நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

கந்தன் கருணை

திருச்செந்தூரில் மாசித் திருவிழா 16.2.2013 முதல் கொடியேற்றத்துடன், தொடங்கி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படைவீடாகும்

மேலும், கடற்கரையில் அமைந்துள்ள திருத்தலம்..

மூலஸ்தானத்தினுள் சிவலிங்கம் விளங்குகின்றது..

கருவறையில் முருகப்பெருமான் சிவபூஜை செய்தவண்ணம் திகழ்கின்றான்.

வலது திருக்கரத்தில் தாமரைப் பூவுடனும்,
இடது மேல் திருக்கரத்தில் ஜபமாலையுடனும் திருக்கோலம்..

சூரபத்மனுடன் போர் புரியும் போது - படை வீரர்களுக்கு ஏற்பட்ட தாகத்தைத் தீர்ப்பதற்கு - 

முருகன் தனது வேலினால் உருவாக்கிய தீர்த்தமே - நாழிக் கிணறு..

கடற்கரையின் மிக அருகில் நல்ல தண்ணீர் ஊற்று அமைந்திருப்பது - இயற்கையின் அதிசயம்.

சிக்கலிலே வேல் வாங்கி செந்தூரில் போர்முடித்தான் - எனும் சிறப்புக்குரியது.

எண்ணற்ற சிறப்புக்களை உடையது - திருச்செந்தூர்.

பகழிக் கூத்தருக்கு ஏற்பட்டிருந்த வயிற்றுவலி தீர்ந்தது - இங்கே தான்..

பிறவியிலேயே பேச இயலாதிருந்த குமர குருபரர் - பேசுந்திறன் பெற்றதும் - இங்கே தான்!..

திருச்செந்தூரில் அருணகிரி நாதருக்கு - ஆனந்த நடனம் காட்டியருளினான் - முருகப்பெருமான்..

அந்த  - திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்த அருணகிரிநாதர் தம் மீது கந்தவேள் காட்டியருளிய  கருணையினைப் பாடி மகிழ்கின்றார்.

இவ்வேளையில், அந்தத் திருப்புகழினைச் சிந்திப்போம்!...
  
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
     தண்கழல்சி லம்புடன் .. கொஞ்சவேநின்

தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
     சந்தொடம ணைந்துநின்  ..  றன்புபோலக்

கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
     கஞ்சமலர் செங்கையுஞ்  ..  சிந்துவேலும்

கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
     கண்குளிர என்றன்முன் .. சந்தியாவோ

புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் .. கொண்டபோது

பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் .. சிந்தைகூரக்

கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சிநட னங்கொளுங் .. கந்தவேளே

கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
     கும்பமுனி கும்பிடுந் .. தம்பிரானே!..


செந்திலில் அருணகிரிநாதருக்குத் திருநடனம் காட்டியருளிய கந்தவேளின்  கருணையைப் போற்றிக் கைகூப்பி வணங்குவோம்!.

வெங்காள கண்டர்கைச்சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடராழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங்கல்லி
வெல்லாதெனக் கருதியே

சங்க்ராம நீசயித்தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச் 
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்டநெடுவேல்

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கௌமாரி கமலாசனக் 
கன்னி நாரணிகுமரி த்ரிபுரை பயிரவி அமலை
கௌரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச் 
சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொன் திருக்கை வேலே!..
(வேல் வகுப்பு)

வந்த வினையும் வருகின்ற வல்வினையும் 
கந்தன் என்று சொல்லக் கலங்கும்!...
வேலும் மயிலும் துணை!...
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..