நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூலை 31, 2022

சதுரங்கம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

சிவபெருமான் சதுரங்கம் விளையாடியதாக தமிழக கோயில் புராணம் உள்ளது - என்று பிரதமர் அவர்கள் சொல்லியதும் போதும்,

தினமலர் இணைய தளத்தில் அந்தச் செய்திக்கான கருத்துரைகளில்  தனக்குத் தானே வேறு பெயர் வைத்துக் கொண்டு அலைகின்ற் மர்ம முகமூடிகள் -

ஸ்ரீ மோடி ஜி அவர்கள் மீது வழக்கம் போல புழுதி வாரித் தூற்றியும் அவர் கூறிய தகவலைப் பழித்தும் - 

விதவிதமாக ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன..

இறைவன் ஆடிய விளையாட்டில் அந்நிய மத அடையாளங்கள் வந்தது எப்படி?.. - என்று முகமூடி ஒருவனின் கொக்கரிப்பு வேறு..

அறிவார்ந்தவர்கள் எவரும் இது மாதிரி அடுத்தவர் விஷயங்களில் நுழையவே மாட்டார்கள்.. 


வசுசேனன் என்னும் மன்னனின் மகளாகத் தோன்றிய அம்பிகையை சதுரங்கத்தில் வென்று மணக் கோலம் கொள்கின்றான் இறைவன் - என்று சொல்லப்படுகின்ற தலபுராணமானது
 தருமபுர ஆதீனம் அமைத்து வழங்கியுள்ள பன்னிரு திருமுறைத் தொகுப்பின் கோயில் வரலாற்றுப் பகுதியில் குறிக்கப்படவில்லை.. ஆனாலும், வெளியில் தலபுராணம் இப்படி இருக்கின்றது..

இதற்கிடையில் யாரோ எழுதி வைத்த தலபுராணத்தின்  பேரில் வலைத் தளங்களில் மனம் போனபடி எல்லாம் படத் தொகுப்புப் பதிவுகள், காணொளிகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன..

சதுரங்க சேனா நாயிகா -  என்பது அம்பாளின் திருப்பெயர்களுள் ஒன்று..

சதுரங்கம் என்பது சமஸ்கிருத வார்த்தை.. மன்னனின் தேர், யானை, குதிரை, வீரர் எனும் நால்வகைப் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய சொல்.. இதற்கு மாறாக சோழர்கள் நாவாய்ப் படையையும் வைத்திருந்தனர் என்பது கூடுதல் செய்தி..


போரில் யானை வீரன் யானை வீரனோடு தான் மோதிட வேண்டும்.. குதிரை வீரன் அவனுக்குச் சமமானவனுடன் தான் போரிட வேண்டும் என்று நால்வகைப் படைகளுக்குமாக தனித்தனி விதிமுறைகள் கடைபிடிக்கப் பட்டன.. அதுவே அன்றைய அறம்..

இறைவன் விளையாடிய சதுரங்கத்தில் அறம் இருந்தது..  மன்னர்களிடம் இந்த விளையாட்டு இருந்தபோதும் அறம் வழுவாமல் இருந்தது.. முகத்தை மூடிக் கொண்டு யுத்தம் செய்வது இந்த மண்ணின் வழக்கம் இல்லை..

ஆயுதமற்றவர்களிடமும் அபலைகளிடமும் அறவோர்களிடமும் சிறார்களிடம் வீரத்தைக் காட்டியதே இல்லை..

இப்படியான அறம் மீறப்பட்டதே இல்லையா?..

மஹாபாரத யுத்தத்தின் பதின்மூன்றாம் நாள் 
அபிமன்யுவுடன் அறமும் சேர்த்தே வீழ்த்தப்பட்டது..

வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொதுவான அறம் இருந்த அந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு  எப்படி இருந்திருக்குமோ.. நமக்குத் தெரியாது..

அந்த விவரங்கள் இன்றக்கு யாருக்கும் தெரியாதபடிக்கு தடயங்கள் அழிக்கப்பட்டுப் போயின..

இந்த விளையாட்டை மேற்கத்தியர் கைப்பற்றிய பிறகு அதில் இருந்த அறத்தை அவர்கள் வழக்கப்படி அழித்து விட்டனர்..  

