நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி முதல் நாள்
திங்கட்கிழமை
மாதங்களில் நான் மார்கழி என்கின்றான் கீதாச்சார்யன்..
தேவர்களுக்கு மார்கழி மாதம் தான் வைகறைப் பொழுது .. பிரம்ம முகூர்த்த காலம்..
இறை வழிபாட்டிற்கு மட்டுமே அர்ப்பணிக்கப்பட்டுள்ள மாதம் - மார்கழி..
மார்கழியை அனுசரிப்பவர்கள் இம்மாதத்தில் வழிபாடுகளைத் தவிர
வேறு வித மங்கலங்களை வீட்டில் நடத்துவது இல்லை..
சூரிய உதயத்திற்கு முன்னதாக சைவ , வைணவ ஆலயங்களில் அபிஷேக ஆராதனை நடத்தப்படுவதே இம்மாதத்திற்குரிய சிறப்பு..
இம்மாதத்தில் தான் சைவத்தின் பெருஞ்சிறப்பாகிய திரு ஆதிரை.. ஆருத்ரா தரிசனம்..
வைணவத்தின் பெருஞ்சிறப்பாகிய வைகுண்ட ஏகாதசி.. சொர்க்க வாசல் திறப்பு வைபவம்...
காலக் கணக்கில் ஒன்பதாவது மாதம்.. ஜோதிட இயலின்படி சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கின்ற காலம்..
மார்கழி மாதத்தில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து, குளித்து - வாசல் தெளித்து பச்சரிசி மாவினால் கோலமிட்டு நெய் விளக்கு ஏற்றி வைத்து இறை நாமங்களைச் சொல்வதும் பாடுவதும் பண்டைய மரபு..
பழைமையை மறவாதவர்களே
இப்போது அவ்வழியில் நடக்கின்றனர்..
சக்கரம் ஏந்தி நின்றாய் - கண்ணா!
சார்ங்கம் என் றொருவில்லைக் கரத்துடையாய்!
அட்சரப் பொருளாவாய் - கண்ணா!
அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய், - கண்ணா!
தொண்டர் கண்ணீர்களைத் துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய் - அந்தச்
சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். 90
பாஞ்சாலி சபதம்
-: மகாகவி :-
தனுர் மாதம் எனப்படும்
மார்கழியில் அதிகாலையில்
பூஜை செய்வதும், சிவ, விஷ்ணு ஆலயங்களின் பூஜைகளில் கலந்து கொள்வதும் இறையருளைப் பரிபூரணமாக பெற்றுத் தரும் என்பது முன்னோர் வாக்கு..
மங்கலங்களை வாரித் தருகின்ற மார்கழி மாதத்தினை வணங்கி வரவேற்போம்...
குறளமுதம்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.. 1
அருளமுதம்
ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.. 1
பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே..
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்
ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
திருப்பள்ளியெழுச்சி
போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே..1
ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
திருத்தாண்டகம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி... 1
நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
ஃஃ
ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
***