நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, செப்டம்பர் 30, 2023

திருப்பாசுரம் 2

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 13
இரண்டாம் சனிக்கிழமை

திவ்யதேசம்
திருநறையூர்
நாச்சியார் கோயில்


ஸ்ரீ நறையூர்நம்பி வஞ்சுளவல்லி

ஹேம விமானத்தின் கீழ்
நின்ற திருக்கோலம்


ணிமுத்தா தீர்த்தம்
வகுளம் தல விருட்சம்


மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் 
கல்கருடன் சிறப்பு


கலங்க முந்நீர் கடைந்து  அமுதம் கொண்டு  இமையோர் 
துளங்கல் தீர நல்கு சோதிச் சுடர் ஆய
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம் உடையான் ஊர்
நலங்கொள் வாய்மை  அந்தணர் வாழும் நறையூரே.. 1488

முனையார் சீயம் ஆகி  அவுணன் முரண் மார்வம்
புனைவாள் உகிரால்  போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்
சினையார் தேமாஞ் செந் தளிர் கோதிக் குயில் கூவும்
நனையார் சோலை சூழ்ந்து அழகாய நறையூரே.. 1489.   
 
ஆனை புரவி தேரொடு காலாள் அணிகொண்ட
சேனைத் தொகையைச் சாடி இலங்கை செற்றான் ஊர்
மீனைத் தழுவி வீழ்ந்து எழும் மள்ளர்க்கு அலமந்து
நானப் புதலில் ஆமை ஒளிக்கும் நறையூரே..      1490.  
 
உறியார் வெண்ணெய் உண்டு உரலோடும் கட்டுண்டு
வெறியார் கூந்தல்  பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்
பொறியார் மஞ்ஞை பூம்பொழில்தோறும் நடம் ஆட
நறுநாள் மலர்மேல்  வண்டு இசை பாடும் நறையூரே.. 1491.  

விடையேழ் வென்று மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பனாய்
நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர்
பெடையோடு அன்னம்  பெய்வளையார் தம் பின்சென்று
நடையோடு இயலி நாணி ஒளிக்கும் நறையூரே.. 1492

பகுவாய் வன்பேய்  கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு
புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதான் ஊர்
நெகுவாய் நெய்தல் பூ மது மாந்தி கமலத்தின்
நகுவாய் மலர்மேல்  அன்னம் உறங்கும் நறையூரே.. 1493.  
-: திருமங்கையாழ்வார் :-

 நன்றி 
நாலாயிர திவ்ய ப்ரபந்தம்
**

ஓம் ஹரி ஓம்
***

வெள்ளி, செப்டம்பர் 29, 2023

திருப்புகழ்

      

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 12
 வெள்ளிக்கிழமை

இன்றைய 
திருப்புகழ்
தில தர்ப்பணபுரி
திலதைப்பதி


 இறைவன் 
ஸ்ரீ முத்தீஸ்வரர்
அம்பிகை 
ஸ்ரீ ஸ்வர்ணவல்லி

தலவிருட்சம் மந்தாரை
தீர்த்தம் சூரிய தீர்த்தம் அரசிலாறு

திருஞானசம்பந்தர் திருப்பதிகம் 
அருளிச்செய்த திருத்தலம்..

இந்தத் திருத்தலம் 
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில், 
பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கிமீ., 
தொலைவில் அமைந்துள்ளது..


தனனத் தனனா ... தனதான

இறையத் தனையோ ... அதுதானும்
இலையிட் டுணலேய் ... தருகாலம்
அறையிற் பெரிதா .. . மலமாயை
அலையப் படுமா ... றினியாமோ..

மறையத் தனைமா ... சிறைச்சாலை
வழியுத் துயர்வா ... னுறுதேவர்
சிறையைத் தவிரா ... விடும்வேலா
திலதைப் பதிவாழ் .... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


 ஒருவருக்கு சிறிதளவாவது
உணவு இலையில்  இட்டபின்
உண்ணுதல் எனும் அறநெறி இன்றி
ஏய்த்துத் திரிந்திருந்த காலம்

அதைப் பற்றிச் சொல்வதானால் 
அந்த நெறியை விட்டிருந்த காலம்தான் 
மிகப் பெரியது.

