நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 17, 2016

திருமண அழைப்பிதழ்

முதல் வணக்கம்  - விநாயகப் பெருமானுக்கு!.. 

சில திருக்கோயில்களில் - வெளியே தீர்த்தக் கரை விநாயகராக இருப்பார்...

சில திருக்கோயில்களில் - மூலஸ்தானத்தில் விளங்கும் சிவபெருமானை நோக்கியபடி ஸ்தல விநாயகராக எழுந்தருளி இருப்பார்... 

பெரும்பாலான சிவாலயங்களின் தலைவாயிலில் -
ராஜகோபுர கணபதியாக கிழக்கு முகமாக காட்சி தருவார்...

இப்படியாக விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கி - 
ராஜகோபுரத்தைக் கடந்ததும் நாம் கண்டு வணங்குவது 
அதிகார நந்தி எனப்படும் நந்தியம் பெருமானை!.. 

இவருடைய அனுமதியுடன் தான் நாம் சிவதரிசனம் செய்கின்றோம் என்பது மரபு... அத்தனை பெருமை இவருக்கு!..

இன்னும் சொல்லப்போனால் - 
நமக்கு சிவதரிசனம் செய்விப்பதே - ஸ்ரீ நந்தியம் பெருமான் தான்!.. 

அதனால் தானே - எல்லாம் வல்ல எம்பெருமான் - முன் நின்று இவரது திருமணத்தை நடத்தி வைத்தார்!..

 

திருக்கயிலை மாமலை!.. அந்தி மயங்கும் மாலை நேரம்!..

பொன்னாக ஒளிர்ந்து கொண்டிருந்த மாமலையை
கதிரவன் தன் திருக்கதிர்களால் ஆராதனை செய்ய -
அமரர்களும் மகரிஷிகளும் கூடித் திரண்டு வந்து
எம்பெருமானையும் அம்பிகையையும்  தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.

அவ்வேளையில் பொற்பிரம்புடன் சேவை செய்து கொண்டிருந்த நந்தியம் பெருமானுக்கு,

தாமும் பூவுலகில் பிறந்து சிவவழிபாடுகளைச் செய்து தரிசனம் பெற்றால் என்ன!.. - என்று ஒரு ஆவல் தோன்றியது.

அருகிருக்கும் நந்தியின் ஆவலை உள்ளுணர்ந்த அம்மையும் அப்பனும் - அவ்வண்ணமே ஆகுக!..  - என்று அருள் புரிந்தனர்.

திடுக்கிட்ட நந்தி பதறித் துடித்து விட்டார்..

திருக்கயிலையை விட்டுச் செல்வதா?.. - தன் பிழையினை உணர்ந்தார்..

ஐயனே!... சர்வசதாகாலமும் தங்கள் திருவடித் தாமரைகளின் அருகிலேயே காத்துக் கிடக்கும் அடியேன் மனதில் இப்படியான எண்ணம் எப்படித் தோன்றியது!.. ஏன் தோன்றியது?.. பூவுலகில் எனக்கு யாரைத் தெரியும்?... தங்களைப் பிரிந்து நான் எப்படிச் செல்வேன்?.. எங்கு செல்வேன்?.. என்னைப் பொறுத்தருளுங்கள்!..

- என்று கண்ணீருடன் வேண்டிக் கொண்டார்.

அதைக் கண்டு உளம் நெகிழ்ந்த அம்மையும் அப்பனும் - 

அஞ்சற்க!.. தர்மத்தின் வடிவம் நீ அல்லவோ!.. தர்மத்தைப் புத்திரனாகப் பெற வேண்டி -  கங்கையினும் மேலான காவிரிக் கரையில் தவம் இயற்றும் சிலாத முனிவனுக்கு மகனாகத் தோன்றுக!.. யாம் வந்து ஆட்கொள்வோம்!..

- என்று திருவாய் மலர்ந்தருளினர்.


இதன்படி, 
திருஐயாறு எனும் தென்கயிலைக்கு வடக்கே அந்தணக் குறிச்சியில் சிலாத முனிவர் செய்துகொண்டிருந்த தவம் நிறைவேறும் புண்ணிய வேளை வந்தது..

அன்றைய தினம் பங்குனி மாதத்தின் திருவாதிரை..

சிலாத முனிவரே!.. நீர் இதுகாறும் செய்த தவவேள்வி நிகழ்த்திய யாக பூமியை உழுவீராக!.. - என சிவகணங்கள் அறிவித்தன..

அதைக்கேட்டு பெருமகிழ்ச்சியடைந்த சிலாத முனிவர் வெள்ளிக் கலப்பை கொண்டு யாக பூமியை உழுதார்..

அப்போது - பொற்பெட்டகம் ஒன்று வெளிப்பட்டது.

ஆவலுடன் முனிவர் அந்தப் பெட்டகத்தைத் திறந்திட - அதனுள், 

வைர வைடூரிய ஆபரணங்களுடன் கோடி சூர்ய ப்ரகாசம் கொண்ட மழலை தன் பிஞ்சுக் கால்களை உதைத்துக் கொண்டு கிடந்தது.. 

