நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஜூலை 30, 2021

தேவி தரிசனம் 2

     

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆடி மாதத்தின்
இரண்டாவது வெள்ளிக்கிழமை
இன்று..

ஆடி வெள்ளிக்கிழமைகள்
பெண்மை சிறப்பிக்கப்படும்
நாட்களும் ஆவன..

இந்நாளில்
அம்பிகையின்
அருட்கோலங்களை
சிந்தித்திருப்போம்...


கலையாத கல்வியும் குறையாத வயதும்
ஓர் கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணி இலாத உடலும்
சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
துன்பம் இல்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகட வூரின் வாழ்வே
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி அபிராமியே..


கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில்  பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.. (012)


நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால் திருத் தங்கச்சியே.. (061)
-:  ஸ்ரீ அபிராமி பட்டர் ;-
***

அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி :-
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

வெள்ளி, ஜூலை 23, 2021

தேவி தரிசனம் 1

    

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

ஆடி மாதத்தின்
முதல் வெள்ளிக்கிழமை
இன்று..

இன்றைய நாளில்
நிறை நிலாவும் இணைந்து
வருகின்றது..

ஆடி வெள்ளிக்கிழமைகள்
தெய்வ வழிபாட்டுக்கு மட்டும்
உரியன அல்ல..
பெண்மை சிறப்பிக்கப்படும்
நாட்களும் ஆகும்..

சிறப்புடைய இந்நாளில்
ஆதிபராசக்தி ஆகிய
அம்பிகையின்
திருக்கோலங்களை
சிந்தித்திருப்போம்...



ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா..


நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸூர பூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே..


சூலம்  கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாம் கரமுள நாக பாசாங்குசம்
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே!..
-: திருமூலர் :-







நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.. (50)
-:  ஸ்ரீ அபிராமி பட்டர் ;-
***
அம்பிகையைச் சரணடைந்தால்
அதிக வரம் பெறலாம்..
-: மகாகவி :-
***
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

ஞாயிறு, ஜூலை 18, 2021

அடியார்க்கும் அடியேன்

    

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஆடி மாதத்தின் 
சுவாதி நட்சத்திரம்..

தம்பிரான் தோழர் - என்று
போற்றப் பெறும்
ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
தனது நண்பர்
சேரமான் பெருமாள் நாயனாருடன்
திருக்கயிலாய மாமலைக்கு ஏகி
முக்தி நலம் எய்திய நாள்..


ஸ்ரீ சுந்தரர்
இப்பூவுலகில் வாழ்ந்த காலம்
பதினெட்டு ஆண்டுகளே..

திருநாவலூரில்
சடையனார் - இசைஞானியார்
தம்பதியர்க்கு
மேலை தவப் பயனால்
திருமகவாக அவதரித்தார்..


திருமுனைப்பாடி நாட்டின் மன்னர்
நரசிங்க முனையர்
சுந்தரர் மீது அன்பு கொண்டு 
தமது மகனாக வளர்ந்தார்..


சடங்கவி சிவாச்சாரியார்
தமது மகளைத் திருமணம் முடிக்கும் வேளையில் 
இறைவனால்
தடுத்தாட்கொள்ளப்பட்டார்..

பின் மேலை வினைப் பயனால்
திரு ஆரூரில் பரவை நாச்சியாரையும்
திரு ஒற்றியூரில்
சங்கிலி நாச்சியாரையும்
மணந்து கொண்டார்..


இவ்விருவரும்
திருக்கயிலாயத்தில்
அம்பிகையின்
பணிப் பெண்களாகிய
அநிந்திதை, கமலினி ஆவர்..

நாடெங்கும் நடந்து
நற்றமிழ் பாடி
சைவம் வளர்த்ததோடு
அற்புதங்கள் பலவும்
நிகழ்த்தியுள்ளார்..


திரு அவிநாசியில்
முதலை உண்டு தீர்த்த பாலகனை
உயிருடன் மீட்டு அருளினார்..

