வரலாறு..
பனம்பூ சேரர்க்குரியதாகவும்
ஆத்தி மலர் சோழர்க்குரியதாகவும்
வேப்பம்பூ பாண்டியர்க்குரியதாகவும்
சிறப்பிக்கப்பட்டிருக்கின்றன..
வேம்பின் நிழலில் இருந்தாலே போதும்...
நோய்கள் எல்லாம் ஓடிப் போகும்!..
மா, பலா, வாழை இவற்றோடு பனை தென்னை ஆகியவற்றின்
ஒவ்வொரு அங்குலமும் மக்களுக்காக.. மக்களுக்காகவே!..
வேறெந்த நாட்டினருக்கும் கிடைக்காத பொக்கிஷங்களாக
சிறப்புறு மரங்களும் செடிகொடிகளும் நம் நாட்டில் தழைத்திருக்கின்றன...
மருந்துக்காக என்றாலும் கூட மரத்தை வெட்டக்கூடாது!..
- என்ற பண்பாட்டினைக் கொண்டிருந்தது - தமிழினம்...
பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
இரவலர்க்கு ஈதலை யாயினும் ஈயீர்
கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
நரகத்தில் நிற்றீரோ நாள் எஞ்சினீரே!..
(திருமந்திரம்)
மரஞ்சா மருந்து கொள்ளார் மாந்தர்
உரஞ்சாச் செய்யார் உயர்தவம் வளங்கெட
பொன்னுங் கொள்ளார் மன்னர் நன்னுதல்
நாந்தம் உண்மையின் உளமே அதனால்..
(நற்றிணை/226)
- என்று, கணியன் பூங்குன்றனார் தெளிவுபடக் கூறுகின்றார்...
மரத்திலிருந்து கிடைக்கும் மருந்து உயிரினை காக்கும் ..
- என்றாலும், மரத்தினை அழித்திட வேண்டாம்!..
- என்ற பெருநோக்குடன் நம் முன்னோர்கள்
வாழ்ந்த வாழ்வு நமக்குப் புலனாகின்றது..
நீர்அறம் நன்று நிழல் நன்று தன்இல்லுள்
பார்அறம் நன்று பாத்து உண்பானேல் - பேரறம்
நன்றுதளி சாலை நாட்டல் பெரும்போகம்
ஒன்றுமாம் சால உடன்..
(சிறுபஞ்சமூலம்/61)
நீரும் நிழலும் அவற்றினூடாக சாலையும்
அவற்றின் அருகில் அறம் புரியும் மனிதர்கள் வாழும் வீடும்
இதற்கெல்லாம் நல்லருள் பாலிக்கும் ஈசனின் திருக்கோயிலும்!...
இவையெல்லாம் தானே நமது அடையாளங்களாக இருந்தன!..
நீரும் நன்று நிழலும் நன்று - என்றால்,
அதனுடன் இணைந்த வாழ்வும் நன்று தானே!..
அந்த நல்வாழ்வினை எய்துவதற்கு
இயன்ற வரையில் பாடுபடுவோம்!..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்!..
***
அன்பின் ஜி
பதிலளிநீக்குஇன்று உலகம் இயற்கையின் பலனை நினைக்கத் தொடங்கி விட்டது இதில் நாமும் அடக்கமா ? என்பது ஐயமாகவே உள்ளது.
வாழ்க வையகம்
புகைப்படங்கள் ஆயிரம் க(வி)தை சொல்கின்றது
காணொளி மிகவும் அருமை.
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. இனிய கருத்துரைக்கு நன்றி..
கருத்தும் கார்ட்டூனும் நன்றாக இருந்தன. வேப்பம்பூ படத்தைக் காண்பதற்கே மகிழ்ச்சி. இங்கெல்லாம், நிறைய வேம்பு மரங்களைப் பார்க்கமுடியும். அவற்றை எவ்வளவு அருமையாக வளர்க்கிறார்கள் (கல்ஃப் தேசத்தில்). நம்ம ஊரில் மரங்களின் அருமை அவ்வளவாகத் தெரிவதில்லை.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குநம்மவர்களுக்கு மரங்களின் மீது அக்கறை குறைவு தான்..
இல்லையேல், சென்ற ஆண்டு சென்னையில் வீசிய புயலில் -
விழுந்த மரங்களை அகற்றுவதாகச் சொல்லி நல்ல மரங்களையும் வெட்டித் தள்ளுவார்களா?..
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..
