நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 08, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 14

கானகம் ஏகினான்

வானகமும் வையகமும் அதிர்ந்து நின்றன... 
கால தேவனின் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது... 


இந்தக் கலியுகத்தில்  தர்மத்தைப்  பரிபாலிக்க வந்த -
காருண்ய மூர்த்தி - கண் கண்ட தெய்வம் - கலியுக வரதன்  -
பக்த ப்ரியன் - ஸாது ஜனரட்க்ஷகன் - சர்வ லோக நாயகன் -

பாவப்பட்ட மக்களைக் காப்பதற்கென்று
எப்படியெல்லாம் துன்பப்பட வேண்டியிருக்கின்றது!..

இது சரியா?.. இது தர்மமா?..

மகரிஷிகள் செய்வதறியாது திகைத்து கண் கலங்கி நின்றனர்... 

கொந்தளித்துக் குமுறி எழுந்த பேரலைகளால் -
பாற்கடலில் ஆதிசேஷன் நிலை தடுமாறித் தவித்தான்...
வைகுந்த வாசனின் துயில் கலைந்தாற் போலிருந்தது...

அட்டதிக்குப் பாலகர்களும்
நவக்ரஹ நாயகர்களும் அரற்றியவாறு -
திருக் கயிலாயத்தினுள் நுழைந்தபோது  -
அங்கே அவர்களுக்கு முன்பாகவே
நான்முகனும் வாணியும் மனம் பேதலித்து நின்றிருந்தனர். 

தளிர்க் கரங்களால் - தன்னைக் கட்டிக் கொண்ட
கந்தனையும் கரிமுகனையும் அரவணைத்தவாறு -
அன்னை பராசக்தி உலகமுழுதுடைய நாயகி - 
இனி என்ன செய்வதாக உத்தேசம்!.. - என்று விழியால் வினவினாள்..

சிவமோ ஏதும் அறியாததைப் போல் புன்னகை பூத்தது...

நந்தியம்பெருமான் விநயத்துடன் -
ஐயன் திருமுகத்தினை நோக்கினார்...

கலங்க வேண்டாம்.. கலியுக வரதனை - யாம் காத்தருள்வோம்!..

மஹாவைத்யநாதனாக எழுந்தார் - ஐயன்...


அந்த அளவில் -
ஜகன் மோகினியாக திருக்கோலங்கொண்ட அம்பிகை - 
திருக்கரத்தினில் சர்வரோக நிவாரண மூலிகைத் தைலம்
நிறைந்த கலசத்தைத் தாங்கியவாறு ஐயனைத் தொடர்ந்தாள்... 

அங்கே கூடியிருந்தோர் முகங்களில் வாட்டம் நீங்கி  -
அடுத்து என்ன நிகழும் - என, ஆவல் படர்ந்தது...

ஊர் உறங்கிக் கிடந்த வேளையில்
ஒளி வடிவாக வந்த உலகாளும் நாயகனும் நாயகியும் -
பந்தள மன்னன்  செய்த புண்ணியத்தினால்  -
அரண்மனையினுள் திருப்பாதம் பதித்து நடக்கலாயினர்...  

மணிகண்ட ப்ரபுவின் சயன அறை...
மணிக் கதவங்கள் தாமாகவே வழி விட்டு நின்றன... 

ஐயனையும் அம்பிகையையும் கண்ட மாத்திரத்தில் -
படபடத்துக் கொண்டிருந்த தூண்டாமணி விளக்கின் சுடர்  -
நிம்மதியாக நின்று விளங்கியது...

அம்பிகை - தன் அன்பு மகனை நோக்கினாள்...

திட்டி விடத்தின் நஞ்சினால் - மேனி கறுத்து
நீலத் தாமரையைப் போலக் கிடந்தான் - மணிகண்டன்...

நின் தந்தைக்கும் மணிகண்டன் என்னும் பேர் உண்டு..
நீயும் அவ்வண்ணமே கொண்டனையோ!..

அங்கயற்கண்ணியின் மனம் கசிந்துருகியது...

ஆலகால விஷத்தை உண்டபின் -
கண்டம் நீல நிறமாகப் பொலிந்து விளங்கியதால்
நீலகண்டன் - எனப் போற்றப்படும் - சிவபெருமானை
சமயாச்சார்யார்கள் நால்வருமே மணிகண்டன்
என்று துதிக்கின்றனர்...

