நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 11, 2014

திருப்பல்லாண்டு

புண்ணிய புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை!..

ஸ்ரீ வைகுந்தவாசன் அனைவருக்கும் மங்கலங்களைத் தந்தருள வேண்டும்!..

இன்று பரமனுக்கு -  பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..


பன்னிரு ஆழ்வார்கள் அருளிச்செய்த திருப்பாடல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தின் முதல் ஆயிரம் பாக்களில் முதல் பன்னிரு பாடல்களே திருப்பல்லாண்டு!..

திருப்பல்லாண்டு அருளியவர் பெரியாழ்வார் எனும் ஸ்ரீவில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர்.

இவரே - திருத்துழாய் வனத்தில் தோன்றிய கோதை நாச்சியாரை வளர்த்தவர்.

மதுரையில் நடைபெற்ற சமய வாதத்தில் பண்டிதர்கள் பலரையும் வென்றதனால், பாண்டிய மன்னன் பெரியாழ்வாரை யானையின் மீது அமர்த்தி சிறப்பு செய்தான்.


யானையின் மீது ஆரோகணித்து ஆழ்வார் வரும் அழகைக் காணுதற்கு - என திருமால் திருமகளோடு கருட வாகனத்தில் எழுந்தருளி ஆழ்வாருக்கு எதிரே சேவை சாதித்தருளினார். 

அந்தக் கோலாகலக் காட்சியைக் கண்ட ஆழ்வார்  - இறைவனின் வடிவழகில் மயங்கினார்.  ஆயிரக்கணக்கில் கூடி நின்ற மக்களும் அந்த அரிய காட்சியைக் கண்டு கை தொழுதனர்.  

அப்போது - இறைவனுக்கு கண்திருஷ்டியாகி விடுமோ என்றஞ்சிய ஆழ்வார் திருப்பல்லாண்டு பாடினார்.

ஆழ்வாருக்குப் பின் வந்த வைணவப் பெரியோர்கள் - இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற ஆழ்வாரது பக்தி மேன்மையை உணர்ந்து - வரிசைக் கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

வைணவத் திருக்கோயில்களில்  நாள் வழிபாட்டின் போதும், பிரம்மோற்சவ காலங்களில் சுவாமி திருவீதி எழுந்தருளும்போதும் வீதிவலம் வந்தபின் மூலஸ்தானம் திரும்பும் போதும் பல்லாண்டு இசைக்கப்பட்ட பின்னரே சுவாமி திருக்கோயிலுக்குள் எழுந்தருள்கின்றார்.


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!..

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா - உன்
சேவடி செவ்வித் திருக்காப்பு.. {1}

அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறை யும்சுட ராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே.. {2}

வாழாட் பட்டு நின் றீருள்ளீரேல்வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.. {3}


ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடு மனம் உடையீர்கள் வரம்பு ஒழிவந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று
பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.. {4}  

அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே..{5}


எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்றுபாடுதுமே.. {6}

தீயிற் பொலிகின்ற செஞ்சுடர் ஆழிதிகழ் திருச்சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.. {7}


நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.. {8}

உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.. {9}

எந்நாள் எம்பெருமான் உந்தனக்கு அடியோம் என்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.. {10}


அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன்
செல்வனைப் போல திருமாலே நானும் உனக்குப் பழஅடியேன்
நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே.. {11}

பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.. {12}

ஓம் நமோ நாராயணாய!..
* * *

14 கருத்துகள்:

  1. எப்படிப்பட்ட அருமையான தமிழ் மொழி ஆளுமை ஆழ்வார் பாசுரங்களில்?!! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      அதனால் தானே - தமிழுக்கும் அமுதென்று பேர் - என்று பாடினார் பாவேந்தர் பாரதி தாசன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை இன்று
    பல்லாண்டு பல்லாண்டு என
    பிரபந்தத்தைப் பாடிட,
    பாடி மகிழ்ந்திட'
    அருள் புரிந்த
    எம் வேங்கடவா !!
    தஞ்சையில் குடி இருக்கும்
    துரை செல்வராசுக்கு
    தரணியில் இருக்கும் நலமெல்லாம்
    தந்தருள்வாய்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களன்பான வாழ்த்து மடல் கண்டு தலைவணங்கி நிற்கின்றேன்.
      தாங்களும் நலமெல்லாம் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திட பரமனை வேண்டிக் கொள்கின்றேன்.. மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் ஐயா!

    கண்கொள்ளாக காட்சியுடன் பல்லாண்டுப் பெருமையையும்
    இனிமையையும் உணரத்தந்தீர்கள்!
    மிகச் சிறப்பு! அருமை என்று மட்டுமே கூறிச் செல்ல முடியவில்லை!

    நீங்களும் உங்கள் குடும்பத்தவரும் பெறற்கரிய பேறெல்லாம் பெற்று
    பல்லாண்டு நலமோடு வாழப் பரந்தாமனை வேண்டி
    மனதார வாழ்த்துகிறேன் ஐயா!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் சகோதரி..
      தங்களின் வாழ்த்துரை கண்டு மனம் நெகிழ்கின்றது..
      தங்கள் வருகையும் கருத்துரையும் ஊக்கமளிக்கின்றது.
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. ஐயா,

    அழகிய படங்களில் தெய்வீக கடாட்சத்துடன் பாரசுரமும் படிக்கக் கொடுத்து எங்களுக்கு இறையருள் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள்... அருமை... அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்களின் வருகையும் இனிய கருத்துரையும் ஊக்கமளிக்கின்றன.
      மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

      நீக்கு
  5. பெருமாளுக்கே கண்ணேறு கழிக்கும் திருப்பல்லாண்டு படிக்க படிக்க திகட்டாதவை. அவர் அருள் கிடைக்கக் வேண்டுவோமாக. உங்கள் பதிவில் பல்லாண்டு படிக்கக் கிடைத்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஆழ்வார்களின் தமிழ் - அல்லலை அகற்றி ஆனந்தத்தை அளிப்பது..
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. திருப்பல்லாண்டு படிக்கப் படிக்க இனிக்கிறது ஐயா
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வரவும் இனிய கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. திருபல்லாண்டு பாடலும் அழகிய தெய்வீக படங்களும் பகிர்ந்த பதிவு மிக அருமை.
      வாழ்த்துக்கள்.

      நீக்கு
    3. அன்புடையீர்.,
      தங்கள் வருகையும் இனிய கருத்துரையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..