மும்மல மாயையிலும் அலைந்து 
திரிந்த எனக்கு இத் தீயநெறி -  
இனியும் அமையுமோ..

 வேதம் கற்ற பிரம்மனை  
சிறைச்சாலைக்கு அனுப்பி
வைத்தவனே..

 (அசுரர்களால் அடைபட்ட)
தேவர்களின் சிறையை 
நீக்கி அருள் புரிந்த வேலவனே..

திலதைப்பதி என்னும்
திருத்தலத்தில் 
வாழ்கின்ற பெருமாளே..
**
 
முருகா முருகா
முருகா முருகா

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

வியாழன், செப்டம்பர் 28, 2023

இட்லி..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 11
வியாழக்கிழமை


நமது காலை உணவு வகைகளில் முதல் இடத்தில் இருப்பது இட்லி!..

முதல் நாளே சரியான அரிசியையும் உளுத்தம் பருப்பையும் சுத்தம் செய்து ஊற வைத்து மாலைப் பொழுதில் அவர்களும் இவர்களுமாக வீட்டுக் கதை பேசிக் கொண்டு அரிசியையும் உளுத்தம் பருப்பையும் கழுவி எடுத்து
ஆட்டுக் கல்லில் தனித்தனியே இட்டு அரைப்பது பழைய கதை..

அப்படி அரைத்து வழித்து கல் உப்பு போட்டு கையால் கலந்து வைத்து விட்டால் பொழுது விடியும் நேரத்தில் மாவு பொங்கி இருக்கும்.. 

அரைத்து எடுத்தவள் மகள் என்றால் அவளுடைய கைப் பக்குவம் கண்டு பெற்றவளுக்கு பூரிப்பாக இருக்கும்.. 

மாமியார் என்றால்  கடுப்பாக இருக்கும் - வந்தவளுக்கு இப்படி கைப் பக்குவமா?.. என்று..

இப்பொழுது தன்னந்தனியான குடும்பங்கள் பெருகி இருக்கும் கால கட்டத்தில் - 

புருசன்  பெண்டாட்டி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் - என்று எழுதப்படாத சட்டம் இருப்பதால் - 

வீட்டில்  அரிசி உளுந்து ஊற வைத்து இட்லிக்கு அரைக்க நேரம் என்பது கிடைப்பதில்லை.. 

ஓய்வு நாள் என்று ஞாயிற்றுக்கிழமை வந்தாலும் - அரிசி உளுந்து ஊற வைத்து அரைப்பதற்கு அலுப்போ அலுப்பு..

உரித்த வாழைப்பழம் கிடைத்தால் நல்லது என, நினைக்கின்ற காலம் இப்போது..

இதனால் வேலை முடிந்து வரும் வழியில் , சாலை ஓரத்தில்  உடனடியாகக் கிடைக்கும் மாவுகளை  வாங்கி வந்து இட்லிக்கும் தோசைக்கும் பயன்படுத்துகின்றார்கள்...

இந்த நிலை தான் பலருக்கும் பொருள் ஈட்டும் வழியாயிற்று..

இப்படியான மக்களை நம்பியே சமுதாயத்தின் பல தரப்பினரும் இட்டிலி மாவு ஏவாரத்தில் இறங்கியிருக்கின்றனர்..

வணிக வளாகங்கள் பலவும் கூட  இந்த வேலையில் இறங்கியுள்ளன..

முன்பெல்லாம் இட்லிக்கென தனி அரிசி வகை.. இப்போது கண்ட கண்ட அரிசிகள்..

இந்நிலையில் -
குழந்தைகள் முதற்கொண்டு முதியோர் வரைக்கும் விரும்பி உண்ணும் இட்லி மாவுகளில் - பல வகையான கலப்படங்கள் என்று செய்திகள் வருகின்றன..

உடனடி மாவு வகைகளில் எதற்காகக் கலப்படம்  என்றால் -

இட்லிக்கான அரிசி என்று இல்லாமல் கண்ணில் கண்டதையெல்லாம் அள்ளிப் போட்டு அரைத்து மாவு என்று விற்று காசு பார்ப்பதற்குத் தான்..

இப்படியான மாவில்
சோடா உப்பு, சுண்ணாம்புத் தண்ணீர், மற்றும் ஈஸ்ட் சேர்க்கப்படுகின்றதாம்.