மண்ணின்றி விண் கொடுக்கும் மணிகண்டன்.. (2/43/8)
- என, திருஞானசம்பந்த மூர்த்தியும் 
மறைக்காட்டுறையும் மணிகண்டன் காண்.. (6/8/10)
- என, அப்பர் பெருமானும்
வேலை விடம் உண்ட மணிகண்டன்.. (7/16/8)
- என, சுந்தரமூர்த்தி சுவாமிகளும் 
மைந்நாண் மணிகண்டன் மன்னும்..(8/10/9)
- என, மணிவாசகப் பெருமானும் போற்றிப்புகழ்கின்றனர்... 

சகல லோகங்களும் உய்யும் பொருட்டு
நின் தந்தை ஆலகால விடத்தை உண்டு -
மணிகண்டன் எனும் பெயர் கொண்டார்....

அவ்வண்ணமே 
மணிகண்டன் எனும் பெயர் விளங்க 
நீயும் நஞ்சினை உண்டனையே!..
பெரும் புகழைக் கொண்டனையே!...

மங்கையர்க்கரசி மரகதவல்லியின்
மனம் தாய்மை மேலிட்டு உருகியது...

திருமேனி  - தீப்பிழம்பினால் சுட்டதைப் போல
ரணமாகி இருந்த - அந்த வேதனையிலும் கூட -
தெய்வத் திருமகனின் செவ்விதழ்கள்
ஸ்ரீசிவ பஞ்சாட்க்ஷரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன... 

தாய்மை பரிதவித்தது...
இப்படியும் ஆகலாமோ என் பிள்ளைக்கு !?..
- என, கருந்தடங்கண்ணியின் கண்கள் கசிந்தன.

பிள்ளைப் பாசத்தினால் மருகிய
மருவார் குழலியைப் பரமன் தேற்றினார். 

அம்பிகை - மயிலிறகினால்
மூலிகைச் சாற்றினைத் தொட்டு
மணிகண்டனின் திருமேனி முழுதும் பூசினாள். 

கடும் விஷத்தினால் பொங்கிப் பூரித்து
குருதி கசிந்திருந்த காயங்கள் -
கதிர் கண்ட பனியைப் போல - உலர்ந்தன... உதிர்ந்தன...

விஷம் வீரியமற்று - மீண்டும் வியர்வைத் துளிகளாய் வழிந்தது...
அப்படி வழிந்த விஷம் ஒரு துளியாய் உருக் கொண்டு ஒதுங்கிக் கிடந்தது... 

அதை எம்பெருமான் - திருவிழிகளால் நோக்கினார்.

அந்த விஷத்துளி  - காற்றில் ஏறிப் பறந்து -
பணத்துக்காகப்  பாதகம் புரிந்த பாம்புப் பிடாரனின்
உச்சந்தலையில் சென்று விழுந்தது...  

தடம் மாறிச் சென்றவனின் தடயம் அத்தோடு அழிந்தது...

விஷ முறிவு ஆனதும் -
மெல்ல மலர்ந்தன மணிகண்டனின் - மணிவிழிகள்... 

எதிரே - தாய் தந்தையரைக் கண்டதும்
சந்தோஷத்துடன் துள்ளி எழுந்து வலஞ்செய்து வணங்கினான். 

ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டாள் அம்பிகை... 

இனி நடக்க இருப்பது அனைத்தும் மணிகண்டனுக்கு உணர்த்தப்பட்டது... 

மணிகண்டனின் திருமேனியை -
திருநீற்றால் திருக்காப்பு செய்தார் பெருமான்... 

மணிகண்டா.. இனி உன்னால் மக்களுக்கு மங்களம் உண்டாகும்...
உன் மேனியைத் தீண்டும் காற்று கூட சர்வரோக நிவாரணியாகும்!.. 

- என்று வரம் அருளினார்.

(இந்த வரத்தினால் தான் ஸ்ரீ ஐயப்பனின்
திருமேனியில் அபிஷேகிக்கப்பட்ட -
நெய், விபூதி ஆகியன மருந்து என, ஆகி
தீராத வினைகளைத் தீர்ப்பது!..)

தங்கள் சித்தம் தந்தையே!..
- தயாபரனையும் தயாபரியையும்
தலை தாழ்ந்து வணங்கினான் மணிகண்டன்...

அந்த அளவில் -
மணிகண்டமூர்த்திக்கு ஆசி கூறிய வண்ணம்
திருக்கயிலைக்கு ஏகினர் - அம்மையப்பன்...

இன்னும் விடியாத பொழுது...

குருவிகள் எல்லாம் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன -
மணிகண்டன் நலமாக இருக்கிறான்!.. - என்று..

