உலக தண்ணீர் நாளை முன்னிட்டு நேற்று வெளியாக வேண்டிய பதிவு..
இணையம் இணையவில்லை...
ஆனாலும் என்ன!..
என்றென்றும் நீரை மதித்து வாழும் சிறப்பினை உடையவர்கள் நாம்!..
அந்தச் சிறப்புடன் இந்தக் கதைக்குள் அழைக்கின்றேன்..
***
இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் வெள்ளந்தி!..
இதோ அருகில் வந்து விட்டோம்!..
கேள்வி கேட்டவன் அந்த நாட்டின் மன்னன்.. மாமன்னன்!..
பதிலுரைத்தவன் அரசவையின் விகடகவி - வெள்ளந்தியான்...
காலையில் சூரியன் எழுந்ததிலிருந்து - இதே பதிலைச் சொல்லிக் கொண்டிருக்கின்றாய்!.. இப்போது சூரியன் இருப்பதோ உச்சியில்!...
அரசே!.. தாங்கள் தூரங்களைக் கடந்தவரில்லை.. அதனால் தான் களைப்பு மேலிடுகின்றது!..
ஓஹோ!.. (அரண்மனைக்கு வா.. உனக்கு இருக்கின்றது பூசை!..)
அரசனின் உள் மனம் கொக்கரித்தது...
ஆனாலும், குதிரைக்கு இப்போதே நாக்கு தள்ளி விட்டது!...
குதிரைக்கு இயலவில்லை எனில் தாங்கள் இறங்கி நடக்கலாமே!..
அரசனின் மனம் கொதித்தது - இந்த வார்த்தைகளைக் கேட்டு..
ஆனாலும் ஒன்றும் செய்வதற்கு இல்லை..
ஏனெனில், அரசன் என்ற அடையாளத்தை இறக்கி வைத்து விட்டு எளியவனாக சென்று கொண்டிருக்கின்றான் - விகடகவியின் விருந்துக்கு ...
மன்னனின் கண்கள் சுரைக்குடுக்கையைத் தேடின..
அதில் தண்ணீர் இருக்கின்றதா?...
இருக்கிறது.. பாவம்.. இந்த வாயில்லா ஜீவனுக்குக் கொடுப்போம்!..
என்று சொல்லியபடி - மீதமாக இருந்த தண்ணீரை குதிரையின் வாய்க்குள் ஊற்றி விட்டான் வெள்ளந்தி....
இப்போது சுரைக்குடுக்கையில் துளி நீர் கூட இல்லை...
இருப்பினும் கலங்காமல் சொன்னான் -
வேண்டுமானால் இன்னும் இரண்டு இலந்தம்பழங்களை வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்களேன்.. உமிழ்நீர் ஊறிக் கொண்டிருக்கும்!..
ம்.. நேரம்.. இதெல்லாம் நேரம்!.. - மன்னனின் மனம் மருகியது..
(உமிழ்நீர் அருந்த உயிர்த் தாகம் தீருமா?.. ஏற்கனவே ஏகப்பட்ட இலந்தம் பழங்களைச் சுவைத்ததால் வாய் முழுதும் ரணமாகிக் கிடக்கின்றது.. இந்த லட்சணத்தில் இன்னும் இரண்டா!?..)
வெள்ளந்தி!.. நீ ஏன் இப்படி நாட்டின் கடைக்கோடியில் இடம் வாங்கியிருக்கின்றாய்!..
என்ன செய்வது அரசே!.. ஊருக்குள் உள்ளதெல்லாம் தான் வலுத்தவர்களின் வகையறாக்களுக்குப் போய் விட்டதே!.. தாங்கள் எளியேனுக்கு அளித்த வெகுமதிகளினால் கடைக்கோடியில் தான் இடம் கிடைத்தது!..
ம்.. இடித்துரைப்பதற்கு ஒன்றும் குறைவில்லை!...
உள்ளதைச் சொன்னேன்!.. அரசே!.. ( இருந்தாலும், தாங்கள் இன்னும் வாரிக் கொடுத்திருந்தால் ஊருக்குள் இடம் வாங்கியிருக்க மாட்டேனா?..)
அங்கென்ன மாளிகையா எழுப்பியிருக்கின்றாய்!..
அதற்கெல்லாம் வழியேது ஐயனே!.. சாதாரண ஓலைக் குடிசைதான்!..