சுந்தரர் அருளிச் செய்தவை
திருப்பாட்டு எனப்படும்..
3800 திருப்பதிகங்கள்
அருளப் பட்டதில்
நமக்குக் கிடைத்திருப்பவை
நூறு திருப்பதிகங்கள் மட்டுமே..


பித்தாபிறை சூடீபெரு
மானே அரு ளாளா
எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்
நல்லூர் அருட் துறையுள்
அத்தாஉனக் காளாய்இனி
அல்லேன் எனலாமே.. (7.1.1)

விடையா ருங்கொடியாய் வெறி
யார்மலர்க் கொன்றையினாய்
படையார் வெண்மழுவா பர
மாய பரம்பரனே
கடியார் பூம்பொழில்சூழ் திருக்
கற்குடி மன்னிநின்ற
அடிகேள் எம்பெருமான் அடி
யேனையும் அஞ்சலென்னே.. (7.27.1)

போரா ருங்கரியின் உரி
போர்த்துப்பொன் மேனியின்மேல்
வாரா ரும்முலையாள் ஒரு
பாக மகிழ்ந்தவனே
காரா ரும்மிடற்றாய் கட
வூர்தனுள் வீரட்டானத்
தாரா என்னமுதே எனக்
கார்துணை நீயலதே.. (7.28.4)

சுந்தரர் திரு ஆரூரில்
அருளிச் செய்த
திருத்தொண்டர் திருத்தொகையே
பின்னாளில் - சேக்கிழார்
பெரிய புராணம் பாடுதற்கு
அடிப்படையாய் அமைந்தது..

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.. (7.39.1)

பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப்
போக மும்திரு வும்புணர்ப் பானைப்
பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப்
பிழையெ லாந்தவி ரப்பணிப் பானை
இன்ன தன்மையன் என்றறி வொண்ணா
எம்மா னைஎளி வந்தபி ரானை
அன்னம்வை கும்வ யற்பழ னத்தணி
ஆரூ ரானை மறக்கலு மாமே.. (7.59.1)

நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக்
கரையனும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானைத்
தொண்ட னேன்அறி யாமை யறிந்து
கல்லி யல்மனத் தைக்கசி வித்துக்
கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும்
வல்லியல் வானவர் வணங்கநின் றானைவலிவ 
லந்தனில் வந்துகண் டேனே.. (7.67.5)


இந்திரன் மால்பிரமன் எழி
லார்மிகு தேவரெல்லாம்
வந்தெதிர் கொள்ளஎன்னை மத்த
யானை அருள்புரிந்து
மந்திர மாமுனிவர் இவன்
ஆர்என எம்பெருமான்
நந்தமர் ஊரன் என்றான் நொடித்
தான்மலை உத்தமனே.. (7.100.9)
***
திரு அஞ்சைக் களத்தில்
இருந்தபோது திருக்கயிலாயத்திற்கு வந்து சேரும்படிக்கு
இறைவன் ஆணையிட்டு
ஐராவணம் என்னும் 
வெள்ளை யானையை
அனுப்பி வைக்க
அந்த அளவில்
சேரமான் பெருமாள் நாயனாரும்
உடன் புறப்பட்டு வர
ஸ்ரீ சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள்
திருக்கயிலையைச்
சென்றடைந்தார்..
***

சேரமான் திருவடிகள் போற்றி..
சுந்தரர் திருவடிகள்
போற்றி.. போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வியாழன், ஜூலை 15, 2021

தியாகத் திருவிளக்கு

   

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
தன்னலமற்ற தலைமகனாம்
பெருந்தலைவரது பிறந்த நாள் இன்று..


தமிழ்நாட்டின்
முதல்வராகத் திகழ்ந்த
காலத்தில்
வளரும் தலைமுறையின்
கல்விக் கண்களைத்
திறந்து வைத்தவர்..


அவர் திறந்து வைத்த
கல்விக் கூடங்களும்
அணைக் கட்டுகளும்
தொழிற்சாலைகளும்
இன்றும் அவரது புகழினைப்
பாடிக் கொண்டிருக்கின்றன..