ஆனால் -

ஒரு சேதியும் காதுக்கு எட்டவில்லையே?..
- பரிதவித்த மந்திரி அரசமாளிகையை நோக்கி ஓடினான்..

பொழுதும் விடிந்தது...
அத்துடன்  மந்திரி எழுப்பியிருந்த
மனக்கோட்டையும் இடிந்து விழுந்தது.. 

உப்பரிகையில் மனிகண்டனைக் கண்ட மாத்திரத்தில் -
சப்த நாடியும் ஒடுங்கியது...

ஓடினான் - பாம்புப் பிடாரனைத் தேடி -
தன்னை ஏமாற்றி விட்டான் என்று நினைத்தவனாக!.. 

ஆனால்  - அன்று மாந்த்ரீகனுக்கு நேர்ந்தது போல -
பிடாரனுக்கும் நிகழ்ந்தது கண்டு - திரும்பி வந்தான் - 

அச்சத்தினால் வியர்த்து மேனியெல்லாம் நனைந்தவனாக!..

ஒன்றும் புரியவில்லையே... மாந்த்ரீகன் சொல்லிவிட்டுப் போனான்... இவனோ சொல்லாமலேயே போய் விட்டான்!.. ஒருவேளை அப்படியும் இருக்குமோ!..

தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்...

வேண்டாம் இத்தோடு விட்டு விடு!..
-  என்று மனம் ஒருபுறம் தடுத்தது...

அதேசமயம் - 
முன் வைத்த காலை பின் வைக்காதே!..
- என்று அதேமனம் மறுபுறம் கெடுத்தது...

அடுத்து என்ன செய்யலாம்?.. - வஞ்சம் கொண்ட மனம்
கிழிந்து போன சதிவலையை மீண்டும் பின்னியது..

யுவராஜன் எனப் பட்டம் சூட்டப்படுவதற்கு
இன்னும் சில தினங்களே என்று - நாட்கள் நகர்ந்தன.

அதற்குள் - அரசியின் பிரத்யேக  அழைப்பு . 

வஞ்சகத்தில் வார்த்தெடுத்த வார்த்தைகளால் -
நடந்தவற்றை விவரித்து விட்டு - 

தங்கள் மகனை அரியணையில் அமர்த்தாமல் ஓய மாட்டேன்!..
எனினும், தங்களது ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது!.. -  என்று முடித்தான்.

இன்னும் என்ன செய்ய வேண்டும்!..
- எனக்கேட்ட அரசியாரிடம்  தனது திட்டத்தினை விவரித்தான்.

இது சரியாய் வருமா!..

நிச்சயம் சரியாய் வரும்!.. இதுதான் ஒரே வழி!..

நந்தவனத்தில் பிள்ளைகளுடன்
உலவிக் கொண்டிருந்த மன்னருக்கு அவசர செய்தி ஒன்று வந்தது...
அரசியார் திடீரென உடல் நலிவுற்றார் என!..

அந்தப்புரத்தில் -  குளிகைகளும் சூரணங்களும் தைலங்களும்..
என - ஏதேதோ மருந்துகள் பரவிக் கிடந்தன...
ராஜ வைத்தியன் மூலிகைகளுக்குப் பதிலாகத்
தன் கைகளை கசக்கிக் கொண்டிருந்தான்.


அரசே.. என்னால் இயன்ற அனைத்தையும் செய்து விட்டேன்...
அரசியாருடைய தலைவலிக்கு சரியான மருந்தினை
என்னால் தர இயலவில்லை.. ஆயினும்,
பழைமையான சுவடிகளை ஆராய்ந்ததில்  -
ஒரு அற்புத மருந்து தென்படுகின்றது. ஆனால் -  

என்ன.. ஆனால் - சொல்லுங்கள் சீக்கிரம்!.. - மன்னர் அதிர்ந்தார்...

அந்த சூரணத்தைக் குழைப்பதற்கு - புலிப்பால் தேவைப்படுகின்றது!..

அடே..  உனக்குப் பைத்தியமா!.. - வேகமாகச் சீறிப் பாய்ந்தான் மந்திரி...

ஆத்திரப்படக் கூடாது... தலைவலியின் வீர்யம் அப்படி...
இதற்கான சூரணத்தை தேனிலோ பாலிலோ
குழைத்துக் கொடுக்க இயலாது... இதை நான் சொல்லவில்லை... முன்னோர்கள் வகுத்து வைத்த வைத்ய சாஸ்திரம்  சொல்லுகின்றது!..
- ராஜ வைத்தியன் சாதுர்யமாகப் பேசினான்...