எதிர்த்துப் போராடுவதற்கு திறனற்றவர்கள் மீது ஆயுதப் பிரயோகம் செய்து அவர்களை அழித்து ஒழிப்பது ஒன்றையே தொழிலாகக் கொண்டிருந்த மேற்கத்தியர்களால் மாற்றம் செய்யப்பட்ட ஒன்றாகும் - இன்றைக்கு இருக்கும் சதுரங்க விளையாட்டு..

இதுவா அன்றைய பாரதத்தில் இருந்த விளையாட்டு?..


சதுரங்க சேனை நாயகியாகிய அம்பிகையை
சதுரங்க சேனை நாயகனாக
விளையாடி தனது  வல்லமையைக் காட்டியதாகவே இந்த தல புராணத்தினை அணுகுதல் வேண்டும்..

வழக்கம் போல 
திருப்பூவனூர் என்ற இத்தலம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது என்று ஒரு உருட்டும் சம்பந்தரும் அப்பரும் இங்கே வந்து பாட்டுப் பாடினார்கள் என்று மற்றொரு உருட்டும் உருட்டிக் கொண்டு இருக்கின்றனர்.. 

உண்மையில், கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்கின்ற வழியில் நீடாமங்கலத்தை அடுத்து ஐந்து கி.மீ . தொலைவில் அமைந்துள்ள ஊர் தான் திருப்பூவனூர்..

சாலையின் ஓரமாகவே பாமணி ஆறு.. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சற்று தூரத்தில் கோயிலின் கோபுரம் தென்படும்..

மேலும், அப்பர் ஸ்வாமிகள் மட்டுமே இக்கோயிலைப் பற்றித் திருப்பதிகம் பாடியிருக்கின்றார்..

(படங்கள் Fb ல் வந்தவை)


நாரணன்னொடு நான்முகன் இந்திரன்
வாரணன் குமரன் வணங்குங் கழற்
பூரணன் திருப்பூவனூர் மேவிய
காரணன் எனை ஆளுடைக் காளையே.. 5/65
-: அப்பர் ஸ்வாமிகள் :-
*
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

சனி, ஜூலை 30, 2022

தீர்த்தவாரி

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

நேற்று முன்தினம் வியாழன்று ஆடி அமாவாசை.. தஞ்சை மஹா மயானத்துக்குத் தெற்கில் வடவாற்றின் கரையில் உள்ள ஸ்ரீ வேதவல்லி உடனாகிய ஸ்ரீ சிதானந்தீஸ்வர ஸ்வாமி கோயிலின் வாசலில் அமாவாசை தர்ப்பணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி சிறிது ஓய்வுக்குப் பின் திருப்பூந்துருத்திக்குப் புறப்பட்டோம்.. அங்கே கோயிலில் உள்ள காசி தீர்த்தக் கிணற்றில் கங்காதேவி எழுந்தருளிய நாள்.. 

அங்கு ஸ்ரீ சௌந்தர்ய நாயகியுடன் ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி.. வைபவம் நிறைவு பெற்றதும் பெரிய அளவில் அன்பர்களுக்கு சிறப்பான அன்னம் பாலிப்பு.. மதியம் 1:30 அளவில் இல்லத்திற்குத் திரும்பினோம்..

திரு ஐயாற்றில்  அப்பர் ஸ்வாமிகளுக்கு திருக்கயிலாய தரிசனம் கிடைத்த நாளும் ஆடி அமாவாசை நாள் தான்.. 

புதன் கிழமையன்றே கோவை, சேலம், ஈரோடு வட்டாரங்களில் இருந்து சிவனடியார்கள் நூற்றுக் கணக்கில் குழுமி விட்டார்கள்.. இரு சக்கர வாகனங்களோடு சுற்றுலா சொகுசு வாகனங்களும் நான்கு திசைகளிலும் ஒரு கி.மீ தொலைவுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன.. கோயிலுக்குள் கூட்ட நெரிசல் என்றெல்லாம் செய்திகள்..

ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியையும் அப்பர் ஸ்வாமியையும் மனதில் கொண்டு வணங்கியபடிக்கு இல்லம் திரும்பிய நிலையில் திரு ஐயாற்றில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி தரிசனக் காட்சிகள் வந்திருந்தன..

அவற்றை இன்றைய பதிவில் வழங்கியுள்ளேன்..
கீழுள்ள படங்களை fb ல் வழங்கியோர்
தம்பிரான் ஸ்வாமிகள்
காவிரிக்கோட்டம் மற்றும் தஞ்சை விஜய்..
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி..

