நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஐப்பசி 27
புதன்கிழமை
அமுதே தமிழே நீ வாழ்க..
பள்ளிக்கூடத்தின் நினைவெல்லாம் தொடர்கின்றன..
பொறுப்பைப் புரிந்து கொண்ட பதினொன்றாம் வகுப்பு..
பதினொன்றாம் வகுப்பில் பருகிய தமிழமுதினில் ஒரு துளியை இன்று சிந்திப்போம்..
இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களபம் என்றேன் பூசும் என்றாள்
மாதங்கம் என்றேன் யாம் வாழ்ந்தோம் என்றாள்
பம்பு சீர் வேழம் என்றேன் தின்னும் என்றாள்
கம்பமா என்றேன் நற்களியாம் என்றாள்
பகடு என்றேன்
உழும் என்றாள்
கைமா என்றேன்
சும்மா கலங்கினாளே..
-: அந்தகக் கவி வீரராகவ முதலியார் :-
தலைநகருக்குச் சென்றிருந்த
பாணர் வீட்டு வாசலுக்கு வந்து விட்டார்..
சமையலுக்குள் முனைப்பாக இருந்த அவள் வாசலுக்கு வந்து பார்க்காமலேயே கேட்கின்றாள்..
அரசரைப் புகழ்ந்து பாடுதற்குச் சென்றிருந்தீர்களே.. என்ன பரிசு கிடைத்தது?..
களபம்!.. என்கிறார் பாணர் பெருமிதத்துடன்...
அதைக் கேட்ட அவரது மனைவிக்கு களபம் எனில்
சந்தனம் எனப் புரிந்தது..
திங்கிற சோத்துக்கு வழியக் காணோம்.. இந்தக் கெரகத்துல பூசிக்கிறதுக்கு சந்தனமா!. - என, நொந்து கொண்டு, நீங்களே பூசிக் கொள்ளுங்கள் என்கிறாள்..
தான் சொன்னதைத் தன் மனைவி தவறாகப் புரிந்து கொண்டதை உணர்ந்த பாணர் அவளுடன் மேலும் விளையாட எண்ணியவராக
மாதங்கம்!.. என்கிறார்.
அவளோ, சந்தனக் கட்டைகளுடன் சிறப்புடைய பொற் காசுகளும் என நினைத்துக் கொண்டு, இனி நல்ல காலம் தான் நமக்கு என்கிறாள் மகிழ்ச்சியுடன்..
தொடர்ந்து, வேழம் கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.பாணர்
மனைவியோ, கரும்பு என புரிந்து கொண்டு, நல்லது கடித்துத் துப்புங்கள் என்கிறாள்
பாணர், புன்சிரிப்புடன், கம்பமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்.
அவள் இது என்ன வேடிக்கை.. எதற்காக கம்பு மாவு!?.. எனக் குழம்பியவளாக , இதையுமா கொடுத்தான் அரசன்?.. என, நினைத்துக் கொண்டாலும்
நல்ல களி செய்து களிக்கலாம் என்கிறாள்.
இதற்கு மேலும் இந்த விளையாட்டு சரி வராது என உணர்ந்த பாணர், கைமா கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார்..
அப்போதுதான் கணவன் யானையுடன் வந்திருக்கின்றான் என்பது விளங்குகின்றது அவளுக்கு..
யானையின் தீனிக்கு என்ன செய்வது!?.. எனக் கலங்கினாலும் - வெளியே ஓடி வந்து - ஆனையின் மீது அமர்ந்திருக்கின்ற கணவனை ஆவலுடன் பார்க்கின்றாள்..
- என்று பாடல் நிறைவு செய்யப்படுகின்றது..
சமையலுக்குள் முனைப்பாக இருந்த அவள் வாசலுக்கு வந்து பார்க்காமல் கேள்வி கேட்டதே நல்லது..
இல்லையெனில் இப்படியான பாடல் நமக்குக் கிடைத்திருக்குமா!..
யானைக்குத் தமிழில் எத்தனைப் பெயர்கள் என்பதைப் பாருங்கள்.
**
இரட்டைப் புலவர்கள்..
ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் விளங்காது என்றும் அறியப்படுகின்றது.
கால் விளங்காதவரை பார்வையற்றவர் தோளில் சுமந்து கொள்ள
பார்வையற்றவருக்கு மற்றவர் வழி கூறுவார்..
ஊர் ஊராக இவர்களது பயணம் தொடர்ந்திருக்கின்றது..
கவியின் முதல் இரு அடிகளை ஒருவரும் ஈற்றடிகளை மற்ற்வரும் பாடி முடிக்கின்ற வல்லமை பெற்றிருந்தனர்..