என்னது?.. ஓலைக் குடிசையிலா மன்னனுக்கு விருந்து?..
கொடுக்கக் கூடாது தான்.. ஆனாலும், தாங்கள் தான் இப்போது மன்னன் இல்லையே!..
திடுக்கிட்டான் மன்னன்.. இதெல்லாம் எனக்குத் தேவை தான்!..
நா வறண்டது.. ஒரு குவளை நீருக்காக ஏங்கியது...
கண்ணெதிரே ஆளில்லாப் பொட்டல்.. அருகம்புல் கூட இல்லாமல் விரிந்து கிடந்தது...
இவ்வேளையில் மன்னனின் மனம் சற்றே பின்னோக்கி ஓடியது..
உலக மகா கலையரசிகளின் நாட்டிய நிகழ்வுகளால் மகிழ்ந்திருந்த - அந்த வேளையில் அரக்கப் பரக்க ஓடிவந்து எதிரில் நின்றான் வாயிற்காவலன்...
தூங்கிக் கிடந்த எதிரி துருப்பிடித்த வாளுடன் எழுந்து விட்டானோ!.. - என அயர்ந்தான் தளபதி..
வரிக் கொடுமையை எதிர்த்து மக்கள் கொடி பிடித்து விட்டார்களோ?.. - என, அதிர்ந்தார் அமைச்சர்..
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. அஞ்சவேண்டாம் என்பதைப் போலிருந்தது வாயிற்காவலனின் விண்ணப்பம்..
மகாராஜா!.. வைர வைடூரிய கோமேதகங்களுடன் தூர தேசத்து வணிகர்கள் தங்களைச் சந்திக்க விரும்புகின்றார்கள்!..
இதைக் கேட்டதும் பெருமகிழ்ச்சி கொண்ட மன்னன் நடன மாமணிகளை சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளும்படிச் சொன்னான்..
கண்கவரும் நாட்டிய மாமணிகளை விட -
காடுமலை கடந்து வந்த நவ மாமணிகள் அவனது சிந்தையில் களி நடம் புரிந்தன...
சற்றைக்கெல்லாம் அரசவைக்குள் வணிகர்கள் புன்னகையுடன் வந்தனர்..
வைர வைடூரிய ரத்தினங்கள் பதிக்கப் பெற்ற பொன் நகைகளை
மன்னன் காணத் தந்தனர்...
தகவலறிந்த அரசி ஓடோடி வந்தாள்... அந்த அளவில் வணிகர்கள் கொண்டு வந்திருந்த அத்தனையும் கொள்முதலாகி விட்டன...
எல்லாவற்றினுள்ளும் அந்த நவரத்ன மாலை தலை சிறந்து விளங்கியது!..
இதைப் போல இவ்வுலகில் எவரிடத்தும் இல்லை!.. - வணிகர்கள் பணிவுடன் சொன்னார்கள்...
அப்படியாயின் இது என்னவருக்கே ஆகட்டும்!.. - என்று சொல்லி பூரிப்புடன் கணவனின் கழுத்தில் அணிவித்தாள்...
அரசவையில் இருந்தவர்கள் ஜயகோஷம் எழுப்பினர்..
மன்னன் வாழ்க.. நாடு வாழ்க!..
இப்படியிருந்தால் நாடு எப்படி வாழும்!.. - வெள்ளந்தி மட்டும் முணுமுணுத்துக் கொண்டதை மன்னன் கவனித்தான்...
அன்றையப் பொழுது மன்னனின் நினைவுக்கு வந்ததும்
இனிமேல் நடக்க இருப்பதும் விளங்கி விட்டது..
***
நினைவுகளில் இருந்து விழித்துக் கொண்ட மன்னன் நினைத்தான்...
கண்ணெதிரே இருப்பது காய்ந்து போன ஓலைக் குடில்..
அதற்குள் இருக்கப் போவது பழைய கஞ்சியும் பச்சை மிளகாயும்!..
இதற்கு வலது கால் என்ன!.. இடது கால் என்ன?...
எப்படியோ சமாளித்தவனாக குதிரையிலிருந்து இறங்கினான்....
எதிர் நின்று வரவேற்க யாரொருவரையும் காணோம்!..
அரண்மனையின் யானை பெருங்குரலெடுத்துப் பிளிறி
வரவேற்றதெல்லாம் நினைவுக்கு வந்தது..
