நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஜனவரி 09, 2016

மார்கழித் தென்றல் - 24

குறளமுதம்

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.. (688)
***


இன்று சொல்லின் செல்வனாகிய
ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான்
திருஅவதாரம் செய்த நன்னாள்..
***

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 24

திவ்ய தேசம் - திருக்கண்ணபுரம்
ஸ்ரீ கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம்



எம்பெருமான் -  நீலமேகப்பெருமாள் 
தாயார் - கண்ணபுரநாயகி 

உபய நாச்சியார்கள் ஸ்ரீ தேவி, பூதேவி.
இவர்களுடன்
வலப்புறம் பத்மினி, 
இடப்புறம் ஆண்டாள் - என 
நான்கு தேவியருடன் 
திருக்காட்சி.



உற்சவர் - ஸ்ரீ சௌரிராஜன்
ஸ்ரீ உத்வலாவதக விமானம்

அஷ்டாட்க்ஷர திருமந்திரம்
சித்திக்கும் திருத்தலம்..

பிரயோகச் சக்கரத்துடன்
நின்றருளும் திருக்கோலம்
கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்..

திவ்ய தேசம் வைகுந்தத்திற்குச் சமமானது..


மாசி மக தீர்த்தவாரிக்கு எழுந்தருளும் திருக்கோலம்
பத்மினி நாச்சியார்
மீனவ குலத்தில் பிறந்தவர்..
பெருமானிடம் கொண்ட அன்பினால்
அவனுடன் கலந்து இன்புற்றனள்..

மாசி மகத்தின் போது 
திருமலைராஜன் பட்டினத்திற்கு 
மாப்பிள்ளை சாமி என - எழுந்தருளி
மீனவப் பெருங்குலத்தாரின் 
வரவேற்பு மரியாதைகளை
ஏற்றுக் கொண்டு தீர்த்தவாரி வழங்கி
இன்னருள் புரிகின்றான் - ஸ்ரீ சௌரிராஜன். 

ஒருசமயம் - தனது அன்புக்குரியவளுக்கு
சூட்டிய மாலையை - சந்நிதி பிரசாதம் என,
மன்னனுக்கு வழங்கி பெருந்தவறு செய்தார் அர்ச்சகர்..

மாலையில் நீளமான முடியைக் கண்டு 
அதிர்ச்சியும் கோபமும் கொண்டான் மன்னன்.

சிலை வடிவில் முடியும் உண்டோ?.. என வெகுண்டான்..
உண்டு!.. - என, உளறிக் கொட்டினார் அர்ச்சகர்..

அதைக் காட்ட இயலுமோ!.. - என்றான் அரசன்..
நாளை காலையில் தரிசிக்கலாம் - என்றார் அர்ச்சகர்..

அர்ச்சகர் தனது பிழையை உணர்ந்து 
பெருமாளைச் சரணடைய
அவரை மன்னித்தருளி - அரசனுக்குத் 
தனது முடியலங்காரத்தைக்
காட்டியருளியதாக தல புராணம்..


  
இத்திருத்தலத்தில் எம்பெருமான்
விபீஷணருக்கு
நடையழகு காட்டியருளினான்..

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே
யாவரும்வந்தடி வணங்க அரங்கநகர் துயின்றவனே
காவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே
ஏவரிவெஞ் சிலைவலவ இராகவனே தாலேலோ!.. (728)
- குலசேகராழ்வார் -

மங்களாசாசனம்
பெரியாழ்வார், ஆண்டாள்,
குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார்,
நம்மாழ்வார்..
***


அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்!.. 

ஓம் ஹரி ஓம் 
***

சிவ தரிசனம்
திருத்தலம் - திருநள்ளாறு



இறைவன் - ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர்
அம்பிகை - ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள்
தீர்த்தம் - நளதீர்த்தம்
தலவிருட்சம் - தர்ப்பை


விடங்கத்தலங்கள் ஏழனுள்
திருநள்ளாறும் ஒன்று..