இட்லி மிருதுவாக வருவதற்கு சோடா உப்பு..

மட்டை அரிசிகளில் பளிச் என்று மாவு கிடைப்பதற்கு சுண்ணாம்புத் தண்ணீர்.. 

மாவு புளிப்பதற்கு ஈஸ்ட்.

இப்படியான மாவு வகைகளால் நமது உடல் நலம் பாதிக்கப்படும் என்பது நிஜம்..

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சோடியம் நல்லது அல்ல..

சோடா உப்பு எனப்படும் சோடியம் பை கார்பனேட் ரத்தத்தில் சோடியத்தின் அளவை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..

அதிகப்படியான ஈஸ்ட்   தடிப்புகளுடன் ஒவ்வாமையை உண்டாக்கும்..

சுண்ணாம்புத் தண்ணீரைப் பற்றி சொல்ல வேண்டியது இல்லை..

 நன்றி - விக்கி.. 

அடப்பாவிகளா!..

வியாவாரிகள் அப்பாவிகளாக இருந்தது எல்லாம் அந்தக் காலத்தில்.. 

இப்போதெல்லாம்
உயர் நிலை தொழில் நுட்ப விவரம் அறிந்த படு #₹₹#கள்..

உடல் நலம் குன்றியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்ற சிறப்பான உணவு இட்லி.. 

இன்றைய நவீனத்தில் அதில் கலப்படம்  செய்து நஞ்சாக மாற்றியவர்கள் உடனடி மாவு விற்பனை செய்பவர்கள்..

அந்தக் காலத்தில் ஐயர் ஹோட்டலில் சாப்பிட்டேன் என்றாலே வீட்டில் ஏச்சும் பேச்சும் கிடைக்கும்..

இப்போது  பலரும் நடத்துகின்ற உணவு விற்பனையில் நீதி நேர்மை சுத்தம் சுகாதாரம் எனும் இவை மட்டும்  கிடைப்பதில்லை..

சுத்தம் சுகாதாரத்தை யாருமே அனுசரிப்பது இல்லை.. அதற்காக கவலைப்படுவதும் இல்லை..

இட்லி மாவினால் தற்போது நானே பாதிக்கப்பட்டிருக்கின்றேன்..

நீ பாதிக்கப்படவில்லை எனில் இங்கே சொல்லி இருக்க மாட்டாய்.. அப்படித்தானே!..

எனக் கேட்டால்,
நமகெதற்கு ஊர் வம்பு என்று ஒதுங்கியதால்..

நமக்கும் ஒரு பாதுகாப்பு வேணும் தானே!..

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக வளைகுடா நாட்டில் உணவகத்தில் சுத்தம் சுகாதாரம் தரம் என்று வேலை செய்து விட்டு இங்கே உள்ள சூழலுடன் ஒன்றுதற்கு இயலவில்லை..

அவ்வளவு தான்..

நமக்கு -
இட்லி மாவு விற்கின்றவர் நேர்மையானவர் எனில் ஏழேழ் பிறவியில்  நாம் செய்த புண்ணியம்..

எல்லா தரப்பினருக்கும் ஏற்றதான இட்லி மாவில் இப்படி ரசாயன கலப்பு செய்வதற்கு  எப்படி மனசு வருகிறது என்று தெரியவில்லை!…

இட்லிக்கான - 
அரிசியும் உளுந்தும் நீரும் தரமானவையா?..
இட்லி மாவு தயாரிப்பது எப்படியான சூழ்நிலையில்?..
மாவு தயாரிப்பவருக்கு எப்படியான உடல் ஆரோக்கியம்?..

இதெல்லாம் இப்போது முக்கியம் இல்லை..  இப்படியான தயாரிப்புகளில் இருந்து விலகுவதே உத்தமம்..

உணவு நமக்கு பாதுகாப்பு என்பது ஒரு காலம்..
உணவில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள வேண்டியது இக்காலம்.
 
வம்பு செறி தீங்கினர் தம் கண்ணில் படாமல் 
நீங்குதலே நல்ல நெறி..

நமது நலம் நமது கையில்
 என்றாலும் 
இறையருளும் நமது அறிவுமே 
நமக்கு பாதுகாப்பு..