ஒருமுறை மதுரையில் குளிக்கும் போது துவைத்து அலசிய வேட்டி நழுவிச் செல்வதை கண்டு சொல்லிய முடவர் தம் கூற்றுக்கு பார்வையற்றவர் மொழிந்ததே ஈற்றடிகள்..
அந்தக் காலத்தில் வேட்டிக்குக் கலிங்கம் என்றும் பெயர் இருந்திருக்கின்றது.
அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ - இப்புவியில்
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை..
--: இரட்டைப்புலவர் :-
வேட்டியைத் தண்ணீரில் நனைத்து அடுத்தடுத்து அடித்தால் (தப்பினால் - வெளுத்தால்)
அது நம்மிடம் இருந்து தப்பித்துப் போகாதோ’ - என்று ஆற்று வெள்ளத்தில் துணி போய் விட்டது என்பதை அவர் பாட,
அதைக் கேட்ட விழியற்றவர் அதற்குக் கவலைப்படாமல் இந்தத் துணி போனால் என்ன? நமக்கு மா மதுரைச் சொக்கலிங்கம் தான் துணையாக இருக்கின்றாரே.. - என்று சொல்லிப் புன்னகைக்கின்றார்..
***
நினைவெல்லாம் தொடரும்
அழகே உந்தன் புகழ் வாழ்க
ஓம் சிவாய நம ஓம்
***
சுவையான பதிவு.
பதிலளிநீக்குஆமாம்.... உண்மையிலேயே சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் அரசனைப் புகழ்ந்து பாடச்சென்ற பாணருக்கு யானையைக் கொடுத்தால் அதன் தீனிக்கு என்ன செய்வார்? பாகனில்லாமல் எப்படி அதைக் கையாண்டிருப்பார்? அதற்கு நடுவில் ஒருமுறையாவது மதம் பிடித்திருக்காதோ? யாருக்காவது விற்றிருப்பாரோ...
ஆனையைக் கொடுத்த போதே அதற்கான வசதிகளையும் மன்னன் செய்து கொடுத்த்ய் விட்டதாக கேள்வி..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்
இரட்டைப் புலவர்கள் பாடல்கள் எப்போதுமே சுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குஎத்தனை எத்தனை அற்புதமான புலவர்கள்!..
நீக்குமகிழ்ச்சி
நன்றி ஸ்ரீராம்..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. பாணன் பரிசு பெற்ற வரலாறு பாடல் சிறப்புத்தான். யானைக்குத்தான் எத்தனைப் பெயர்கள். யானையை கட்டி தீனி போடுவதென்பது எத்தனை பெரிய விஷயம்..! அன்றைய காலங்களில் பொற்காசுக்கும் ஒரு மதிப்பு என்பது ஒரு அளவுதான். பொற்கிழிக்கு பதிலாக யானை பரிசு..யானை வளர்பிற்கு எத்தனை பொற்கிழிகள் செலவாகுமோ. .?
இரட்டை புலவர்கள் பாடலும் சுவையானது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
யானையுடன் புலவரது வாழ்க்கைக்கும் தேவையான உதவிகளைச் செய்து இருக்கின்றார் மன்னர்...
நீக்குதங்களது
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி..
பாணர் பாடல்கள் மூலம் மனைவியுடன் உரையாடியது அருமை "இம்பர்வான் எல்லை. ..... ...கைமா என்றேன் கலங்கினாளே" என முடித்திருப்பது பாடலின் சிறப்பு.
பதிலளிநீக்குஇரட்டைப் புலவர்கள் பாடலும் ரசனை.
தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நீக்குநன்றி மாதேவி
துரை அண்ணா முதல் பாடல் ஆஹா என்ன ஒரு அமுதான பாடல் இல்லையா? மிகவும் ரசித்தேன். இப்பாடல் கற்றதில்லை. ஆனால் இரட்டைப்புலவர் பாடல் பள்ளியில் படித்ததுண்டு. அதுவும் சுவையான ஒன்று இரட்டைப் புலவர்கள் பாடல்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ
பதிலளிநீக்குமுதல் பாடலில் பொற்காசு என்றால் கூட நன்றாக இருந்திருக்கும் யானையைக் கட்டி எப்படிச் சமாளித்தாங்களோ?! ஆனால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அதனால் மாதங்கம்!!?
கீதா
யானையுடன் புலவரது வாழ்க்கைக்கும் தேவையான உதவிகளைச் செய்து இருக்கின்றார் மன்னர்...
நீக்குஅந்தக் கால மன்னர்கள் இன்றைய நிர்வாகிகள் அல்ல..
தங்களது
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி
நன்றி..