எனில் - உடனே நமது வீரர்கள் அனைவரும் புறப்படுக...
வனத்தில் சென்று வேட்டையாடி எல்லாப் புலிகளையும் கொண்டு வருக!..
- மந்திரி பரபரத்தான்... 

மந்திரியார் மறுபடியும் மன்னிக்கவும்...
பயமுறுத்திப் பிடிக்கப்படும் புலியின் பால் பிரயோஜனப்படாது!..

பிறகு என்ன செய்யவேண்டும் என்கின்றாய்?..

புலியை வசப்படுத்திக் கொண்டு வரவேண்டும்...
அதுவாகப் பாலைப் பொழிந்து தர வேண்டும்!..


என்ன!.. புலி - அதுவாகப் பாலைப் பொழிந்து தர வேண்டுமா!..
நடக்கின்ற விஷயமா இது!.. பந்தள நாட்டிற்கு இப்படியும் ஒரு சோதனையா!..

பந்தள நாட்டிற்கு சோதனை தான்...
விவேகம் இருந்தால் -  வெல்லமாம்!..
- மந்திரியை வாழ்த்தினான் வைத்தியன்...

அரசியாரின் தலைவலி நீங்குதற்கு  -
புலிப்பால் கொணர்பவர்களுக்கு தக்க சன்மானம்!..
- என நாடெங்கும் அறிவித்தும் - விரும்பி வந்தார் யாருமில்லை...

மன்னர் தவித்தார்...
அரசி தலைவலியினால் அரற்றுவதைத்  தாங்கிக் கொள்ள இயலவில்லை...

சரி.. நானே புறப்படுகின்றேன்!.. - மன்னர் எழுந்தார்... 

தந்தையே!.. புலிப்பால் கொண்டு வரும் பணியை எனக்கு அருளுங்கள்!..

மணிகண்டன்  - தந்தையின் முன் நின்றான்... 

என்ன!..  - மன்னர் அதிர்ந்தார்...  


இளவரசே!.. வனத்தினுள் சென்று புலியைக் கொண்டு
வருவதென்பது பூப்பறிக்கும் வேலை அல்ல!...
- மந்திரி திறமையுடன் காய் நகர்த்தினான்...

தந்தையே!.. தங்களின் நல்லாசியும்
எம்பெருமானின் கருணையும்
என்னுடன் வரும் போது - வெற்றி நிச்சயம்...
என்னை அனுமதிக்க வேண்டுகின்றேன்!..

என் அன்புச்செல்வமே.. மணிகண்டா!..
உன்னை நான் குறைத்து மதிப்பிடுவேனா!..
ஆயினும் கொடிய மிருகங்கள் வாழும் காட்டினுள் - 


தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை!..
இது வேத வாக்கு அல்லவா!.. அப்படி இருக்க,
தாங்கள் என்னை வாழ்த்தி வழியனுப்பினால் ஆகாததும் உண்டோ?..

ஆனந்தக் கண்ணீர் தாரை தாரையாக வழிய
மணிகண்டனை அணைத்துக் கொண்டார் - மன்னர். 

மணிகண்டன் வனத்துக்குச் செல்கின்றான் என்பதை அறிந்த -
அரசியின் நெஞ்சமும் ஒரு கணம் அதிர்ந்தது...
எல்லாம் வெறும்  நாடகம்!.. நகைச்சுவை!..
-  என்று எழுந்து விடலாமா - என, நினைத்தாள்... 

ஆனால்,  மணிகண்டன்  என்னையும் என் மகனையும் -
காட்டுக்குத் துரத்தி விட்டால்?. ஐயகோ!..

மீண்டும் அழுதாள்... அரற்றினாள்... துடித்தாள்... துவண்டாள்...

தந்தையே!..தாய் படும் வேதனையை என்னால் தாள முடியவில்லை!..

சரி.. மகனே!.. பொழுது விடியட்டும்...
விடியும் பொழுது எல்லாருக்கும் நல்ல பொழுதாக விடியட்டும்!..


போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே!..
- என்று ஆதவனும் கிழக்கினில் ஆர்வமுடன் எழுந்தான்... 


கற்பூர ஆரத்தியுடன் சிவ பூஜையை நிறைவு செய்த மன்னர் -
தீர்த்தமும் திருநீறும் கொடுத்தார்.

தம் முன்னோர்களால் வழங்கப்பட்ட
சிவதண்டத்தினை மணிகண்டனின் திருக்கரத்தினில் கொடுத்தார்... 