எந்த மரமுமே நல்ல மரம் கெட்ட மரம் என்றில்லையே ஐயா இல்லையா. எல்லாமே இந்த இயற்கையின் இறைவனின் படைப்பில் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை தானே! அப்படியிருந்தும் எல்லா மரங்களையும் வெட்டிச் சாய்த்தார்களே அறிவிலிகள். வியாபார நோக்குடன்! மனம் கனத்தது ஐயா. நெல்லைத் தமிழனும், நீங்கள் சொல்லியிருப்பது போல் நம்மூரில் ம்ரங்களைப் பேணிக் காக்கத் தெரியவில்லை என்பதுதான் உண்மை.
நீக்குகீதா
நம் ஊரிலும் வீடுதோறும் வேம்பும் மாஞ்செடியும் வளர்த்த காலம் உண்டு. சுப காரியங்களுக்கு மாங்கொத்தும், அசுப காரியங்களுக்கு வேப்பங்கொத்த்தும் வாசல் நிலைப்படியின் மேல்புறத்தில் செருகிவைக்கும் பழக்கம் தமிழ்நாட்டில் உண்டுதானே! (2) ஆனால் நகர்ப்புரமாகிவிட்ட வாழ்வில் மா பயிரிட இடம் எது! இரண்டு மூன்று வீட்டுக்கொன்றாக வேப்பமரங்கள் மட்டும் வாசலில் வைக்கும் வழக்கம் இன்னும் இருப்பது சென்னைக்கு வெளியில் வந்தால் காண முடியும். (3) பூச்செடிகளுக்கே இன்று வீட்டில் இடமில்லையே! மரம் வளர்க்க நாம் என்ன செய்வது! இருக்கும் மரங்களை அழிக்காமல் இருக்கவாவது பெருமுயற்சி செய்யவேண்டும்.
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து
அன்புடையீர்..
நீக்குசென்னை சின்னஞ்சிறு ஊராக மரக்கூட்டங்களுக்குள் தான் உருவெடுத்தது.. ஆனால் இன்றைக்கு எப்படியிருக்கின்றது?..
வாழும் முறையினால் மக்கள் வசந்தத்தைத் தொலைத்து விட்டார்கள்.. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை..
கிராமத்தின் அடையாளங்களையே மாற்றி விட்டார்கள்...
இருக்கும் மரங்களைக் காப்பாற்றக்கூட நேரமில்லை.. நெடுஞ்சாலைத் துறை பெயர்த்துப் போட்டு விடுகின்றது..
மாறும் எல்லாம் ஒருநாள் மாறும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வீட்டினைச் சுற்றி மரங்கள் வைத்திருக்கின்றேன் ஐயா
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இயற்கையை எதிர்த்து, இயற்கையை அழித்து மனிதன் வாழத் தலைப்பட்டால் அந்த இயற்கை மனிதனுக்கு பாடம் புகட்டுகிறது. மரங்களைவளர்ப்போம். பூமியைக் காப்போம்.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குஇயற்கை நிச்சயமாகத் தண்டிக்கும்.. அதில் ஐயமில்லை..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
எங்கள் வீட்டின் முன்புறமும் பின் புறமும் சிறிது இடம் உண்டு என் வீட்டைப் பார்க்க வருபவர்கள் அந்த இடங்களை வீட்டை பெரிதாக்காமல் காலியா வைத்திருப்பதை கேட்பார்கள்
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குமுன்புறம் பூந்தோட்டமும் பின்புறத்தில் காய்கறித் தோட்டமும் அமைக்கலாமே!..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அழகான படங்கள், அருமையான காணொளி.
பதிலளிநீக்குவாழ்க வையகம், வாழ்க வளமுடன். மகரிஷி காலை எழுந்தவுடன் பத்து முறை சொல்ல சொல்வார். வையகம் வாழ்ந்தால் நாமும் நலமாய் வாழலாம்.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்..
நீக்குவையகம் வாழ்ந்தால் நாமும் வாழ்ந்த மாதிரி தானே!..
தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் நாம் பிழைப்போம். இல்லையேல் வீழ்ச்சிதான். விரைவில் நாம் அதற்கானத் தண்டனையை அனுபவிப்போம் என்றே தோன்றுகிறது. அருமையான பதிவு! கார்ட்டூன் படங்களும், காணொளியும் சிறப்பு. பயணத்தில் இருந்ததால் வாசிக்க இயலாமல் போனது. மன்னிக்கவும் இதோ விடுபட்ட எல்லாப் பதிவுகளையும் வாசித்து விடுகிறோம்...ஐயா...
பதிலளிநீக்கு