ஓம் சிவாய
திருச்சிற்றம்பலம்
***

புதன், செப்டம்பர் 27, 2023

விட்டல விட்டல..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 10
புதன் கிழமை


ஸ்ரீ க்ருஷ்ண ஜயந்தியை அனுசரித்து (10/9) கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தானம் எனப்படும் தக்ஷிண பண்டரி புரத்திற்குச் சென்றிருந்தோம்.. 

அன்றைக்கு ஏகாதசி..
ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்தி வைபவத்தில் அன்றைய தினம் திருக்கல்யாண உத்ஸவம்..

இங்கே தஞ்சையில்
இரண்டு சிவாலய -  திருக் குடமுழுக்கு தரிசனம் செய்து விட்டு தட்டுத் தடுமாறி நடந்து நகரப் பேருந்துகளில் பயணத்து கும்பகோணத்தில் பேருந்து நிலையத்திற்கு அருகில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டு விட்டு கோவிந்தபுரம் சென்றடைந்தபோது மணி 3:30.. 

காலை பத்து மணியளவில் திருக்கல்யாண வைபவம் நிறைவேறி கல்யாண விருந்தும் முடிந்திருந்தது..

மாலை தேநீர் மட்டுமே எங்களுக்குக் கிடைத்தது..

சந்நிதி நடை திறக்கப்படும் நேரம்  4:30 என்பதால் அங்கே காவிரியின் கரையில் அமைந்திருக்கும கோசாலை தரிசனம் செய்து விட்டு வந்து  ஸ்ரீ ருக்மணி உடனுறை பாண்டுரங்கமூர்த்தியை கண்ணாரத் தரிசனம் செய்தோம்.. 

அருகிலுள்ள கோவிந்த புரத்தில் - ஸ்ரீ போதேந்திரர் அதிஷ்டானத்தையும் தரிசித்து விட்டு இரவு  பதினொரு மணியளவில் நல்லபடியாக
இல்லம் வந்து சேர்ந்தோம்..







காவிரி









கோவிந்தபுரம்





ஸ்ரீ போதேந்திராள்
அதிஷ்டானத்தின் திருவாசல்


அதிஷ்டானத்திற்கு அருகில் உள்ள
ஸ்ரீ காசி விஸ்வநாதர் சந்நிதி




ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில்


மின்னல் தாக்கியதால் மூன்றாகக் கிளைத்திருக்கும் தென்னை


விட்டல விட்டல பாண்டுரங்கா..
விட்டல விட்டல பாண்டுரங்கா..
**
ஓம் ஹரி ஓம்

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

செவ்வாய், செப்டம்பர் 26, 2023

சுந்தரத் தமிழ் 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 9
செவ்வாய்க்கிழமை

வானியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

இயற்பியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உடலியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

உயிரியல் சொல்லிக் கொடுத்தது?..

அவர்கள்!..

அவர்கள் வராதிருந்தால்?..

கூமுட்டைகளாக இருந்திருப்போம்!..

இப்படிச் சொல்கின்ற கூமுட்டைகளுக்குத் தெரியாது -

அவர்கள் எல்லாம் அங்கம் கழுவும் விதம் அறிவதற்கு முன்பே நம்மவர்கள் அண்டப் பிரபஞ்சத்தை அலசி ஆராய்ந்து வைத்திருந்ததை!..

இங்கே -
வழிப்போக்காகத் திரிந்திருந்த இறையடியார்கள் கூட எல்லா இயல்களிலும் வல்லவராகத் திகழ்ந்தனர் என்பது!..

 நன்றி விக்கி
தவளை, தேரை ஆகியன நீரிலும் நிலத்திலும் வாழ்வதால் இருவாழ்விகள் (Amphibian) என்று பெயர் பெறுகின்றன.. அவற்றின் உடலுக்குள் நுரையீரல் உருவாகும் வரை மீன்களைப் போல  செவுள்களால் சுவாசிப்பவை.. 
நீரில் நீந்துவதற்கு ஏதுவாக வாலினை உடையவை.. 

நுரையீரல் உருவானதும் செவுள்கள் மூடிக் கொள்ள வால் கழன்று விடும்.. இதன் பின் தவளை/தேரை நிலத்திலும்  வாழ்வதற்குத் தகுதி உடையதாகி விடும் - 

என்பது பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்தவை..

