நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 17, 2026

தமிழமுது


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி
 முதல் வெள்ளி


இன்று
திருநாவுக்கரசர் அருளிச்செய்த
நம சிவாய திருப்பதிகம்

நான்காம் திருமுறை
திருப்பதிக எண் 11

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே.. 4/11

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
நாவினுக் கருங்கல நம சிவாயவே..2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை ஒன்று மில்லையாம்
பண்ணிய உலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நம சி வாயவே..3

இடுக்கண்பட் டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
அடுக்கற்கீழ்க் கிடக்கினும் அருளி நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நம சிவாயவே..4

வெந்தநீ றருங்கலம்
  விரதி கட்கெலாம்
அந்தணர்க் கருங்கலம்
  அருமறை ஆறங்கம்
திங்களுக் கருங்கலம்
  திகழு நீண்முடி
நங்களுக் கருங்கலம்
  நம சிவாயவே.  5

சலமிலன் சங்கரன்
  சார்ந்த வர்க்கலால்
நலமிலன் நாடொறும்
  நல்குவான் நலன்
குலமில ராகிலுங்
  குலத்திற் கேற்பதோர்
நலமிகக் கொடுப்பது
  நம சிவாயவே.  6

வீடினார் உலகினில்
  விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி
  கூடிச் சென்றலும்
ஓடினே னோடிச்சென்று
  உருவங் காண்டலும்
நாடினேன் நாடிற்று
  நம சிவாயவே.  7

இல்லக விளக்கது
  இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது
  சோதி உள்ளது
பல்லக விளக்கது
  பலருங் காண்பது
நல்லக விளக்கது
  நம சிவாயவே.  8

முன்னெறி யாகிய
  முதல்வன் முக்கணன்
தன்னெறியே சர
  ணாதல் திண்ணமே
அந்நெறி யேசென்றங்
  கடைந்த வர்க்கெலாம்
நன்னெறி யாவது
  நம சிவாயவே.  9


மாப்பிணை தழுவிய
  மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி
  பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய
  நம சிவாயப்பத்து
ஏத்தவல்லார் தமக்கு
  இடுக்க ணில்லையே.  10
திருச்சிற்றம்பலம்

இந்தப் பதிவுக்கு உந்திய
அன்பின் நெல்லை அவர்களுக்கு நன்றி

ஓம் சிவாய நம
***

8 கருத்துகள்:

  1. ஆடி முதல்நாளில் நமசிவாய பதிகம் . எல்லோர் நலனையும் காக்க அவன் பாதம் பணிகின்றோம்.

    ஓம் சிவாய நமக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி..
      நன்றியம்மா

      ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்

      நீக்கு
  2. இப்போ ஒரு வாரத்துக்கும் மேலா இதனைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

    மனதில் பதிந்ததால் அர்த்தத்தையும் தெரிந்துகொண்டேன்.

    வாரம் ஒரு பாசுரத்தில் நிச்சயம் இடம் பெறும். மனதை மயக்கும் பதிகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சி..

      நன்றி..

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. படங்களின் வாயி லாக எந்தயையும், தாயையும் பணிந்து வணங்கிக் கொண்டேன்.

    திருநாவுக்கரசர் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அருமை. படித்து இறைவனை வணங்கி கொண்டேன்.ஓம் நமசிவாய🙏 . ஓம் நமசிவாய 🙏 பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..