நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜனவரி 31, 2020

வெள்ளித் திருவிளக்கு 1

ஒவ்வொரு சொற்களும் தேன் துளிகள்...

இன்னும் சொல்ல வேண்டுமானால்
அமுதத்தில் ஊறிய அருஞ்சுவைக் கனிகள்...

அன்னை அபிராமவல்லியில் அருள் நோக்கினால் 
அன்று அபிராமபட்டரின் திருவாக்கில் உதித்த மாணிக்கங்கள்...

அபிராமபட்டர் அருளிய அபிராமி திருப்பதிகத்தின் திருப்பாடல்கள்
அனைத்தும் தனித்துவமாக விளங்குபவை...

தை மாதத்தின் வெள்ளிக் கிழமை...
மங்கலகரமான நாள்...

நாளும் நமது பிரார்த்தனையாக
அபிராமி திருப்பதிகத்தின் முதற்பாடலாகிய
இந்தத் திருப்பாடல் இருக்கட்டும்... 


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும் 
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் 
தடைகள் வாராத கொடையும் 
தொலையாத நிதியமும் கோணாத கோலும் 
ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய 
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அரிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபானி
அருள்வாமி .. அபிராமியே!...


புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியில்மேல் பத்மபாதம் பதித்திடவே!.. (041)

ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

வியாழன், ஜனவரி 30, 2020

சத்திய தரிசனம்

இன்று காந்திஜி அமரத்வம் எய்திய நாள்..

அண்ணலின் சத்திய சோதனையின் 
இறுதி அத்தியாயத்திலிருந்து 
சில துளிகள்..  
***

என்னுடைய சத்திய சோதனைகள் அதிக மதிப்பு வாய்ந்தவை என்று நான் கருதுகின்றேன்..

(ஆனால்) அந்த மதிப்பு நன்றாகப் புலப்படும்படியாகச் செய்திருக்கின்றேனா என்பதை நான் அறியேன்..

உள்ளதை உள்ளபடியே எடுத்துக் கூறுவதற்கு என்னால் இயன்றவரை சிரமம் எடுத்துக் கொண்டிருக்கின்றேன் என்று மாத்திரமே நான் கூற முடியும்..

எந்தவிதமாக நான் சத்தியத்தைக் கண்டு கொண்டேனோ, அதே விதமாக அதை விவரிப்பதே எனது இடையறாத முயற்சியாக இருந்து வந்திருக்கின்றது..


சத்தியத்தைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பதை ஒரே மாதிரியான அனுபவங்கள் எனக்கு உறுதியாக உணர்த்தியிருக்கின்றன..

சத்தியத்தை தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அஹிம்சை தான்!.. - என்பதை,

இந்த (சத்திய சோதனை) அத்தியாயங்களின் ஒவ்வொரு பக்கங்களும் (வாசகருக்கு) உணர்த்தவில்லை எனில்,

இந்த அத்தியாயங்களை எழுதுவதற்கு நான் எடுத்துக் கொண்ட சிரங்கள் எல்லாம் வீணாயின - என்றே கொள்வேன்..


சத்தியத்தின் தோற்றத்தை, நான் அவ்வப்போது கணநேரம் கண்டு கொண்டது மட்டுமே - சத்தியத்தின் விவரிக்க ஒண்ணாத பெருஞ்சோதியைத் தெரிந்து கொண்டதாக ஆகாது..

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய வடிவத்தினை -
நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் -

மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக இருத்தல் வேண்டும்..

ஆசாபாசங்கள் இன்னும் என்னுள்ளத்தினுள்ளே மறைவாக தூங்கிக் கிடக்கின்றன..

அவை இன்னும் என்னிடம் இருக்கின்றன என்பதான எண்ணம் என்னைத் தோலிவியுறச் செய்துவிடவில்லையாயினும் அவமானப்படும்படி செய்கின்றது..