ஆயினும்
ஏழைப் பங்காளரான
அவரைத் தான்
அந்நாளைய எதிர்க்கட்சியினர்
இழித்தும் பழித்தும்
புழுதி வாரித் தூற்றினர்..

அப்போது
மதி மயங்கிக் கிடந்த தமிழகம்
மாபெரும் தவறிழைத்தது..


ஆனாலும், இன்றைக்கு
அவரது பெருமைதனை
எண்ணி எண்ணித்
தவிக்கின்றது..

கல்விக் கண் கொடுத்த
காமராஜர் அவர்களை
நெஞ்சார்ந்த நன்றியுடன்
நினைவு கூர்தல்
நமது கடமையாகும்..


கர்மவீரர் காமராஜர் அவர்களது
நினைவினைப் போற்றுவோம்..

பெருந்தலைவர் புகழ்
என்றென்றும் வாழ்க..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

புதன், ஜூலை 14, 2021

அம்மையே அப்பா!..

  

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நம சிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...

சிவனடியார் தம் அகத்திலும் புறத்திலும் ஒலித்துக் கொண்டிருக்கும் மகத்தான மந்திரம் இதுவே..

இத்திருவாக்கினை சிவபுராணத்தின் வழியாக நமக்கு வழங்கியவர் -
ஸ்ரீ மாணிக்கவாசகர்..


திருவாதவூரர் என்றழைக்கப்பட்ட இப்பெருந்தகை பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராகத் திகழ்ந்தவர்..

கீழைக் கடற்கரையில் வந்திறங்கும் அரபு நாட்டுக் குதிரைகளை விலை கொடுத்து வாங்குவதற்காகப் பெரும் பொருளுடன் வந்தவரை எம்பெருமான் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தின் கீழ் குருவாக அமர்ந்து தடுத்தாட் கொண்டான்...
திருவாதவூரர் மெய்ஞானம் பெற்று மாணிக்க வாசகர் என்றானார்..

அண்டத்தைப் பாடினார்..
அகிலத்தைப் பாடினார்..
அன்னையின் வயிற்றில் உயிர்க்கும் கருவின் நிலைகளைப் பாடினார்...
ஸ்வாமிகளின் வாக்கு திருவாசகம் என்று போற்றப்பட்டது...

மாணிக்கவாசகரின் பொருட்டே நரிகள் பரிகளாயின... வைகை பெருகி கரைகளைத் தகர்த்தது .. இறைவனும் வந்தியம்மைக்குப்  பணியாளனாக வந்து உதிர்ந்த பிட்டு வாங்கி உண்டு மண் சுமந்து பிரம்படி பட்டனன்...


ஸ்ரீ மாணிக்க வாசகப் பெருமான் தில்லைத் திருச்சிற்றம்பலத்தைத் தரிசித்த பின் ஆனி மாத மக நட்சத்திரத்தன்று ஆடும் பிரானின் சந்நிதியுள்  அவனது திருமேனியுடன் சுடராகக் கலந்து முக்தி நலம் எய்தினார்..

நேற்று ஸ்வாமிகளது
குருபூஜை நாள்..

இந்தப் பதிவினை நேற்று வெளியிடுவதற்கு இயலாமல் போனது..


உயர்ந்த பக்தி நெறியினை நமக்குக் காட்டியருளினார் - மாணிக்கவாசகர்..
அவ்வழியில் நாமும்
அம்மையே... அப்பா!.. என்று
உருகி நிற்போம்..
நளும் நாளும்
நலம் பெறுவோம்..
***

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ
பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே..

என் மைத்துனர் அனுப்பி வைத்த காணொளி இது..
தீப ஆராதனை தரிசனத்
திருக்காட்சியினை
வலையேற்றிய
நன்னெஞ்சங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி..


மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி.. போற்றி..

தென்னாடுடைய சிவனே போற்றி..
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
***

வெள்ளி, ஜூலை 09, 2021

வராஹி வருக..