அவர்கள் வந்து சொல்லிக் கொடுத்ததான - 
இந்த வால் கழன்று விழும் விஷயம் - 

தேவாரத்தில் வாழ்வின் தத்துவ மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றது எனபது சிறப்பு..

இப்படி, இயற்கையை
இயற்கையாகக் கற்று நமக்கும் அறிவுறுத்துபவர் 
ஸ்ரீ சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள்..

வாருங்கள் - சுந்தரத் தமிழைச் சுவைப்போம்..
**
-: திருப்பதிகத் திருப்பாடல் :- 
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
 நன்றி விக்கி
அவன் அரசன். பேரரசன்..

எதிர்ப்போர் எவரும் இன்றி இளஞ்சிங்கமாக ஆட்சிக் கட்டிலில் இருப்பவன்..

துணிவுடைய வீரர்களையும் துடிப்பான குதிரைகளையும்  மதங்கொண்ட யானைகளையும் உடைய பெரும் படையைக் கொண்டவன்..

நிகரற்ற வலிமையுடன் அவன் வென்றெடுத்த நாடுகள் பலப்பல.. அவனது கொடி பறக்காத திசைகள் இல்லை.. 

தொலை தூர தேசங்கள் எல்லாம் இந்த அரசனைக் கண்டு வியப்பும் அச்சமும்  கொண்டு கை கூப்பி வணங்குகின்றன..

இப்படியான பெரும் புகழ் கொண்டு கடல் சூழ்ந்த நிலம் முழுவதையும் ஆட்சி செய்தாலும் - இது நிலையற்றது.. 

மட நெஞ்சே!..

தேரையோடு வளர்ந்தாலும்  ஒருநாள் உதிர்ந்து விடும் வாலைப் போல - 

இந்தப் புகழ் எல்லாம் கடைநாளில் கழன்று விழுந்து விடும் - என்பதை நீ அறிவாயாக!..

ஆதலால், புறத்தே விளங்கும் புகழைப் பற்றிக் கவலை கொள்ளாதே!..

இந்த அரசனை விடவும் வணங்கத் தக்கவன் ஒருவன் உளன்..

அவன் -

நீர் பாயும் மடைகளில்  செங்கழுநீர்ப் பூக்கள் மலர்தலாலும்  ஆலைகளில் கரும்பை இட்டுப் பிழிதலாலும் சோலை மலர்கள் தேன் மணம் கமழ்வதாலும் பெருஞ்சிறப்பினை உடைய திருப்புறம்பயத்தில் வீற்றிருக்கும் சிவலோ கன்.. அந்த இறைவனே நாம் வணங்கத் தக்கவன். 

ஆதலின்,
எம்பெருமானை வணங்கச் செல்வோம்.. புறப்படுவாயாக!..
***
திருத்தலம்
திருப்புறம்பயம்


இறைவன்
ஸ்ரீ சாட்சி நாதர்


அம்பிகை
ஸ்ரீ கரும்பன்ன மொழியாள்

தீர்த்தம்
பிரம்ம தீர்த்தம் 
ஸப்த சாகர தீர்த்தம் 

தல விருட்சம்
புன்னை

ஸ்ரீ சாட்சி நாதர்

படையெலாம் பகடார ஆளிலும்
பௌவஞ் சூழ்ந்து அரசாளிலும்
கடையெலாம் பிணைத் தேரை 
வால்கவலாது எழு மடநெஞ்சமே
மடையெலாம் கழுநீர் மலர்ந்து
மருங்கெலாம் கரும்பு ஆடத் தேன்
புடையெலா மணம் நாறு சோலைப்
புறம்பயந்தொழப் போதுமே.. 7/35/6
-: சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் :-


ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

திங்கள், செப்டம்பர் 25, 2023

ஸ்ரீ கணேசம்

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 8
 திங்கட்கிழமை


அன்பின்
ஸ்ரீராம் அவர்களுக்காக
இந்தப் பதிவு..
தேவாரத்தில் இருந்து -
ஸ்ரீ கணேச ஜனனம்..