ஐயாறப்பர் காவிரிக் கரைக்கு எழுந்தருளல்

















இரவு
திருக்கோயிலில்
அப்பர் ஸ்வாமிகளுக்கு
திருக்கயிலாயத் திருக்காட்சி
அருளல்












மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.. 4/
3
-: அப்பர் ஸ்வாமிகள் :-

 ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
***

வெள்ளி, ஜூலை 29, 2022

ஆடி வெள்ளி 2

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடி13.. 
இரண்டாவது வெள்ளிக்கிழமை..

இன்றைய பதிவில் 
திரு இலஞ்சி திருத்தலம்..

இலஞ்சி எனில் தாமரை 
பூத்திருக்கும் பொய்கை..


காஸ்யபர், கபிலர், துர்வாசர் ஆகியோருக்கு முப்பெரும் தத்துவத்தை உரைத்த முருகன் - தானே மும்மூர்த்தி வடிவன் என, அக்கோலத்தைக் காட்டியருளிய தலம்..

தென்பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் தலங்களுள் இத்தலமும் ஒன்று.. ராஜ கம்பீர நாடாளும் நாயகனின் குமார வயலூர் போல இத்தலமும் சிவாலயம்..

இலஞ்சிக்குமரன் எனப் பெயர் கொண்டு ஸ்ரீ வள்ளி தேவகுஞ்சரியுடன்  அருள் பாலிக்கின்றான் திருமுருகன்..மூலஸ்தானத்தில் இடப்புறம் நோக்கியிருக்கின்றது மயில்..

அகத்திய மாமுனிவர் மணல் கொண்டு பிரதிஷ்டை செய்த சிவலிங்கம்..

அருணகிரிநாதர் இத்தலத்தில் அருளிச் செய்தவற்றுள் நான்கு திருப்பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன..

இலஞ்சி - திருக்குற்றாலத்தில் இருந்து 2 கி.மீ.. தொலைவிலும் தென்காசியில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது..


ஸ்தல கணபதி - செண்பக விநாயகர்
இறைவன் - இருவாலுக நாதர்
(வாலுகம் எனில் வெண்மணல்)
 அம்பிகை - குழல்வாய் மொழியாள்
தலவிருட்சம் மகிழமரம்
தீர்த்தம் சித்ரா நதி

அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்..
 *
தனந்தன தந்த தனந்தன தந்த
தனந்தன தந்த ... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
துரந்தெறி கின்ற ... விழிவேலால்

சுழன்றுசு ழன்று துவண்டுது வண்டு 
சுருண்டும யங்கி ... மடவார்தோள்

விரும்பிவ ரம்பு கடந்துந டந்து 
மெலிந்துத ளர்ந்து ... மடியாதே

விளங்குக டம்பு விழைந்தணி தண்டை 
விதங்கொள்ச தங்கை ... அடிதாராய்

பொருந்தல மைந்து சிதம்பெற நின்ற 
பொனங்கிரி யொன்றை ... எறிவோனே

புகழ்ந்தும கிழ்ந்து வணங்குகு ணங்கொள் 
புரந்தரன் வஞ்சி ... மணவாளா

இரும்புன மங்கை பெரும்புள கஞ்செய் 
குரும்பைம ணந்த ... மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று 
இலஞ்சி அமர்ந்த ... பெருமாளே..
*
(நன்றி : கௌமாரம்)


கருமேகம் போன்ற கூந்தலில் வண்டுகள் மொய்க்கும் நறுமலர்களைச் சூடிக் கொண்டுள்ள பெண்களையும் அவர்களது கூரிய விழிகளையும் கண்ட நான் மனம் மயங்கி எனது விழி சென்ற வழியில் சென்று மிகவும் வாட்டமுற்று சோர்வுற்றுச் சுழன்றேன்..

அவர்களது தோள்களில் விருப்பம் கொண்டு அளவு கடந்து நடந்து கொண்டதனால் மெலிந்து தளர்ந்தேன்.. இனியும் மடிந்து போகாதபடிக்கு -

கடம்ப மலர் மாலைகளை விரும்பி அணிகின்ற முருகனே!..

அழகிய தண்டைகளும்  இன்னிசை மிகும் கிண்கிணிச் சதங்கைகளும்  விளங்கும் உனது திருவடிகளைத் தந்தருள்வாயாக...

பொன் போன்று ஒளி பொருந்தி நின்ற கிரெளஞ்ச
மலையை ஞானம் எனும் வேலால் அழித்தவனே...

