நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜூன் 09, 2016

சோமாசி மாற நாயனார்

திருஆருர்...


பஞ்ச பூதத் திருத்தலங்களுள் - மண்ணிற்கான திருத்தலம்.. ப்ருத்வி க்ஷேத்ரம்..

ஆழித் தேரோடும் திருத்தலம்...

திருக்கோயில் ஐவேலி.. திருக்குளம் ஐவேலி..

அதோ அங்கே -
செங்கழுநீர்ப் பூக்கள் பூத்துக் கிடக்கும் அந்த ஓடையும் ஐவேலி..

மாலைப் பொழுது மயங்கிக் கொண்டிருக்கும் இனிய வேளை...

ஆரூர் பூங்கோயிலில் அந்தித் திருக்காப்பிற்கான மணி முழங்குகின்றது...

முன்னோ பின்னோ திருஆரூர்க் கோயிலாக் கொண்ட நாளே!..

- என்று அப்பர் ஸ்வாமிகள் வியந்து புகழ்ந்து நின்ற திருமூலத்தானம்!..

காட்சி கொடுத்த நாயகர்
பூங்கோயில் எனப்பட்ட திருமூலத்தானத்தினுள் புற்றிடங்கொண்ட பெருமான்..

தென்புறமாக - வீதிவிடங்கர் சந்நிதி..

முசுகுந்த சக்ரவர்த்தி தேவலோகத்திலிருந்து கொணர்ந்த ஏழு திருமேனிகளுள் முதலாவதானது..

இங்கே நாளும் நாளும் - தேவர்கள் கூடி வந்து மாலைப் பொழுதில் சிவதரிசனம் செய்வதால் - அவர்களை ஒழுங்கு செய்யும் விதமாக நந்தியம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் இலங்குகின்றார்...

அத்தகைய தேவ சந்நிதானத்தில் கோலாகலமாக வழிபாடுகள் நடைபெற்று பிரசாதங்கள் வழங்கப் பெற்றன..

வழிபாடுகளை மிகுந்த பொறுப்புடன் நிறைவேற்றிய சிவாச்சார்யார்கள் - வீதிவிடங்கரின் திருமேனியிலிருந்த பூமாலையை - அகன்ற தாம்பாளத்தில் ஏந்தி வந்து -

அங்கேயிருந்த புண்ணியர் - தம் திருமுகத்தை ஏறிட்டு நோக்கினர்..

அந்தப் புண்ணியர் -

தம்பிரான் தோழர் என்று புகழப் பெற்ற சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்...

தம்மை நோக்கி வந்த சிவாச்சார்யார்களை அன்புடன் நோக்கிய சுந்தரர் திருவாய் மலர்ந்தார்..

ஆரூரர் தம் திருமாலையை - அவர் தம் அன்பராகிய சோமாசி மாறனாருக்கு சூட்டுங்கள்!..

அவ்வண்ணமே - சோமாசி மாறனார்க்கு மாலை மரியாதை செய்யப்பெற்றது..

சோமாசி மாறனார் தம் கண்கள் பனித்தன..

அவரது கரத்தினைப் பற்றியவாறு -

எம்மீது தாம் கொண்டிருக்கும் அன்பிற்கு நிகராக வேறொன்றையும் நான் கண்டிலேன்.. கூறுங்கள்... நான் என்ன செய்ய வேண்டும் தமக்கு!..

சுந்தரர் - அன்புடன் வினவினார்..

ஸ்வாமி!.. என்னுள் ஆவல் ஒன்று உண்டு!.. ஆயினும்...

தயங்காமல் கூறுங்கள்.. அதனை நிறைவேற்றுதல் எனது கடன்!..

எம்பெருமானைக் குறித்து - எளியேன் சோம யாகங்களை நடத்தி வருவதை - மேலோராகிய தாங்கள் அறிவீர்கள்...

நான் மட்டுமல்லாமல் நாடே அறியும்!..

தம் பொருட்டு - ஆரூர் திருவீதி தனில் திருப்பாதங்களைப் பதித்து நடந்த எம்பெருமான் - யாக சாலையில் எழுந்தருளி பூர்ண ஆகுதி பெற்றுக் கொள்வதை - ஒரு முறை - ஒரே ஒரு முறை அடியேன் கண் கொண்டு தரிசிக்க வேண்டும்!..

இவ்வளவு தானா!.. - சுந்தரரின் கண்கள் வியப்பால் விரிந்தன..

எளியேனும் ஆவலும் நிறைவேறக்கூடுமோ?..

