நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 14, 2024

தமிழமுதம் 29


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 29
 ஞாயிற்றுக்கிழமை

 குறளமுதம்

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.. 126
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


சிற்றஞ் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்  உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.. 29
**

அதிகாலையில் உன்னை வழிபட்டு,  தாமரை மலர் போன்ற மென்மையான உனது திருவடிகளைப் போற்றுகின்ற எங்களது விரும்பங்களைக் கேட்டருள்வாயாக.. . 

பசுக்களை மேய்த்து, வாழ்கின்ற  ஆயர்குலத்தில்  அவதரித்த நீ, எங்களிடமிருந்து சிறு கைங்கரியமாவது பெற்றுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. 

உன்னிடமிருந்து பறை முதலான கொடைகளைப் பெற்றுக் கொள்வது மட்டுமல்ல.. 

மீண்டும் மீண்டும் பிறவியெடுக்கினும், உன்னுடைய உறவினர்களாகவே இருப்போம். உனக்கே நாங்கள் பணி செய்து கிடப்போம்.. 

உன் மீது அளவிலா பற்று கொண்டுள்ள எங்களுக்கு மற்ற பொருள்களின் மீது ஏற்படும் விருப்பத்தைத் தவிர்த்தருளல் வேண்டும்..
**

திருப்பாசுரம் 30


வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்  திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்குப் பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப் பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்  எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.. 30


பாற்கடலைக் கடைந்தவனும்  கேசி என்ற அரக்கனை அழித்தவனும்  பூர்ண சந்திரன் போன்று அழகுடையவனும்  புகழ்ந்து பாடிய ஆயர் மகளிர்க்குப் பறை தந்து அருள் செய்தவனும்  ஆகிய 
கண்ணனின் வரலாற்றை -


தாமரைப் பூ மாலை அணிந்திருக்கும்  பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் அருளிச் செய்த தமிழ்ப் பாமாலையின் முப்பது பாடல்களையும் தவறாமல் உளத் தூய்மையுடன் பாடுபவர்கள் செல்வத் திருமாலின் நல்லருளால்  பெற்று இன்புற்று வாழ்வர்..
**

ஆண்டாள் திருவடிகள் போற்றி..
ஆழ்வார் திருவடிகள் போற்றி..
அரங்கன் திருவடிகள் போற்றி.. போற்றி!..

கோவிந்தோ கோவிந்த..
கோவிந்தோ கோவிந்த..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. 7/39/10
-: சுந்தரர் :-
**

தரிசனத்
திருத்தாண்டகம்
(திருமறைக்காடு - வேதாரண்யம்)


மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்
முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின்கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்
ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பால விருத்தனும் ஆனான் கண்டாய்
பவளத் தடவரையே போல்வான் கண்டாய்
மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 9


அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்
ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய்
துயரிலங்கை வேந்தன் துளங்க அன்று
சோதிவிரலால் உற வைத்தான் கண்டாய்
பெயரவற்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்
பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய்
மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே..10
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்
அருட்பத்து


மருளனேன் மனத்தை மயக்கற நோக்கி
மறுமையோ டிம்மையுங் கெடுத்த
பொருளனே புனிதா பொங்குவா ளரவம்
கங்கைநீர் தங்குசெஞ் சடையாய்
தெருளுநான் மறைசேர் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
அருளனே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே..9


திருந்துவார் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே வியசீர்
இருந்தவா றெண்ணி ஏசறா நினைந்திட்டு
என்னுடை யெம்பிரான் ஒன்றினை
றருந்தவா நினைந்தே ஆதரித் தழைத்தால்
அலைகடல் அதனுளே நின்று
பொருந்தவா கயிலை புகுநெறி இதுகாண்
போதராய் என்றரு ளாயே.. 10
-: மாணிக்கவாசகர் :-
**

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம்போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி..
-: உமாபதி சிவாசாரியார் :-
**
எதிர்வரும் நாட்களில் நலமே விளைக!..

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..

அழகு செய்த நவீன சித்திரங்கள் பலவும் 
Fb ல் பெறப்பட்டவை..
**

அனைவருக்கும்
அன்பின் இனிய
திருப்பொங்கல் நல்வாழ்த்துகள்..

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்

சிவாய
திருச்சிற்றம்பலம்
***

7 கருத்துகள்:

  1. படித்தேன், மகிழ்ந்தேன். போகி திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய். ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    பதிலளிநீக்கு
  3. அமுதம் அமுதாக இருக்கிறது. போகி நன்னாள் வாழ்த்துகள்!

    துளகிதரன்

    பதிலளிநீக்கு
  4. அங்கண்மா ஞாலத்தும், சிற்றன்சிறுகாலே வும் சரணாகதித் தத்துவம் என்பது என் தனிப்பட்ட புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  5. அங்கண்மா ஞாலத்தும், சிற்றன்சிறுகாலே வும் சரணாகதித் தத்துவம் என்பது என் தனிப்பட்ட புரிதல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஆண்டாள் திருவடிகள் போற்றி.அரங்கநாதன் பாதங்களை வணங்குகிறேன்.

    ஓம் சிவாய நமக.

    அனைவருக்கும் போகி, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்.

    அனைவர் வாழ்வும் இனித்திருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  7. அனைத்தும் அருமை. ஆண்டாள் திருவடிகளே சரணம்.
    ஓம் நம சிவாய
    பாடல்களை பாடி இறைவனை தரிசனம் செய்து கொண்டேன்.
    படங்கள் எல்லாம் அருமை.
    பொங்கல் நல் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..