உன்னைப் புகழ்ந்து மகிழ்ந்து வணங்கி நிற்பவனாகிய தேவேந்திரனின் மகள் தேவயானையின் 
மணவாளனே... 

தினைப் புனத்தைக் காவல் காத்து நிற்கின்ற வள்ளி நாயகியை அணைந்த மணி மார்பனே...

தாமரைப் பொய்கையில் தோன்றி
இலஞ்சி எனும் தலத்தில் குமரன் எனப் பெயர் கொண்டு வீற்றிருக்கும் சரவண முருகப்பெருமாளே!...


இந்நாட்டில் உன் மக்களாகிய எவரும் வழி தவறிப் போவதில்லை.. வழி மாறிச் செல்வோர் எவரும் உனது மக்களாக இருப்பதில்லை.. இத்தகைய சிவநெறியில் வாழ்கின்ற  அனைவரையும் அன்புடன் காத்தருள்வாயாக...

வெற்றி வேல் முருகனுக்கு
அரோகரா
வீரவேல் முருகனுக்கு
அரோகரா..
***

வியாழன், ஜூலை 28, 2022

பாமாலை 3


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 3)
ஓம் சக்தி ஓம்


சண்பக வல்லி நீ ஸ்ரீஸ்நேக வல்லி நீ 
தென்கடல் குமரி நீயே
சிவசக்தி பார்வதி கயிலாய ஈஸ்வரி 
வளந்தரும் ப்ரம்ம சக்தி..

பாகம் பிரியாதவள் பர்வத வர்த்தனி
படைவென்ற பர மேஸ்வரி
பாரதி நீ வாழ்க பார்கவி பதம் வாழ்க
பைரவி போற்றி போற்றி..

மாமலை பொதிகையில் தமிழாகி 
நின்றவள் தாமரைப் பாதம் போற்றி..
சிவநகர் நெல்லையில் வேணுவன 
நாதனின் தேவியே செல்லக்கிளியே..

சங்கரன் கோயிலில் ஆவுடைக் 
கோலமாய் தவமான சிவநாயகி
நன்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 9


பொங்கிடும் பொன்னியாய் பூத்திடும் 
வைகையாய் தங்கிடும் பரணி நீயே
சங்குடன் சக்கரம் தாங்கிடும் துர்கையே துன்பங்கள் தீர்க்கும் சிவையே..

ஊனார் உடம்பினில் உயிர் என்னும் 
ஓங்காரி ஒளிமதி போற்றி போற்றி
வானோர் பிழை தீர்த்த திருமகனை 
ஈன்றவள் ஞானாம்பிகை சக்தி போற்றி..

தேனார் மொழி என்று ஊராரும் 
உனைப்பேச திருவடி போற்றுகின்றேன்.
மானார் விழி என்னும் மங்கை 
மாகேஸ்வரி மலரடி வாழ்த்துகின்றேன்..

வானார் பிறைநெற்றி வளர்குங்குமம் 
கொண்டு வாழ்த்திடு வையகத்தை
பூம்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!..10


வாஞ்சியச் செல்வி நீ ஸ்ரீ சக்ர 
லலிதையே ஆரூரில் அரசாட்சியே
தேரூரும் தியாகேசன் திருமேனி 
அகலாத தேவியே கமலாட்சியே..

அலையாடும் திருநாகைக் கலையான 
காரோணம் குளிர்விழி நீலாட்சியே
யாழ்தனை வென்றமொழி மங்கையாய் 
மறைக்காட்டில் மங்கலம் தந்த தாயே.. 

கயிலாய மாமலைக் காபாலி 
தன்னருகில் கற்பக வல்லி நீயே
கம்பை நதி நீரினில் கயிலாய 
ஈசனின் கரம் பற்றி நின்ற தாயே..

காளத்திப் பேரொளி காரிருள் 
நீமாற்று பதமலர் சூடினேனே
தண்புனல் காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 11


அத்தி முகன் அன்னையே அகிலாண்ட ஈஸ்வரி நலமெலாம் கூட்டுவாயே
குமரவேள் அன்பிலே குழைகின்ற
பூங்குழலி வல்வினை மாற்றுவாயே..

செல்வனின் குரல்கேட்டு குறைதனை
தீர்த்து நீ குளிர்நிழல் காட்டுவாயே
தொல்வினை எல்லாமும் தொடர்ந்தோடி 
வந்தாலும் துன்பத்தை மாற்றுவாயே..