என்ன செய்வது?... எல்லாம் தலையெழுத்து... இன்றைக்கு இறைவன் அளந்தது இவ்வளவு தான்!..
வருக.. வருக.. குடிலின் உள்ளே வருக!..
களைப்புடன் மன்னன் - குடிலின் உள்ளே நுழைந்தான்...
முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடு!.. தாகம் கண்களை மறைக்கின்றது..
சற்று நேரம் இருந்து பேசி மகிழ்ந்த பின் விருந்து உண்ணலாமே!..
ஏன்?.. இதுவரைக்கும் பேசியதெல்லாம் போதாதா!.. முதலில் தண்ணீர் கொடு!..
வந்த களைப்பில் உடல் முழுதும் வியர்த்திருக்கின்றது.. இவ்வேளையில் நீர் அருந்தினால் ஜலதோஷம் ஏற்படும்.. சற்றே மயிலிறகு கொண்டு வீசட்டுமா?..
மயிலிறகும் வேண்டாம்.. வெட்டி வேரும் வேண்டாம்.. முதலில் தண்ணீர் கொடு!..
மன்னா.. அதோ அங்கே பாருங்கள்.. அண்டை நாட்டின் எல்லை.. அங்கே எல்லைக் காவல் பூங்காவில் உயர்ந்திருக்கும் பசுமையான மரங்களைப் பாருங்கள்!.. சற்றே அருகில் நமது சுங்கச் சாவடி கண்ணுக்குத் தெரிகின்றதா!.. வெட்ட வெளியாய்.. மொட்டைத் திடலாய்!..
வெள்ளந்தி!.. முதலில் தண்ணீர் கொடு.. குடிப்பதற்கு!..
அரசே.. கோபங் கொள்ளற்க!.. இதோ விருந்துண்ணலாம்.. உங்களுக்காக..
தலை வாழையிலையில் புத்தரிசிப் பொங்கல்,நெய்ப் பணியாரம், தேங்காய்ப் பூரணம், கொழுக்கட்டை, அவல் சர்க்கரை சுழியன், அதிரசம், வரகரிசிப் புட்டு, தேங்காய் தினை கருப்பட்டி உருண்டை, சிறுபருப்பு அடை, பால் பாயசம்.. -
அதெல்லாம் கிடக்கட்டும் தண்ணீர் எங்கே?..
இதோ.. இங்கே!..
நோக்கிய இடத்தில் இருந்ததைக் கண்டு அதிர்ந்தான்!..
என்ன இது?.. - மன்னன் அலறினான்...
என்ன செய்வது மன்னா.. இங்கே தண்ணீர் பற்றாக்குறை..
எனவே, சிறு துளியை பெருவெள்ளமாகக் கொள்ளுதல் வேண்டும்!..
இந்த நவரத்ன மாலை வேண்டுமா?..
இருந்து ஆளும் இந்த நாடு வேண்டுமா?..
இல்லையேல் என்னுடைய உயிர் வேண்டுமா?..
எடுத்துக் கொண்டு ஒரு குவளை நீரைக் கொடு!..
அரசே.. அதெல்லாம் ஒரு சிற்றெறும்பின் தாகத்தைக் கூட தீர்க்காது!..
வேறென்ன தான் வேண்டும்!..
எனக்கொரு வரம் வேண்டும்!..
வரமா?.. என்ன அது?..
நீர்நிலை காக்க வேண்டும்.. நீராதாரம் பெருக்க வேண்டும்!..
மன்னன் அதிர்ந்தான்.. கடைவிழியில் நீர் திரண்டது..
சட்டெனத் திரும்பிய வெள்ளந்தி - ஓலைக் குடிலின் மறுபுறத்திலிருந்து மண்கலயத்தில் குளிர்ந்த நீருடன் வெளிப்பட்டு -
மன்னனின் முன்பாக பணிவுடன் சமர்ப்பித்தான்...
மெய் சிலிர்த்திட திருக்கோயில் பிரசாதத்தினைப் போல்
அந்த மண் கலயத்தை ஏந்தினான் - மன்னன்..
விலாமிச்சை வேருடன் ஏலமும் ஊறித் திளைத்திருந்த குளிர் நீர்
துளித் துளியாக மன்னனின் உயிருடன் கலந்து தாகத்தைத் தணித்தது..
