நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மார்ச் 06, 2014

நாட்டியாஞ்சலி

மஹா சிவராத்திரி நாட்டியாஞ்சலி விழா..


நாட்டியாஞ்சலி முதன்முதலில் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் திருக்கோயிலில் 1981ல் தொடங்கப்பட்டது.

தற்போது - தஞ்சாவூர், கும்பகோணம், திருஆரூர், திருஐயாறு , மயிலாடுதுறை - என பல திருக்கோயில்களிலும் கோலாகலமாக நிகழ்கின்றது.


தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலில், பிப். 27ல் தொடங்கிய  பிரகன் நாட்டியாஞ்சலி  நேற்று (மார்ச்.5)  நிறைவு பெற்றது.


தஞ்சை பிரகன்நாட்டியாஞ்சலியில் - பரதம், கதக், மோகினியாட்டம், ஒடிசி, குச்சிப்புடி, ஷத்ரியா, மணிப்புரி - நடனங்கள் இடம் பெற்றன.


பெரிய கோயிலில்  மஹாசிவராத்திரி அன்று - மாலை ஆறு மணி முதல் வெள்ளிக் கிழமை அதிகாலை மூன்று மணி வரை நாட்டியாஞ்சலி நிகழ்ந்தது.

அதன் பின் மற்ற நாட்களில் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெற்றது.



தஞ்சாவூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சார்ந்த நாட்டியப்பள்ளி மாணவ, மாணவிகளும் நடனக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.  மேலும்,

கொச்சி, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, புவனேஸ்வரம், கொல்கத்தா, புதுதில்லி - என நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இலங்கை, துபாய், அமெரிக்கா, ஆஸ்திரேலியா - என வெளிநாடுகளிலிருந்தும் அறுநூறுக்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள்  பங்கேற்றனர்.





இந்த விழாவினை - பிரகன் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை, தென்னகப் பண்பாட்டு மையம், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் ஆகியவை முன்னின்று நடத்த - தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையும், சுற்றுலாத் துறையும்  துணை நின்றன.




பிரகன்நாட்டியாஞ்சலியில் முதல் நிகழ்ச்சியை நடத்திய இலங்கைத் தமிழ்ப் பெண்கள் - தஞ்சை பெரியகோயிலில் நடனமாடியதை மிகவும் பெருமையாகக் கருதுவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

திருஆரூர் ஸ்ரீதியாகராஜர் திருக்கோயிலில்- பிப்.26 முதல் மார்ச்.2 வரையிலும்,   

கும்பகோணம் ஸ்ரீஆதிகும்பேசுவரர் திருக்கோயிலில் பதின்மூன்றாம் ஆண்டு நாட்டியாஞ்சலி -  பிப்.27 முதல் மார்ச்.2 வரையிலும்,

மயிலாடுதுறை ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலில்  மயூர நாட்டியாஞ்சலி - பிப்.26 முதல் பிப்.28 வரையிலும் ,

தஞ்சை பத்மஸ்ரீ நாட்டியப் பள்ளி
பட்டுக்கோட்டை பரத கலார்ப்பணா

திருவையாறு ஸ்ரீஐயாறப்பர் திருக்கோயிலில் பிப்.26 முதல் பிப்.28 வரையிலும் நாட்டியாஞ்சலி  நடைபெற்றது.   

இந்த ஆண்டு -  பந்தநல்லூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் திருக்கோயிலிலும் மற்றும் நாகப்பட்டினத்திலும்  நாட்டியாஞ்சலி  நடைபெற்றதாக அறிய முடிகின்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியான  பிப்.27 வியாழன்று தொடங்கிய 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி மார்ச்.3 திங்களன்று  நிறைவு பெற்றது.



சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 1981ல் தொடங்கியபோது பத்து நாட்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலி, தற்போது ஐந்து நாட்கள் மட்டுமே நிகழ்கின்றது. 

மேலும் - 1986-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ந்த நாட்டியாஞ்சலி - தற்போது  திருக்கோயிலின் திருச்சுற்றில்  அமைக்கப்பட்ட மேடையில்  நடைபெறுகிறது. 


சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 1981 முதல்  நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி விழாவில் இதுவரையிலும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் என -  12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களுக்காக ஆனந்த நடனம் புரிந்த ஸ்ரீநடராஜப் பெருமானின் திருக்கோயிலான சிதம்பரத்தில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் நடனமாடுவதைத் தங்களின் பிறவிப் பயனாகக்    கருதுகின்றனர்.



மக்கள் பரதக் கலையின் மேன்மையை உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றனர். திருக்கோயில்களில் நிகழும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பதே நாட்டியாஞ்சலி  வெற்றிகரமாக நிகழ்வதற்குக் காரணமாகின்றது.  