அனுபவங்களும் சோதனைகளுமே என்னை நிலைபெறச் செய்து,
ஆனந்தத்தை அளிக்கின்றன..


ஆனால் -

இன்னும் நான் கடக்க வேண்டிய மிகக் கஷ்டமான பாதை எனக்கு முன்னால் இருக்கின்றது என்பதனை அறிவேன்..

என்னை நான் அணுவிற்கும் அணுவாக ஆக்கிக் கொண்டுவிட வேண்டும்..

தன்னுடன் உயிர் வாழ்வன எல்லாவற்றிற்கும் கடையனாகத்
தன்னைத் தானே விருப்பத்துடன் ஆக்கிக் கொள்ளாத வரையில்
ஒரு மனிதனுக்கு விமோசனமே கிடையாது என்பதையும் நான் அறிவேன்..
***


வாழ்கநீ எம்மான் இந்த வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக்கெட்டு
பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசந்தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா.. நீ வாழ்க வாழ்க!.. 
-: மகாகவி பாரதியார் :- 

அண்ணலின் 
பாதக் கமலங்களுக்கு
அஞ்சலி.. 
*** 

ஞாயிறு, ஜனவரி 26, 2020

வாழ்க பாரதம்

எங்கள் பாரத தேசம் என்று 
தோள் கொட்டுவோம்!..


அனைவருக்கும் 
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
***


எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ - இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ!..
***




Sukhoi Su-30-MKI

வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம் - அடி
மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!.. 
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம் - எங்கள்
பாரத தேசம் என்று தோள் கொட்டுவோம்!..
-: மகாகவி பாரதியார் : - 
Army Contingent- led by Captain Divya Ajith
Navy Contingent  Led by  Lt.Commander Sandhya
Air Force Contingent  led by Squadran Leader  Sneha  Shehavath

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களி படைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா!...

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல நடையினாய் வா வா வா!..
-: மகாகவி பாரதியார் :- 


சத்ய மேவ ஜயதே!.. 
வாய்மையே வெல்லும்!.. 
(முண்டக உபநிஷத்) 

  

வெளியிலிருந்து வந்த விஷக்கிருமிகள் 
வெருண்டோடிப் போகட்டும்!..
உடன் பிறந்த கொடுநோய்கள் 
உருக்குலைந்து தொலையட்டும்!..



வெல்க பாரதம்
வாழ்க பாரதம்!..

ஜெய் ஹிந்த்!.. 
* * *

வெள்ளி, ஜனவரி 24, 2020

அமுத நிலா

இன்று தை அமாவாசை.

கிட்டத்தட்ட  215 ஆண்டுகளுக்கு முன், இதே  - தை அமாவாசை நாள்.

தலம் : - திருக்கடவூர்.

இடம் : - வம்பளந்தான் திண்ணை.

நேரம் : - (அறியாமை) சாயுங்காலம்.

சூழல் :- ஊர் முழுதும் அழுத்தமான மௌனம் .

 அதே சமயம் பரபரப்பு.. என்ன நடக்குமோ என்ற திகைப்பு!..


'' என்னவாம்!?..''

'' நம்ம சுப்ரமண்ய குருக்கள் இருக்காரே!..''

'' யாரு?.. அம்பாள் சந்நிதியில உட்கார்ந்துகிட்டு போற வர்ற பொண்ணுங்களை அபிராமி.. அபிராமி..ன்னு வம்புக்கு இழுப்பாரே.. அவரா?..''

'' அவரே தான்.. இன்னைக்கு சரியா மாட்டிக் கொண்டார்!..''

'' யார் கிட்டே!..''

'' மகராஜா..கிட்டே!..''

''..என்னது மகராஜாவா!.. அவர் எங்கே இங்கே வந்தார்?.. நான் மாயவரத்ல இருந்து இப்பதானே வர்றேன்.. கொஞ்சம் புரியும்படி சொல்லு..''