பிடியதன்  உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவரிடர்
கடிகணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.. 1/123/5
-: திருஞானசம்பந்தர் :-

பிறர்க்கு வழங்கி மகிழும் கொடை எனும் குணத்தை வடிவமாகக் கொண்டு வள்ளலாக விளங்கும் பெருமக்கள் வாழ்கின்ற வலிவலத்தில் உறைகின்ற இறைவன், தனது திருவடிகளை வணங்கும் அடியவர்களின் இடர்களைக் கடிந்து களைவதற்காக - உமையாம்பிகையுடன் யானை உருக்கொண்டு கணபதியைத் தோற்றுவித்தருளினான்..


கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலுங்
கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும்
செய்வேள்வித் தக்கனைமுன் சிதைத்தார் போலும்
திசைமுகன்தன் சிரமொன்று சிதைத்தார் போலும்
மெய்வேள்வி மூர்த்திதலை அறுத்தார் போலும்
வியன்வீழி மிழலையிடங் கொண்டார் போலும்
ஐவேள்வி ஆறங்கம் ஆனார் போலும்
அடியேனை ஆளுடைய அடிகள் தாமே.. 6/53/4
-: திருநாவுக்கரசர் :-

கஜமுக அசுரனால் அடியவர்களுக்கு இன்னல் ஏற்பட்டபோது
கணபதியைக் கொண்டு அசுரனை அழித்தார் என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்!..

யாதும் சுவடு படாமல் -
ஏதொரு அடையாளமும் இன்றி - 
திரு ஐயாற்றுக்கு வந்து சேர்ந்த
திருநாவுக்கரசருக்கு
சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபம் 
காட்டியதும் இதன்படியே!..


சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபிண்யை 
என்பது லலிதா சஹஸ்ரநாமம்..

தனக்கென ஒரு காவலன் வேண்டும் என நினைத்த அம்பிகை - தானே தனது மேனியின் மஞ்சளைத் திரட்டி எடுத்து பாலன் ஒருவனை உருவாக்குகின்றாள்.. 

அந்தப் பிள்ளையே பிள்ளையார்.. 

அம்பிகை -
கணேச ஜனனியாகி இப்படியொரு பிள்ளையை உருவாக்கியதும் அந்தப் பிள்ளையை தனக்குக் காவலாக - கண நாயகனாக நிறைந்த வலிமையுடன்  நியமிக்கின்றாள்.. 

அவ்வேளையில் மாலைப் பொழுதானதால் கண நாயகனாகிய கணேசனை அழைத்து - " யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம்!.. என்று சொல்லி விட்டு ஸ்நான கூடத்துக்கு சொல்கின்றாள்..

அம்பிகையைத் தவிர வேறு எவருக்கும் இது தெரியாத நிலையில் ஈசன் அங்கே வருகின்றார்.. 

அவரை - கணேசன் அனுமதிக்காத நிலையில் பல வாக்குவாதங்களுக்குப் பின் திரிசூலத்தை ஏவுகின்றார்..

கணேசன் உருவாகிய சில பொழுதிலேயே அவருக்கும் ஈசனுக்கும் தர்க்கம் ஏற்பட்டு தலை தனியாகப் போய் விடுகின்றது..

இதற்குப் பின் நடந்ததை நாம் அறிவோம்..

இது வட நாட்டவரின் கதை..

ஆனால்,
தமது திருப்பதிகத்தின் வழியாக - கணபதியின் தோற்றம் பற்றி ஞானசம்பந்தப் பெருமான் அருளியிருக்கின்றார்.. 
அதுவே நமக்குப் பிரமாணம்..

திருநாவுக்கரசர்  ஸ்வாமிகளும் கணேச ஜனனத்தைப் பற்றி சொல்லியிருக்கின்றார்..

இப்படியாக,
அம்பிகை தானே - தற்பரையாய் கணேச மூர்த்தியை சிருஷ்டித்த விஷயத்தில் ஈசனும் அவரது பங்கிற்கு திருவிளையாடல் நிகழ்த்தியிருக்கின்றார்.

ஏதும் தெரியாத புரியாத நிலையில் இம்மண்ணுலகில் பிறந்த நாம் - இவர் தான் ஆதி விநாயகர் என்று தெரிந்து கொண்டிருக்கின்றோம்?..

கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும் - என்பது திருநாவுக்கரசர் திருவாக்கு..

ஆனை முகத்துடன் தோன்றியவரே விநாயகர்..