கவலை விடுங்கள்.. அழைத்தவர் குரலுக்கு ஆங்கே அருள்பவன் ஆரூரன்!..

எளியேனின் ஆவல் நியாயம் உடையது தானா?..
ஏழையின் குரல் கேட்டு எம்பெருமான் அங்கே எழுந்தருள்வானா?..

மனம் தடுமாற வேண்டாம் மாறனாரே!.. உமது யாக சாலையில் ஆரூர் அமர்ந்த அரசு அல்லியங்கோதையுடன் எழுந்தருள்வான்!.. ஐயம் வேண்டாம்!..

தங்கள் திருவாக்கினைக் கேட்டு எனது மேனி நடுக்குறுகின்றது... அவ்வமயம் தாங்களும் உடனிருந்தருள விழைகின்றேன்...

ஆகட்டும்... அனைத்தும் ஆரூரன் செயல்!..

மேனி நடுங்க - சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளை ஆரத் தழுவி -
அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் - சோமாசி மாறனார்..

சோமாசி மாறனார் - பிறப்பால் அந்தணர்.. நாளும் வழுவா நல்லறத்தினர்..

சிவனடியார்களைக் கண்டால் பணிந்து வணங்கி அவர்களுக்கு அன்னம் பாலிக்கும் பண்பினை உடையவர்..

திருஆரூருக்கு வடக்கே விளங்கும் அம்பர் எனும் திருவூரைச் சேர்ந்தவர்...

சோம யாகம் நிகழ்த்தி ஈசனை வழிபடுவதால் சோமாசி மாறனார் என்று புகழப் பெற்றவர்..

அன்றைய தினம் - வைகாசி ஆயில்யம்...

சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள் - தாம் சொன்ன வண்ணம் காலையிலேயே யாக சாலைக்கு எழுந்தருளினார்..

அன்புடன் அளிக்கப்பட்ட வரவேற்பினை ஏற்றுக் கொண்டு -
அமைக்கப்பட்டிருந்த அலங்கார மேடையில் அமர்ந்து கொண்டார்..

பிரம்மாண்டமான பந்தல்... வெயிலின் வெம்மை தெரியாதவாறு தென்னை ஓலைகளால் வேயப்பட்டிருந்தது..

நான்கு புறமும் வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்த யாக சாலையில்
மலர்ச் சரங்களும் தென்னம்பாளைகளும் பனங்குலைகளும் மாவிலைக் கொத்துகளும் ஈச்சங்குருத்துகளும் பேரழகாகப் பொலிந்திருக்க -
மங்கள வாத்தியங்களில் சுக ராகங்கள் அமுதாக வழிந்து கொண்டிருந்தன..

யாக குண்டத்தில் சுழன்று எரியும் அக்னியுள் - பலவகையான திரவியங்களை வேத மந்த்ரங்களுடன் அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் வேத விற்பன்னர்கள்..

யாகசாலையைச் சுற்றிலும் இன்னார் இவர் என்ற பேதமில்லாமல் - ஊர் மக்கள் கூடியிருந்தனர்..

ஆங்கொரு புறத்தில் யாகம் நிறைவேறியதும் மக்களுக்கு வழங்குதற்காக பலவகையான சித்ரான்னங்களும் தயாராகிக் கொண்டிருந்தன..

பூர்ணாஹூதி வழங்குதற்கு - இன்னும் ஒரு நாழிகை...

சோமாசி மாறனார்க்கும் அவர் தம் இல்லத்தரசிக்கும் இருப்பு கொள்ளவில்லை..

இன்னும் ஸ்வாமியைக் காணவில்லையே!..

பதற்றத்துடன் - சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளை நோக்கினர்...

வந்து விடுவார்!... - விழிகளால் பதிலளித்தார் - சுந்தரர்..

இன்னும் சிறு பொழுதுதான்!..

ஸ்வாமி எழுந்தருள்வதாகத் தெரியவில்லை..

இன்னும் சில நிமிஷங்கள் தான்.. அதற்கு மேல் தாமதிக்க இயலாது!.. தியாகேசராவது.. உமது யாகத்திற்கு வந்து பூர்ணாஹூதி வாங்கிக் கொள்வதாவது!.. அதெல்லாம் நடக்கின்ற காரியமா?.. எந்தக் காலத்தில் நீர் இருக்கின்றீர்?.. யாகத்தை முடித்து விட்டு எமக்கு தட்சணை கொடுக்கின்ற வழியைப் பாரும்!..

யாகத்தை நடத்திக் கொண்டிருந்த வேதியர்கள் - ஏளனமாகக் கூறினர்..