கங்கையின் அலைபொங்கும் காசி நகர் 
பூரணி பதம் பாடிப் பரவினேனே
பாரா முகம் இன்றி என்னையும் 
காப்பாற்று தமிழ்மாலை சூட்டினேனே..

முத்தமிழ் மாலையுடன் முன்நடந்து 
வரவேணும் வாழ்கவே வாழ்க வாழ்க
அப்பனும் அம்மையும் விடைமீது 
வரவேணும் வாழ்கவே வாழ்க வாழ்க!.. 12


பொங்குநல் காவிரி
 வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி
 போற்றி!..

மங்கலம்
சுப மங்கலம்

ஓம் 
சக்தி ஓம் சக்தி 
ஓம் சக்தி ஓம்
***

புதன், ஜூலை 27, 2022

பாமாலை 2


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 2)
ஓம் சக்தி ஓம்


வயிரவர் தோள் பற்றி  நின்றாடும் 
வயிரவி வருகவே வாழ்க வாழ்க
துயர் தனை மாற்றுவை தூயனாய்
ஆக்குவை அம்பிகே பரமேஸ்வரி..

பயந் தனைப் போக்கிடும் பஞ்சமி 
வாழ்க நீ பாதங்கள் துணை என்றுமே
அயனவன் சிரம் செற்ற ஐயனின் கரம்
 பற்றிக் கலையான கருணை வாழ்க..

கதியென்று கழல்தேடி வருகின்றவர் கண்ணில் கவலையை மாற்றுகின்றாய்
மதிசூடும் மங்கையே மாதவனின்
தங்கையே தண்ணருள் ஊட்டுகின்றாய்..

தயவுடன் தாள்மலர் தலை சூடும் 
தனயனின் சஞ்சலம் தீர்க்க வருவாய்
புகழான காவிரி வளர் தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே.. 5


குன்றேறி நின்றவன் கொடும்பகை 
வென்றிட கூர்வேல் கொடுத்து நின்றாய்
நின்றாடும் நாதனின் நிழல் என்று 
தானாகி தண்ணருள் நல்குகின்றாய்..

அன்றாலின் நிழல் கொண்ட ஐயனின் 
மனம் நின்ற அம்பிகே எந்தன் தாயே..
ஐயனின் கண்பட்டு காற்றோடு 
காற்றான காமனுக் கருள் காட்டினாய்..

மன்றேறி நடமாடும் மன்னவன்தோள் 
களில் கொன்றை யாய்ஆடு கின்றாய்
நன்றான நந்தியுடன் நாயகன் தானாட 
நாயகி உடன் ஆடினாய்..

குன்றாத நலம் தந்து குறையாத 
வளம் அருளும் கோமதி சிவசங்கரி
வளமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 6


அபிராம சுந்தரி ஆனந்த நந்தினி
அமரர்க்கு அருள் நல்கினாய்
அமுதீசன் தாள்தொட்டு தளிர்முல்லை
தானிட்ட அடியவனின் விதிமாற்றினாய்..

அடைக்கலம் நீ என்று அடிமலர் 
போற்றிய அடியனின் முன் தோன்றினாய்
அருள்கொண்டு வெளிநின்று அழகென்று  
நிலவென்று விழிகளில் அமுதூட்டினாய்..

கால சம்ஹாரனின் நெஞ்சிலே 
கொஞ்சுமொழி பேசிடும் வஞ்சி மயிலே
மைந்தன் என் குறைகேட்டு மன்னவன் 
செவிதனில் பேசிடும் தங்கக் குயிலே..

அபிராம வல்லி நின் ஆனந்த 
சீர்பாட அல்லல்கள் பறந்தோடுமே
தவமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 7


வேல்நெடுங் கண்ணியாய் விளையாடி
வருகநீ வினையதன் வேரறுக்க
கருந்தடங் கண்ணியாய் கைவீசி 
வருகநீ கயவர்தம் கதைமுடிக்க..

செங்கயற் கண்ணியாய் அங்கயற் 
கண்ணியே அருளோடு வருக வருக 
அழகனின் தங்கையே ஆதிசிவன் 
மங்கையே அலங்காரச் செல்வி நீயே..

அடியவர்கள் உனைப் போற்ற ஆனிப்
பொன்தேரிலே அன்னையே வருக வருக
காவியங் கண்ணியாய்க் கருதுவார் 
தம்மனதில் ஜோதியாய் வருக வருக..