அப்போது பூமி எங்கும் சுகந்த மணம் வீசியது. 
பன்னீர் மழையாகப் பெய்தது. தேவ துந்துபிகள் முழங்கின. 

காளையின் திருமுகம், நெற்றிக்கண், நான்கு திருக்கரங்களுடன் விளங்கிய மழலையைக் கண்டு - ஒருகணம் முனிவர் மருண்டார்.  

அவர் பார்த்துக் கொண்டிருந்தபோதே பெட்டகத்தினுள்ளிருந்து மழலையாகத் தவழ்ந்து பாலகனாக வளர்ந்து செல்வத் திருமகனாக எழுந்தார் - நந்தீசன்.

சிலாதமுனிவரின் மருட்சி அகலும் வண்ணம் -  
தேவ ரகஸ்யங்களை எம்பெருமான் அசரீரியாக உணர்த்தி அருளினார்.

ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்த நாயகி
பங்குனித் திருவாதிரையில் தோன்றிய நந்தீசனுக்கு - அன்றைய தினமே சிவாகமச் செல்வனாக அபிஷேகம் செய்து வைத்தார்  - எம்பெருமான்..

ஜபேசன் எனத் திருப்பெயரும் சூட்டப்பட்டார் - நந்தீசன்...

இருப்பினும், உறவுக் கயிற்றினால் பிணைக்கப்பட்ட சிலாதர் மனம் கலங்கியது..  

காரணம் - இறைவன் ஆணைப்படி நந்தீசனின் ஆயுள் பதினாறு வருடங்களே!..

மனம் கலங்கிய முனிவரிடம் சகல அறநெறிகளையும் எடுத்துரைத்தார் நந்தீசன்..

தவத்தைச் செய்து சிவத்தை அடையும் விருப்பத்தைக் கூறினார்... 

சிலாத முனிவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு கடும் விரதங்களுடன் சிவதியானத்தை மேற்கொண்டார்.

காசிக்கு நிகரான திருஐயாற்றில் சூர்ய புஷ்கரணியில் கழுத்தளவு நீரில் நின்றபடி சிவ பஞ்சாட்சர மகா மந்திரத்தை உச்சரித்தார்..

எண்ணிக்கை - எண்ணாயிரங்கோடி ஆயிற்று..

ஜோதி வடிவாக அம்மையும் அப்பனும் தோன்றியருளினர்..

பெருமகிழ்ச்சியுற்ற நந்தீசன் - சூரிய புஷ்கரணியிலிருந்து கரையேறி அம்மையப்பனை வலம் செய்து நிலத்தில் வீழ்ந்து வணங்கினார்...

மந்திர ஜபம் செய்த போது கழுத்தளவு நீரில் நின்றிருந்ததால் - 
மீன்களால் அரிக்கப்பட்டு, எலும்புக்கூடாக இருந்தது நந்தீசனின் மேனி..

அதைக் கண்டு உமையம்மை உளம் உருகினாள். 

இப்படியும் தவம் செய்வாருண்டோ - இவ்வையகத்தில்!..

அன்னையின் மனம் கசிந்தது...

நிலத்தில் கிடந்த பாலகனை வாரியணைத்தாள்.. பரிவுடன் உச்சி முகர்ந்தாள்..

அந்தவேளையில் - 
அம்பிகையில் திருத்தன பாரங்களில் இருந்து வெள்ளமெனப் பால் பொங்கி வழிந்து - நந்தீசனின் உடலை நனைத்தது..

அதனால் - நந்தீசன் முன்னை விட, பேரழகுப் பிரகாசமான திருமேனியைப் பெற்றனர்.

எம்பெருமான் - நந்தீசனுக்கு மகாமந்த்ர உபதேசம் செய்வித்தார்.. அத்துடன் சிவகணங்களின் தலைவன் எனவும் பட்டாபிஷேகம் செய்து வைத்தார். 

சகல தேவர்களும் பூமாரி பொழிந்து மகிழ்ந்தனர்.

அம்மையப்பனுடன் நந்தீசன்
தமது ஸ்வீகார புத்ரனுக்கு - தம்முடைய சாயலாக - 
நெற்றிக் கண்ணையும் மானையும் மழுவையும் 
சந்திர கலையையும் வழங்கினார். 

அத்துடன் -

அதிகார நந்தி எனும் பெரும் பதவியினையும் அருளி
பொற்பிரம்பினையும் வழங்கி - நந்தீசன் மீது பொன் மாரி பொழிந்தார்.

எல்லாச் சிறப்புகளையும் எய்திய - நந்தீசன்
அம்மையப்பனை வலம் வந்து வணங்கினார்...

இந்த வேளையில் சிலாத முனிவர் - சிவபெருமானைப் பணிந்து - 

ஐயனே!.. என்மகனை மணக்கோலத்தில் காண விரும்புகின்றேன்... அருள் புரியவேண்டும் ஸ்வாமி!..

- என்று தன் ஆவலை வெளியிட்டார்.

உமையம்மையின் நாட்டமும் அதுவாகவே இருந்தது. 
பெறாமல் பெற்றெடுத்த பிள்ளையல்லவா!..