மனித முகத்துடன் ஆதி விநாயகரா? மனித முக நந்தி தேவர் என நினைத்தேன்!.. என்பது திரு ஏகாந்தன் அவர்களது வியப்பு..

மனித முகத்துடன் நந்தியம்பெருமானை தரிசிப்பதற்கு திரு ஐயாற்றுக்கு வரவேண்டும்!..

அம்பிகை - தானே தனது மேனியின் மஞ்சளைத் திரட்டி எடுத்து கணபதியை சிருஷ்டித்ததால் தான் இன்றும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பது!..

இது நமது மேலான சிந்தனைக்கானது..


திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், புலவர் கீரன் ஆகியோர் வழங்கியுள்ள -  பேருரைகளில் விநாயகரின் திருத்தோற்றம் பற்றி விரிவாகக் காணலாம்..

சதுர்த்தி வழிபாடுகள் நிறைவு எய்தியதும்
விசர்ஜனம் என்ற பேரில் நாடெங்கும் பிள்ளையாருக்கு செய்யப்பட்ட பிழைகள் ஏராளம்..

இனி வரும் நாட்களில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபடுவதற்கான உறுதியேற்று உய்வினை அடைவோம்!..
**

தற்போதைய குடியிருப்பில் 
ஸ்ரீ காரிய சித்தி விநாயகர் 
சதுர்த்தி அலங்காரம்..
**

ஓம் கம் கணபதயே நம: 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***


ஞாயிறு, செப்டம்பர் 24, 2023

கிரக மூர்த்தி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி 7
 ஞாயிற்றுக்கிழமை

இணையத்தில்
இருந்து தொகுப்பு
 நன்றி : விக்கி
 
நம்மை ஆளுகின்ற கிரக மூர்த்திகளுக்கு
உரிய அம்சங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்..

சூரியன்

இவர் காசியப முனிவரின் குமாரர் ஆவார். ஒளிப் பிழம்பு ஆனவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதியான இவர், நவக்கிரக மண்டலத்தின் நடுவில் அமர்ந்திருப்பார்..
ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வலம் வருகின்றவர்..

பித்ரு காரகனாகிய சூரியனுக்கு அதிபதி - சிவபெருமான்
ப்ரத்யதி தேவதை - ருத்ரன்
ரத்தினம் - மாணிக்கம்
திசை - கிழக்கு
நிறம் - காவி
தானியம் - நெல்
மலர் - செந்தாமரை
வஸ்திரம் - சிவப்பு
அன்னம் - சர்க்கரைப் பொங்கல்
தலம் - சூரியனார் கோயில். பரிதியப்பர் கோயில்.

சந்திரன்

பாற்கடலில் இருந்து தோன்றியவர் இவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுப கிரகமாகவும், தேய்பிறையில் பாப கிரகமாகவும் விளங்கும் தன்மை கொண்டவர். இவர் கடக ராசிக்கு அதிபதியாவார்.

மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு அதிபதி பரமேஸ்வரி.
ப்ரத்யதி தேவதை - கௌரி
ரத்தினம் - முத்து
திக்கு - தென்கிழக்கு
நிறம் - வெண்மை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளை ஆடை
அன்னம் - தயிர் சாதம்
தலம் - திங்களூர்

அங்காரகன் (செவ்வாய்)

நிலமகளின் புத்திரனாகத் தோன்றியவர்.. சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுப்பவர். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியானவர்.

பூமி காரகனாகிய 
அங்காரகனுக்கு அதிபதி - முருகன்
ப்ரத்யதி தேவதை - ஷேத்ரபாலர்
ரத்தினம் - பவளம்
திக்கு - தெற்கு
நிறம் - சிவப்பு
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, செவ்வரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
அன்னம் -  துவரம் பருப்பு சாதம்
தலம் - வைத்தீஸ்வரன் கோயில், பழநி.

புதன்

இவர் சந்திரனின் குமாரர் ஆவார். தீய கிரகங்களால் விளைகின்ற பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்.

