பொழுது விடியும் நேரம்.. ப்ரம்ஹ முகூர்த்தம்.
என்றும் பதினாறாகத் திகழும் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியின் ஆஸ்ரமம்.
மகரிஷி நித்ய கர்மானுஷ்டானங்களுடன் சிந்தையை ஒருமுகப்படுத்தி தியானத்திலிருந்தார். மங்கலகரமான சகுனங்கள் தென்பட்டன.
தியானத்திலிருந்து மீண்டு கரங்கூப்பி வணங்கியவராக, - நிகழ இருப்பது யாது!?.. என சிந்தித்தபடி எழுந்தார்.
சற்று தொலைவில் தோழியரோடு விளையாடிக் கொண்டிருந்தாள் - அன்புக்கு உரிய நில மாமகள்!..
அவளுடன் - சின்னஞ்சிறு பறவைகளும் குயில்களும் மயில்களும் அன்னங்களும் மான்களும் ஆனந்தமாக விளையாடிக் கொண்டிருக்க -
நந்தவனத்தில் அங்குமிங்குமாக வண்ணத்துப் பூச்சிகளும் தும்பிகளும் அலைந்து கொண்டிருந்தன.
சற்றைக்கெல்லாம் - சூர்யோதயம். பொழுது புலர்ந்தது.
செங்கதிர்ச் செல்வன் உதித்தெழுந்தான்.
கீழ்த்திசையைக் கவனித்துக் கொண்டிருந்த முனிவர் - ஆங்கே மற்றோர் சூர்யோதயத்தையும் கண்டார். விந்தையிலும் விந்தை.
செந்நிற வானத்திலிருந்து செங்கதிர்ச் செல்வன் இறங்கி வந்தாற்போல - விவரிக்க இயலாத வண்ணம் பேரழகு கொண்டவராக ஒரு துறவி.
தனது ஆஸ்ரமத்தினை நோக்கி வருவதைக் கண்டு அதிசயித்தார்.
தனது ஆஸ்ரமத்தினை நோக்கி வருவதைக் கண்டு அதிசயித்தார்.
ஆனாலும் நடுத்தர வயதை வெகு நாட்களுக்கு முன்னரே கடந்ததைப் போன்றதொரு தோற்றம்.
ஒப்பாரும் மிக்காரும் இல்லாதபடிக்கு தேஜஸ்!.. யாராக இருக்கக் கூடும்!?..
காலங்களைக் கடந்து வாழும் சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் - ஒரு கணம் திகைத்து உள்முகமாகத் தியானித்தார்.
உள்முகத்தில் இதய கமலத்தில் வந்திருப்பது யாரெனத் தெரிந்தது.
காலங்களைக் கடந்த காரணன்!.. பரிபூரணன்!.. அவனே நாரணன்!..
- எனக் கண்டுணர்ந்து மெய் சிலிர்த்தார்.
ஓ!.. உரியதைத் தேடி உரிமையுடன் வந்திருக்கின்றான் - உடையவன்!.. இன்றைக்கு என்ன திருவிளையாடலோ!.. ஆகட்டும்.. ஸ்வாமி.. ஆகட்டும்!.. அலகிலா விளையாட்டுடையவர் தாங்கள்!.. உமக்கே என்றும் நாங்கள் அடைக்கலம்!.. - என்று சிந்தை செய்தவாறு எழுந்து நின்று வரவேற்றார்.
வரவேண்டும்.. வரவேண்டும்!.. தங்கள் வருகையினால் ஏழையின் குடில் விளங்கிற்று!.. - என்று கைகூப்பி முகமன் கூறினார் மார்க்கண்டேயர்.
ஆசனம் அளித்தார். அன்பு ததும்பும் முகத்துடன் அருகிருந்து உபசரித்தார்.
கதிர் மதியம் போல் திருமுகமும் கண் நிறைந்த புன்னகையுமாகத் திகழ்ந்த துறவி -
நீரும் அருகில் அமரும் !.. - என்றார்.
நேச விசாரணைகளுக்குப் பிறகு -
ஸ்வாமி.. வயதான காலத்தில் ஏன் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு!?.. ஓரிடத்தில் இருக்கலாகாதா?.. - என்றார் மார்க்கண்டேயர்.
