நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 07, 2024

தமிழமுதம் 22

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 22
ஞாயிற்றுக்கிழமை

 குறளமுதம்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமந் துடைத்தவர் நட்பு.. 107
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்  கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்  எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்..
**

தம்மிலும் உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்ற கர்வத்துடன் இப்பூவுலகை ஆட்சி செய்கின்ற மன்னர்கள்  அடங்கி ஒடுங்கி உனது அரியாசனத்தின் கீழ் கூடி 
இருப்பது போல நாங்களும்  வந்தடைந்தோம். 
 
கிண்கிணியாய் பாதி மலர்ந்த செந்தாமரை மலர் போலச் சிவந்த உனது கண்களால் எங்கள் மேல் விழித்தருள்வாயாக!..

சந்திர சூர்யர்களைப் போல அவ்விழிகள் எங்கள் மேல் பரவுமாகில் எங்களது  பாபங்கள் அனைத்தும் கழிந்து விடுமே!..
**

சிவதரிசனம்
தேவாரம்
திருப்பாட்டு


பவளக் கனிவாய்ப் பாவை பங்கன்
கவளக் களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதிசேர் சடையாற் கிடம்போல்
உகளுந் திரைவாய் ஒற்றி யூரே.. 7/91/3
-: சுந்தரர் :-



தரிசனத் திருத்தாண்டகம்
(திருமறைக்காடு வேதாரண்யம்)


தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.. 6/23/1
- : திருநாவுக்கரசர் :-
**

திருவாசகம்


 சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரிகுழற் பணைமுலை மடந்தை
பாதியே பரனே பால்கொள்வெண் நீற்றாய்
பங்கயத்து அயனுமால் அறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே அடியேன் ஆதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே.. 1
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

3 கருத்துகள்:

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..