மதுரையம்பதியில் - புறச்சமயத்தாருடன்
திருஞானசம்பந்தர் போராடிய போது
அனல் வாதத்தில் வெற்றி பெற்றது
திருநள்ளாற்றுப் பதிகம்!..

அதனால், இத்திருப்பதிகம்
பச்சைப் பதிகம் என்று புகழப்பெற்றது..

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற் றண்ணல் பரமேட்டி 
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான்மேயது நள்ளாறே!.. (1/49) 
***


அல்லலில் அவதியுற்ற
நளமகாராஜன் ஆற்றுப்படுத்தப்பட்டதால்
தர்ப்பாரண்யம் 
திருநள்ளாறு என்றாகியது..

நள மகாராஜனின் கலி தீர்த்த திருத்தலம்.

மகாபாரதத்திற்கு முந்தையது
நளமகாராஜனின் வரலாறு..

உத்தம குணங்கள் அனைத்தையும் ஒருங்கே
கொண்டிருந்த நளனையும் தமயந்தியையும்
ஒன்றாகச் சேர்ந்து வாழ விடாமல் செய்தவன்
கலி புருஷன்..

நல்லவர்களின் மனம் கூட நல்ல வழியில்
செல்ல இயலாதபடிக்கு இடையூறுகளை
உருவாக்குபவன் கலிபுருஷன்..

சூதாடியதால் சகல செல்வங்களையும் இழந்த நளன்
தன் குழந்தைகளை மாமனார் இல்லத்தில் சேர்த்து விட்டு
தனது அன்பு மனைவியுடன் கானகத்திற்கு ஏகினான்..

தர்ம சிந்தனை மிக்கவனான நளன்
கலியின் சூழ்ச்சியினால் ஆடையை இழந்தான்..

அன்றைய இரவுப் பொழுதில்
தமயந்தியின் முந்தானையைத் தன்னுடலில்
சுற்றிக் கொண்டு உறங்கிய வேளையில்
மீண்டும் கலி புருஷன் நளன் மனதைக்
குழப்பியடித்தான்..

அதன் விளைவாக,
காதல் மனைவியின் முந்தானையைக்
கிழித்துக் கொண்டு - நள்ளிரவுப் பொழுதில்
நடுக்கானகத்தில் அவளைப் பிரிந்தான்..

நெருப்பில் சிக்கிக் கொண்ட கார்க்கோடகன் எனும்
நாகத்தினைக் காக்க முயன்றபோது
அந்த கார்க்கோடகனாலேயே தீண்டப் பெற்றான்.
விஷம் ஏறிய நிலையில்
தன் அழகை இழந்து கோர வடிவம் ஆனான்..

அந்த நிலையில், கார்க்கோடகனைப் பார்த்து
நளன் வேதனையுடன் கூறிய வார்த்தைகளே -
ஒவ்வொரு மனிதனுடைய நல்வாழ்வினுக்கும் ஆதாரம்..

கடுந்துன்பத்திலும் பணிவாகப் பேசிய
நளனின் நல்ல குணம் கண்டு மகிழ்ந்த
கார்க்கோடகன் - அவனுக்கு நன்மையே விளையும்!..
என்று, வாழ்த்தி மறைந்தான்..

அதன் பின்னும் போராட்டமாக இருந்த வாழ்வு
ஏழரை ஆண்டுகள் நீடித்தது..

கதிர் உதயத்திற்கு முன்னர்
விடிவெள்ளி தோன்றுவதைப் போல
துன்பங்கள் முடிவதற்கு முன்னரே
வசந்தம் வீசிற்று..

விதர்ப்ப நாட்டில் தமயந்திக்கு மறுமணம் என்பதை அறிந்து
ருது பர்ண மகராஜாவுக்கு தேரோட்டியாகச் சென்ற நளன்
சமையற்கட்டில் தனது பிள்ளைகளையும் அடுத்து
அன்பு மனைவி தமயந்தியையும்
சந்தித்து மகிழ்ந்தான்.

