நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 30, 2024

சரணம் சரணம்..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை15
சனிக்கிழமை


முழுப் பரிசோதனையாகவே இருக்கட்டும் என்று கடந்த (21/11) வாரம் தஞ்சை அகர்வால் கண் மருத்துவமனைக்குச் சென்றோம்... 

சோதனைகளின் நிறைவில் கண்ணில் புரை ஏற்பாட்டுள்ளதாகவும் அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரே கண்ணாடி  அணிவது பலன்  தரும் என்றும் சொல்லி விட்டார்கள்..

அறுவைச் சிகிச்சையில் எனக்கு விருப்பம் இல்லை..

குருவின் மகனுக்குக் கண்ணொளி வழங்கிய வரப்ரசாதம் ஸ்ரீ ஐயப்ப சரிதத்தில் உள்ளதாகும்..

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதியில் நின்று -  எனது கண் பிரச்னைகள் தீரட்டும் -  என்று அடியேனும் பிரார்த்தித்துக் கொள்கின்றேன்..

வேண்டுதலைச் சொல்லி யாசித்த நிலையில் இந்தப் பதிவினை ஒழுங்கு செய்தது புதன் கிழமை.. 

வியாழக்கிழமை (28/11) அன்று 
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின்
மூலிகைப் பண்ணை உயர்நிலை மருத்துவரிடம் கண் பரிசோதனை அறிக்கையைக் காட்டியபோது, - இது சாதாரணம்.. Reading Glass அணிந்து கொள்ளலாம்.. கவலை வேண்டாம்..  -  என்று ஆறுதலாகச் 
சொல்லி விட்டார்..

எல்லாரும் நலம் பெறுவதற்குப் பிரார்த்தனைகள்..
ஃஃஃ


ஏற்றிடும் விளக்கு திருவிளக்காக 
ஏற்றம் அளித்திடும் ஐயப்பா..

போற்றிய சரணம் கேட்டுளம் மகிழ்ந்தே
காத்தருள் புரிவாய் ஐயப்பா..

சாற்றிய மாலை சந்தனம் குங்குமம் 
சாஸ்தா உந்தன் திருவடிக்கே..

ஏற்றிய தீபம் இருள் வினை தீர்த்து
பொன்னொளி காட்டும் அருள் வழிக்கே..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

போற்றிய சரணம் பொன்மலர் என்றே 
பொற்றிரு வடியில் சாராதோ..

காற்றினில் கலந்து கானக வாசனின் 
திருச்செவி தன்னில் சேராதோ...

வெந்துயர் தீர்க்கும் விழிகள் இரண்டும்
என்துயர் தன்னைத் தீர்க்காதோ..

சந்ததம் காக்கும் அருட்கரம் தானும்  
தண்ணருள் தன்னைச் சேர்க்காதோ..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

வீற்றிருக்கும் திரு மலை தன்னை
விளிப்பவர் தமக்கு அருள்வாயே ..

கூற்றிருக்கும் கொடுவினையை நீக்கி 
குளிர் நலம் என்றும் புரிவாயே..
 
புகலிடம் அறியேன் ஐயப்பா
போற்றித் தொழுதேன்  ஐயப்பா..

புலி வாகனனே ஐயப்பா 
புதுநலம் அருள்வாய் ஐயப்பா

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

கனவிலும் உன்னை மறவாத 
வரந்தனை எனக்கு  அருள்வாயே
கசிந்திடும் மனதில் இசையாக
காலந்தோறும் திகழ்வாயே..

போற்றிடும் மொழியும் புண்ணியம் ஆக
 புதுநலம் அருள்வாய் ஐயப்பா..
நாற்றிசை நாயக நல்மணி கண்டா..
நன்மைகள் தருவாய் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

பந்தளச் செல்வா  ஐயப்பா
பதமலர் பணிந்தேன் ஐயப்பா
வெந்துயர் தீர்ப்பாய் ஐயப்பா
வேதனை தீர்ப்பாய் ஐயப்பா..

வந்துனைக் காண ஐயப்பா
வரங்கள் வழங்கிடும் ஐயப்பா
சந்தனத்திருவடி ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா..

புகலிடம் நீயே புண்ணியம் நீயே 
புன்மை தவிர்ப்பாய் ஐயப்பா
பூத நாதனே  வேத நாதனே 
காத்தருள் புரிவாய் ஐயப்பா 

ஆயிரமாயிரம் அடியார் நடுவே  
அறிவாய் அடியனை ஐயப்பா 
தாயென வருவாய் ஐயப்பா  
சரணம் சரணம் ஐயப்பா..

கண்ணொளி தருவாய் ஐயப்பா
கண்ணொளி தருவாய் ஐயப்பா

ஓம் ஸ்வாமியே
சரணம் ஐயப்பா
 
ஓம் ஹரி ஓம் 
ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

  1. கண்புரை அறுவை சிகிச்சை செய்யாமல் விடுவது சரியா என்று சொல்ல முடியவில்லை.  உங்கள் நலன் உங்கள் கையில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்புரை அறுவை சிகிச்சை செய்யாமல் விடுவது நோக்கம் அல்ல...

      பிரச்னை இல்லாத நிலையில்
      இப்போது அவசரமில்லை என்பதே மற்றவர்களின் கருத்து..

      அன்பின் வருகையும் பரிவச்ன கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு
  2. ஐயப்பன் நாமம் வாழ்க

    அனைவரையும் காக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயப்பன்
      அனைவரையும் காக்கட்டும்.

      மகிழ்ச்சி..
      நன்றி ஸ்ரீராம்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..