நின்றும் இருந்தும் கிடந்தும் பார்த்து விட்டேன். அவரவர்க்கும் ஆயிரமாயிரம் பிரச்னைகள். அத்தனைக்கும் நான் தான் நடந்து தீர்க்க வேண்டியதாக இருக்கின்றது. நிம்மதியாக இருக்க யார் விடுகின்றார்கள்?..
ஊரெல்லாம் நெருக்கியடித்துக் கொண்டிருக்க உனக்கென்ன நித்திரை என்று ஒருவர் வந்து உதைத்தார். அன்றைக்கு வந்தது வினை.. அஷ்ட லக்ஷ்மி என்பார்கள். அதனுடன் ஒன்று அதிகமாக நவநிதி என்று அருகிருந்தும் எல்லாம் எனை விட்டுப் போயின. ஏழையாகி நின்றேன்.
புற்றுக்குள் ஒடுங்கிக் கிடந்தேன். கல் கொண்டு எறிந்தான் ஒருவன். மாதரசி ஒருத்தி வந்து மருந்திட்டாள். அதன் பின்னும் ஒருவன் நாடியில் அடிக்க - இன்று வரை அது அடையாளமாகி விட்டது. அன்று வாங்கிய கடனுக்கு வட்டிக்கு மேல் வட்டி!.. முடியவில்லை ஐயா!.. தலைக்கு மேல் வெள்ளம் என்பார்களே!..
அது சிவபெருமானுக்கு அல்லவா!.. - மார்க்கண்டேயர் குறுக்கிட்டார்.
இருக்கட்டுமே!. கடைசியில் அவருக்குக் கிடைத்ததென்ன?. கடலில் விளைந்த நஞ்சு தானே!.. அதைப் போலத்தான் நமக்கும்!.. வட்டிக்கு வாங்கி வைபவம் செய்தும் வாசற்படிக்கு இந்தப் பக்கம் உடைந்த சட்டியில் தான் தயிர் சோறு!..
அடடா.. மிகவும் கஷ்டந்தான்!.. உமக்கு காலாகாலத்தில் கல்யாணம் குடும்பம் என்று ஆகியிருந்தால் இந்த நிலை வந்திருக்குமா?.. - மார்க்கண்டேயர் மிகவும் வருத்தப்பட்டார்.
அடித்து விளையாடி வீரம் காட்டி நின்றாலும் கடைசியில் கிடைத்தது கானக வாசம் தான்!.. அது கிடக்கட்டும். இவ்விடம் உமக்கு நல்ல யோகம் போல.. மனைவி மக்களோடு சுகமான ஆஸ்ரமவாசி!..
ஸ்வாமி!.. அடியேன் ப்ரம்மச்சாரி!.. அங்கே விளையாடுபவள் என் வளர்ப்பு மகள்!..
அப்படியா!?.. - ஆதி மூலன் அதிசயித்தான். அவனிடமே கதை சொன்னார் மார்க்கண்டேயர்..
அவள் - எனது நந்தவனத்தில் கிடைத்தவள். நில மாமகள் எனப் பெயர். துளசிச் செடிகளுக்கிடையே கிடந்ததனால் துளசி என்று செல்லம்.
ஒரு சமயம் கோளரி மாதவனைக் கும்பிட்டு நின்றபோது - உனது மணக்கோலம் கண்டு கை தொழ வேண்டும் என வேண்டிக் கொண்டேன். கார்முகில் வண்ணனும் - காலம் கனியும் காத்திரு!.. என்றான்.
ஆயிற்று பல காலம். அதன் பின் இந்தப் பெண் கிடைத்தாள். இவளது அவதார நட்க்ஷத்திரத்தைக் கணித்த போது - இவளைக் கைப்பிடிக்க - கைத்தடியுடன் மாதவப் பெரியவர் ஒருவர் வருவார்.. அவரையே - இவள் மணமுடிப்பாள்!.. - என்று தெரிந்தது.
ஆயினும் ஸ்வாமி, வயதான ஒருவருக்கு - கிழவருக்கு - இந்த இளங்கன்னியை எப்படி மணம் முடித்துக் கொடுப்பது?.. நீங்களே இதற்கொரு நியாயம் கூறுங்கள்!..
