நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 01, 2024

தமிழமுதம் 16

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 16 
திங்கட்கிழமை

 குறளமுதம்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.. 101
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்  ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்  தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.. 16
**
நாயகனாகிய நந்தகோபனுடைய அரண்மனைக் காவலனே.. அவனது கொடியும் தோரணங்களும் விளங்குகின்ற வாயிலின் காவலனே.. மணிக் கதவின் தாள் திறப்பாய்!..

எங்களுக்கு வேண்டியது எல்லாம் தருவதாக  மணிவண்ணன் நேற்றே  சொல்லியிருக்கிறான்.. அதனால் அவனைத் துயில் எழுப்புவதற்காக உளத் தூய்மையுடன் வந்திருக்கின்றோம்.. 

அன்புடன்  நிலைக்கதவைத் திறப்பாயாக!..
**

திருப்பாசுரம்


அன்பே தகளியா ஆர்வமே நெய் ஆக
இன்பு உருகு சிந்தை இடு திரியா நன்பு உருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.. 2182
-: பூதத்தாழ்வார் :-
**

சிவதரிசனம்
தேவாரம்
திருக்கடைக்காப்பு


மண்ணும் ஓர் பாகமுடையார் மாலும் ஓர் பாகமுடையார்
விண்ணும் ஓர் பாகமுடையார் வேத முடைய விமலர்
கண்ணும் ஓர் பாகமுடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணும் ஓர் பாகமுடையார் பெரும்புலியூர் பிரியாரே.. 2/67/1
-:  திருஞானசம்பந்தர் :-
**

போற்றித்
திருத்தாண்டகம்
(திருஆரூர்)


நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளில் ஆடல் உகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..5
-: திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு
விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெரு மானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.. 5
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

  1. பாசுரத்தொகுப்பு அருமை.  இனிய ஆங்கிலப் புத்தாண்டு நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம் ..

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிவு அருமை. பாசுரங்களும், திருப்பாவை விளக்கங்களும், அழகான இறை படங்களுமாக பதிவு அருமை. தொடர்கிறேன்.

    என் பதிவுலக வருகையை எபியில் சொல்லி தேடியதற்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி. இனி தொடர்ந்து வழக்கப்படி அனைவரின் பதிவுகளுக்கு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /// இனி தொடர்ந்து அனைவரின் பதிவுகளுக்கு வருவதற்கு இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.. ///

      தங்கள் அன்பின் வருகையும்
      வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
  3. தொகுப்பு அருமை.
    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
    பாடல்களை பாடி இறைவனை வேண்டிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் வாழ்த்தும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நலம் வாழ்க..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..