'' தஞ்சாவூர்ல இருந்து சரபோஜி மகராஜா பூம்புகார் கடல் கரைல அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு -  இங்கே அம்பாளை தரிசிக்க வந்திருக்கார்..''

'' ம்!..''

'' கோயிலுக்கு வந்தவர் .. கோயில்ல நம்ம சுப்ரமணியம் அரை மயக்கத்தில இருக்கிறதை பார்த்து விட்டார்..''

'' அடடே!..''


'' நம்ம ஆளுங்க குருக்களோட அடாவடிகளை சொன்னப்போ ராஜா நம்பற மாதிரி இல்லை!.. ராஜாவே அவரைப் பார்த்து,

குருக்களே!.. இன்னிக்கு என்னங்காணும் திதி..ன்னு கேட்டதும், அரை மயக்கத்தில் இருந்த சுப்ரமணி பௌர்ணமி… ன்னு உளறிட்டார்!..''

'' அடப்பாவி மனுஷா!.. நெறஞ்ச அமாவாசை!.. அதுவும் தை அமாவாசை!.. ''

'' அப்பறம் என்ன!.. இன்னிக்கு பௌர்ணமின்னா ஆகாயத்தில நிலா வருமா.. ன்னு .. ராஜா கேட்க… 
இவரும்.. வரும் போய்யா.. சர்தான்.. அப்படின்னுட்டார்...''

'' ராஜா கடுப்பாயிட்டார். இன்னிக்கு சாயுங்காலம் நிலா வரல்லேன்னா.. உன்னைய அடுப்புல போட்டு வறுத்துடுவேன்னுட்டார்.. ''

'' அடடா!..''

'' அவருக்காக  நெருப்பு மூட்டி - அதுக்கு மேல ஊஞ்சல் கட்டி இருக்காங்க!.. ''

''அடப்பாவமே.. புள்ளகுட்டிக்காரர் ஆச்சே!... கோயிலுக்கு வந்தோமா.. பஞ்சாங்கம் படிச்சு ரெண்டு பாட்டு பாடுனோமா..ன்னு இல்லாம.. வம்பை விலை கொடுத்து வாங்கிக்கிட்டாரே!.. சரி..  போனா போவுது குருக்களை விட்டுடுங்க.. ன்னு  அவருக்காக யாரும் ராஜாக்கிட்டே பேசலியா!..''

'' யார் பேசுவா?.. எப்ப பாத்தாலும்.. அவனோட என்ன கூட்டு!.. இவனோட என்ன சேர்த்தி..ன்னு  புலம்பிக்கிட்டே இருந்தா யார் தான் அவரை பக்கத்தில சேர்த்துக்குவாங்க!.. நீயே சொல்லு!..''

'' அதுவும் சரிதான்!...''

'' அதுவும் இல்லாம.. கோயிலுக்கு வர்ற பொண்ணுங்களைப் பார்த்து நீ அம்பாள் மாதிரி இருக்கேன்னு சொன்னாக் கூட பரவாயில்லே!..  நீ வராஹி மாதிரி இருக்கே.. நீ பத்ரகாளி மாதிரி இருக்கே.. நீ சாமுண்டி மாதிரி இருக்கே...ன்னு சொன்னா.. நம்ம ஊரு பொண்ணுங்களுக்கு கோவம் வருமா.. வராதா?..''

'' வரும் தான்.. ஆனாலும் பாவங்க.. நம்ம குருக்கள்!.. ''

'' நீங்க வேறே...  ராஜாக்கிட்டேயே உளறிட்டோமே.. அப்படின்னு ஒரு வருத்தம் கூட குருக்கள் கிட்ட இல்லையே!.. ''

'' அப்படியா!..''