மேன்மை தருமீனாட்சி எங்குமுன் 
அரசாட்சி பாண்டியன் பெற்ற திருவே
சிவமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 8

(தொடரும்)

செவ்வாய், ஜூலை 26, 2022

பாமாலை 1

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆடிச் செவ்வாய்..

ஸ்ரீ காமாட்சி  அன்னையின் பேரில் அடியேன் தொடுத்திருக்கும் பாமாலையை அவளது 
 திருவடிகளில் பணிவன்புடன் சமர்ப்பிக்கின்றேன்..
*
ஸ்ரீ காமாட்சி பாமாலை
(பகுதி - 1)
ஓம் சக்தி ஓம்


வரசித்தி வாரணம் வலஞ்சுழி பூரணம்
வரந்தரும் ஐங்கரம் வாழ்கவே குஞ்சரம்
வஞ்சிஉமை பாலகம் வல்லபவி நாயகம்
வானவர் தாயகம் வாழ்கவே கணநாயகம்..

ஸ்ரீ தங்கக் காமாட்சி -  தஞ்சை
செங்கனகத் தனிக் குன்றில் படர்கின்ற
பைங்கொடி பத்மபா தங்கள் போற்றி..
அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய்
அருள்கின்ற ஜோதி போற்றி..

மங்கலவி சாலாட்சி மாவடு வகிர்
கண்ணி நாறும்பூ குழல் நாயகி
நீள்விழி நிமலையாய் நீலாம்பிகை என்று 
தோள் தந்த அன்னை போற்றி!..

எந்தையுடன் நின்றெம்மை ஆள்கின்ற 
அம்மையின் அடிமலர் போற்றி போற்றி..
தன்கையில் தாங்கியே தமிழமுது ஊட்டிய 
தாய்மையே போற்றி போற்றி..

சிந்தையில் உனைவைத்து சீர்கொண்டு 
பேசி வரும் சிறியனை ஆதரிப்பாய்
அழகான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 1


திருநின்ற பூமியில் திக்கெட்டும் புகழ் 
கொண்டு வாராஹி என்று வந்தாய்..
வாள்தனைக் கைக்கொண்டு பகைவென்ற 
சோழனின் தோள்களில் நீயும் நின்றாய்.. 

வருகின்ற துயர்தீர்க்க வளர்தஞ்சை நகர் 
தன்னில் வானுயர் கோயில் கொண்டாய்
வாராது வந்தனை வளம் எலாம் 
தந்தனை வாழ்க நீ வாழ்க வாழ்க!.. 

பெருவுடை யாருடன் பிரியாது நின் 
றென்றும் பேரருள் பொழியும் தாயே
திரிபுரம் தீர்த்திட்ட தீர்த்தனின் திருமேனி
பாதியாய் பொலியும் மாயே.. 

திருவுடைய நாயகி தீவினை மாய்த்தனை
கருவூரர் போற்றும் கலையே
நலமான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 2


புற்றென எழுந்தனை புண்ணியம் 
வளர்த்தனை பூமாரி புகழ் மாரியே
மற்றொரு இணையிலா மகமாயி என்
றிங்கு மனைவாழ வைக்கும் தாயே..

கற்றவர் கைதொழும் கருணா 
விலாசினி நற்றுணை அருள்க தாயே...
செந்தூரச் செல்விநீ சிவகாம 
வல்லி நீ திரிபுர சுந்தரியும் நீ!..

உண்ணாமுலை அன்னை ஊழ்வினையை 
நீமாற்று உன்னடி போற்றுகின்றேன்
ஐயாறு கொண்டவள் அறங்காத்து 
நின்றவள் அடிமலர் ஏத்துகின்றேன்..

சங்குவளை ரத்னவளை தங்கவளை 
தரித்தவளை தமிழ்கொண்டு பாடினேனே
எழிலான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 3


மங்கலக் குங்கும மந்திரபு ரீஸ்வரி 
மா மகம் காணும் உமையே
சுந்தரி சுகந் தரும் சூட்சும 
சூலினி  வாடா மலர் நாயகி..

கும்பத்தில் கூடிய ஈசனைக் கூடியே 
குமரி நீ கூத்தாடினை 
அகிலமும் தழைக்கவே ஆங்கொரு நிழல் 
கொண்டு ஆனந்தப் பாலூட்டினை!..