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***

ஸ்ரீ வராஹி அம்மனுக்கான
நவராத்திரி விழா
தொடங்க இருக்கின்ற இவ்வேளையில்
அம்மனிடம்
இன்றொரு
பிரார்த்தனை..
***


சூலம் எடுத்துச் சுழற்றிட வேணும் தாயே..
சூழும் வினைகளைத் தகர்த்திட நீயும்
சூலம் எடுத்துச் சுழற்றிட வேணும் தாயே..
சூழ்கலி தீரச் சிறையினில் தோன்றிய மாயே!..

தீயவர் கொடுமை தீர்த்திட நீயும்
தீ வண்ணம் ஆகுக காளி..
மாயவன் சோதரி மாண்புடன் வருக
நீர் வண்ணச் சூலி திரிசூலி..

கோரங்கொள் காளி கொடியவர் தீர
வாள் கொண்டு வருவாய் வருவாயே
ஆரங்கொள் காபாலம் கலகலக்க
கனலாய் வருவாய் வருவாயே..


சங்கொடு சக்கரம் தாங்கிய துர்கா
தூர்த்தரைத் தொலைத்திட வருவாயே..
மங்கிடக் கொடியவர் கூட்டம் அழிந்திட
அதிர நடந்தே வருவாயே..

கயவர்க்கு கசடர்க்கு கதையுடன் வருவாய் வராஹியே..
முரடர்க்கு மூர்க்கர்க்கு மழுவுடன்
வருவாய் வராஹியே..

சொல் பிறழ்ந்தாரை நில் என நிறுத்தி
நெடுங்கணை கொண்டு துளைப்பாயே..
இல் பிறழ்ந்தாரை இரு என இருத்தி
கூர்வேல் கொண்டு பிளப்பாயே...


ஊர்ப் பணம் தின்று உதிரம் வளர்க்கும்
உளுத்தர்கள் வாழ்வும் எத்தனை நாள்?..
நிருதர்கள் நெஞ்சினைப் பிளந்தவளே
நீசரை அழித்திடு பெருந்திரு நாள்!..

எளியவர் ஏழையர் இன்னல் தகர்ந்திட
புன்னகை விழியால் அருள்வாயே..
வலுத்தவர் கொழுத்தவர் வாழ்வு அழிந்திட
வாராஹி வருவாய் வருவாயே...

மரங்கள் அதற்கும் மனந்தனை வைத்தனை..
மடிப்பிள்ளை தனக்கும்
வீரம் விதைத்தனை..
மனிதரெனக் கொடு அரக்கர் வந்தார்
குறையிடும் முறையொலி கேட்கலையோ!..

ல்

துன்பமும் துயரமும் நிலை பெறுமானால்
தூயவளே நின் துணை இல்லையா..
நன்மையும் உண்மையும்  நல்கிட வேணும்
நலிந்தவர் தமக்கு நீ தாய் அல்லவா!..
***
சில தினங்களுக்கு முன்
தினமலர் இணைய தளத்தில்
வெளியிடப்பட்டிருக்கும்
செய்திகளின்
படக் குறிப்புகள்
இன்றைய பதிவில்..

தினமலர் நாளிதழுக்கு நன்றி..
***


எத்தனைக் காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!..


சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி கிளியே
செம்மை மறந்தாரடி!..
-: மகாகவி பாரதியார் :-
***
வன்மை அழிந்திட வருக வராஹி
வாழ்வு செழித்திட வருக..
நன்மை நிலைத்திட வருக வராஹி
நல்லவர் வாழ்ந்திட வருக...

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்..
***

வெள்ளி, ஜூலை 02, 2021

நலமே வருக

 

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்
***
இன்று
எவராலும் தவிர்க்க முடியாத
ஒன்றாகியிருப்பது
முக கவசம்..


Face Mask
என்பதற்குச் சரியான
பொருள் அதுதானா!..
தெரியாது..
ஆனாலும் அனைவருக்கும்
இன்றியமையாத
பொருளாகி விட்டது..



இன்றைய நாளில்
எல்லா இடங்களிலும்
பலதரப்பட்ட முக கவசங்கள்
கிடைக்கின்றன..