துன்பங்கள் நீங்கிய வேளையில் 
மனைவி மக்களுடன் திருத்தல யாத்திரை 
புறப்பட்ட போது - கலிபுருஷனுக்கு அதிபதியான
சனைச்சரன் பின் தொடர்ந்தான்..


நள தீர்த்தம்
தர்ப்பாரண்யம் எனப்பட்ட 
இந்த க்ஷேத்திரத்தின் திருக்குளத்தில் 
மனைவி மக்களுடன் நீராடி விட்டு 
சிவ சந்நிதிக்கு, நளன் - வந்தபோது
அவர்களைத் தொடர்ந்து வந்த சனைச்சரன்
சிவகணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டான்..

நளனை இனித் தொடரக்கூடாது!..
என, சிவபெருமான் ஆணையிட்டார்..

எம்பெருமானின் திருவடி பணிந்த சனைச்சரன்,
நள மகாராஜனின் சரிதத்தைக் கேட்டவரையும்
படித்தவரையும் சிந்தித்தவரையும்
ஒருபோதும் தொடரமாட்டேன்!..
என்று வாக்களித்தான்..

அதன்படி - சனைச்சரன்
அங்கேயே அமர்ந்து விட்டான்..

ஈசனின் இடப்புறம் குடிகொண்ட
சனைச்சரன் நம்மை சிவ பக்திக்கு
ஊக்குவிக்கின்றான்..

நமக்கு விளையும் இன்னல்கள் அனைத்தும்
கடந்த பிறவிகளில் நாம் பிறருக்குச் செய்தவைகளே!..

ஸ்ரீ சனைச்சரன் நமக்கு ஒருபோதும்
இன்னல் செய்வதேயில்லை..

தன் வினை தன்னைச் சுடும்!..
என்பது ஆன்றோர் திருவாக்கு..

இன்றைய குறளமுதமும்
அதையே உணர்த்துவது..

ஆனாலும்,
பல்வேறு ஊடகங்களும் ஜோதிடர்களும்
தர்ப்பாரண்யம் எனப்பட்ட திருநள்ளாற்றை
சனி ஸ்தலம் என்கின்றனர்..
சனீஸ்வரன் கோயில் என்று பொய்யுரைக்கின்றனர்..

ஆன்றோர்கள் இதனைக் கண்டு கொள்ளாதிருப்பது
வருத்தத்திற்குரியது..
***

முன்பொரு சமயம் - இத்திருக்கோயில்
நிர்வாகத்தை முறை செய்ய வந்த மன்னன்
திருக்கோயிலுக்கு அளக்கப்பட்ட பால்
குறைவாக இருப்பதைக் கண்டுணர்ந்து
கணக்காளனை அழைத்து வினவினான்..

கணக்காளனோ - 
பால் அளந்த இடையரையும் 
அவரது மனைவியையும்
குற்றவாளி என
மன்னனின் முன்நிறுத்தினான்..

மன்னன் கடுங்கோபத்துடன் சவுக்கை 
எடுத்து விளாசியபோது,
திருமூலத்தானத்தின் உள்ளிருந்து 
சீறிப் பாய்ந்து வந்த திரிசூலம்
கணக்காளனின்
மார்பைப் பிளந்து உயிர் குடித்தது..

அளக்கப்பட்ட பாலில் களவு செய்து
பொய்யுரைத்தவன் கணக்காளன்!..
என்று அசரீரி ஒலி கேட்டது..

மன்னன் அரண்டு போனான்..
அலறித் துடித்தான்..

தகாதன செய்த தனது மடைமையை எண்ணி
தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொண்டான்..

அது கண்டு, உடன் வந்த அமைச்சனும்
தன்னைத் தண்டித்துக் கொண்டான்..

இதையெல்லாம் கண்டு பதற்றமடைந்தார்
திருத்தொண்டராகிய இடையர்..

ஈசனைப் பணிந்து வணங்கி
பிழை பொறுத்து அருளுமாறு வேண்டிக் கொண்டார்..