தந்தையைப் பணிந்து வணங்கி
சிவதண்டத்தினைப் பெற்றுக் கொண்ட மணிகண்டன்
தனது கோதண்டத்தினையும் மந்த்ராஸ்திரங்களையும் எடுத்துக் கொண்டான்.. 

அத்துடன்  நித்ய சிவபூஜை கடமைக்கென -
அவல் பொரி சர்க்கரை - இவைகளையும்,
இவற்றுடன் மணிகண்டனின் தேவைக்கென
உலர்ந்த திராட்சை கற்கண்டு முந்திரி ஆகியனவற்றையும்
இரு முடிச்சுகளாகக் கட்டி அன்பு மகனிடம் வழங்கினார்... 

தந்தை கொடுத்ததைத் தனயன் வாஞ்சையுடன்
தன் தலைமேல் தாங்கிக் கொண்டான்...

திருமுடி விளங்க வேண்டிய சிரத்தினில் இருமுடி திகழ்ந்தது.

தலையினில் இருமுடிக் கட்டுடனும்
ஒரு கரத்தினில் சிவதண்டத்துடனும்
மறுகரத்தினில் கோதண்டத்துடனும்
தேஜோமயமாக நின்றிருந்த மகனைக் கண்டு  -
ஒரு கணம் மயங்கினார் - பந்தள ராஜன்...

சர்வேஸ்வரா.. உற்ற துணையாக இருந்து
என் மகனைக் காத்தருள்வாயாக!.

தந்தையைக் கனிவுடன் நோக்கினான் மணிகண்டன்.

வெண்மேகத் திரளில் இருந்து வெளிப்பட்ட -
வெங்கதிர்ச் செல்வன் - தன் கதிர்களை விரித்தான்!..

பொழுது விடிந்தும் பொருள் விடியாத மனத்தினனான  - மந்திரி,
மறைவில் இருந்தபடி - தான் வெற்றி பெற்றதாக எண்ணிச் சிரித்தான்!..

ஆனால், காலதேவனோ அந்த மந்திரியைப் பார்த்துச் சிரித்தான்..


அந்தவேளையில்  
அன்பின் வடிவமாகிய மணிகண்டன் -
தாயின் தலைவலிக்கு   -  புலிப் பால் தேடி -  
ஆனைகளும் புலிகளும் கரடிகளும் அலைந்து 
திரியும் கொடும் கானகத்தை நோக்கி - 
பூம்பாதங்கள் சிவக்க நடந்தான்...

ஓம் ஹரிஹர சுதனே
சரணம்!.. சரணம்!..
மணிகண்ட மகாப்ரவே சரணம்.. சரணம்..
ஃஃஃ 

9 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம்.

    நீலகண்ட ப்ரம்மச்சாரியின் சரிதையைத் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. // திருமுடி விளங்கவேண்டிய சிரத்தில் இருமுடி திகழ்ந்தது. //

    ஆஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! நான் நினைச்சேன் இந்த வரியை வாசித்ததும் நான் ரசித்தேன் துரை அண்ணாவிடம் இதை கோட் செய்து சொல்லனுன்னு நினைச்சு கண்டிப்பா ஸ்ரீராம் இதை ரசித்துச் சொல்லியிருப்பார்னு நினைச்சு கமென்ட் பார்த்தா அதே அதே!!

      ஆமாம் ஸ்ரீராம் நானும் இதை ரசித்தேன் ஸோ உங்கள் ஆஹா!!! அப்படியெ வழி மொழிகிறேன் துரை அண்ணா...

      கீதா

      நீக்கு
  3. சர்வேஸ்வரன் துணை இருக்க கானகத்து விலங்குகள் என்ன செய்யும்!
    //திருமுடி விளங்க வேண்டிய இடத்தில் இருமுடி திகழ்ந்தது//, அருமையாக சொன்னீர்கள்.

    காலதேவன் பாசக்கயிற்றில் மந்திரி அகப்படுவது தின்னம்.

    அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தெளிவான விளக்கம் தொடர்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  5. அழகுத் தமிழில் எழுதி வரும் ஐயன் கதை அருமை! விமரிசிக்க வார்த்தைகள் இல்லை. அடுத்த பதிவை எதிர்நோக்கி!

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான தமிழில் சீரிய கதை. தொடர்கிறேன் ஜி!

    பதிலளிநீக்கு
  7. அருமையாகப் போகிறது....தொடர்கிறோம்...

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..