அதிலும் மாறுபட்டதாக
நவீன தொழில் நுட்பத்துடன்
வடிவமைக்கப்பட்டுள்ள
முக கவசத்தைப் பற்றிய செய்தி..

( இந்த நவீன முக கவசம்
எப்போது பயன்பாட்டிற்கு
வரும் என்பது தெரியவில்லை)

இது தினமலர் நாளிதழின்
இணையப் பதிப்பில்
வெளியானதாகும்..

தினமலருக்கு நன்றி..


காற்றில் மிதக்கும் கொரோனா நுண்துகள்களைக் கண்டறியும் மாஸ்க்..

 பாரிஸ்: நேச்சர் பயோடெக்னாலஜி என்கிற பிரபல விஞ்ஞான இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை தற்போது வைரலாகி வருகிறது.

பிரெஞ்சு விஞ்ஞானிகள் வித்தியாசமான தொழில் நுட்ப அம்சங்கள் நிறைந்த அதிநவீன முகக் கவசம் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் முகக்கவசம் அணிகின்றனர். துணியால் ஆன முகக் கவசங்கள் முதல் பிளாஸ்டிக் ஷீல்டு வரை பலவகையான முகக் கவசங்கள் தற்போது கிடைக்கின்றன.


வைபை, ப்ளூடூத், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை இணைக்கும்படியான தொழில் நுட்பத்துடன் கூடிய முகக் கவசங்களும் ஜப்பான் முதலான ஆசிய நாடுகளில் விற்பனையாகின்றன.

தற்போது பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒருபடி மேலே போய்  நோய்களைக் கண்டறியும் அதிநவீன கவசங்களை உருவாக்கியுள்ளனர். காற்றில் கொரோனா வைரஸ் உட்பட வேறு ஏதாவது வைரஸ் இருந்தால் அதனை இந்த முகக் கவசத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார்கள் கண்டறிந்து உடனடியாக முகக் கவசத்தை அணிந்து இருப்பவருக்கு தகவல் அளிக்கின்றன..

இதனால் அவர்கள் அந்த இடத்தை விட்டு விரைவில் நகர்ந்து தப்பித்துக் கொள்ளலாம் என, - விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..

பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் பலவித வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளன.
நமது நாசி துவாரத்தில் உள்ள மியூகோஸ் மற்றும் ரோமங்கள் ஆகியன மூக்கின் வழியாக இக்கிருமிகள்
நுரையீரலுக்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

கொரோனா நுண்துகள்கள்  வேகமாகப் பரவும் என்பதால் மக்கள் அணியும் முகக்கவசத்தில் சென்சார் பொருத்த பிரெஞ்சு விஞ்ஞானிகள் திட்டமிட்டு இதனை உருவாக்கியுள்ளனர்.

காற்றில் மிதக்கும் வைரஸ் துகள்கள் சென்சாரில் பட்டதுமே சென்சார் அந்த வைரஸ்களின் தன்மையை கண்டறிந்து விடும். இதற்கு பேட்டரி தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஏதாவதொன்று நமது சருமத்தின் மீது பட்டால் உடனே அந்த இடத்தில் எரிச்சல் , அரிப்பு ஏற்படுவதைப் போல இந்த சென்சார்கள் வேலை செய்யும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்..


நவீன முக கவசம்
விரைவிலேயே மக்களின்
பயன்பாட்டுக்கு உள்ளாகட்டும்..
புதிய உருவாக்கத்தினை
வாழ்த்தி வரவேற்போம்..


தயங்காமல் 
தடுப்பு ஊசி எடுத்துக்
கொள்வதுடன்
இனி வரும் நாட்களிலும்
சமூக இடைவெளியுடன்
சுகாதார வழிமுறைகளைப் பேணி
இப்பூவுலகம் மீண்டும் தழைப்பதற்கு உறுதுணையாய்
இருப்போம்...
***

வையகம் வாழ்க
வாழ்க நலமுடன்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***