'' என்ன அப்படியா?.. எல்லாம் அவ பாத்துக்குவா.. அவ தானே என்னய இந்த மாதிரி பேச வெச்சி வம்புல மாட்டி விட்டா... அப்படி இப்படின்னு ஒரே பிடிவாதம்.. அதனால தான் இப்ப சிக்கல்ல சிக்கி ஊஞ்சல்ல ஆடப்போறார்..''

'' சரி .. அப்ப இதுக்கு என்னதான் முடிவு?..''

'' முடிவா.. அதை அவரே தேடிக்கிட்டார்!.. அம்பாள் எனைக் காப்பாத்துவா.. ன்னு சொல்லிட்டு இருக்கார். கீழே நெருப்பை உண்டாக்கி மேலே ஊஞ்சல் தொங்க விட்டிருக்காங்க.. அதுல இருந்து தான் இன்னும் கொஞ்ச நேரத்தில.. பாடப் போறார் நம்ம சுப்ரமணி!.. ''

'' நெருப்பு மேலே பாட்டா!?.. ''

'' ஆமா.. அந்தாதி..ன்னு ஒரு பாட்டு வகை இருக்கு .. ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசில உள்ள எழுத்து அசை, சீர்,  ....''

'' இதெல்லாம் நமக்குப் புரியாதுங்க.. தெளிவா சொல்லுங்க..''

'' ஒரு செய்யுள் பாடிட்டு அதோட கடைசி சொல்லை - அடுத்த செய்யுளோட முதல் சொல்லாக வச்சி பாடுறது.. அதுக்குப் பேர் தான் அந்தாதி.. அந்த மாதிரி பாடுறதா இருக்கிறார்..இப்ப புரியுதா!.. ''

'' புரியுது.. நல்லாவே புரியுது!.. அப்போ.. பாட்டு பாடுனா நிலா வருமா!?..''

'' யாருக்குத் தெரியும்!.. அங்கே போய் பார்த்தால் தானே தெரியும் .. நான் அதுக்குத் தான் கோயில் வாசலுக்குப் போறேன்!..''

'' அப்போ.. சாமி கும்பிட இல்லையா?.. ''

'' அதுக்கெல்லாம் வயசான காலத்தில பாத்துக்கலாம்!..''

'' அப்போ... நானும் வர்றேன்!... என்ன தான் நடக்குதுன்னு பாக்கணும்!..''

'' ஆமா.. ஏதோ.. பாட்டு சத்தம் காதுல விழலே!...''

'' ஆமாமா!.. குருக்கள் தான் பாடுறார்... அப்ப முன்னாலேயே கச்சேரிய ஆரம்பிச்சுட்டாரா!..'' 

'' இரு ..இரு.. என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு.. ஊரே கூடி நிக்குது போல.. முதல்ல பாட்டைக் கவனி.. ''



விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன 
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் 
பழிக்கே உழன்று வெம்பாவங்களே  செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே!..

'' கேட்டியா.. இப்பவும் என்ன சொல்றார் பார்.. கயவர்  தம்மோடு என்ன கூட்டு.. ன்னு.. அதாவது நம்மள ... அட ஏன் மேல இடிக்கிறே!.. கண்ணு தெரியலயா?.. பட்டப் பகல் மாதிரி நிலவு இருக்குறப்ப!...''

'' நிலவா!... அது எங்கேயிருந்து வந்திச்சி.. இன்னிக்கு அமாவாசை.. மறந்து போச்சா!..''

'' என்ன உளர்றே!.. இவ்வளவு வெளிச்சம் நிலவு இல்லேன்னா எப்படி வரும்!?.. ஆ.. ஆ.. அதோ.. பார்யா.. நிலா.. வானத்து.. மேலே!..''

'' என்னா அதிசயமா இருக்கு!.. நம்பவே முடியலயே!.. இப்படியும் நடக்குமா!.. ''

'' நடந்திருக்கே!..  குருக்கள் விஷயமான ஆள்தான்யா!.. பாட்டு பாடி நிலாவ கொண்டாந்துட்டாரே!..''