அவர் மீது கொண்டிருந்த அன்பினால்
அவரது வேண்டுதலை ஏற்று
அரசன், அமைச்சன், அலுவலன் 
ஆகிய மூவரையும் மீட்டு அருளினான் - எம்பெருமான்..

அரசன், அமைச்சன், அலுவலன்
எனும் மூவரும்
அன்பும் அறிவும் கொண்டு 
அறவழியில் நின்றால்தான் 
நன்நாடு - பொன்னாடு!..

அப்படியின்றி,
அசுரன்களாக 
கொடுவழியில் நின்றால்
நாடு என்பது - வன்காடு!..

திருமூலத்தானத்திலிருந்து சீறிப்பாய்ந்து வந்த
திரிசூலத்தைக் கண்டு நந்தியம்பெருமான் சற்றே 
விலகியமர்ந்ததாக தலபுராணம்..

இன்றும், ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயிலில்
நந்தியும் பலிபீடமும் விலகியிருக்கக் காணலாம்..

தவறேதும் செய்யாத இடையரும் அவரது மனைவியும்
மன்னனால் கௌரவிக்கப்பட்டனர்..

கால அளவில் அவர்களுக்கு சந்நிதியும் எழுப்பப்பெற்றது..
அதே சமயம் - மக்கள் கண்டுணர்வதற்காக
தண்டிக்கப் பெற்ற கோயில் கணக்கனுக்கும்
சிலை எழுப்பப்பட்டது..

திருக்கோயிலில் 
இடையர் சந்நிதியையும் தரிசிக்கலாம்..

இன்னும் விரித்துரைப்பதற்கு நிறைய செய்திகள்..
காலம் கூடிவரும் போது காணலாம்..
***

திருப்பதிகம் அருளியோர்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்,
சுந்தரர்..
***

ஸ்ரீ திருநாவுக்கரசர் அருளிச்செய்த 
தேவாரம்


சொல்லானைச் சுடர்ப்பவளச் சோதி யானைத்
தொல்லவுணர் புரமூன்றும் எரியச் செற்ற 
வில்லானை எல்லார்க்கு மேலானானை
மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழற்கீழ் அறங் கண்டானைக்
காளத்தியானைக் கயிலாய மேய
நல்லானை நம்பியை நள்ளாற் றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே!.. (6/20)
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச்செய்த
திருவாசகம்

திருப்பொன்னூசல்
நான்காம் திருப்பாடல்


நஞ்சமர் கண்டத்தன் அண்டத்தவர் நாதன்
மஞ்சுத்தோய் மாடமணி உத்தர கோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுதம் ஊறிக் கருணை செய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
***

11 கருத்துகள்:

  1. அன்பின் ஜி மார்களித் தென்றலின் 24 ஆம் நாள் பகிர்வு திருநள்ளாறு விடயம் அரிந்தேன் பிரமாண்டமாக நிறைய விடயங்களுடன் இருந்தது தொடர்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மார்கழி இருபத்து நான்கு அழகான ஒரு விளக்கப் புராணத்துடன்... விபரமாய்த் தந்தீர்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. சொல்லின் செல்வனின் அவதாரத்திருநாளில்
    அருமையாகப்பகிர்ந்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. அதிகமான அலுவலகப்பணி காரணமாக தளம் வருவதில் தாமதம். நான் பார்க்க ஆசைப்படும் திருமலைராயன்பட்டினத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அருமையான தகவல்கள். கோவில் காணும் ஆவல்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      தங்கள் எண்ணம் ஈடேற வேண்டுகின்றேன்..
      வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. ஆஹா அருமையான விளக்கம், நான் அங்கு சென்றுள்ளேன். அந்த குளம் இன்று தூய்மையின்றி,, மக்களும் தங்கள் துணிகளை அப்படியே,

    நந்தியின் விலகல் விவரம் இன்று தான் தெரிந்தேன். காலம் கிடைக்கும் போது இன்னும் விரிவாக கூறுங்கள்.

    பாவைப் பாடங்கள் படித்தேன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..

      தாங்கள் சொல்வதைப் போல் களையிழந்து இருக்கின்றது - குளம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..