எப்படியோ.. நாம் நினைத்ததை அவர்கள் சொல்லி விட்டார்கள்!.. 
- என்று எம்பெருமானுக்கும் மகிழ்ச்சி!..

காவிரியின் வடகரையில் திருமழபாடி எனும் தொன்மையான தலத்தில் - என் அன்பன் வியாக்ரபாதனின் மகள் சுயம்பிரகாஷினியை மணம் பேசுக!.. யாம் ஐயாற்றிலிருந்து வந்து மணவிழாவினை நிகழ்த்தி வைப்போம்!.. 

- என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அம்பிகைக்கு ஆனந்தம். வெகு நாட்களுக்குப் பின் நம் வீட்டில் ஒரு கல்யாணம் நிகழ இருக்கின்றது என்று!..

அப்புறம் என்ன!..

சுற்று வட்டாரம் முழுதும் கோலாகலம் தான்!.. கொண்டாட்டம் தான்!..


திருமண அழைப்பிதழ்
***

பார்வதி பரமேஸ்வரர் தம் ஸ்வீகார புத்திரரும் 
சிலாத முனிவரின் திருக்குமாரரும் 
சகல வரங்களையும் பெற்றவரும் 
திருக்கயிலாய மாமலையில் 
அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் 
ஜபேசன் எனப் புகழப்படுபவருமான 

நந்தீசன் எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ முனிவரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் 
வியாக்ர பாதரின் திருக்குமாரத்தியும் 
உபமன்யுவின் பிரிய சகோதரியும் 
சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான
  
சுயம்பிரகாஷினி  எனும் திருநிறைச் செல்வியை

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி, 
சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன்

மங்கலகரமான மன்மத வருடம் பங்குனி மாதம் 
புனர்பூச நட்சத்திரங் கூடிய
வெள்ளிக்கிழமையாகிய சுப தினத்தின் 
சுபயோக  சுபவேளையில் 

திருமழபாடி எனும் திருத்தலத்தில் 
திருமாங்கல்யதாரணம் 
நிகழ இருக்கின்றது..

அனைவரும் வருக.. அருள் நிதி பெறுக!.. 
என, பெருமகிழ்வுடன் அழைக்கின்றோம்.. 
***



நாளை (மார்ச்- 18) பங்குனி புனர்பூசம்..
முன்னிரவு ஏழு மணியளவில் திருமாங்கல்யதாரணம்!..

அனைவரும் வருக!.. அருள் நிதி பெறுக!..
வளம் பல பெருக - வருக!.. வருக!..
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

21 கருத்துகள்:

  1. அன்பின்ஜி தங்களின் திருமண அழைப்பிதழின் விரிவான விடயம் அறிந்தேன் நாளைய விழாவில் கலந்து கொள்வேன் மிக்க நன்றி வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்களுக்கு நல்வரவு.
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. திருமண அழைப்பிதழுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எவ்வளவு சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்...

    வணக்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அன்புக்குரிய தமிழ் இளங்கோ அண்ணா..

    தங்கள் கருத்துரைக்கு பதிலளிக்கும் வேளையில் -
    கண்னியின் தடுமாற்றத்தால் எனது கருத்துரையும் சேர்ந்து அழிந்து விட்டன..

    தங்களது ஊராகிய திருமழபாடி - என்றுமே மறக்க இயலாத ஊர்..

    அன்பின் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  5. திருமழபாடி திருத்தலத்தில் நடைபெறும் திருமணவிழா காண ஆவல்.
    இன்று காலை z தமிழ் தொலைக்காட்சியில் திருஐயாறில் நந்திக்கு நடக்கும் விழா பற்றி சொன்னார்கள் நேரில் காண்பது போல் கதை கேட்டு விட்டேன்.
    நன்றி.
    நாளை திருமணம் காண வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தங்களை வரவேற்கக் காத்திருக்கின்றோம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அழகாகக் கதை சொல்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மிக்க மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  7. புதிய தகவல். இதுவரை அறிந்திராத தகவல். மட்டுமல்ல அதைத் தாங்கள் சொல்லிப் பகிருந்த விதம் அருமை. அழகான திருமண அழைப்பிதழ். மிக மிக ரசித்தோம் வித்தியாசமான இந்தப் பதிவை. மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      அவசியம் நாளை திருமணத்திற்கு வந்து விடுங்கள்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

  8. திருமணம் திருமழபாடியிலா ?
    ஆஹா..வந்தேன். வந்தேன்.

    நான் அருகிலே ஆங்கரை இலே தானே இருக்கிறேன்.

    வந்து விட்டேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      வெகு நாட்களுக்குப் பிறகு தங்களது வருகை..
      மிகவும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. அறிந்த தகவல்தான். இருந்தாலும் தங்கள் பாணியில் கூறும்போது மிகவும் ரசிக்கும்படி உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  10. திருமண அழைப்பிதழ் அருமை சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. நந்தீசர் குறித்து விரிவான விளக்கமான பகிர்வால் அறிந்து கொண்டேன் ஐயா...

    திருமண அழைப்பிதழ் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..