அனைத்து நிகழ்வுகளிலும் -  

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் - பல நூறு - இளங்கலைஞர்களும்  புகழ்பெற்ற முன்னணிக் கலைஞர்களும்   உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.



ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிக்க - பரதம், குச்சிபுடி, கதக், ஜூகல்பந்தி, ஷத்ரியா, மணிப்புரி- போன்ற பாரம்பரிய நடனங்கள் பக்தி பூர்வமாக நிகழ்த்தப் பட்டுள்ளன. 

இந்தப் பதிவினைத் தொகுப்பதற்கு,  தினமணி, தினத்தந்தி, தினமலர் - நாளிதழ்களின் - செய்திகள் துணை புரிந்தன.

புகைப்படங்கள், Facebook - ல்  இருந்து பெறப்பட்டவை.
வலையேற்றிய திரு. குணா அமுதன் மற்றும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

பரவெளியாகிய தில்லைத் திருச்சிற்றம்பலம் எனும் பொன்னம்பலத்தின் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜப்பெருமானும் அன்னை சிவகாமியும்  சர்வ சதாகாலமும் ஆனந்த நடனம் ஆடுகின்றனர் என்பர் சான்றோர். 

அந்த ஆனந்த நடனம் அன்பர்களின் மனம் எனும் அம்பலத்தில்
சர்வ சதாகாலமும் நினைவு கூரப்படவேண்டும். 

அது - அனைவருக்கும் கை கூடி வரவேண்டும்!..  

ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே!..

திருமூலர்.

சிவாய திருச்சிற்றம்பலம்!..

16 கருத்துகள்:

  1. நாட்டியாஞ்சலி செய்திகளும் , படங்களும் அருமை ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. அருமையான படங்களுடன் தகவல்களுக்கு நன்றி ஐயா...

    படங்களை வலையேற்றிய நண்பர்களுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கு ஓர் ஆய்வாளர் செய்திகளைத் தேடி தொகுத்து, ஆராய்ந்து ஏதாவது ஒரு பொருண்மையின் அடிப்படையில் முழுமையாக விவாதித்து முன்வைப்பதைப் போல தங்களின் பதிவு உள்ளது. எந்த செய்தியும் விடுபடாமல் உரிய புகைப்படங்களுடன் அரிய முயற்சி மேற்கொண்டு தாங்கள் முன்வைத்தது பாராட்டுக்குரியது. நேற்று (5.3.2014) நானும் என் மனைவியும் தஞ்சாவூர் பெரிய கோயில் நாட்டியாஞ்சலியின் அனைத்து நிகழ்வுகளையும் பார்த்தோம். நிறைவு நாள் என்ற நிலையில் இரவு சுமார் 10.00 மணி வரை நீடித்தது. ஒடிஸ்ஸி, கோலாட்டம், நாட்டிய நாடகம் என்ற பல வகையான நிகழ்வுகளைக் கண்டோம். பெரியகோயில் பின்புலத்தில், நிலவொளியில் நடைபெற்ற அந்த நிகழ்வுகள் மனதில் பதிந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      ஆர்வத்தால் பதிவு செய்த தகவல் தொகுப்பினை - தாங்கள் மனமுவந்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி..
      தங்களின் வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு
  4. 24x7 தொலைக்காட்சியின் நிருபரைப் போல, உடனடியாகவும் அதே சமயம் உள்ளடக்கம் பூரணமாகவும் செய்தி தரும் உழைப்பு உங்களுடையது . நாட்டியாஞ்சலியை நேரில் பார்த்த அனுபவம் பெற்றேன் . நன்றி. .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகை கண்டு மகிழ்ந்தேன். தங்களுடைய கருத்துரை என்னை மிகவும் உற்சாகப்படுத்துகின்றது. மிக்க நன்றி..

      நீக்கு
  5. ஒரே நேரத்தில் ஆயிரம் கலைஞர்கள் இசையில் பங்கெடுத்தது தஞ்சையில்தானே. ஒரு காலத்தில் கோவில்களில் தேவதாசிகளே நடனமாடி வந்தனர் என்று படித்த நினைவு, நுண்கலைகள் இப்போது பெருமை சேர்க்கின்றன. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரைத்து வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. நாட்டியாஞ்சலியை கண்முன் கொண்டு வந்து விட்டீர்களே! நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி!..

      நீக்கு
  7. ஆனந்த நடனம் அன்பர்களின் மனம் எனும் அம்பலத்தில்
    சர்வ சதாகாலமும் நினைவு கூரப்படவேண்டும்.

    அழகான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கு நன்றி..
      தங்களின் கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி!

      நீக்கு
  8. நாட்டியாஞ்சலி பற்றிய செய்திகள் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    படங்களும் நன்று.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்களுடைய வருகையும் இனிய கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..