மன்னா.. இதோ.. தங்கள் முன்னிருக்கும் உணவு வகைகள் எல்லாமும் நமது வளநாட்டில் விளைந்தவை தான்!..
ஆனாலும் -
நம் நாடும் வறட்சியினால் சூழப்படுகின்றது...
மழை நீர் தேக்கி வைக்கப்படுவதேயில்லை...
காடு கரைகள் ஏற்றம் பெற்றாலும் ஏரி குளங்கள் தூர் வாரப்படவில்லை..
மாதந்தவறாமல் பெய்யும் மழையும் திரண்டோடி கடலைத் தான் சேர்கின்றது..
இதைத் தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களோ -
தங்களைத் துதித்துப் பாடிக் கொண்டு வீணே வயிறு வளர்க்கின்றனர்...
எதிர்த் திசையைப் பாருங்கள்..
எதற்கும் உதவாத பாலையிலும் பயிர் செய்கின்றனர்..
எல்லாம் நீர் மேலாண்மையினால் தானே!..
தங்களுடைய முன்னோர்கள் செய்த நலன்களைப் போல தாங்களும்
மக்கள் துயர் தீர்த்து மங்காப் புகழ் எய்த வேண்டும் என்பதே ஆவல்!..
மக்கள் நலம் பேண வேண்டாமா..
அரசே!.. மழை வளம் காக்க வேண்டாமா!..
இதை உணர்த்துவதற்காகத் தான் இத்தனை நாடகமும்.. அல்லவா!..
என்னைப் பொறுத்தருளல் வேண்டும்!..
நீர் வாழ்க!..
ஆமாம்.. நீரும் நிலமும் வாழத்தானே வேண்டும்!..
நான் உம்மை வாழ்த்தினேன் - வெள்ளந்தி!..
மன்னா!.. தாங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்..
தங்களால் நீரும் நிலமும் வாழ வேண்டும்!..
இதோ எமது வெகுமதியாய்.. இந்த நவரத்ன மாலை.. ஏற்றுக் கொள்க!..
மன்னா!.. இதெல்லாம் அழகுக்கு மட்டுமே!.. ஆபத்துக்கு உதவாது!..
இருந்தாலும், இந்த நவரத்ன மாலை தங்களிடம் இருப்பதுவே பெருமை!..
பட்டம் பதவி, பெருவிலை ஆரம், கொற்றம் குடை - என,
எல்லாவற்றையும்.. ஒரு துளி நீருக்காக இழக்கத் துணிந்தீர்கள்!..
நீரின் பெருமையை தாங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்..
நல்மணி மாலைகளை நிலவறைக்குள் சேர்த்து வைப்பதனால் அல்ல..
நெல்மணி மாலைகளைக் குதிர்களுக்குள் நிறைப்பதனால் மட்டுமே -
தங்களுடைய புகழ்க்கொடி உயரே பறந்து கொண்டிருக்கும்!...
அகமகிழ்ந்த மன்னன் வெள்ளந்தியை ஆரத் தழுவிக் கொண்டான்..
வாழ்க மன்னன்!.. வாழ்க வளநாடு!.. - என, முழங்கினான் வெள்ளந்தி..
எதிர்வரும் ஆண்டுகளில் -
நீருக்காகப் போராட வேண்டியிருக்கும் என்கின்றனர் - ஆர்வலர்கள்...
இன்றைய நவீன அறிவியலால்
நீரும் நிலமும் பாழானதென்பது உண்மை..
ஆனாலும்,
நீர் நிலைகளைக் காப்பாற்றி -
இயற்கையைப் பேணுதலே அறிவுடைமை.
நீர் காப்போம்!..
நிலம் காப்போம்!..
நீர் உயரட்டும்..
நீருடன் கூடி நிலமும் உயரட்டும்!..
***
அன்பின்ஜி பொருத்தமான வரலாற்று நிகழ்வுகளை கண் முன் நிகழ்த்தி காட்டிய விதம் அழகு.
பதிலளிநீக்குவாழ்க நலம்
அன்பின் ஜி..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வரலாற்று பதிவு மிக அருமை சார்.
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அந்த மன்னனுக்கு அந்த வெள்ளந்தி எளிதாய் உணர்த்தி விட்டார். நம் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தப்போவது யார்? தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்! ஒவ்வொரு வருடமும் மழை பொழியும்போது எத்தனை நீர் வீணாய் கடலில் கலக்கிறது.. இத்தனைக்கும் மற்ற மாநிலங்களின் மழை அளவைவிட தமிழகத்துக்கு மழை அளவு அதிகம் என்று புள்ளி விவரம் சொல்கிறது.