நியாயந்தானே!.. எங்கே உங்கள் மகளை வரச்சொல்லுங்கள்!.. நான் அவள் முகலட்சணம் எப்படி என்று பார்க்கின்றேன்!..
முக லட்சணமா!?.. பிற ஆடவர் முன் அவள் வருவதில்லையே!..
இருக்கலாம் .. ஆனாலும், இந்தக் காலத்தில் நல்ல மணவாளன் கிடைத்தால் - உடன் முடித்து விடவேண்டியது தான். கலியுகம் கெட்டுக் கிடக்கின்றது!.. ஏன்.. என்னையே எடுத்துக் கொள்ளுங்களேன். நான் நல்லமணவாளன் இல்லையா!.
நல்ல மணவாளனா?.. நீரா!.. அது சரி!.. அழகிய மணவாளன் தான்!.. ஆனாலும் நீர் பழுத்த பழம் ஆயிற்றே!..
- மார்க்கண்டேயர் உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
பழுத்த பழம்!.. காலங்களை வென்ற கனி!.. அக்காரக் கனி ஆயிற்றே நான்!.. அறியீரோ நீர்!..
ஏதேது.. விட்டால் - உம் பெண்ணைக் கொடு!.. - என்று என்னைக் கேட்பீர் போலிருக்கின்றதே!..
கேட்பதேது!.. மார்க்கண்டேயனின் மகளை மணமுடிக்க வேண்டும் என்று - விருப்புற்றுத் தானே இவ்விடம் யான் வந்தேன்!..
அவள் சிறியவள்!..
இல்லை.. அவள் இனியவள்!..
அவள் உலகம் அறியாதவள் - ஸ்வாமி!..
என் உலகமே அவள் தான் - ஐயா!..
அவளுக்கு ஒழுங்காக சமைக்கக் கூடத் தெரியாது!..
தெரிந்தவரைக்கும் அவள் சமைக்கட்டும்.. தேவையெனில் நான் உதவுகிறேன்.. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதல்லவோ இன்பம்!.. இதெல்லாம் உமக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!.. நீர் முற்றும் துறந்தவர்!..
பெரியீர் பேசுவதெல்லாம் சரிதான்!.. தெரிந்தவரைக்கும் சமைக்கட்டும் என்று தாங்கள் இதமாகச் சொன்னாலும் - உலைப் பானைக்குள் உப்பு போடக்கூடத் தெரியாது அவளுக்கு!.. ஆகையால் இதெல்லாம் சரிப்பட்டு வராது!.. விட்டு விடும்!..
விட்டு விடுவதா?.. அதெல்லாம் முடியாது!.. உமது மகள் உப்பு போடாமல் சமைத்தாலும் அதுவே எமக்கு உகப்பு!.. அதுவும் நல்லது தான் பாருங்கள்.. வயதான காலத்தில் உப்பு சர்க்கரை எல்லாம் குறைக்கச் சொல்லும் போது உப்பு போடத் தெரியாததெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை!.. நீர் பெண்ணை வரச்சொல்லும்!..
இன்றைக்கு இப்படிச் சொல்வீர்.. நாளைக்கு இவள் ஒரு பாரம் என்று - நீர் நினைத்து விட்டால்?..
பார்த்தீரா!.. மறுபடியும் நழுவுகின்றீர்.. அவளை என் மூக்கு நுனியில் வைத்துத் தாங்கியிருக்கின்றேன் தெரியுமா!.. இனியும் அவளை விட்டுப் பிரியாமல் நெஞ்சில் வைத்துத் தாங்குவேன். நீர் பெண்ணை வரச்சொல்லும்!..
இதென்ன பிரச்னையாகி விட்டது!?.. ஐயா.. உமது வயதெங்கே?.. அவளுடைய வயதெங்கே?.. - மார்க்கண்டேயர் பிடி கொடுக்கவில்லை
எல்லாம் ஆயிற்று. இப்போது வயது உமக்கொரு பிரச்னையா!.. நான் தோன்றிய போதே அவளும் தோன்றியவள்.. இயற்கை எனும் இளையகன்னி!.. எனக்கெனப் பிறந்தவள்.. இறக்கை கட்டித் திரிந்தவள்!.. அவளே தான் இவள்!.. நீர் முதலில் பெண்ணை வரச்சொல்லும்!..