வித்யா காரனாகிய புதனுக்கு அதிபதியும்
ப்ரத்யதி தேவதையும் - 
ஸ்ரீ மஹாவிஷ்ணு
ரத்தினம் - மரகதம்
திக்கு - வடகிழக்கு
நிறம் - பச்சை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் -  இளம் பச்சை வண்ண ஆடை
அன்னம் - பாசிப்பருப்பு பொங்கல்
தலம் - திருவெண்காடு, மதுரை.

பிரகஸ்பதி (குரு)

தேவலோகத்தின் தலைவனான இந்திரன் முதலான அனைவருக்கும் குருவாக விளங்குபவர். இதனால் ‘தேவ குரு’ என்னும் பட்டத்தைப் பெற்றவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். இவர் ஒரு பூரண சுப தன்மைக் கொண்டவர். தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குபவர்..

இப்படியிருக்க - சிவ அம்சமாகிய ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி தான் பிரகஸ்பதி - (குரு) என்பார்கள் பெரும்பாலானவர்கள்..

தன காரகனாகிய குருவிற்கு அதிபதி - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
ரத்தினம் - புஷ்பராகம்
திக்கு - வடக்கு
நிறம் - மஞ்சள்
தானியம் - கொண்டைக் கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
அன்னம்  - பருப்பு சாதம்
தலம் - திருச்செந்தூர், தென்குடித் திட்டை.

சுக்ரன்

இவர் அசுரர்களுக்கு குருவாக விளங்குபவர். குருவைப் போல இவரும் சுப கிரகமாக விளங்குபவர். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதி ஆவார்.

களத்திர காரகனாகிய சுக்ரனுக்கு அதிபதி - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - அஸ்வினி தேவர்கள்
ரத்தினம் - வைரம்
திக்கு - கிழக்கு
நிறம் - வெண்மை
தானியம் - மொச்சை
மலர் - வெண்தாமரை
வஸ்திரம் - வெள்ளை ஆடை
அன்னம் - வெண் பொங்கல்
தலம் - ஸ்ரீரங்கம்

சநைச்சரன்

நவக்கிரகங்களில் முதன்மையானவரான சூரியனின் மகன் இவர். பாவ - புண்ணிய பலன்களைத் தருபவர்.. ‘சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை’ என்பது பழமொழி. இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளுக்கு அதிபதி.

ஆயுள் காரகனாகிய  சநைச்சரனுக்கு
அதிபதி - தர்ம சாஸ்தா
ப்ரத்யதி தேவதை - யமன்
ரத்தினம் - நீலம்
திக்கு - மேற்கு
நிறம் - கருமை
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, 
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
அன்னம் - எள் கலந்த சோறு
தலம் - திருநள்ளாறு.

ராகு

இவர் அசுரத் தலையும், நாகத்தின் உடலையும் பெற்றவர். மிகுந்த வீரம் கொண்டவர். ‘கருநாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவர் நிழல் கிரகம். இவர் எந்த ராசிக்கும் அதிபதி அல்ல.

போக காரகனாகிய ராகுவிற்கு அதிபதி - பத்ரகாளி
ப்ரத்யதி தேவதை - நாகராஜன்
ரத்தினம் - கோமேதகம்
திக்கு - தென் மேற்கு
நிறம் - கருமை
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
அன்னம் - உளுந்து கலந்த சோறு
தலம் - திருக்காளத்தி, திருநாகேஸ்வரம்.

கேது

இவர் நாகத்தின் தலையும், அசுர உடலையும் கொண்டவர். ‘செந்நாகம்’ என்று அழைக்கப்படுபவர். இவரும் ராகுவைப் போலவே நிழல் கிரகம். இவரும் எந்த ராசிக்கும் அதிபதியாக இல்லை.

ஞானகாரகனாகிய கேதுவின்
அதிபதி - விநாயகர்
ப்ரத்யதி தேவதை - சித்ரகுப்தன்
ரத்தினம் - வைடூரியம்
திக்கு - வட மேற்கு
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிறங்களையும் கொண்ட ஆடை
அன்னம் - கொள் கலந்த சோறு
தலம் - திருக்காளத்தி, கீழப்பெரும்பள்ளம்..
**
கிரக மூர்த்திகள்
எப்படியிருப்பினும்
ஏக மூர்த்தியாகிய
ஈசன் ஒருவனே
துணை நமக்கு!..


வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே.. 2/85/1
-: திருஞானசம்பந்தர் :-
**
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***