காவிரிக் கரையினில் சிவலிங்க 
பூஜையில் செல்வியே மயிலாம்பிகா 
மாமயில் என வந்த மன்னவன் 
தன்னோடு நின்றவளே  உமையாம்பிகா..

தையல் நல்லாள் எனும் அன்னையே  வாழ்கநீ தில்லையுள் காளி நீயே
இனிதான காவிரி வளர்தஞ்சை மாநகர்
தங்கக் காமாட்சி உமையே!.. 4

(தொடரும்)

திங்கள், ஜூலை 25, 2022

ஸ்ரீ காமாட்சி விருத்தம்

     

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஸ்ரீ காமாட்சி விருத்தம்
*

மங்களஞ்சேர் கச்சிநகர் மன்னுகா மாட்சிமிசைத்
துங்கமுள நற்பதிகஞ் சொல்லவே – திங்கட்
புயமருவும் பணியணியும் பரமனுளந் தனின்மகிழுங்
கயமுகவைங் கரனிருதாள் காப்பு.

-: நூல் :-
சுந்தரி சவுந்தரி நிரந்தரி துரந்தரி
சோதியா நின்ற வுமையே
சுக்கிர வாரத்திலுனைக் கண்டு தரிசித்தவர்கள்
துன்பத்தை நீக்கி விடுவாய்
சிந்தைதனில் உன்பாதந் தன்னையே தொழுமவர்கள்
துயரத்தை மாற்றி விடுவாய்
ஜெகமெலா முன்மாய்கை புகழவென்னாலாமோ
சிறியனால் முடிந்திராது
சொந்தவுன் மைந்தனா மெந்தனை யிரட்சிக்கச்
சிறிய கடனுன்னதம்மா
சிவசிவ மகேஸ்வரி பரமனிட யீஸ்வரி
சிரோன்மணி மனோன்மணியு நீ
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
யனாத ரட்சகியும் நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அன்னை காமாட்சி உமையே.

பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகந் தண்டை கொலுசும்
பச்சை வைடூரிய மிச்சையாய் இழைத்திட்ட
பாதச் சிலம்பி னொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை யழகும் 
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி யழகும் 
சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலுஞ்
செங்கையில் பொன்கங்கணம்
ஜெகமெலாம் விலைபெற்ற முகமெலா மொளியுற்ற
சிறுகாது கொப்பி னழகும்
அத்திவரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
விதியீது நைந்துநான் அறியாம லுந்தனைச்
சதமாக நம்பி னேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கில்லையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுங் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனது தங்கையே பரமனிட மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பூமியிற் பிள்ளையாய் பிறந்தும் வளர்ந்தும்நான்
பேரான ஸ்தலமு மறியேன்
பெரியோர்கள் தரிசன மொருநாளும் கண்டுநான்
போற்றிக் கொண்டாடி யறியேன்
வாமியென்றுனைச் சிவகாமி யென்றே சொல்லி
வாயினாற் பாடியறியேன்
மாதா பிதாவினது பாதத்தை நானுமே
வணங்கியொரு நாளுமறியேன்
சாமியென்றே எண்ணிச் சதுருடன் கைகூப்பிச்
சரணங்கள் செய்து மறியேன்
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு
சாஷ்டாங்க தெண்ட னறியேன்
ஆமிந்த பூமியிலடியனைப் போல்மூடன்
ஆச்சி நீ கண்ட துண்டோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பெற்றதாய் என்றுன்னை மெத்தவும் நம்பிநான்
பிரியமாயிருந்த னம்மா
மெத்தனம் உடையை என்றறியாது நானுன்
புருஷனை மறந்தனம்மா
பித்தனாயிருந்து முன் சித்தமிரங்காமல்
பராமுகம் பார்த்திருந்தால்
பாலன் யானெப்படி விசனமில்லாமலே
பாங்குட னிருப்பதம்மா
இத்தனை மோசங்களாகாது ஆகாது
இது தர்மமல்ல வம்மா
எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகளில்லையோ
யிதுநீதி யல்லவம்மா
அத்தி முகனாசையாலிப் புத்திரனை மறந்தனையோ
அதை யெனக்கருள் புரிகுவாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ
மணி மந்தர காரிநீயே
மாய சொரூபி நீ மகேஸ்வரியுமானநீ
மலையரையன் மகளானநீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ
தயாநிதி விசாலாட்சி நீ
தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ
சரவணனை யீன்ற வளும் நீ
பேய்களுடனாடி நீ அத்தனிட பாகமதில்
பேர்பெற வளர்த்தவளும் நீ
பிரவணசொரூபி நீ பிரசன்னவல்லி நீ
பிரிய வுண்ணாமுலையு நீ
ஆயிமகமாயு நீ ஆனந்தவல்லி நீ
அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்றதாய்
புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்பிள்ளை யானாலும் தான்பெற்ற பிள்ளையை
பிரியமாய் வளர்க்க வில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய் விட்டுக்
கதறி நானழுத குரலில்
கடுகதனிலெட்டிலொரு கூறுமதிலாகிலுன்
காதினுள் நுழைந்த தில்லையோ
இல்லாத வன்மங்க ளென்மீதி லேனம்மா
இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துச் தெருவதனில் வீழ்வதும்
இதுதரும மல்ல வம்மா
எல்லாரு முன்னையே சொல்லியே ஏசுவார்
ஏதும் நீதியல்ல வம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