எம்பெருமானே!.. எம்மையும் கை விடலாகுமோ?...

கண்களில் நீர் திரண்டு வந்தது சோமாசி மாறனாருக்கு...

டண்டன.. டண்டன.. டண்..
டண்டன.. டண்டன.. டண்!.. 

டணட்.. டணட்.. டண்..
டணட்.. டணட்.. டண்!..

டண்டன.. டண்டன.. டண்..
டண்டன.. டண்டன.. டண்!.. 

ஒலித்துக் கொண்டிருந்த வேத கோஷங்களையும் மங்கள இசையையும் மீறியதாக காற்றில் கலந்து வந்தது - அந்தப் பறையொலி!..

பறையொலி வந்த திக்கினை -
திடுக்கிட்டு நோக்கினர் - அனைவரும்..

ஈசனின் திருக்கோலம்.. இந்த ஓவியம் எந்தத்
திருக்கோயிலில் உள்ளதென்று தெரியவில்லை.. 
ஆனந்தக் கோலாகலமாக பறையை முழக்கிக் கொண்டு - புலையன்...

நெற்றியில் பளீரெனத் திருநீறு..

பாசி பவழ மணிகளுடன் காட்டுப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையும் பொலிந்திருந்தது அவனது மேனியில்..

கற்றை முடிகளை ஒடுக்கியதாகத் தலைப்பாகை..
இடுப்பில் அழுக்கடைந்த அரையாடை... அதைச் சுற்றி வார்க்கச்சை..

பறை தொங்கிக் கொண்டிருந்த அவனது தோளினில் -
பூணூலும் திகழ்ந்தது அதிசயம்...

ஆனாலும் - அந்தத் தோளினில், நீண்ட தடிக்கம்பு..
அதில் இறந்து போன கன்று ஒன்று கோர்க்கப்பட்டிருந்தது..

அவனுக்கு மிக நெருக்கமாக - அவனது மனைவி...
திருத்தமான முகம்...

உன்னைத் தான் தேடி வந்தேன்!.. - என்பதாக விழிகள் அன்பைப் பொழிந்தன..

அவளது தலையில் - மண் கலயம் ஒன்று...
அதனுள்ளிருந்து - பழங்கள்ளின் புளித்த வாசம் திசையெங்கும் பரவிற்று..

அவளை விட்டுப் பிரியாதவர்களாக - அவளுடைய புத்திர பாக்கியங்கள்!..

வலப்புறம் அந்தப் பிள்ளை.. சற்றே குண்டாக இருந்தது..
கனி ஒன்று - அந்தப் பிள்ளையின் கையில் ..

இடப்புறம் இந்தப் பிள்ளை.. சற்றே மெலிந்திருந்தது..
கோல் ஒன்று - இந்தப் பிள்ளையின் கையில்..

இந்த எளிய குடும்பத்தைச் சுற்றி நான்கு நாய்கள் வேறு...

இவர்களுடன் - உறவு முறை போல சிலர் - கொம்புகளை முழக்கியவாறு!..

நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரர் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்றார்..

தெருவோடு சென்று விடுவார்கள் - என்ற நினைப்புக்கு மாறாக
யாக சாலையை நோக்கி வந்தனர் - திருக்கூட்டத்தினர்...

வேடிக்கை பார்க்க வந்த அனைவரும் திடுக்கிட்டனர்..

யாக சாலையிலிருந்த வேதியர்களின் முகத்தில் வெறுப்பு மண்டியது...

தியாகராஜப் பெருமானுக்காகக் காத்திருந்த சோமாசி மாறனார் -
தன்னை நோக்கி வந்த திருக்கூட்டத்தின் தலைவனை நோக்கினார்..

அந்த முகத்தை முன்பே பார்த்திருப்பதாக உள்மனம் சொல்லிற்று..

அந்த முகத்திலிருந்த திருநீற்றில் மனதைப் பறி கொடுத்தார்...

எல்லாம் சிவனென நின்றாய் போற்றி!...

அப்பர் ஸ்வாமிகளின் திருத்தாண்டகம் நினைவில் முழங்கியது..

சோமாசி மாறனார் தம்மை மறந்தார்... தலைவன் தாளே தலைப்பட்டார்..

இரு கரம் நீட்டி - வரவேண்டும்.. வரவேண்டும்!.. - என, வரவேற்றார்...

இதைப் பார்த்துக் கொண்டிருந்த வேதியர்களின் மனம் வெங்கானலாகக் கொதித்தது...