பெரியீர்.. இந்த வயதிலும் உமக்கு எல்லாம் சந்தோஷந்தான்.. சங்கீதம் தான்!.. ஆனாலும் என் பெண் என்ன சொல்வாளோ - என்று எனக்கு கலக்கமாக இருக்கின்றது.. நரை திரை காஷாயம் - இப்படியொரு மணவாளனையா எனக்குப் பார்த்தீர்கள்.. தந்தையே!.. - என்று என்னைக் கேட்டால் நான் என்ன பதில் கூறுவேன்!.. வாரணம் ஆயிரம் சூழ வலம் வருவான் என்று கனவு கண்டிருக்கக் கூடுமல்லவா!..
மார்க்கண்டேயரே.. பெண்ணைக் கண்ணில் காட்ட மறுக்கின்றீர்.. நீராகவே பேசிக் கொண்டிருக்கின்றீர்.. நீர் பெற்ற மகளாக இருந்து அவளுக்கும் ஒரு நல்ல நேரம் நெருங்கி வரும்போது இப்படித் தான் கூறுவீரோ!?..
நான் பெற்ற மகள் எனில் நிச்சயம் இவ்வாறு கூற மாட்டேன்!.. இவள் வளர்ப்பு மகள்!.. பாச மலர்.. அன்பில் விளைந்த வாச மலர்!.. நந்தவனத்தில் எடுத்தான்.. வளர்த்தான்.. நாள் வந்ததும் நரைகண்ட கிழவனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். இவன் பெற்ற பெண்ணாக இருந்தால் செய்வானோ இவ்விதம்!..
- என்று பிறர் சொல்லும் சொல்லுக்கு இடம் தரமாட்டேன்!. கோலக் குமரனுக்கு அன்றி கோலூன்றும் கிழவனுக்கு என் மகளைத் தரவே மாட்டேன்!.. இதை நானென்ன சொல்வது என் மகளே சொல்வாள்!.. துளசி.. மகளே!..
- என்று பிறர் சொல்லும் சொல்லுக்கு இடம் தரமாட்டேன்!. கோலக் குமரனுக்கு அன்றி கோலூன்றும் கிழவனுக்கு என் மகளைத் தரவே மாட்டேன்!.. இதை நானென்ன சொல்வது என் மகளே சொல்வாள்!.. துளசி.. மகளே!..
- என்று மார்க்கண்டேயர் அழைக்கவும்,
என்னைக் கண்ட பிறகுமா - இப்படிக் கூறுவீர்!.. - என்று மாயவன் புன்னகை பூக்கவும்,
அப்பா.. அழைத்தீர்களா!.. - என்று நிலமாமகள் ஓடி வரவும் சரியாக இருந்தது.
ஆயிரங்கோடி சூரியன் போல - அனந்தன் ஆராஅமுதன் அருட்கோலம் காட்டி நிற்க - நிலமாமகள் - தன் மணாளனைக் கண்ட மாத்திரத்தில் நாணி நின்றாள்.
கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகி வழிந்தது - மார்க்கண்டேயருக்கு!..
பரம்பொருளே!.. இந்தத் திருக் கோலத்தினை காண்பதற்குத் தானே - இத்தனை காலம் காத்துக் கிடந்தேன்.. உனது வாத்ஸல்யம் அறிய வேண்டி அல்லவோ உன்னுடன் வாதம் செய்தேன்.. குறை பொறுத்தருள வேண்டும்!.. நிலமாமகளின் கைத்தலம் பற்றி கல்யாணத் திருக்கோலம் காட்டியருளல் வேண்டும்!..
மகரிஷி!.. தாம் எமது அன்புக்குரிய மாமனார் அல்லவா!.. தம்முடன் சற்று விளையாட நானும் ஆவல் கொண்டேன்!.. வருந்தற்க!.. முன்பு ஒரு சமயம் பூமாதேவி தானும் எமது திருமார்பினில் வாசம் செய்யும் வரம் கேட்டாள். அதன்படி - எனது மணக்கோலத்தினைத் தரிசிக்க விரும்பி நின்ற உமக்கு மகளாகத் தோன்றி வளர்ந்தாள். காலம் கனிந்தது. உமக்கு நல்லருள் புரியவே வந்தோம்!..
ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஒளிவளர் விளக்கே!.. ஒப்பிலியப்பா!.. போற்றி!.. நின் மனையாளை நின் கரத்திலே கொடுத்தேன்!.. தாயே!.. பூமாதேவி!.. வாராது வந்த வைடூரியமே!.. மகளாய் வந்த மாணிக்கமே!.. மனம் கொண்டு நின்ற மரகதமே!.. தந்தையென்று தருக்குற்று இருந்தாலும் என்னைத் தள்ளத் தகாது தங்கமே!..
புன்னகைத்தாள் பூமாதேவி!..
அன்பினுக்கு இலக்கணம் என் தந்தை!.. தமக்கு ஏது குறை!.. அன்பும் தர்மமும் தழைத்திருந்த இந்த தலத்தில் பெருமானைக் கண்டு இன்புறும் எவர்க்கும் ஆயுளும் ஆரோக்யமும் ஐஸ்வர்யமும் மிகுத்து ஓங்கும்!.. மேன்மையுற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வர்!.. தாம் மனம் களிக்கும்படி ஸ்வாமியும் நானும் எக்காலமும் இங்கேயே விளங்குவோம்!.. மங்கலம் உண்டாகட்டும்!..
- என வரமழை பொழிந்தாள்..
ஐப்பசி மாதம் திரு ஓண நன்நாளில் - பெருமானுக்கு பூமாதேவியை கன்யா தானம் செய்து கொடுத்து - மங்காப்புகழ் கொண்டார் மார்க்கண்டேய மகரிஷி!..
உப்பிலா அமுதும் உவப்பு!.. என வந்த அமுதன் ஒப்பிலியப்பனாக நின்றான்.
ஆராஅமுதனை ஆரத் தழுவி அவன் திருமார்பினில் பொருந்திய பூமாதேவி - எங்கும் துளசி எனப் பொலிந்து வளர்ந்தாள்.
நாளும் பொழுதும் புண்ணியனின் திருமார்பு அகலாத திருத்துழாய் எனப் பேருவகை கொண்டாள் பூமாதேவி!..
உலகமும் ஆனந்தக் களி கொண்டது!..
புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் சீர் மல்கு
ஒப்பிலியப்பன் திருக்கோயில் தரிசனம்.
* * *
திருத்தலம் - திருவிண்ணகரம்
(ஒப்பிலியப்பன் திருக்கோயில்)
மூல மூர்த்தி - ஸ்ரீஒப்பிலியப்பன்
தாயார் - ஸ்ரீபூமாதேவி
தலவிருட்சம் - துளசி
தீர்த்தம் - அஹோராத்ர தீர்த்தம்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்
விமானம் - சுத்தானந்த விமானம்.
ப்ரத்யட்க்ஷம் - மார்க்கண்டேயர், கருடன், காவேரி.
மங்களாசாசனம் - பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்.
தலப்பெருமை.
திருப்பாற்கடல் கிடந்த பெருமான் - ஸ்ரீ பூமாதேவியை அவள் விருப்பப்படி - திருத்துழாய் என ஏற்றுக் கொண்ட திருத்தலம்.
உப்பிடுவதற்கு அறியாள் எனினும் உகந்தவள் எனக்கு!.. என்று அணைந்த திருத்தலம். அதன்படி உப்பில்லா நிவேத்யம் கொண்டருளும் திருத்தலம்.
மார்க்கண்டேய மகரிஷிக்கு மணவாளத் திருக்கோலம் காட்டியருளிய திருத்தலம்.
மூலஸ்தானத்தில் பெருமானின் வலப்புறம் ஸ்ரீ பூமாதேவியும் இடப்புறம் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷியும் விளங்குகின்றனர்.
பிரம்மோற்சவ திருவிழாக்களின் போது மகரிஷிக்குக் கொடுத்த வாக்கின்படி தாயாருடன் திருவீதி எழுந்தருள்கின்றார் - பெருமாள்.