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம்..
நீக்குநாடாள வந்த வந்தவர்களுக்கு இதையெல்லாம் உணர்த்த வேண்டும்!.. - என்பதே கொடுமை..
அரசியல் என்ற போர்வைக்குள் வந்தவர்களால் தானே இந்த நாடு அலங்கோலமாகிப் போனது..
இயற்கை வாரிக் கொடுப்பதைப் பேணிக் காக்கத் தவறி விட்டோம்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வெள்ளந்தி போல சிலர் நமது நாட்டு ஆள்பவர்களை அரசியல்வியாதிகள பாலைவனம் அழைத்து சென்று இப்படி தண்ணி காட்டினா நல்லா இருக்கும் ..உலக நீர் நாளுக்கு மிக சிறப்பான பதிவு
பதிலளிநீக்குஅன்புடையீர்..
நீக்குநமக்கல்லவா தண்ணி காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்!..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
உலக நீர் நிலைக்கு அருமையான பதிவு.
பதிலளிநீக்குநான் நேற்று என் பழைய பதிவிலிருந்து சிறிது எடுத்து முக நூலில் பகிர்ந்தேன்.
வரலாற்று பின்னனியில் நீர்வளத்தை பெருக்கச் சொன்னது அருமை.
நீர்வளம் பெருகட்டும்.
வாழ்க வளமுடன்.
அன்புடையீர்..
நீக்குதங்கள் பதிவையும் வாசித்தேன்.. அருமை..
தாங்கள் சொல்வது போல நீர் வளம் பெருகட்டும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குநீரின்றி அமையாது உலகு என்று படித்திருக்கிறோம்
ஆனால் அந்த நிலையை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்
தேவை விழிப்புணர்வு
அன்புடையீர்..
நீக்குநல்ல மாற்றம் விரைவில் வரும்..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீர் தொட்டதெல்லாம் துலங்குகிறது நண்பரே! நீரைத் தொட்டாலும் துலங்குகிறது. அழகிய கதையால் அரியதொரு உண்மையை மன்னனுக்கு உணர்த்திநீர்கள். பாலைவனத்தில் வசிப்பதால் உங்கள் வார்த்தைகளில் நீர்த் தாகம் நிறையவே தெரிகிறது. அவர்கள் செய்வது போல் நீர் மேலாண்மை இங்கும் செய்தே தீரவேண்டும். இல்லையேல் அடுத்த வருடம் சென்னைக்கு நீர் தர ஏரிகளே இல்லாமல் போகும்.
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா நியூஜெர்சி
அன்புடையீர்..
நீக்குஎல்லாவற்றுக்கும் தாங்களும் நண்பர்களும் அளிக்கும் ஊக்கம் தான் காரணம்..
ஆட்சியாளர்கள் மிகச் சுலபமாக சென்னை துன்புற்ற அந்த நாட்களை மறந்து விட்டார்கள்...
கும்பகர்ணனை மிஞ்சிய தூக்கம்.. என்ன செய்வது?..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
மிக மிக அருமையான பதிவு. ஐயா! அருமையான கதை இதுவரை கேட்டிராத கதை. மன்னனுக்கு மட்டுமா நமக்கும்தான் பாடம்! ஒவ்வொரு துளியும் பொக்கிஷம். ஆம் பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டும். நீர் மேலாண்மை எவ்வளவு அவசியம் என்பதை வலியுறுத்தும் அருமையான பதிவு. இல்லையேல் தமிழ்நாடு பாலைவனமாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை குறிப்பாக சென்னை...
பதிலளிநீக்குகாணொளி வெகு அருமை. இங்கு எவ்வளவு நீர் வீணாகிறது! நல்ல விழிப்புணர்வுப்பதிவு ஐயா...
அன்புடையீர்..
நீக்குவேறு வேறு நிகழ்வுகளால் - சென்னை அன்றைக்கு அடைந்த துயரத்தை மறந்து போனது..
ஆனாலும் என்ன!.. மறுபடி புயல் மழை என்றால் இருக்கவே இருக்கின்றது மறுபடியும் நிவாரணத் தொகை!..
தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..