எல்லாவற்றுக்கும் மேலாக - திருக்கூட்டத்தாரின்
தலைவன் தலைவியின் பாதங்களைப் பணிந்து வணங்கி -
தாம்பூலம் சந்தனம் வழங்கி மகிழ்ந்தார்..

அவருடன் - அவரது மனையாளும் வீழ்ந்து வணங்கினாள்..

தாமும் உடனிருந்து யாகத்தில் பங்கு கொண்டு சிறப்பிக்க வேண்டும்!..

திருக்கூட்டத்தாரிடம் - வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டனர்..

அதைக் கண்டு வேதியர்கள் கடுங்கோபமுற்றனர்..

அந்தணராக இருந்தும் பெருத்த அபச்சாரம் இழைத்து விட்டீர்.. புனிதமான யாகசாலைக்குள் நீசனை அழைத்து வந்து எம்மை அவமதித்து விட்டீர்.. இனி உமக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.. இதற்கு மேல் நீரே உமது யாகத்தை நடத்திக் கொள்ளும்!..

ஆவேசத்துடன் கூக்குரலிட்ட வேதியர்கள் அனைவரும் யாக சாலையில் இருந்து வெளியேறினர்... திரும்பிப் பார்க்காமல் சென்றனர்...

யாகம் நின்று போனதால் ஊர் மக்கள் திகைத்து நின்றனர்..

நடந்ததைக் கண்டு அவர்களுக்கும் கோபம் வந்தது.. ஆனாலும் எதனாலோ கட்டுண்டவர்களாக அசையாமல் நின்று கொண்டிருந்தனர்...

பெரும் பரவசத்துடன் சுந்தரர் - முன்னே வந்தார்..

அதற்குள்ளாக,  சோமாசி மாறனார் மிகுந்த பரவசத்துடன் - யாக அக்னியில் இடுவதற்காக இருந்த புது வஸ்திரங்களையும் பழங்களையும் இனிப்பு வகைகளையும் -  தாம்பாளத்தோடு ஏந்தி வந்து -

திருக்கூட்டத்தாரின் தலைவனிடம் வழங்கினார்..

அந்த விநாடியில் -

பேரொளிப் பிழம்பு பிரகாசமாக வெளிப்பட்டது...

பூத கணங்கள் இசைத்த திருக்கயிலாய வாத்ய முழக்கம் கேட்டது..

எங்கெங்கும் பன்னீர் சாரல் வீசியது..
தேவ துந்துபிகள் முழங்க பூமாரி பொழிந்தது..

தோளில் கிடந்த கன்று - விடை வாகனமாகப் பொலிந்து நின்றது...

அரையாடை - புலித்தோலாக மான் மழுவுடன் ஈசன் எம்பெருமான்!..

அவனருகில் அம்பிகை..
அவள் சுமந்திருந்த கள் கலயம் அமுத கலசமாக!...

ஆனை முகத்துப் பெரும்பிள்ளையும்
அறுமுகத்துத் திருக்குமர வடிவேலனும் அருகருகே!...

துள்ளித் திரிந்த நாய்கள் நான்கும் -
வேத ரூபமாகி ஐயனிடம் அடைக்கலமாகின...


ஹர ஹர மகாதேவ!.. ஹர ஹர மகாதேவ!..

காணக் கிடைக்காத காட்சியினைக் கண்டு இன்புற்றனர் - அனைவரும்..

பேறு பெற்றேன்.. பெறுதற்கரிய பேறு பெற்றேன்!.. இங்ஙனமாகிய பெரும் பேற்றினைப் பெறுதற்கு அருளிய சுந்தரர் பெருமானுக்கு எங்ஙனம் யான் கைம்மாறு செய்வேன்!...

ஆனந்த மழையாக விழிநீர் வழிய - சுந்தரர்க்கு நன்றி கூறினார்...

சோமாசி மாறனார் தம் மனைவியுடன் ஈசன் எம்பெருமானை வலம் வந்து வணங்கினார்...

அந்த அளவில் - அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த வேளையில்,

சோமாசி மாற நாயனாரும் அவரது மனைவியாரும் ஒளி வடிவாகி
முக்தி நலம் பெற்று - இறைவனின் திருவடித் தாமரைகளில் இன்புற்றனர்...

இன்று வைகாசி ஆயில்ய நட்சத்திரம்!..

சோமாசி மாற நாயனார் - திருநட்சத்திரம்...

தமிழ் கூறும் நல்லுகம் - அறுபத்து மூவருள் ஒருவராக -
சோமாசி மாற நாயனாரையும் கொண்டாடி மகிழ்கின்றது..

அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்!..
-: சுந்தரர் :-

திருஆரூருக்கு வடக்கே - பேரளத்தை அடுத்துள்ள பூந்தோட்டம் எனும் ஊருக்கு அருகே உள்ளது அம்பர் எனும் திருத்தலம்..

சோமாசி மாற நாயனார் பிறந்த திருவூர் இதுவே..

இந்தத் தலத்தை அடுத்து ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருவூர் -
திரு அம்பர் மாகாளம்..

ஸ்ரீ மகாகாளியம்மன்
அம்பாசுரன் என்ற அசுரனை அழித்த பின் -
ஸ்ரீ மகாகாளி சிவபூஜை நிகழ்த்திய திருத்தலம் - திரு அம்பர் மாகாளம்..

இங்கே தான் - சோமாசி மாறனார் சோம யாக வைபவம் நடத்தினார்...

அம்பர் மாகாளத்தில் சோமாசி மாற நாயனார் இறைதரிசனம் பெற்ற வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தன்று சோமயாக வேள்வி நடத்தப் பெறுகின்றது..

இன்று நிகழும் திருவிழாவில் உச்சிப் பொழுதில் காட்சி கொடுத்த நாயகர் எனும் திருப்பெயருடன் - யாகசாலைக்கு எழுந்தருளி நலம் நல்கும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது...





சோமாசி மாற நாயனாரும் அவரது மனையாளும்
இந்தப் பதிவினை நேற்றே வழங்கியிருக்க வேண்டும்..
இணைய இணைப்பு சரியில்லாததாதால் தாமதமாயிற்று..

மேலே உள்ள படங்கள் சென்ற ஆண்டில் நிகழ்ந்த திருவிழாவின் காட்சிகள்.. 

கீழே காண்பவை இன்று (9/6) மதியம் நிகழ்ந்த திருவிழாவின் காட்சிகள்!..

Facebook -ல் படங்களை வழங்கிய உழவாரம் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி..

.


சோமாசி மாற நாயனார் - தன் மனையாளுடன்
மிகப் பெரிய விஷயத்தை எளிதாக உணர்த்தும் வைபவம் இது...
ஆன்றோர்களும் சான்றோர்களும் இதனை உணர்ந்து கொள்வர்..

சோமாசி மாற நாயனாரின் நற்பண்பினைக் காட்டும் பெரிய புராணத்தின் திருப்பாடல் இது..

எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பரென்றால்
அத்தன்மையர் தாம்நமை ஆள்பவர் என்றுகொள்வார்
சித்தந்தெளியச் சிவன் அஞ்செழுத்து ஓதுவாய்மை
நித்தம்நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்..  
-: சேக்கிழார் :-  

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்  
*** 

12 கருத்துகள்:

  1. அன்பின் ஜி
    சோமாசி மாற நாயனார் வரலாற்று காவியம் அறியத்தந்தீர்கள் பிரமிப்பான விடயங்கள் வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. சோமாசி மாற‌ நாயனார் வரலாறு பற்றி தந்த விபரங்கள் அருமை! அந்த ஓவியம் மிக அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சோமாசி மாற நாயனார் பற்றி படித்துள்ளேன். இருந்தாலும் உங்கள் பதிவு மூலம் மன நிறைவாக அறிந்துகொண்ட உணர்வு. திருவாரூர் பல முறை சென்றுள்ளேன். அம்பர் என்று நீங்கள் சொல்வது அம்பர் மாகாளம் என்று நினைக்கிறேன். அங்கு சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      சோமாசி மாற நாயனார் பிறந்த திருத்தலம் - அம்பர் எனும் திருவூர்.. இதனை அடுத்துள்ள திருத்தலம் அம்பர் மாகாளம்..

      சோம யாகம் நடைபெற்ற திருத்தலம் அம்பர் மாகாளம்..
      ஈசன் திருக்காட்சி நல்கியதும் இங்கே தான்...

      அவசரமாக பதிவு செய்ததில் சற்றே விவரங்கள் தடைப்பட்டு விட்டன..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. விவரங்களும்
    அதனைச் சொல்லிச் சென்ற விதமும் அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  5. சோமாசி மாற நாயனார் பற்றிய விபரங்களை தங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. அன்பின் கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  6. Dear Sir, very interesting to read. Please clarify if Somasimarar got motcham before Sundarar?

    பதிலளிநீக்கு
  7. யாகசாலையில் நானும் அய்யனை அவர்களுடன் வழிபட்ட மகிழ்ச்சி😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..