ஆவணி மாத திருவோணத்தன்று விடியற் காலையில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி உதய கருடசேவை
அருளியபின் தக்ஷிண கங்கை என்னும் நாட்டாறு தீர்த்தத்தில் திருமஞ்சனம் கண்டருள்கின்றார்.
ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று ஸ்வாமி சந்நிதியில் சாம்பிராணி
தூபம் காட்டப்பட்டு அகண்ட தீபம் ஏற்றப்படுவது சிறப்பு.
ஒப்பிலியப்பன் கோயில் கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேஸ்வரத்தில் உள்ளது.
பாடல் பெற்ற சிவஸ்தலமாகிய ஸ்ரீ நாகேஸ்வரன் திருக்கோயிலுக்கு வெகு அருகாமையில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.
பேயாழ்வார் - மங்களாசாசனம்.
மூன்றாம் திருவந்தாதி - ஏழாம் திருமொழி.
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்
கொண்டங்கு உறைவார்க்குக் கோயில் போல் வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை
இளங்குமரன் தன் விண்ணகர். (2342)
நம்மாழ்வார் - மங்களாசாசனம்.
ஆறாம் பத்து - மூன்றாம் திருவாய்மொழி.
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமானென்னை ஆள்வானை
செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே.(3473)
ஓம் ஹரி ஓம்
* * *
ஒப்பிலியப்பன் பல முறை சென்றிருக்கிறேன்
பதிலளிநீக்குஆனாலும் தகவல்களை இன்றுதான் அறிகிறேன்
நன்றி ஐயா
அன்புடையீர்..
நீக்குதங்களின் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி.
அனுபவித்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் ஐயா..
நீக்குதங்களின் இனிய வருகை கண்டு மகிழ்ச்சி..
அன்பின் வாழ்த்துரைக்கு மிக்க நன்றி..
ஒப்பில்லாத பெருமான் உப்பிலியப்பப் பெருமாள்!
பதிலளிநீக்குஎன்ன ஒரு அருமையானத் தகவல் ஏற்கனவே அறிந்திருந்தாலும், தங்கள் எழுத்து நடையில் அதை வாசிக்க பக்தி மணம் கமழ, அழகிய தமிழில் இனிமையாக இருக்கிறது ஐயா!
அன்பின் துளசிதரன்..
நீக்குதங்கள் இனிய வருகையும் அன்பின் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஒப்பிலியப்பனின் ஒப்பிலாக் கருணைக் கடலில்
நானும் மூழ்கினேன்!
எத்துணை சிறப்பு வரலாறு! பக்திப் பரவச நிலை என்பதை இப்பதிவைப்
படிக்கும்போது உணர்ந்தேன் ஐயா!
புல்லரித்தது உள்ளமும் உடலும்!. படங்களும் அற்புதம்!
அனுபவித்து எழுதிய உங்கள் எழுத்து நடை என்னவெனச் சொல்வேன்!..
மிக மிக அருமை!
நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!
அன்பின் சகோதரி..
நீக்குஒப்பிலியப்பனைப் பற்றி பதிவிடும் போது நானும் மனம் நெகிழ்ந்து விவரிக்க இயலாத மகிழ்ச்சியில் இருந்தேன்..
அனைத்தும் அந்த ஆராஅமுதனின் அருள் விளையாடல்!..
தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..
காலங்களைக் கடந்த காரணன்!.. பரிபூரணன்!.. அவனே நாரணன்!..
பதிலளிநீக்கு- எனக் கண்டுணர்ந்து மெய் சிலிர்த்தார்.
அக்காரக்கனியாய் சுவைக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.
அன்புடையீர்..
நீக்குதங்களின் இனிய வருகையும் அன்பின் பாராட்டுரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
ஒப்பிலியப்பன் பற்றிய அருமையான பதிவு கண்டு மெய் சிலிர்த்தேன் படங்களும் அற்புதம் நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குஅன்பின் சகோதரி..
நீக்குதங்களின் இனிய வருகையும் அன்பின் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..
ஒப்பில்லாப்பனின் பெருமைகளை படிக்க படிக்க ஆனந்தம்.
பதிலளிநீக்குஅருமையான் ஒப்பிலியப்பனின் படங்கள் அழகு.
நன்றி.
வாழ்த்துக்கள்.
அன்புடையீர்.,
நீக்குதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..