முன்னையோ சென்மாந்திர மென்னென்ன பாவங்கள்
மூடனான் செய்த னம்மா
மெய்யென்று பொய்சொல்லி கைதனிற் பொருள்தட்டு
மோசங்கள் பண்ணி னேனோ
என்னமோ தெரியாது இக்கணந் தன்னிலே
இக்கட்டு வந்த தம்மா
ஏழைநான் செய்தபிழை தாம்பொறுத்தருள் தந்து
என்கவலை தீரு மம்மா
சின்னங்களாகுது ஜெயமில்லையோ தாயே
சிறுநாணமாகு தம்மா
சிந்தனை களென் மீதில் வைத்து நற்பாக்கியமருள்
சிவசக்தி காமாட்சி நீ
அன்னவாகனமேறி யானந்தமாக உன்
அடியன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எந்தனைப் போலவே செனன மெடுத்தோர்க
ளின்பமாய் வாழ்ந் திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
உன்னடியேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
உன் பாதஞ் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனியாரை யுங்காணேன்
உலகந்தனி லெந்தனுக்கு
பிள்ளை யென்றெண்ணி நீ சொல்லாமலென் வறுமை
போக்கடித் தென்னை ரட்சி
பூலோக மெச்சவே பாலன் மார்க்கண்டன்போல்
பிரியமாய்க் காத்திடம்மா
அன்னையே யின்னமுன் னடியேனை ரட்சிக்க
அட்டி செய்யா தேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

பாரதனி லுள்ளளவும் பாக்கியத்தோ டென்னைப்
பாங்குடனி ரட்சிக்கவும்
பக்தியாய் உன்பாதம் நித்தந் தரிசித்த
பாலருக் கருள் புரியவும்
சீர்பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
செங்கலிய னணு காமலும்
சேயனிட பாக்கியஞ் செல்வங்களைத் தந்து
ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர்பெற்ற காலனைப் பின்தொடர வொட்டாமற்
பிரியமாய்ச் காத்திடம்மா
பிரியமாயுன் மீதில் சிறியனான் சொன்னகவி
பிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்தரிய பூசை செய்தவென்
னம்மை யேகாம்பரி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.

எத்தனை ஜெனனம் எடுத்தேனோ தெரியாது
இப்பூமி தன்னி லம்மா
இனியாகிலும் கிருபை வைத்தென்னை ரட்சியும்
இனிஜெனன மெடுத்திடாமல்
முத்திதர வேணுமென்று உன்னையே தொழுதுநான்
முக்காலும் நம்பினேனே
முன் பின்னுந்தோணாத மனிதரைப் போலநீ
முழித்திருக்காதே யம்மா
வெற்றி பெறவுன் மீதில் பக்தியாய் நான் சொன்ன
விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீயளித்திடுஞ் செல்வத்தை
விமலனாரேசப் போறார்
அத்தனிட பாகமதை விட்டு வந்தேயென்
அருங்குறை யைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே.
***

பெயர் சொல்லாத அந்தப்
பெரியவர் தமக்கு அநேக வணக்கங்கள்..

ஆனை போன வழியே பூனை போகலாகாது என்பதற்கிணங்க
முதல் நூலுக்கான வணக்கத்தைத் தொடர்ந்து 
நாளை முதல் நான் தொடுத்துள்ள பாமாலை..

ஓம் 
சக்தி ஓம் சக்தி ஓம் 
சக்தி ஓம்
***