'' இங்கே பாரு... அன்னிக்கு அவரை குறை சொன்ன  பொண்ணுங்கள்ளாம் ... இப்ப ஓடிப்போய் அவர் கால்ல விழுந்து கும்புடுறதை!.. அப்பப்பா.. இந்தப் பொண்ணுங்கள நம்பவே முடியலயே...''


'' கோயில்ல குடியிருக்கிற அம்பாளையே நம்ப முடியலையே... இவ தானே அன்னிக்கு பௌர்ணமி.. இன்னிக்கு அமாவாசை.. ன்னு உருவாக்கி வெச்சா.. இப்ப - அவளே.. பாட்டுக்கு மயங்கி நிலாவைக் காட்டிட்டாள்... ன்னா!..''

'' அதுவும்..  தமிழ் பாட்டுக்கு!.. அம்பாளே மயங்கிட்டாள்...ன்னு அர்த்தம்!..''

'' நாம தான் குருக்களப் பத்தி தப்பு கணக்கு போட்டுவிட்டோம்.. அங்கே பார்.. ராஜாவே எந்திரிச்சு வந்து குருக்களைக் கட்டிப் பிடிச்சுக்கிட்டு ... என்னது.. அபிராமி பட்டர்..ன்னு பட்டயமா!.. சரிதான்.. நல்ல மனுஷனுக்கு மரியாதை செய்ய வேண்டியது தான்யா!..''

'' இன்னும் பாடறார்.. கேளுங்க.. ஆஹா!.. மனசு கரையுதே... ''

உடையாளை ஒல்கு செம்பட்டு உடையாளை ஒளிர்மதிசெஞ் 
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல் 
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னை இனிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே!...

'' பார்.. பார்.. அம்பாளை நமக்கெல்லாம் தரிசனம் செய்து வைக்கிறார்.. ஆஹா.. தாயே.. தயாபரி.. எங்க பிழையெல்லாம் பொறுத்துக்கம்மா!.. எங்களுக்கு நல்ல புத்தியக் கொடும்மா!.. அபிராமி!.. அபிராமி!..''

'' என்னய்யா.. கண்ணுல ... ''

'' ஆனந்த கண்ணீர்!..  ஐயா!.. ஆனந்தக் கண்ணீர்!..
உங்க கண்ணுலயுந்தான்.. கண்ணீர் வருது!.. ''

'' நாம எல்லாம் குருக்களை தப்பு தப்பா சொல்லியும், அவரு நமக்கும்  அம்பாள் தரிசனம் செஞ்சு வெக்கிறார்..ன்னா..  அவரு தான்யா மனுசன்..''

'' உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் ..ன்னு ஆரம்பிச்சு - நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றதே!.. ன்னு நூறு பாட்டு பாடி அந்தாதிய பூர்த்தி செஞ்சிருக்கிறார்!..'' 

'' நூல் பயன் என்ன சொல்றார்..ன்னு கவனி..''

ஸ்ரீ அபிராமவல்லி  
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் 
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை புவி அடங்கக் 
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும் கரும்பும் அங்கை 
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே!..

'' கேட்டீங்களா.. அம்பாளைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லை.. ன்னு.. சொல்லி நம்ம கண்ணைத் தெறந்து வச்சிருக்கார்.. ''

'' வாங்க நாமளும் போய் அவர்கிட்ட நல்லதா நாலு வார்த்தை பேசுவோம்.. இனிமே.. எனக்கு அபிராமி தான் விழித்துணையும்.. வழித்துணையும்!..''

'' எனக்குந்தான்!..''

அபிராம பட்டர் வாழ்க!.. வாழ்க!..
அபிராமவல்லி வாழ்க!.. வாழ்க!..
அமிர்தகடேசர் வாழ்க!.. வாழ்க!..

- : ஓம் சக்தி ஓம் :-
ஃஃஃ